சிகிச்சை முறையின் கோளாறுகளே -ஓரு சிறந்த கலைஞனை பறித்துக் கொண்டது…!

-டாக்டர். கோ. பிரேமா MD(Hom),

மாபெரும் இசைக் கலைஞனான எஸ்.பி.பியின் மரணத்திற்குத் தவறான முறையில் தரப்பட்ட அலோபதி மருத்துவச் சிகிச்சையே   காரணம் என்றும், அவர் மருத்துவமனை செல்லாமல் இருந்திருக்கலாம் என்றும் பரவலான மக்கள் கருத்து உள்ளது! ஆனால்,  அலோபதி என்பது அறிவியல்பூர்வமான சிகிச்சை அது பற்றித் தெரியாமல் பேசுவது முற்றிலும் தவறு, அறியாமை ….என்றெல்லாம்  பல்வேறு விவாதங்கள் நடந்து கொண்டுள்ளன!

ஒரு கலைஞனின் மரணம், ஊடகங்களிலும் மக்களின் பார்வையிலும் இன்றைய விவசாய மசோதா முதற்கொண்டு பல முக்கிய சமூக பிரச்சனைகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது.  மக்கள் மனம் கவர்ந்த கலைஞன் அல்லவா? இழப்பின் வருத்தம் இருக்கத்தான்  செய்யும்.

இது ஏதோ அலோபதி மருத்துவத்திற்கு எதிரான பதிவல்ல ! அந்த மருத்துவம் மீது எனக்கு மரியாதை உண்டு! குறிப்பாகக் கொரானா காலத்தில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உயிரைக் கொடுத்து உழைத்ததை நாம் அனைவரும் பார்த்தோம்.எனினும் அலோபதி மருத்துவமனைகள் கவனிக்கத் தவறிய விஷயங்கள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவதே என் நோக்கம்.

2018 ஒரு ஆய்வில் அமெரிக்காவின் மரணங்களில், மூன்று மரணங்களில் ஒன்றுக்கு அலோபதி மருத்துவமனைகளில் தரப்படும் தவறான சிகிச்சையே காரணம் என்றது.

இந்தியாவிலும் இதே கதை தான்.

2018  ஆம் ஆண்டு ‘லான்சட் ’ ஆய்வு ஒன்று இப்படிச் சொல்கிறது.

இந்தியாவின் மரணங்களில் நாளொன்றுக்கு 4,300 மரணங்கள் அலோபதி மருத்துவமனைகளின்  தவறான மருத்துவச் சிகிச்சையால் ஏற்படுகிறது. அதாவது ஆண்டொன்றுக்கு 50 லட்சம்!

இதேபோக , 36 லட்சம்  மரணங்கள் மருத்துவ(மருத்துவர் அல்லது மருத்துவமனையே) வசதி அருகாமையில் இல்லாமல் இருப்பதால் நடக்கின்றன என்கிறது.

பெரும்பான்மையான மருத்துவமனை மரணங்களில் அவசர சிகிச்சைப் பிரிவில் நடக்கும் பல விஷயங்கள் பங்கு வகிக்கின்றன! அதாவது மருந்து ஒவ்வாமை(36%) தொடங்கி  அறுவை சிகிச்சை தந்த விதம்,அவசர சிகிச்சையாக அணுகிய முறை … என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

’’நீங்கள் மருத்துவமனை  சென்றிருக்க வேண்டாம் எஸ்.பி.பி ’’ எனும் அவரது ரசிகர்களின் குரல்கள் பின்னால் இருக்கும் வேதனை சொல்லும் உண்மை என்ன?

மருத்துவமனை செல்வதில் என்ன நேர்கிறது?

எஸ்.பி.பி  மட்டுமல்ல,  மருத்துவமனை செல்லும் எவருக்கும் இது பொருந்தும். அதிலும், இப்போது கொரோனாவுக்கு அளிக்கப்படும்  சிகிச்சைகளில் மேலும் பல குழப்பங்கள் உள்ளன.

