கொரோனா தடுப்பூசிக்கு எதிராக மாபெரும் போராட்டம்!

-சாவித்திரி கண்ணன்

தடுப்பூசியின் பயனின்மை மற்றும் பாதக விளைவுகளால் ஆட்சியாளர்களும், கார்ப்பரேட் ஊடகங்களும் கட்டமைத்த மாயைகள் தகர்ந்து வருகின்றன! அதனால், ”இதை விரும்பாதவர் களுக்கு திணிக்காதே, அறிவியலின் பெயரால் அராஜகத்தை அரங்கேற்றாதே..”என மருத்துவர்களே கூட்டாக களம் காண உள்ளனர்!

” விரும்பாதோருக்கு தடுப்பூசியை திணிக்காதே”

”மக்களை சோதனை எலிகளாக்காதே”

”என் உடம்பு, என் உரிமை,”

”அச்சத்தை விதைக்காதே, அறிவியலை மக்களுக்கு எதிராக மாற்றாதே”

என்ற கோஷங்கள் உலகம் முழுமையும் வலுப்பெற்று வருகின்றன!

கனடாவில் பாராளுமன்றத்தையே முற்றுகையிட்டும், முக்கிய சாலைகளை தடுத்தும் மக்கள் நடத்தும் போராட்டம் 50 ஆண்டுகளில் காணாத ஒன்று என சொல்கிறார்கள். இந்த மிகப் பெரிய மக்கள் போராட்டத்தை சந்திக்க முடியாத அரசாங்கம் அவசர நிலை கால சட்டத்தை அதிரடியாக கொண்டு வந்து சொந்த நாட்டு மக்களையே கைது செய்து துன்புறுத்துகிறது.

கனடாவில் போராட்டம்!

அமெரிக்காவை பொருத்த அளவில் அங்கே அனைத்து முக்கிய நகரங்களிலும் மக்கள் போராட்டம் நடந்த வண்ணம் உள்ளது. இரண்டு தடுப்பூசிகள், பூஸ்டர் போட்டும் கொரோனா பரவலில் எந்த மாற்றமும் இல்லை என்பதோடு, பக்க விளைவுகள் மக்கள் கோபத்தை கொழுந்தாக பற்றீ எரிய வைத்துவிட்டன. லண்டனில் நடந்த கொரோரானா கட்டுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தின் விளைவாய் சென்ற மாதமே அனைத்து கட்டுபாடுகளும் விலக்கி கொள்ளப்பட்டுவிட்டன.

ஆஸ்திரேலியாவிலும் கொரானா தடுப்பூசிக்கு எதிரான போராட்டங்கள் தொய்வின்றி நடந்து வருகின்றன! நியூசிலாந்து நாட்டில் பாராளுமன்றத்தை செயலிழக்க வைக்கும்படியான போராட்டங்கள் கொழுந்துவிட்டு எரிகின்றன! ஸ்பெயினில் பெண்கள் பெருந்திரளாக போராடி வருகின்றனர்.

எல்லா நாட்டு கொரோனா தடுப்பூசி எதிர்ப்பு போராட்டக்காரர்களும் மிகக் கடுமையாக எதிர்ப்பது பில்கேட்ஸைத் தான்! இந்த அனைத்துக்கும் அடிநாதமாக இருப்பது உலக மகா பணக்காரர் பில்கேட்ஸ் சூழ்ச்சிகளும், சதிகளுமே! ஆகவே, பில்கேட்ஸ்க்கு எதிரான கோஷங்களும், பேனர்களும் தவறாமல் எல்லா போராட்டங்களிலும் இருக்கின்றன.

லண்டனில் பில்கேட்ஸை எதிர்த்து!

தமிழகத்தில், சீர்காழி மற்றும் புதுவையிலும்  இயற்கை வழி வாழ்வியலாளர் கூட்டமைப்பினர், தமிழ்தேசிய பேரியக்கத்தினர் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக ஏற்கனவே போராட்டங்களை முன்னெடுத்தனர். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த போராட்டத்தில் அவர்களை தடுத்து கைது செய்த காவல்துறை சிறிது நேரம் கல்யாண மண்டபத்தில் தங்க வைத்து பிறகு விடுவித்தனர். ஆனால், அந்த குறுகிய நேரத்தைக் கூட அங்கு கொரோனா தடுப்பூசிக்கு எதிரான பிரச்சார கூட்டமாக தோழர்கள் மாற்றிவிட்டனர்.

