கடும் நிதி நெருக்கடிகள்! பேராசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் தர முடியாத நிலைமையில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் மூச்சுத் திணறுகிறது! அதன் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி உள்ளது! காரணம் என்ன? யார் பொறுப்பு?
தென்தமிழகத்தின் கல்வித்தேடலுக்கு ஒரு கலங்கரை விளக்காக ஒளி வீசிப் புகழ் பெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இன்று தடுமாறிக்கொண்டுள்ளது வேதனை.
வரலாறு பல படைத்த அன்றைய மதராஸ் பல்கலைக்கழகத்திற்கு (சென்னை பல்கலைக்கழகம் Madras University) நிகராக மதுரையில் தென்தமிழகத்தின் கல்வித்தேவையை முன்னிட்டு 1965ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட மதுரை பல்கலை கழகம் பின்னாட்களில் மதுரை காமராஜர் பல்கலை கழகமாக வளர்ந்தது மட்டுமின்றி தெ பொ மீ. தொடங்கி மு.வ. வரை தலைசிறந்த கல்வியாளர்கள் , தமிழறிஞர்களின் தலைமையில் , கண்காணிப்பில் வளர்ந்தது,சிறந்தது.
இந்தியா முழுமைக்கும் தேர்வு செய்யப்பட்ட 15 சீர்மிகு பல்கலைகழகங்களில் ஒன்றான மதுரை பல்கலைகழகம் இன்று நிதி நெருக்கடியினாலும், தவறான கொள்கை வழிகாட்டுதலாலும் தரமிழந்து தடுமாறிக்கொண்டுள்ள நிலைமையை நாம் காண்கிறோம்.
பொதுப் பல்கலைக்கழகமான மதுரை பல்கலைகழகம் தமிழக அரசால் நிதி ஒதுக்கப்பட்டு நிறுவப்பட்ட கலாசாலையாகும் . தென் தமிழகத்தின் கல்வித்தேவைகளை பூர்த்தி செய்யஉருவான பல்கலைகழகம் இன்று கற்றுத்தரும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியத்தை சரிவர வழங்க இயலவில்லை. ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் தங்களது முதிர்ந்த வயதில் 5 மாதங்களுக்கு மேல் ஓய்வூதியத்திற்காக காத்துக்கிடக்கும் அவல நிலை உள்ளது. சென்ற மூன்று மாதங்களாக பேராசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் இருந்து சம்பளம் வழங்கி சமாளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது..
கம்பீரமாக நிற்க வேண்டிய காமராஜர் பல்கலைகழகம் இன்று தவழ்ந்து கொண்டிருப்பதற்கு யார் காரணம் ? எது காரணம்?
இது வெறும் நிதி பற்றாக் குறையால் வந்த வினையா? , நிர்வாக கோளாறுகளால் வந்த குறையா?, 1990 முதல் தொடர்ந்து வந்த தமிழக அரசுகளின் கையாலாகாத்தனமும், கறைபடிந்த செயல்பாடுகளுமா?, ஊழல் மலிந்த தன் விளைவா? அல்லது கல்விதுறையில் அதுவும் உயர்கல்வித்துறையை வணிகப்போட்டியாக மாற்றிய கல்விக் கொள்கையின் விளைவா? என்ற கேள்விகள் நம்மை துளைப்பதில் ஆச்சரியமில்லை.
சென்னை, மதுரை என்ற இரண்டே பல்கலைகழகங்கள் (சென்னை பல்கலைக்கழகம்,மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ) என்ற நிலை மாறி இன்று கல்வி தாராளமயத்தின் வீச்சின் விளைவாக நிகர்நிலை பல்கலைகழகங்களும், தனியார் பல்கலைகழகங்களும் திசைக்கு ஒன்றாக பொது பல்கலைகழகங்களும் துறைக்கு ஏற்றார்போல் இணை பல்கலைகழகங்களும் பெருகி வளர்ந்துள்ளன.
நமது தேவையின் அடிப்படையில் இவை கற்றலுக்கு ஒருவகையில் உதவினாலும், கற்றலின் நோக்கம் அதற்கான நெறிமுறை ஆகிய உள்ளடக்கங்களும், தரவுகளும் கலாசாலைகளை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையை இன்று காணுகிறோம்
கல்விக்கான நிதி ஒதுக்கீடு, பல்கலைகழக மான்ய கழகத்தின் செயல்பாடு ஆகிய இவை இரண்டும்தான் நமது பல்கலைகழகங்களின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டை பெருமளவு தீர்மானிக்கிறது என்பதில் மிகையில்லை.
