சித்ரா ராமகிருஷ்ணாவை சிறைப்படுத்தாதது ஏன்?

-சாவித்திரி கண்ணன்

இப்படியும் நடக்க முடியுமா? என வியப்பின் உச்சமாக தேசிய பங்கு சந்தை ஊழல்கள் மிரட்டுகின்றன! சில லட்சம் கோடிகளில் நடந்துள்ள இந்தியாவின் மிகப் பெரிய ஊழல் ஏழாண்டுகளாக மறைக்கப்பட்டதன் மர்மம் என்ன? இப்போதும் அறைகுறையான விசாரணைகளுடன் அனுசரனை காட்டப்படுவது ஏன்?

தேசிய பங்கு சதையில் மிகத் தெளிவாக திட்டமிட்டு பல லட்சம் கோடிகளில் முறைகேடுகள் நடந்துள்ளன! நூதனமாக நவீன கம்யூட்டர் வழி இணைய சர்வர் மூலம் பல புரோக்கர்கள், நிறுவனங்கள் முறைகேடாக பல்லாயிரம் கோடிகளில் பணம் ஈட்டி பலன் அடைந்துள்ளனர்! பல்லாயிரக்கணக்கானோர் பணம் கட்டி திவாலாகியுள்ளனர். குறிப்பிட்ட சிலர் பலனடையவும், பெருந்திரளானோர் நஷ்டப்படவும் தேசிய பங்கு சந்தையின் தலைமை நிர்வாகியாக பணி புரிந்த சித்ரா ராமகிருஷ்ணா துணை போயுள்ளார்.

1992 ல் ஹர்சத் மேத்தாவின் மோசடி அதிகபட்சம் 5,000 கோடிகள்! இன்றோ, சித்ரா ராமகிருஷ்ணா முறைகேடுகளோ.. அதைக் காட்டிலும் சில நூறு மடங்கு அதிகம்! ஏழாண்டுகள் ஆன நிலையிலும் இதை இன்னும் சரியாக மதிப்பிட்டு சொல்லக் கூட ஆளும் வர்க்கம் தயங்குகிறது.

ஹர்சத் மேத்தா

பங்கு சந்தை என்பதே ஒரு வகையில் அங்கீகரிக்கப்பட்ட சூதாட்டமே! ஆனால், அதையும் சில சட்ட,திட்டங்களின் படி நடத்துவதாலும், அதில் வணிக நிறுவனங்கள் பலன் பெற்று உற்பத்தியை பெருக்கவும்,பொருளாதாரம் சிறக்கவும் வழி ஏற்படுவதாலும் பல நடுத்தர வர்க்கத்தினர் கூட நிறைய முதலீடுகள் செய்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் கோடிகள் புரளும் உலகின் மிகப் பெரிய பங்கு சந்தைகளில் ஒன்று இந்திய பங்கு சந்தை! இதில் சித்ரா ராமகிருஷ்ணா கால ஊழல்களின் மதிப்பு சில லட்சம் கோடிகள் என்பதைக் கொண்டு பார்க்கும் போது, இதில் எத்தனை பேர் பெரு நஷ்டம் அடைந்திருப்பார்கள், ஓட்டாண்டி ஆகி இருப்பார்கள், காணாமல் போய் இருப்பார்கள் என்பதற்கு அளவே இல்லை.

இப்படிப்பட்ட ஊழல்களுக்கு துணை போனவர் பல ஆண்டுகளாக காப்பாற்றப்பட்டு வந்துள்ளார்! அந்த ஊழல் தெரிய வந்து ஏழாண்டுகள் ஆன சூழலில் இப்போது தான் பொதுவெளியில் ஒரு விவாத பொருளாகியுள்ளது.

வெளிவந்த போதும் இந்த ஊழல் குறித்த விவகாரங்களை பின்னுக்கு தள்ளி என்னென்னவோ சர்ச்சைகளில் மக்கள் கவனம் திசை திருப்பட்டு வருகிறது! ஊடகங்கள் கூட இதை சரியாக விவாதிக்காமல் மேம்போக்காக செய்தி சொல்லி நழுவுகின்றன!

சித்ரா பல மோசடிகளை செய்துள்ளார், பல கோடிகளை பொறுப்பின்றி செலவழித்துள்ளார். தவறான ஒருவருக்கு சட்டவிதிகளை புறம் தள்ளி நான்கு கோடி ரூபாய் சம்பளம், பல சலுகைகள் என வழங்கியுள்ளார். பங்கு சந்தை ஊழல்களால் பலரை பாதாளத்திற்குள் தள்ளியுள்ளார்! இன்று இதெற்கெல்லாம் கண்ணுக்கு தெரியாத ஒரு இமாலய சாமியாரை பொறுப்பாக்குகிறார். அது தான் பிரச்சினையை திசை மாற்றி தற்போது விவாத பொருளாகிவிட்டது.

முற்றிலும் துறந்த ஒரு சாமியார் லட்சம் கோடிகளில் பணம் புரளும் பங்கு சந்தை குறித்து இவ்வளவு அக்கறை காட்ட முடியுமா? அதுவும் தினசரி வேறு வேலையே இல்லாதவர் போல, சித்திராவின் ‘ஹேர் ஸ்டைல்’ தொடங்கி ஒவ்வொரு நகர்வையும் கூர்ந்து கவனித்து ‘இ மெயில்’ அனுப்பி உள்ளார் என்றால், அவர் எப்படி சாமியாராக இருக்க முடியும்? இமாலயாவில் பனிமலைக் குகையில் இருக்கும் அவருக்கு எப்படி இணைய வசதி சாத்தியமானது? என்றெல்லாம் மக்களை குழம்பவிட்டு விவாதிக்க வைத்து ஆளும் அதிகார வர்க்கம் குளிர் காய்கிறது.