கொரோனா தடுப்பூசியை எப்படி பலவந்தமாக ஈவு இரக்கமின்றி அரசு அமல்படுத்துகிறது என்பதற்கு தமிழக காவல்துறை தலைவரான சைலேந்திரபாபு தன் முக நூல் பகுதியில் அதற்கு ஆதரவாக கொரானா தடுப்பூசியால் சாவு ஏற்பட்டால், ”அது அறிவியலுக்கு தானே உயிர் விட்டிருக்கிறோம். நல்ல மரணம் தானே” என எழுதியுள்ளதே சாட்சியாகும். ”தன் குழந்தையையோ, குடும்பத்தாரோ தடுப்பூசியால் உயிரிழக்க நேர்ந்தால் இவ்வளவு கூலாக அவர் சொல்வாரா..?” என்ற வேதனை மக்களிடையே எழுந்துள்ளது.

 

‘அறிவியல் என்பது மக்களை பாதுகாக்கவா? அல்லது பலி கொடுக்கவா?’ என்பதை சைலேந்திரபாபு போன்றவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். மதவாதிகள் தான் இப்படி மதத்திற்காக உயிர்பலி கொடுப்பதை ஊக்குவிப்பார்கள். அதே போல கொரோனா தடுப்பூசி ஆதரவாளர்களும் இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் வலியை உணராமல் வறட்டுத் தனமாக, அறிவியல் பெயரால் ஆதரித்து பேசி வருகின்றனர்.

ஆகவே, இந்தச் சூழலில் தற்போது மாபெரும் தடுப்பூசி எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் மக்கள் மருத்துவக் கூட்டமைப்பினர்.

”கொரோனோ தடுப்பூசியைக் கட்டாயமாக்காதே! தடுப்பூசியால் பாதிக்கப்பட்டோர்க்கு இழப்பீடு வழங்கு! ” என்பதை மையப் பொருளாக்கி, சென்னையில் வரும் பிப்ரவரி 23 அன்று தடுப்பூசித் திணிப்புக்கு எதிரான மாபெரும் ஒன்றுகூடல் திட்டமிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் மிக முக்கிய மருத்துவர்கள் இதில் கலந்து கொண்டு சிறப்பான விழிப்புணர்வை தர உள்ளனர். மருத்துவர்கள் உமர் பாருக், வீ.புகழேந்தி, பி.ஹரிசங்கர், கோ.பிரேமா, முகமது யூசுப், கோபாலகிருஷ்ணன், ஞானசுந்தர பாண்டியன், அருள்ராஜ் போன்ற பத்துக்கு மேற்பட்ட மருத்துவர்கள், ஏன் கொரோனா தடுப்பூசியை எதிர்க்க வேண்டும். உண்மையான அறிவியல் பார்வையில் இதை எவ்வாறு புரிந்து கொள்வது என பேச உள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் போராட்டம்!

இந்த ஒன்றுகூடலை வெற்றிகரமாக்க தமிழ் தேசிய பேரியக்கம், இயற்கை வழி வாழ்வியலாளர் கூட்டமைப்பு, மக்கள் அறிவியல் இயக்கம், கட்டாய தடுப்பூசிக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு, பேரழிவுக்கு எதிரான மக்கள் இயக்கம்.. உள்ளிட்ட பல இயக்கங்கள் களவேலை செய்து வருகின்றனர். ஆகவே, தமிழகம் முழுமையும் கொரொனா தடுப்பூசியை எதிர்த்துக் கொண்டிருக்கும் அனைவரும் பிப்ரவரி 23 ந்தேதி வள்ளுவர் கோட்டம் அருகே புதன் கிழமை காலை 10 மணியளவில் சென்னையே குலுங்கும்படி வந்து சேருவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த எதிர்ப்பு கூட்டம் அகில இந்தியாவுக்குமான ஒரு வலுவான செய்தியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்சில்!