ஏற்கனவே 74 வயது, உடல் பருமன், சில வருடங்கள் முன் உடல் பருமன் குறைக்க எடுத்த சிகிச்சை, அத்துடன்  கொரானாவுக்கான அதிக பவர் கொண்ட மருந்துகள், நீண்ட நாள் தரப்பட்ட தொடர் சிகிச்சைகள்… ஆகியவை அவரை மரணத்திற்கு அழைத்துச் சென்றன எனச் சொல்வது மிகையாகாது.

அதுவும் கொரோனா தொற்றுக்கு இந்தியாவில் தற்சமயம் கொடுக்கப்படும் ’ரெம்டெஸிவர்’ இதுவரை முறையாகப் பரிசோதனை செய்யப்படாதது.  பல மோசமான விளைவுகள்  கொண்டது!

பொதுவாக கொரோனா மரணங்களில் பல நோயினால் ஏற்பட்டதா இல்லை சிகிச்சையால் ஏற்பட்டதா என்ற குழப்பம் தொடர்கதையாக செல்கிறது.

முதல் குற்றவாளி ’ரெம்டெஸிவர்’ என்றால் அது மிகையாகாது. மிதமான தொற்று பாதிப்பில் இருந்தவரை இது மோசமான நிலைக்கு மாற்றவல்லது! ஏற்கனவே தொற்றோடு  நிதானமாகப் போராடிக்கொண்டிருக்கும் உடலானது இப்போது மருந்தோடும் போராடவேண்டிய அவலத்தைச் சந்தித்துள்ளது.

இது போன்ற சிகிச்சைகள் எவருக்கும் நலமாக்கலில்  பின்னடைவை ஏற்படுத்தும்.

தனிமைப்படுத்தப்படும் மருத்துவமனை சூழலில்  பொதுவாகவே மன அழுத்தம் அதிகரிக்கும். உறவுகளைப் பிரிந்து இருத்தல், பழக்கப்பட்ட வீட்டு உணவு இல்லாதது, நோய் பயம், மருத்துவமனை தரும் பரபரப்பின் அச்சம் , இவை அனைத்தையும்  நோயோடு சேர்த்து ஒருவர் போராடவேண்டியுள்ளது.

இச்சூழலே ஒருவரை நோயை அதிகரிக்கச் செய்து  விரைவாக அவசர சிகிச்சைப் பிரிவுக்குத்  தள்ளுகிறது.

மருத்துவமனையின் சுத்தமான சூழலில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இருந்தால் போதும் உங்களது நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்  என்கிறது ஆய்வுகள்.

சுத்தம் அவசியம் தான்! ஆனால்,அதிக சுத்தம் ஆபத்தானது!

அவசர சிகிச்சைப் பிரிவு இயற்கையான காற்றோட்டமோ, சூரிய ஒளியோ புகமுடியாமல் மிகவும் சுத்தமாகப்  பராமரிக்கப்படும் இடம். எனில் , மருத்துவமனையில் இதுதான் இருப்பதிலேயே மிகவும் ஆபத்தான இடமாகிவிடுகிறது! இவ்விடம் இயற்கையிடமிருந்து மனிதனைத் தனிமைப்படுத்துகிறது.

அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் நுழைந்தபின் இதனாலேயே ஏற்படும் பின்னடைவுகள் பல. இதுபற்றி பல மருத்துவ ஆய்வூக்கட்டுரைகைள் நிறையவே  உள்ளன. தேடிப் படிக்கலாம்.

மருத்துவமனை மரணங்களில் அவசர சிகிச்சை மரணங்கள் தான் அதிகம். இவை ஒருவரது நோயால் ஏற்படுகிறதா அல்லது சிகிச்சையால் ஏற்படுகிறதா என்று குழப்பம் இன்றளவும்  மருத்துவ உலகில் தீரா விவாதமாகத் தொடர்கிறது.

இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

முக்கியமானது தொற்று. ஆம், சுத்தமான இந்த இடத்தில் தான் தொற்று  கட்டற்று பெருகும்.

உலகெங்கும் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களை நுரையீரல் தொற்று அதிகமாகத் தாக்குகிறது என்பது நிரூபிக்கப்பட்ட  ஒன்றாகும்!

இந்த நுரையீரல் பாதிப்பைத் தொடர்ந்து வென்டிலேட்டர் பொருத்தப்படுகிறது.. இப்படி பொருத்தப்படும் வென்டிலேட்டரை  மரணவீட்டின் வாசற்படிக்குப் பலரை அழைத்துச் சென்றுவிடுகிறது.

கொரோனா மரணங்களில்  வென்டிலேட்டர் சிகிச்சை வரை சென்றவர்கள் தான் 90% என்கிறது பல நாடுகளது மருத்துவத் தரவுகள்.

’வென்டிலேட்டர்’ சிகிச்சை மரணத்தில் முடிகிறது.  நோயால் ஏற்பட்டதல்ல இந்த மரணம்! திடீரென   ஏற்படும் ஆக்ஸிஜன் பிரசர் மாற்றம் நோயாளியைத் திணறடிக்கும். வெண்டிலேட்டரில் இரண்டு நாள் இருந்தால் ஏற்படும் தொற்று நிமோனியாவாக மாறும்போது நுரையீரலில் சிக்கல் உருவாகிவிடுகிறது.

இதைச் சமாளிக்க மீண்டும் அதிகளவு  மருந்துகள் தரப்படுகின்றன. இதற்கு மேல் உடலால் மருந்துகளைத் தாக்குப்பிடிக்கமுடியாமல்  போய்விடுகிறது. உடல் மருந்தை ஏற்றுக்கொள்ளாமல், நிராகரிக்க தொடங்கும். இதைத்தான் மருந்து ஒவ்வாமை என்பார்கள் .

இம்மாதிரியான சிகிச்சைகளால் மீண்டும் மீண்டும்  பல அதிர்ச்சிகளை உடல் எதிர்கொள்ள நேரிடுகிறது.

ஏற்கனவே ஆரோக்கியம் நலிந்த உடலும் மனதும் அடுத்தடுத்த அணுக்குண்டுகளை எப்படித்  தாங்கும்?

எஸ்.பி.பி கிட்டத்தட்ட 50 நாட்கள் மருத்துவமனை தொடர் சிகிச்சையில்  இருந்திருக்கிறார். ஏன் இத்தனை நாட்கள்? கொரோனா சிகிச்சையில் பெரும்பான்மையினர் இரண்டு வாரங்களில் வீடோ, காடோ திரும்புகையில் ஏன் ஒருசிலர் மட்டும் இத்தனை நாட்கள்?

முதல் வாரத்தில் ஆரோக்கியமாக இருந்தவர் எப்படிப் படிப்படியாக நோயாளி ஆனார்? ஆரம்பத்தில் இருந்து 50 நாட்கள் கொடுக்கப்பட்ட  சிகிச்சை விபரங்கள் என்ன?

எது அவரை அவசர சிகிச்சை வரை இழுத்துச்சென்றது?

கோடிக்கணக்கில் மருத்துவ கட்டணம்  நிர்ப்பந்தித்து வசூலிக்கப்பட்டதாக வரும்  தகவல்கள்,  மேலும் மேலும் மக்கள் மனதில் மருத்துவமனை சார்ந்த அச்சத்தை ஏற்படுத்தாமல் வேறென்ன செய்யும்?

இதைத் தயவு செய்து அலோபதி மருத்துவத்தையோ,மருத்துவர்களையோ வசைபாட எழுதப்படும் கட்டுரையாகக் கருதாதீர்கள்!  கொஞ்சம் நிதர்சனத்தைப் புரிந்து கொள்ள முன்வாருங்கள். சம்பந்தப்பட்ட டாக்டர்களின் நோக்கம் அவரை எப்படியும் குணப்படுத்திவிடலாம் என்ற நல்ல நோக்கமாகக் இருந்திருக்கலாம்.ஆனால்,அதற்காக அவர்கள் கையாண்ட சிகிச்சை முறை  சரியானதல்ல என்பதே நான் சொல்ல வருவதாகும்!

