தமிழ் சந்திக்கும் சரிவுகள் என்னென்ன..?

-சாவித்திரி கண்ணன்

இன்றைய தினம் இயற்கைக்கு இணையாக வேகமாக அழிக்கப்பட்டு வருவது தாய் மொழிகளே! உலகில் ஒவ்வொரு ஆண்டும் பல தாய்மொழிகள் பேசுவாரை இழந்து காணாமல் போகின்றன! அதிகாரத்தையும், நவீன தொழில் நுட்பங்களையும், ஒற்றுமையையும் சாத்தியப்படுத்த தவறும் மொழிகள் சாகின்றன!

உலகில் 6,000 மொழிகள் இருந்தாலும் 96 சதவிகித மக்கள் 240 மொழிகளுக்குள் வந்து விடுகின்றனர். சில ஆயிரம் மக்களாலும், சில லட்சம் மக்களாலும் பேசப்படும் மொழிகள் 5,000 க்கு மேற்பட்ட மொழிகள் இன்னும் எத்தனை நாள் தாக்குப் பிடிக்கும் என்பது கேள்விக் குறியாக உள்ளது. அந்த வகையில் இருக்கின்ற, எந்த மொழியுமே அழிந்துவிட வாய்ப்பளிக்காமல், அரவணைத்து காக்க வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக இந்த தாய் மொழி தினத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், அப்படி எடுத்துக் கொள்ளப்படுகிறதா..? என்பது கேள்விக் குறி தான்!

இந்தியாவை எடுத்துக் கொள்வோம். இந்தியாவில் 1,635 மொழிகள் பேசப்பட்டு வந்தன! இதில் தற்போது கணிசமானவை காணாமல் போய்விட்டன! தங்கியவற்றிலும் 235 மொழிகள் மட்டுமே எழுத்து வடிவம் கண்ட மொழிகளாக உள்ளன! இதில் 28 மொழிகள் திராவிட மொழிகளாக அடையாளம் காணப் பெற்றுள்ளன! இந்திய அரசை பொருத்தவரை 22 மொழிகளை மட்டுமே அலுவல் மொழியாக அட்டவணையில் சேர்த்துள்ளது. இது என்ன அளவுகோலோ? உதாரணத்திற்கு 25,000 பேர் மட்டுமே இன்று இந்தியாவில் பேசி வரும் சமஸ்கிருதம் மிகப்பெரும் அங்கீகாரம் பெற்றுள்ளது. ஆனால், ராஜஸ்தானில் சுமார் ஒரு கோடி மக்கள் பேசும் மொழியான பில்லி மொழியை அரசு அங்கீகரிக்கவில்லை.

அது மட்டுமின்றி, இந்தியாவில் அதிகபட்சம் இரண்டரை லட்சம் மக்கள் மட்டுமே தங்கள் தாய்மொழி அல்லது பேச்சுமொழியாக வரிந்து கொண்ட ஆங்கிலம் தான் மிக அதிகாரம் பொருந்திய அலுவல் மொழி. இந்தியாவில் மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்பட்டன! ஆனால், அப்படி பிரிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களிலும் ஆங்கிலமே அலுவல் மொழியாக கோலோச்சுகிறது. அது இணைப்பு மொழியாக, கல்வி மொழியாக பயன்படுத்தப்படுவதில் நமக்கு கேள்வி இல்லை. ஆனால், அதிகாரம் பொருந்திய மொழியாக – மக்களை அதிகாரவர்க்கத்திடம் இருந்து அந்நியப்படுத்தும் மொழியாக – தொடர்ந்து தக்கவைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆங்கில ஆதிக்கத்தால் இன்று தமிழகத்தில் மட்டுமில்லை, இந்தியா முழுமையுமே தாய்மொழியில் எழுத, படிக்கத் தெரியாத தலைமுறைகள் உருவாகிவிட்டன!

எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்போம். ஆனால், தாய் மொழி கற்றுத் தேர்ந்து பிறவற்றை கற்போம் எனும் சூழல் உருவாக வேண்டும். குழந்தைக்கு முதன்முதலாக கற்றுத் தரும் மொழியே ஆங்கிலம் என்ற போக்கு சமீபகாலமாகத் தான் வேரூன்றியது.

இத்தனைக்கும் இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து நீண்ட நெடிய போராட்டங்களும், கணக்கற்ற உயிர் இழப்புகளும் கண்ட ஒரே மாநிலம் தமிழகம் தான்! ஆனால், அது தன்னைத் தானே ஆங்கில ஆதிக்கத்திற்கு ஒப்புக் கொடுத்துக் கொண்டது. அதனால், கல்விக் கூடங்களில் கற்றலிலும், அரசின் அலுவலக பயன்பாட்டிலும் மிகப் பின்தங்கி போய்விட்டது தமிழ் மொழி! அதுவும், சமீப காலமாக சமஸ்கிருத தொடர்பில் தமிழ் குழந்தைகளுக்கு பேர் வைக்கும் போக்கு வலுத்து வருகிறது. இதனால் பெயரைக் கொண்டு ஒருவர் மொழியை அடையாளம்  கண்டு கொள்வது வருங்காலத்தில் இயலாததாக ஆகிவிட வாய்ப்புள்ளது.

தமிழ் மொழியை கடினமானதாக்கும் பாடத் திட்டங்களை முதலில் மாற்ற வேண்டும். இது இனிமையான,எளிமையான மொழி என்ற உணர்வை சொல்லித் தரும் போதே ஏற்படுத்த வேண்டும். தமிழ் மொழியில் தேர்வு எழுதுபவர்களுக்கு தாரளமாக மதிப்பெண் தரும் போக்கு வந்தால் தான், தமிழை படிக்க மாணவர்கள் முன்வருவார்கள். ஒருவர் தன் தாய்மொழியை எழுதவும், பேசவும் முடியாத நிலை ஏற்படுமானால், அது அவரது குற்றம் மட்டுமல்ல, இந்த சமூகத்தின் குற்றம், அரசின் குற்றம்!

கனடா நாட்டில் சுமார் 60க்கும் மேற்பட்ட தாய்மொழிகள் இருக்கின்றன. அதில் அதிக மக்கள் பேசும் மொழியாக பில்லிங்வாலிசம் இருந்தாலும் அங்கு ஆங்கிலமும், பிரஞ்சுமே அரசாங்க மொழியாக அங்கீகாரம் பெற்று இருந்தது. தற்பொது தான் அவரவர்களுக்கும் அவரவர் தாய் மொழியில் கல்வி தரப்படும் என வழக்கத்திற்கு வந்துள்ளது.