இது தொடர்பாக மக்கள் மருத்துவ கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையின் சாராம்சம் கீழே தரப்பட்டுள்ளது’

உண்மையில், கொரோனா பெருந்தொற்றை வெல்ல வேண்டுமெனில், அனைவரும் தங்கள் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப ஒவ்வொரு குடிமக்களுக்கும் சத்தான உணவு, தூய்மையான குடிநீர், மாசற்ற காற்றும் சுற்றுச்சூழலும் கொண்ட வாழ்விடம் ஆகியவை கிடைப்பதற்கு அரசுதான் வழிவகை செய்ய வேண்டும். ஆனால், இதை உறுதிசெய்ய இயலாத அரசு, “கொரோனாவை வெல்ல தடுப்பூசியே தீர்வு” என செயலில் இறங்கியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றிலிருந்து தப்பிக்க தடுப்பூசியே ஒரே தீர்வு என இந்திய – தமிழ்நாடு அரசுகள், அனைத்து நிலைகளிலும் தடுப்பூசியை அனைவர் மீதும் திணிக்கும் சட்டவிரோதமான – தனிமனித சுதந்திரத்திற்கு விரோதமான – ஒற்றை ஆங்கில மருத்துவத் திணிப்புப் பாசிச முயற்சியில் இறங்கியுள்ளன!

பெருந்தொகையை அரசிடமிருந்து பெற்றுக் கொண்டு கொரோனா தடுப்பூசிகளை அளிக்கும் தனியார் பெருமுதலாளிய நிறுவனங்கள் தொடக்கத்திலிருந்தே ஊசிகளின் விலையை உயர்த்தி, இலாபம் ஈட்டுவதிலேயே குறியாக உள்ளன. தடுப்பூசி நிறுவனங்களுக்கிடையிலான சந்தைப்போட்டியும் நடக்கிறது.

அனைத்து மக்களிடமும் தடுப்பூசியைத் திணிக்கும் இந்திய அரசு, இத்தடுப்பூசியை செலுத்திக் கொள்வதால் வரும் பின்விளைவுகளுக்குப் பொறுப்பேற்க மறுக்கிறது. தடுப்பூசி வழங்கும் தனியார் நிறுவனங்களும், காப்பீட்டு நிறுவனங்களும் கூட இதற்குப் பொறுப்பேற்க மாட்டார்கள். தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீடு வழங்க இயலாது என இந்திய அரசு அறிவித்துவிட்டது. தடுப்பூசியால் நிகழும் மரணம் முதற்கொண்டு ஏற்படும் பின்விளைவுகளுக்கு இழப்பீடு எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை!

இந்நிலையில், இதன் அடுத்த கட்டமாக, தேர்வெழுதத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அச்சப்படுத்தி, குழந்தைகள் மீதும் கட்டாயத் தடுப்பூசியைத் திணிக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

நியூசிலாந்தில் நடந்த போராட்டம்!

கொரோனா நோய் – குழந்தைகளிடையே தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தாத நிலையில், பெரும்பாலான குழந்தைகள் தனது இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலால் கொரோனாவை எதிர்கொள்ளும் சூழலில், அவர்களுக்குக் கட்டாயத் தடுப்பூசி என்பது வேண்டாத பின்விளைவுகளுக்கே இட்டுச் செல்லும் என அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் ( AIIMS) மூத்த தொற்றுநோயியல் மருத்துவர் சஞ்சய் கே ராய், தேசிய கொரோனா தடுப்புக் குழு உறுப்பினர் மருத்துவர் ககன்தீப் காங் போன்ற மருத்துவர்களே எதிர்க்குரல் எழுப்புகின்றனர்.

எனவே, தடுப்பூசியைக் கட்டாயமாக்குவது எவ்வகையிலும் சரியல்ல! தடுப்பூசி வேண்டுமென விரும்புவோர் போட்டுக் கொள்ளட்டும். போட விரும்பாதவர்கள், சித்த மருத்துவம், அக்குபங்க்சர், ஓமியோபதி என தங்கள் விருப்பத்திற்குரிய மாற்று மருத்துவத்தை நாடிக் கொள்ளட்டும். கட்டாயத்தின் பேரில், மக்கள் அனைவரையும் அலோபதி என்ற ஒற்றை மருத்துவத்தின் கீழ் கொண்டு போய் தள்ளுவதற்கான சூழலை அரசே ஏற்படுத்தக் கூடாது. கொரோனோ பெருந்தொற்றுச் சூழலை, தனது இலாபவெறிக்கான முதலீடாக மாற்ற முயலும் மருந்து நிறுவனப் பெருங்குழுமங்களின் சதிக்குத் துணை போகக்கூடாது.

தமிழ்நாடு அரசு கட்டாய தடுப்பூசி நடைமுறைகளைக் கைவிட வேண்டும்! தடுப்பூசியை ஏற்பதும், மறுப்பதும் அவரவர் உரிமை! அரசு பரப்புரை செய்யலாமே அன்றி, கட்டாயப்படுத்தித் திணிக்கக் கூடாது’’ எனத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புக்கு – 98419 49462, 99765 37443

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time