மியாவ்’ (Meow) – வளைகுடா நாட்டில் நடைபெறும் முஸ்லிம் குடும்பக்கதை. வளைகுடா நாடுகளில் வாழும் ஒரு மலையாள இஸ்லாமிய குடும்பத்தின் ஊடல்,மோதல்,கூடல் ஆகியவை மிக இயல்பாக காட்சிபடுத்தப்பட்டு உள்ளது. இஸ்லாமிய அடிப்படை வாதத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது.
தஸ்தகிர் ஒரு சூப்பர் மார்கெட் வைத்திருக்கிறான். மூன்று குழந்தைகள். மனைவி கோபித்து சென்ற நிலையில், தனது கார் ஓட்டுநரும், உதவியாளருனமான சந்திரேட்டனை வைத்துக் கொண்டு, குடும்பத்தை நடத்துகிறான். இயக்குனரான லால் ஜோஸ் மிக அழகாக கதையை எடுத்துச் செல்கிறார். கதையில் வில்லன் இல்லை; திருப்பங்கள் இல்லை; மோதல்கள் இல்லை. வளைகுடா நாடுகளில் பணிபுரிபுவர்களின் வாழ்க்கையை திரைப்படத்தில் நாம் பார்த்ததில்லை. எனவே அந்த வகையில் இது ஒரு வித்தியாசமான படம்.
காலையில் எழுந்து, முகம் கழுவி, கடைக்குச் சென்று, தேநீர் குடிப்பதை ஒரு கதையாகக் காட்டமுடியுமா ? அப்படி ஒரு முஸ்லிம் குடும்பக் கதையை சாதாரணமாகச் சொல்லும் மலையாளப் படம்தான் ‘மியாவ்’ (Meow). வளைகுடா நாடுகளில் ஒன்றான ராஸ் அல் கைமாவில் (Ras Al Khaimah) முழுக்கதையும் நடைபெறுகிறது. கடந்த டிசம்பரில் வந்த இப்படம் இப்போது பிரைம் வலைத்தளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஹிஜாப் குறித்த விவாதம் நடைபெறும் தருணத்தில் ஹிஜாப் பற்றிய ஹிட் பாடல் ஒன்றும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளது. இந்தச் சூழலுக்கு இப்படத்தைப் பார்ப்பது பொருத்தமானதே !
பத்து தினாரில் சலுகை விலையில் ‘பஃபே’ சாப்பாடு கிடைப்பதால், குடும்பத்தோடு செல்லும் மத்தியதரவர்க்கம். ஒரு விபத்தில் உயிர்மீண்ட அவன் இறைபக்தியோடு வாழ்க்கையை நடத்துகிறான். ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஆண்டிராய்டு அஞ்சப்பன்’ போன்ற படங்களில் நடித்த சௌபீன் சபீர் என்பவர், தஸ்தகீராக அற்புதமாக நடித்துள்ளார்.
அவரது மனைவி சுலேகா, ஒரு சாதாரண பிரச்சினைக்கு கோபித்துக் கொண்டு, துபாயில் இருக்கும் (ஒரு மணி நேர பயணம்) அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிடுகிறாள். கல்லூரிப் படிப்பு முடியும் வரை திருமணம் ஆனாலும், உறவு வைத்துக்கொள்ள மாட்டேன் என்று தன் கணவனாக வரப்போகும் தஸ்தகீரிடமே கூறுகிறாள். புர்கா அணிந்து கொண்டு, அவனது கடைக்கே நேரடியாகச் சென்று அவனைப் பார்த்து, தனது விருப்பங்களைச் சொல்லும் முனைப்பான பாத்திரம். இவளது பாத்திரம் நன்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மம்தா மோகன்தாஸ் என்பவர் நன்கு நடித்துள்ளார். ‘இந்தக் கண்களால் என்னைப் பார்க்காதே, இதைப் பார்த்துதான் நான் ஏமாந்து போனேன் ‘ என்ற படத்தின் இறுதி வசனத்தோடு படம் முடிவடைகிறது.
