உள்ளாட்சி தீர்ப்புகள் திமுகவுக்கு பெருமை சேர்க்கிறதா?

-சாவித்திரி கண்ணன்

உள்ளாட்சி தேர்தலில் மிகப் பெரும் வெற்றியை ஈட்டியுள்ளது திமுக!

மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றிவிட்டது!

நகராட்சிகளில் 138ல் 133 ஐ வென்றுள்ளது.

489 பேரூராட்சிகளில் 400 க்கும் மேற்பட்டவற்றை வென்றுள்ளது.

கொங்கு  மண்டலத்தில் கோலோச்சிய அதிமுகவையும், பாஜகவையும் மிகவும் பின்னுக்கு தள்ளியுள்ளது!

இமாலய வெற்றி தான்! ஆனால், இந்த வெற்றியை ஈட்ட திமுக கையாண்ட முறைகள், இந்த தேர்தலை ஆளும் கட்சி அணுகிய விதம் போன்றவற்றை உள்ளட்டக்கித் தான் இந்த வெற்றியை நாம் பார்க்க வேண்டியுள்ளது..!

நாடாளுமன்ற சட்டமன்ற, தேர்தலின் போது பாஜக எதிர்ப்பும், அதிமுக ஊழல் செய்து வாங்கியிருந்த கெட்ட பெயரும் திமுகவை தானாக கரை சேர்த்தது. கொள்கை ரீதியாக அந்த தேர்தல் அணுகப்பட்டது. தேர்தலுக்கு முன்பு வரையில் பாஜக எதிர்ப்பில் வீரம் காட்டிய திமுக தேர்தலுக்கு பின்பு பம்மி பதுங்கியதை அடித்தள மனிதன் வரை அறியாமலில்லை.

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டுகள் கமுக்கமாக கையாளப்பட்டு அவர்கள் மீது சரியாக வழக்குகளோ, கைதுகளோ நடக்காமல் அவர்கள் கம்பீரமாக வளைய வந்ததை மக்கள் எப்படி ரசித்திருக்க முடியும்? அதிமுக அமைச்சர்கள் வழியிலேயே திமுக அமைச்சர்களும் பாதை போட்டுக் கொண்டதை எப்படி ஏற்க முடியும்?

உள்ளாட்சி தேர்தலுக்கு மாநில அரசின் மீதான மதிப்பீடுகளும், நிறுத்தப்படும் உள்ளாட்சி பிரதிநிதி மீதான நன்மதிப்புமே கரை சேர்க்க முடியும். இங்கு தான் திமுக தடுமாறிப் போனது. ஆகவே, ஒருவித பதற்றத்துடன் தான் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொண்டது. அமைச்சர்கள் துரைமுருகனும், பொன்முடியும் வாக்காளர்களை மிரட்டும் தோரணையில் பேசி ஓட்டுகேட்டது ஆட்சியாளர்களின் தன்னம்பிக்கையின்மைக்கு சான்றானது.

முதலில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட அன்றைய அதிமுகவை போலவே இன்றைய ஆளும் திமுக ஏகப்பட்ட அழிச்சாட்டியம் செய்ததையும், உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் கெடு தந்து நிர்பந்தித்து தான் நகர்புற உள்ளாட்சி தேர்தலை திமுக நடத்த முன் வந்தது என்பதும் தமிழகம் கண்ட கசப்பான அனுபவம்!  சாதாரணமாக கிராம பஞ்சாயத்துகளின் கூட்டங்களுக்கு கூட தடை விதிக்கும் அளவுக்கு அந்த கட்சிக்கு ஏதோ ஒரு பதற்றம் இருந்து கொண்டே இருந்தது.

ஆட்சி அமைத்து ஒன்பதே மாதத்திற்குள் வந்த உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு எதிர்கட்சிகள் முகாமிலிருந்து ஏகப்பட்ட பேரை இழுத்துக் கொண்டது,

அப்படி சேர்த்துக் கொண்ட வந்தேறிகளுக்கு கணீசமான இடங்கள் ஒதுக்கியது,

பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மகளீர் அணி பெண் செயற்பாட்டாளர்களுக்கு பெருமளவு இடங்கள் மறுக்கப்பட்டு, செல்வாக்கானவர்கள் தங்கள் மனைவியை நிறுத்தியது,

கட்சியின் அடிமட்டம் வரை குடும்ப ஆதிக்கத்தை நிலை நாட்டியது,

கொள்கை பிடிப்பும், பொதுநல நோக்குள்ள சிறந்த தொண்டர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது

ஆகியவற்றைக் கடந்து பணத்தை தண்ணீராக அள்ளி இறைத்தும், அதிகார துஷ்பிரயோகத்தை பிரயோகித்தும் இந்த பெருவெற்றியை திமுக பெற்றது என்பதை பெருமையாக எப்படி பார்க்க முடியும்?

அதுவும் கொங்கு பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவை ஒரு கார்ப்பரேட் கம்பெனியைப் போல கையாண்டார்!  வேட்பாளர்களை வேலைக்கு ஆள் எடுப்பது போல அல்லது கம்பெனிக்கு ஏஜென்சிகள் தேர்ந்தெடுக்கப்படுவது போல தேர்வு செய்தார். தொண்டர்களை தவிர்த்து, சம்பளத்திற்கான ஊழியர்களைக் கொண்டு பூத் நிர்வாகத்தை பார்த்தார். அண்ணா உருவாக்கிய எளிய மக்களூக்கான திமுகவின் முகம் இன்று அடியோடு மாறிவிட்டது. அதன் பரிணாம வளர்ச்சி விகாரமாக அச்சுறுத்துகிறது.

ஒரு ஓட்டுக்கு ஆயிரத்தில் இருந்து 10,000 வரை செலவு செய்து வெற்றிக் கனியை பறித்துள்ள உள்ளாட்சி பிரதிநிதியிடம் தங்கள் அடிப்படை தேவையை நிறைவேற்றும் சேவையை  மக்கள் எப்படி எதிர்பார்க்க முடியும். ஒவ்வொரு சிறிய தேவைக்கும் கணிசமாக பணம் கறந்து விடமாட்டார்களா? ஆளும் கட்சி மிருக பலத்துடன் இருந்தால் உள்ளாட்சியில் ஜனநாயகம் கேள்விக்குறியாகாதா?

தேர்தல் நடந்து முடிவுகள் வெளி வந்த நிலையில்,  இப்போது நாம் ஆளும் தரப்புக்கு சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று தான்! இந்த வெற்றியில் இறுமாந்துவிடாதீர்கள். கிடைத்த வாய்ப்பை நன்மை செய்வதற்கு பயன்படுத்துங்கள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time