இந்தியாவின் மிக அருகாமையில் இருக்கும் நேபாளத்தில் 123 மொழி பேசுபவர்கள் 54% உள்ளனர். ஆனால், 46% மக்கள் பேசும் நேபாளி தான் ஆட்சி மொழியாக உள்ளது. ஆனால், 2015 தொடங்கி சில மொழிகளுக்கு உயிரூட்டப்பட்டு அவரவர் தாய் மொழியில் படிக்கும் வசதிகள் செய்து தரப்பட்டு வருகின்றன! பொலியாவிலும் 60% மக்கள் பேசும் தாய் மொழிகளுக்கு வாய்ப்பில்லாத நிலையே இருந்தது. 2010 முதல் அவரவர் தாய் மொழி கற்க அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்த போது, அது கிழக்கிலும்,மேற்கிலுமாக பிரிந்து கிடந்தது. முஸ்லீம்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகள் அனைத்தும் பாகிஸ்தானாக கருதப்பட வேண்டும் என்ற நோக்கில் ஒரே ஆட்சியின் கீழ் இருபகுதிகளும் ஆளப்பட்டன. மேற்கு பாகிஸ்தான் உருது மொழியை மட்டுமே அரசு மொழியாக அறிவித்தது. ஆனால், கிழக்கு பாகிஸ்தானாகிய வங்கதேச மக்கள்,வங்க மொழியையும் அரசு மொழியாக்க வேண்டும் என்றனர். ஆனால், பாகிஸ்தான் ஏற்கவில்லை. ”நாங்கள் மதத்தை ஏற்றோம், அரபு மொழியையும் ஏற்றோம். ஆனால், எங்கள் தாய் மொழியாகிய வங்க மொழியை -தாகூரும், சரத்சந்திரரும் – செழிப்பாக்கிய தொன்மொழியை இழக்கமாட்டோம்”  என்றனர். ஆறாண்டுகால போராட்டங்கள் எத்தனையோ உயிரிழப்புகளுக்கு பிறகு 1956ல் வங்க மொழியை வேண்டா வெறுப்பாக பாகிஸ்தான் அங்கீகரித்தது. மதம் ஒன்றே ஆயினும் கிழக்கு பாகிஸ்தானை, மேற்கு பாகிஸ்தான் கொடூரமாக அடக்கி ஆள முற்பட்டதால், வங்கதேச மக்கள் மற்றொரு விடுதலை போராட்டம் கண்டு முப்பது லட்சம் உயிர்களை பலி கொடுத்து, சொல்லொண்ணா துயர் அனுபவித்து தனி நாடு கண்டனர்! அந்தத் தருணம் இந்திய இஸ்லாமியர்கள் ‘நல்ல வேளையாக நாம் பாகிஸ்தானுக்குள் இடப் பெயர்வு கொள்ளாமல் இந்தியாவில் இருந்து கொண்டோம்’ என பெருமூச்சுவிட்டனர்.

ஆக, உலகம் முழுக்கவே அதிகாரத்திற்கும், ஆதிக்கத்திற்குமான மொழிகள் நிலை பெறுவதும் மற்றவை காலப் போக்கில் காணாமல் போவதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. போராடிய மொழிகளே நிலைபெறுகின்றன! ஆனால், யூனெஸ்கோ பிப்ரவரி 21 ஐ தாய்மொழி தினமாக அறிவித்ததில் இருந்து சிறுபான்மையினர் பேசும் மொழி பாதுகாக்கப்பட வேண்டும் என்ற போக்கு வளர்ந்து வருகிறது.

எனினும், இன்றைய டிஜிட்டல் உலகில் சுமார் 100 மொழிகளே டிஜிட்டல் அங்கீகாரம் பெற்றுள்ளன! வருங்காலம் டிஜிட்டல் யுகமாகத் தான் இருக்க போகிறது. ஆகவே, டிஜிட்டல் போன்ற நவீன தொழில் நுட்பங்கள் எது வந்தாலும் அதற்குள் நாம் நம் மொழியை கொண்டு செலுத்திவிட வேண்டும்.தற்போதைய மத்திய அரசு அசந்தால் தபால்துறை தொடங்கி ரயில்வே வரை அனைத்திலும் தமிழை மெல்ல,மெல்ல தமிழை காணாலடிக்க முயற்சிக்கிறது. அதை தமிழக கட்சிகள் ஒன்றுபட்டு ஒற்றுமையாக எதிர்க்க வேண்டும். தமிழ அரசின் வேலை வாய்ப்புக்கு தாய் மொழிப் புலமையை கட்டாயமாக்க வேண்டும்.

உலகின் தொன்மை மொழிகள் நான்கைந்து இருந்தாலும், அவற்றுள் இன்றும் மக்கள் பயன்பாட்டில் முழுமையாக வாழும் ஒரே மொழி தமிழ் தான்! அதை உலகம் உள்ள அளவில் ஒரு உயிர்ப்புள்ள மொழியாக நாம் வைத்திருக்க வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time