இந்த நேரத்தில் வீட்டுவேலை செய்வதற்காக, அஜர்பைஜானிலிருந்து, ஜமீலா என்பவர் வருகிறாள். அவளிடம் உள்ள விசா காலாவதியாகிவிட்டது. மனைவி இல்லாத வீட்டில், மூன்று வளர்ந்த பிள்ளைகள் உள்ள வீட்டில் பணிபுரிவதில் உள்ள சிக்கல்கள் என்ன ? இந்தப் பாத்திரத்தில் யாஸ்மினா அலிடோடோவா என்பவர் நடித்துள்ளார். அவள் கண்களில் அபலைக்குரிய பாவத்தைக் காட்டுகிறாள். இப்படிப்பட்ட ஒருத்தியிடம் ‘மத உணர்வுள்ள’ முஸ்லிம்கள் காட்டும் அக்கறை எத்தகையது? இதில் மனிதம்தான் முக்கியமானது. அதைச் சரியாகச் செய்கிறான் தஸ்தகிர். எந்த வகையிலும் கண்ணியம் குறையாமல், அந்த வீட்டு வேலை செய்யும் பெண்ணிடம் பழகுகிறான்.
மத உணர்வுள்ள தஸ்தகீரின் பிள்ளைகள் ஒரு பார்ட்டியில் பாடல்களைப் பாடுகிறார்கள். இது இஸ்லாமிய நெறிமுறைக்குள் வருமா? தகுமா..? கேள்வி கேட்கிறார் அந்த ஹோட்டலின் இஸ்லாமிய சர்வர். உடனே, அவன் உள்ளே சென்று தாடியை மழித்துக் கொண்டு கேள்வி கேட்டவனிடம் சொல்வான். ‘’இஸ்லாம் என்பது என் தாடியிலோ, போடும் உடையிலோ இல்லை. அது நெஞ்சில் இருக்கிறது. என் விருப்பபடி நான் இருக்கிறேன். உன் விருப்படி நீ இருந்து கொள்.’’ என அடிப்படைவாத அழுத்ததுக்கு அடி கொடுக்கிறான்! தஸ்தகீரை அவனது சக கல்லூரி மாணவர்கள் தாஸ்தாயேவஸ்கி (புகழ்பெற்ற ரஷ்ய இலக்கியவாதி) என்றுதான் அழைப்பார்கள். அந்த அளவுக்கு அவன் முற்போக்குவாதி. இப்போது என்ற செய்வான் ?
கதையின் தொடக்கத்தில் பூனையால் விபத்தில் நடக்கிறது. பூனையாலேயே ஒருவிதத்தில் உச்சக்கட்டம் முடிகிறது. அதனால்தான் ‘மியாவ்’ என பெயரிட்டுள்ளார்கள். பூனை படம் முழுவதும் வருகிறது. நிறைய சம்பவங்களைச் சொல்லுவதால் கதை பெரியதாக ( 2.25 மணி) தெரிகிறது. சட்டவிரோதமாக பணிபுரிய வந்தவளை கண்டுபிடிக்க ஆய்வும் நடக்கிறது. யாரும் எதிர்பார்க்க முடியாத சர்ப்பரைஸான கிளைமாக்ஸ்! படம் முழுவதுமாக மெல்லிய நகைச்சுவை இழைந்தோடுகிறது.
Also read
“இன்று ஹிஜாபை வைத்து நடக்கும் அரசியலை மிகவும் எளிதாக, ஆனால் உறுதியாக தஸ்தகீர் கடந்து செல்கிறார்” என்று கூறுகிறார் பிரண்ட்லைன் பத்திரிகையாளரான விஜயசங்கர். வளைகுடா வாழ்வைப் பற்றிய படமும் ரசிகர்களுக்குத் தேவைதானே !
விமர்சனம்; பீட்டர் துரைராஜ்.
Leave a Reply