ஜனநாயகத்தை பணநாயகமாக்கும் ஊரக நகராட்சித் தேர்தல்கள்!

-சாவித்திரி கண்ணன்

ஆறாக பெருக்கெடுத்து ஓடும் பணம்! அள்ளித் தரப்படும் பரிசுப் பொருட்கள்..என  ஏதோ, பெரு வியாபாரத்திற்கான முதலீட்டைப் போல, ஊரக நகராட்சி தேர்தல்களை அரசியல் கட்சிகள் கையாளும் அணுகுமுறைகள் அதிர்ச்சியளிக்கின்றன!

இவற்றைப் பார்க்கும் போது உள்ளாட்சி அமைப்புகளின் தேவைக்கும், உரிமைக்கும் பல ஆண்டுகளாக எழுதியும், பேசியும் வரும் நம்மைப் போன்றவர்களுக்கு அயர்ச்சியே ஏற்படுகிறது!

நம்மை நாமே சுரண்டிக் கொழுப்பதற்கு தரும் அங்கீகாரமா உள்ளாட்சி தேர்தல்கள் என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை. சாதாரண வார்டு கவுன்சிலருக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்கள்! இது தொண்டு செய்வதற்கான பொறுப்பு! இதில் போட்டியிடுபவர் இவ்வளவு பணம் செலவழிப்பானேன்?

”எங்க வேட்பாளர் இத்தனை ஸ்வீட் பாக்சை இறக்கியிருக்கிறார்” என்கிறார் ஒரு கட்சிக்காரர்!

”எங்க ஆளு இத்தனை ரோஸ்மில்க் தருவாராக்கும்” என்கிறார் ஒருவர்!

”அந்த ஏரியாவுல ஆயிரம் சாக்லேட் சப்ளை பண்ணியாச்சு நாங்க” என்கிறார் ஒருவர்!

இதெல்லாம் மக்களுக்கு ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பவர்கள் சொல்லுகின்ற குறிச்சொற்கள்!

”அதெல்லாம் சரிப்படாது, நாங்க மூக்குத்திகளை இறக்கிட்டோம். அவங்க வெள்ளிக் கொலுசு தர்றாங்க ஜனங்க என்ன முடிவு பண்ணப் போறாங்களோ..” அப்படின்னு புலம்புகிறார் ஒரு கட்சிக்காரர்!

‘ஆட்சியில் இருப்பதால் நாங்களே உள்ளாட்சியிலும் தேர்ந்து எடுக்கப்பட்டாக வேண்டும். இது எங்கள் பிதுராஜித உரிமை’ என்கிற தோணியில் ”ஒழுங்கா நாங்க நிறுத்தி இருக்கிற வேட்பாளருக்கு ஓட்டுப் போடுங்க’’ என அமைச்சர் துரைமுருகன், பொன்முடி போன்றவர்கள் பேசி வருவது அச்சத்தை தருகிறது.

ஓட்டுகேட்பு வைபவம் என்பது ஓட்டுவேட்டைக்கு ஆள் பிடிக்கும் தொழிலாக நடக்கிறது!

”அம்மா, விருப்படுபவங்க வாங்க காலை நான்கு மணி நேரம், மாலையில நான்கு மணி நேரம் சாப்பாடு எல்லாம் தந்து தினசரி ரூபாய் 500 தருவோம். வேட்பாளர் கூடவே வரணும், நோட்டீஸ் தரணும் அல்லது கொடி தூக்கிட்டு வரணும்! பல பேருக்கு இந்த தேர்தல்கள் தற்காலிக வேலை வாய்ப்பாக இருப்பதை பார்க்க முடிகிறது!

ஒரு தம்பி முதல் நாள் திமுக வேட்பாளருடன் பின்னாலேயே பைக்கில் கொடி கட்டியபடி வந்தவன்  நான்கு நாள் கழித்து பாஜக வேட்பாளர் கூட்டத்தில் வருகிறான். கூப்பிட்டு விசாரித்தால். தெளிவாக பேசினான்; ”சார், அது ஒன்னும் இல்ல, இவங்களுக்கு ஆளே கிடைக்கலயாம். நம்ம பிரண்டு வந்து சொன்னான். 700 ரூபாய் தருவாங்க கொஞ்சம் வந்துட்டு போங்க என்றான். அதுக் கோசரம் இன்னைக்கு இங்க வந்தேன்” என்றான்.

நாம் களத்தில் விசாரித்த வரையில் பணம் கொடுக்காமல் ஓட்டு கேட்பது கம்யூனிஸ்ட் கட்சிகள், நாம் தமிழர், மக்கள் நீதி மையம்,ஆம் ஆத்மி ஆகியவையே! இவர்களைத் தவிர்த்து ஏராளமான சிறு கட்சிகளும், சுயேட்சைகளும் பண பலமில்லாமல் களம் காண்கிறார்கள்!

உள்ளாட்சி அமைப்புகள் அமைக்கப்பட வேண்டும், அவற்றுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். மக்கள் தங்களின் பெருமளவு சுயத் தேவைகளை தாங்களே வெளித் துணையின்றி நிறைவேற்றிக் ஆண்டு கொள்ள வேண்டும். என்ற லட்சியத்துடன் பல ஆண்டுகளாக எழுதியும், இயங்கியும் வரும் என்னைப் போன்றவர்களுக்கு உண்மையில் இவை எல்லாம் பேரிடியாக உள்ளன!