இன்றைய நவீன யுகத்தில் ஒரு இமெயில் எங்கிருந்து யாரால் அனுப்பப்பட்டு உள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியாதா என்ன? இதை ஏன் இவ்வளவு சுத்தவிடுகிறார்கள்?

அதுவும் இந்த ஊழல் வெளியாகி ஏழாண்டுகள் விசாரணை, புலனாய்வுகள் நடந்துள்ள நிலையில் இன்று வரை அதை தொடர்ந்து மறைப்பானேன்?

‘ரிக்யசூர்சாமாஅட்ஜிமெயில்டாட்காம்’ யாரால் உருவாக்கப்பட்டது, எங்கிருந்து அனுப்பட்டது என்பதை கவனமாக மறைத்துவிட்டு பல ஹேஷ்யங்களை பேசவைக்கும் சாமார்த்தியத்தை என்னென்பது?

2014 ல் இந்த மோசடி அம்பலமாகிறது! 2015 ஏப்ரலில் தான் சித்ரா ராஜினாமா செய்கிறார். வெளியேறும் அவருக்கு 40 கோடிகளுக்கு மேல் ஓய்வூதியத் தொகை உள்ளிட்டவை வழங்கப்பட்டு, பிறகு அவரை மீண்டும் அவரை ஒட்டுமொத்த குழுமத்திற்குமான ஆலோசகராக நியமித்து மீண்டும் பல கோடி ஊதியம் வழங்கி 2016 அக்டோபர் வரை வைத்துள்ளார்கள் என்றால், இது ஊழலுக்கு தரும் பரிசாகாதா? செபி அமைப்பு இந்த சீமாட்டி விவகாரத்தில் சீற்றமே கொள்ளவில்லையே..?

எனில், இந்த முறைகேட்டால் பலனடைந்து வந்த ஆளும் தரப்பு பெரு நிறுவனங்கள் சித்ராவிற்கு பின்னணியில் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். மத்திய ஆட்சித் தலைமை அந்த நிறுவனங்களின் விரலசைவுக்கு கட்டுப்படுவர்களாக இருக்க வேண்டும். சித்ரா வெளியேறிய நிலையிலும் தொடர்ந்து அவர்கள் முறைகேட்டை செய்து பலடைய முடிந்துள்ளது என்றால், அப்படி கடந்த சில ஆண்டுகளாக  பங்கு சந்தையில் எந்தெந்த நிறுவனங்கள் எல்லாம் அதிவேக உச்ச நிலைக்கு சென்றவர்கள் என்று பார்த்தாலே தெரிந்துவிடுமே!

இத்தனை  லட்சம் முறைகேட்டை இத்தனை வருடங்களாக பொத்தி வைக்க முடிகிறது என்றால், இதில் சகல முக்கிய கட்சிகளுக்கும் வேண்டியவர்கள் சம்பந்தப்பட்டு இருக்க வேண்டும். காங்கிரஸ் காலகட்டத்திலேயே சித்ரா தன் சித்து விளையாட்டுகளை ஆரம்பித்துள்ளார். அது பாஜக ஆட்சியிலும் தொடர்ந்துள்ளது. அது வெளிப்பட்ட நிலையிலும் தொடர்ந்து  அவர் காப்பாற்றப்பட்டார். பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரசுக்கு ஆதரவான தொழில் அதிபர்கள் ஏன் இவ்வளவு நாள் மெளனம் சாதித்தனர் என தெரியவில்லை.

சித்ரா ஆண்டொன்றுக்கு வாங்கிய சம்பளம் கிட்டதட்ட ஒன்பது கோடி! அனுபவித்த சலுகைகள் அனேகம். முறைகேட்டுக்கு துணை போனதால் இன்னும் பல கோடிகள் அவர் ஆதாயம் அடைந்திருக்க வாய்ப்புண்டு. மொத்ததில் சில லட்சம் கோடிகள் ஊழலுக்கு காரணமானவருக்கு வெறும் மூன்று கோடி அபராதம் விதித்துள்ளதும், ஏழெட்டு ஆண்டுகள் கடந்து ரெய்டு செய்வதும் அப்பட்டமான கண் துடைப்பாக உள்ளது. 5,000 கோடி ஊழல் செய்த ஹர்சத் மேத்தா பல்லாண்டுகள் சிறைவாசம் அனுபவித்து சிறையிலேயே மரணமடைந்தார்! ஆனால், லட்சங்கோடிகளில் ஊழல் செய்தவரோ, மிகக் காலதாமதமாக அறிவிக்கப்பட்டு, மிகச் சிறிய அபராதத்துடன் விட்டு வைக்கப்படுகிறார். ஊடகங்களும் இதை விரிவாகவும், ஆழமாகவும் பேச மறுக்கின்றன!

எப்போதோ சிறைப்பட்டிருக்க வேண்டிய சித்ராவை, ‘உலகின் தலை சிறந்த சக்தி வாய்ந்த பெண்’, ‘பெண் குலத்தின் முன்னோடி’ என்பதாக உலகின் புகழ் பெற்ற போர்ப்ஸ், (forbes) பார்ட்யூன் (fortune), நம் நாட்டின் ‘பிசினஸ் இந்தியா’ போன்ற ஏராளமான ஊடகங்கள் கொண்டாடி வந்ததை நாம் நினைகூறாமல் இருக்க முடியவில்லை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time