எடுத்துக்காட்டாக மதுரை பல்கலைகழகம் ஒரு குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் குறிப்பிட்ட நிதி ஆதாரங்கள் மூலமாக தன்னை வழிநடத்திக்கொள்ள வேண்டும். இதுதவிர, ஆண்டு தோறும் அரசு மான்யமும் வழங்குகிறது. ஆனால், அதற்கு சில நிபந்தனைகளும் செயல்விதிகளும் உள்ளன.
ஆனால், இன்றோ மதுரை பல்கலையின் ஆண்டு வருமானம் 60 கோடியாகவும் ஆண்டு செலவு120 கோடியாகவும் உள்ளது!
இதில் வருமானமாக கருதப்படுவது மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் தேர்வு கட்டணங்கள், கற்றல் கட்டணங்கள் மற்றும் அரசின் நிதி ஒதுக்கீடு ஆகியவைதான்!
செலவினங்களோ ஆசிரியர்களின் ஊதியம், நிர்வாக ஊழியர்களின் ஊதியம், நிர்வாக மேம்பாட்டிற்கான செலவு, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான செலவு பராமரிப்பிற்கான செலவு மேலும் ஓய்வூதியமும் இதில் அடங்கும்.
கடந்த ஐந்தாண்டுகளை மட்டும் ஒப்பீட்டளவில் நோக்கினால், வருமானங்கள் குறைவதும், செலவினங்கள் அதிகரித்து வருவதும் கண்கூடு.
அரசு மான்யங்கள் வெட்டப்பட்டிருப்பதையும் நாம் பார்க்க முடிகிறது கிட்டத்தட்ட 580 கோடி ரூபாய்கள் தணிக்கை ஆட்சேபனைகளினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது! தணிக்கை ஆட்சேபனைக்கான காரணம் நிர்வாக சீர்கேடுகள், ஊழியர்களின் முறைகேடுகள் என சொல்லப்படுகிறது! முனைவர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைகள், மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல் ஆகியவற்றில் ஊழல் கொடிகட்டி பறக்கிறது.
இது குறித்து பல்கலை நிர்வாகமோ, மேலாண்மை செய்யும் சிண்டிகேட்டோ அதன் உறுப்பினர்களோ அல்லது அரசின் உயர்கல்வித்துறையோ அக்கறை காட்டவோ அல்லது இச் சிக்கலை தீர்க்க விதிமீறல்களின் விளைவாக ஏற்பட்ட தணிக்கை ஆட்சேபனைகளை தீர்த்துவைக்க முயற்சியோ இதுவரை நடக்கவில்லை.
இத்தனைக்கும் அரசின் கல்வித்துறை, சட்டத்துறை ,ஊரக வளர்ச்சித்துறை போன்ற பல்வேறு செயலர்கள் (Secretaries to the Govt.,) சிண்டிகேட் சபையின் உறுப்பினர்கள் தான்!
ஒருபுறம் மான்ய வெட்டு மறுபுறம் தொலைதூரக்கல்வி மூலம் வரும் வருமானம் குறைந்தது ஆகிய இரட்டை பிரச்சினைகள் மதுரை பல்கலைகழகத்தை பீடித்துள்ளது எனலாம்.
2010களில் 53,000 த்திற்கும் அதிகமான மாணவர்கள் தொலைதூரக் கல்வியில் இணைந்திருந்தனர். இன்றோ, அதன் எண்ணிக்கை கழுதை தேயந்து கட்டெறும்பு ஆன கதையாக 2021-2022ல் வெறும் 5,000 மாக குறைந்துள்ளது. இவர்களால் பல்கலைகழகத்திற்கு வரும் வருமானமும் குறைந்துள்ளது.
ஆனால், ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை கூடியுள்ளது. எனவே இயற்கையாக அவர்களுக்கு அளிக்க வேண்டிய தொகையின் அளவும் கூடத்தான் செய்யும் .
2004-2005 ல் வெறும் 471 ஆக இருந்த ஓய்வூதியர்களின் எண்ணிக்கை இன்று 2021 ஆகஸ்டில் 1,185 ஆக அதிகரித்துள்ளது.