எந்த மருத்துவரது நோக்கமும், முயற்சியும் நோயிலிருந்து மரணத்தைத் தவிர்ப்பதாகத்தான் இருக்கும்.

ஆனால், உண்மையில் இந்த சிகிச்சை முயற்சிகள் முழுப் பொறுப்புடன், அறிவியல் அறிவுடன், அனைத்து மருத்துவ சாத்தியங்களையும் உபயோகித்து  நடக்கிறதா?

ஒருவரது சிகிச்சையில் முக்கியமாக உயிருக்கு ஆபத்தான  நிலையில் அவசர சிகிச்சையின் போது, அலோபதி  அல்லாத மருத்துவத்துறைகள் பரிந்துரைக்கப்படுவதில் பெரும் தயக்கம் நிலவுகிறது.

“அறத்தின் வழி அல்லாத அறிவியல் அழிவு மட்டுமே தரும்”

மருத்துவ குற்றங்களிலேயே அறியாமை(medical ignorance) அலட்சியம் (medical negligence) இவற்றைவிட  அகங்காரமே (medical arrogance) மிகமிக ஆபத்தானது.

கொரோனாவின் தொடக்கத்திலேயே மாற்று மருத்துவமுறைகளை அங்கீகரிப்பதிலும், முயற்சி செய்வதிலும் பல எதிர்ப்புகள் இருந்தன. ஆனால், நீண்ட தயக்கத்திற்குப் பிறகு ஓரளவு அங்கீகரிக்கப்பட்டது.

இந்த தயக்கம் தகர்க்கப்பட்டதில் கொரானாவுக்கு  ஓரளவு பங்குள்ளது. குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் கொரானாவிற்கு அலோபதி சிகிச்சையுடன் சித்தா, யோகா மற்றும் உணவு முறைகளின் வழியிலும்,இயற்கை  மருத்துவச் சிகிச்சையிலும் அதிக நோயாளிகள் குணமடைந்தார்கள் என்பதை சுகாதாரத்துறையே அறிவித்துள்ளது.குறிப்பாக நீராவிப் பிடித்தல்,சுவாசத்திற்கான அரோமா தெரபி போன்ற சிகிச்சைகள் தரப்பட்டது நல்ல பலனைத் தந்துள்ளது. அதாவது பாரம்பரிய வழிமுறையிலான இயற்கை சார்ந்த அணுகுமுறை அரசு மருத்துவமனைகளில் ஏற்கப்பட்டுள்ளது.இதில் நல்ல வெற்றியும் கிடைத்துள்ளது.

அனைத்து முயற்சிகளும் சாத்தியங்களும் பொறுப்புடன் கொடுக்கப்பட்டு, பலன் கிடைக்கிறதென்றால், பயன்படுத்திக் கொள்வதில் தயக்கம் கூடாது.எஸ்.பி.பியின் மரணத்தை தவிர்த்திருக்க முடியுமா? என்றால், முடியும் என்பதே நம் பதில்!

கட்டுரையாளர்

டாக்டர். கோ. பிரேமா MD(Hom)

டாக்டர் பிரேமா; மக்கள் சார்ந்த மருத்துவம்,வெளிப்படைத் தன்மையுள்ள மருத்துவம் ஆகியவற்றில் நம்பிக்கையுள்ள  ஹோமியோபதி மருத்துவர்.மருத்துவத்தை சமூக அறிவியலாகப் பார்ப்பவர். ஒற்றை மருத்துவ கலாச்சாரத்தைத் தவிர்த்து அது பன்முகத்தன்மையுடன் விளங்க வேண்டும் என்ற கருத்துள்ளவர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time