ஒரு நாட்டில் ஜனநாயகம் எவ்வாறு உள்ளது என்பதற்கான அளவுகோல், அந்த நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டைக் கொண்டு நாம் தீர்மானிக்கலாம்.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்தே காந்தி கிராமங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சுயாட்சி குறித்து வலியுறுத்தி வந்தார். ஆனால், நீண்டகாலமாக அது பொருட்படுத்தப்படவில்லை. முதன்முதலாக மொரார்ஜி தேசாய் பிரதமரான போது ஜனதா கட்சி ஆட்சியில் அதற்கு சிறு முன்னெடுப்பு நடந்தது. அதற்குப் பிறகு வி.பி.சிங் பிரதமரான போது உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்குவது குறித்து முயற்சித்தார்.பஞ்சாயத்து ராஜ்ஜியம் குறித்து ராஜிவ் காந்தி ஆர்வத்தோடு பேசி வந்தார். அதற்காக இரண்டு கமிட்டிகள் போட்டார். ஆனால், அதை நிறைவேற்றும் அதிர்ஷ்டம் நரசிம்மராவுக்குத் தான் வாய்த்தது. 1992ல் உள்ளாட்சி அமைப்புக்கான 73,74 வது அரசமைப்பு சட்ட திருத்தங்களை நிறைவேற்றினார் ராவ். அந்த நாள் இந்திய அரசியல், சமூக வரலாற்றில் ஏதோ ஒரு பிரளயத்தையே உருவாக்கப் போகும் தொடக்கப் புள்ளியாக எண்ணி மகிழ்ந்தெல்லாம் அறியாமையா? என்று நினைக்க தோன்றுகிறது.

இன்னும் சில கட்சிகளில் கவுன்சிலருக்கு போட்டியிட அந்தந்த மாவட்டச் செயலாளருக்கே இத்தனை லட்சம் கொடுத்து தான் கட்சிக்காரங்க சீட்டு வாங்கி இருக்காங்க! சில கட்சிகளில் மாவட்டச் செயலாளர்கள் இந்த மாமன்றத்திற்கான ஆள் தேர்விலேயே பல கோடியை அள்ளியுள்ளார்கள் என்றால், இது நம்பகமான வியாபாரம் போலவே முன் தொகை செலுத்தப்பட்டு செய்யப்படுகிறது என்ற புரிதலுக்குத் தான் வர வேண்டியுள்ளது.

சமூக பொறுப்புணர்வு, மக்கள் பணியில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், பொதுப் பணத்தை கையாளுவதில் இருக்க வேண்டிய நேர்மை ஆகிய புரிதல்கள் இல்லாததால் ஏற்பட்ட விளைவுகள் இவை! நாளை நாம் ஒரு அடிப்படை தேவைக்காக இவர்களிடம் போய் கேட்டால், இவர்கள் ஈவு இரக்கமில்லாமல் பணம் புடுங்குவார்கள், பணம் தராவிட்டால் எந்த வேலையும் நடக்காது என்ற நிலையை ஏற்படுத்துவார்கள்! வீட்டுக்கு ஒரு கழிவு நீர் இணைப்பு வேண்டும் என்றால் கூட, அதற்கு பல்லாயிரக் கணக்கில் பணம் கேட்பார்கள்! அந்தந்த ஏரியாக்களின் அங்கீகரிக்கப்பட்ட கொள்ளையர்களாக வலம் வருவார்கள்!

வீட்டுக்கு முன்பு மணலோ, செங்கல்லோ கொட்டி இருப்பதை பார்த்தால் உடனே பணம் கேட்டு நச்சரிப்பார்கள்! மத்திய அரசு ஒதுக்கும் நிதி, மாநில அரசு ஒதுக்கும் நிதி இன்னும் உலக வங்கி போன்ற பல வெளிநாட்டு நிதிகளின் மூலம் கிடைக்கும் பணம் எல்லாவற்றிலும் ஆதாயம் அடைவார்கள்! எந்த திட்டமும் உருப்படியாக மக்களுக்கு கிடைக்காது.

எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களையாவது நாம் ஏதாவது கேள்வி கேட்கலாம். ஆனால்,வெற்றி பெற்று வரும் உள்ளாட்சி பிரதிநிதிகளை கேள்வி கேட்டால், நம் அடிப்படையான தேவைகள் நமக்கு கிடைக்காமல் தடுத்துவிடுவார்கள்! இவர்கள் தங்கள் அராஜாகத்திற்கு வலு சேர்க்க அடியாட்களின் கூட்டத்தை வைத்து இருப்பார்கள்! ஆகவே, தயவு செய்து இந்த உள்ளாட்சி தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களின் யோக்கியதை தெரிந்து நாம் ஓட்டுப் போட வேண்டும். கட்சிகளைக் காட்டிலும் நல்ல சேவை எண்ணம் கொண்ட நேர்மையாளரா? என்று பார்க்க வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time