பல்கலைகழகத்தில் பலகாலம் பணிபுரிந்து மூப்பின் அடிப்படையில் ஓய்வு பெறும் பேராசிரியர்களே இங்கு ஓய்வூதியர்களாக உள்ளனர் . இவர்களுக்கு சேரவேண்டிய பணத்தினை தாமதமின்றி வழங்குவதற்காக கார்ப்பஸ் நிதி 221 கோடி ஒதுக்கீட்டின் மூலம் 2012ல் ஏற்படுத்தப்பட்டது. இதற்கு பெனஷன் கார்ப்பஸ் பண்ட் என்று நாமகரணம் சூட்டப்பட்டது.
இத்துடன் அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பணமும், வைப்புநிதியில் போடப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வட்டியின்மூலம் பயனாளிகளுக்கு பணம் வழங்கப்பட்டது.
இன்று சிக்கல் ஏன் வந்தது?
471 பயனாளிகளுக்கு ஓய்வூதிய பலன்களை அளிக்க அன்று இந்த நிதி போதுமானதாக இருந்தது. ஆனால் இன்று கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயர்ந்து 1,185 ஆக கூடியுள்ள ஓய்வூதியர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய இந்த பணம் போதாது என்ற அடிப்படை ஞானம் இந்த அரசுகளுக்கு இல்லை.
விளைவு? பல்லாண்டு காலம் பேராசிரியராக பணியாற்றி ஓய்ந்த பின்னரும் நிம்மதியான வாழ்வுமுறை பேராசிரியர்களுக்கு மறுக்கப்படுகிறது. அவர்களை வீதிக்கு இழுக்கிறது! இன்றைய பல்கலைகழக நடைமுறை.ஓய்வூதிய பயனாளிகள் ஆண்டு தோறும் கூடினால், அதற்கான அரசு செலுத்த வேண்டிய நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்காமல் , அதற்கான ஆதாரங்களை பல்கலைகழகமே தனது சுய வருமானத்திலிருந்தே திரட்ட வேண்டும் என்ற ஏழாவது ஊதியக்குழு 7th Pay Commission கூறியுள்ளதை அரசு அறிவுறுத்துகிறது. இத்தகைய மனிதாபிமானமற்ற அரசு கொள்கையை முறியடிக்காமல் இப்பிரச்சினை தீராது.
ஓய்வூதியர்களின் விவகாரத்தில் உலகெங்கிலும் உள்ள தாராளமயத்தை கடை பிடிக்கும் அரசுகளின் செயல்பாடு- அரசு தன் மூத்த குடிமக்கள் மேல் காட்ட வேண்டிய பரிவை மறந்து அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையில் இருந்து நழுவுதல், அவர்களது ரத்தத்தை சேமித்து வைக்கப்பட்ட பென்ஷன் நிதியை பங்குசந்தை சூதாட்டத்தில் முதலீடு செய்வது போன்ற பயங்கரவாத செயல்களினால் கோடிக்கணக்கான சாமானியர்களின் வாழ்க்கையை லாபத்திற்காக சூறையாடுகிறது. அதில் ஒரு அங்கம்தான் மதுரை காமராஜர் பல்கலைகழக பிரச்சினை!
Also read
அரசு சுட்டிக்காட்டியபடி நடந்தால், மாணவர்களின் கல்வி கட்டணமும் , தேர்வு கட்டணமும் அதிகரிக்கும் . கிராமப்புற மற்றும் எளிய மாணவர்களின் உதவித்தொகை வெட்டப்படும். ஆராய்ச்சி வளர்ச்சி மற்றும் மேம்பாடு என்பதெல்லாம் பகல் கனவாய் மாறும்.
கல்விக்கான உரிமையே கேள்விக்குறியான போது உயர்கல்விக்கான உரிமை பற்றி பேச முடியமா? கல்வி வியாபாரத்தை உயர்த்திப்பிடிக்கும் அரசின் கீழ் இயங்கும் கலாசாலைகளும், பல்கலைகழகங்களும் தார்மீக உரிமையையும் பலத்தையும் இழந்து வணிக கூடாரங்களாக மாறும் காட்சியின் ஓரங்கமே மதுரை பல்கலைகழகத்தின் இன்றைய பரிதாப நிலை!
கட்டுரையாளர்; ச. அருணாசலம்
Leave a Reply