தமிழகத்தில் பாஜக, தன்னை வலுப்படுத்துகிறதா..?

-சாவித்திரி கண்ணன்

உள்ளாட்சி தேர்தலில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றுள்ளது. ஆகவே, வெறும் சதவிகித கணக்குகளைச் சொல்லி அதை இன்னும் அலட்சியப்படுத்த முடியாது என்ற பேச்சுகள் பரவலாக விவாதிக்கப்படுகின்றன. உள்ளபடியே தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி குறித்து என்னவென்று பார்ப்போம்.

உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் வெற்றியை விரிவாக பார்ப்போம்

21 மாநகராட்சிகளில் மொத்தமாகவுள்ள 1,374 இடங்களில் பாஜக 22 வார்டுகளை வென்றுள்ளது.

138 நகராட்சிகளில் மொத்தமுள்ள 3,843 இடங்களில் பாஜக 56 இடங்களை வென்றுள்ளது.

490 பேரூராட்சிகளின் மொத்தமுள்ள 7,621 இடங்களில் 230 இடங்களை வென்றுள்ளது.

ஆக சதவிகித அடிப்படையில் கீழ்கண்ட நிலைமை தான்! ஆக மொத்ததில் பாஜக 2.39 சதவிகித வாக்குகளை உள்ளாட்சி தேர்தலில் பெற்றுள்ளது. இது அதன் இயல்பான வாக்குவங்கி தான்!

ஆனால், இந்த சதவிகித கணக்குகளை சொல்லி, பாஜக பெரிதாக வளரவில்லை என முற்றுபுள்ளி வைத்துவிடமுடியாது! சென்னையிலும்,கோவையிலும் பல வார்டுகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் நிலைக்கு வந்தது தொடங்கி பாஜகவிற்கு பலம் சேர்க்கும் பலவற்றை பார்க்க வேண்டியுள்ளது.

இந்த தேர்தலில் தமிழகத்தில் திமுகவிற்கு இணையாக வாக்குவங்கி கொண்டுள்ள அதிமுக 11.6% வாக்குகளைத் தான் பெற்றுள்ளது. அதாவது, அதிமுக அதன் இயல்பான வாக்கு வங்கியில் 60 சதவிகிதத்தை பறிகொடுத்துள்ளது! இன்னும் பாமக, தேமுதிக ஆகியவற்றின் நிலைமையோ மிகப் பரிதாபம்! ஐந்து சதவிகித வாக்கு வங்கி உள்ள பாமக பல இடங்களில் அட்ரஸ் இல்லாமலாகி விட்டது. இரண்டரை சதவிகித வாக்கு வங்கியில் இருந்து இறங்கி ஒரு சதவிகித வாக்கு வங்கி கொண்டிருந்த தேமுதிக கால் சதவிகித வாக்குகளைக் கூட பெற முடியவில்லை. ஆறு சதவிகித வாக்குவங்கி கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியால் அதில் கால்வாசியைக் கூட தக்கவைக்க முடியவில்லை! இரண்டரை சதவிகித வாக்குவங்கி கொண்டிருந்த மக்கள் நீதி மையத்தால் அரை சதவிகித வாக்குகளைக் கூடப் பெற முடியவில்லை. இந்தச் சூழலில் அதிமுக, திமுக, காங்கிரசுக்கு அடுத்ததாக தமிழகத்தின் நான்காவது கட்சியாக பாஜக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.

அதாவது, மக்களுக்கே கூட ஆளும் கட்சிக்கு ஒட்டுப் போடுவது தான் தங்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள தோதாக இருக்கும் என்ற நினைப்பில் கூட ஓட்டுப் போட வாய்ப்புள்ளது. அத்துடன் திமுகவுக்கு இணையாக பணம் செலவழிக்கக் கூடிய கட்சியாக பாஜக இருந்தது. நமக்கு கிடைத்த தகவல்கள்படி சுமார் ரூபாய் 500 கோடிக்கும் அதிகமாக மாநகராட்சி பகுதிகளுக்கு மாத்திரம் மத்திய தலைமை தந்ததாம். நகராட்சி, பேரூராட்சி செலவுகள் தனி! மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஹோதாவில் அவர்கள் தெனாவட்டாக தமிழகத்தில் வலம் வருகிறார்கள்!

சென்னை மாநகராட்சி தேர்தலில் ஒன்பது இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பாஜக பிடித்துள்ளது. மேற்குமாம்பழத்தில் உமா ஆனந்தன் என்ற பாஜக வேட்பாளர் திமுக ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளரைவிட 40 சதவிகித அதிக வாக்குகளை பெற்று வென்றுள்ளார்.இதை சாதாரணமாக கடந்து போக முடியவில்லை. ஏன் என்றால், பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் அதி தீவிர இந்துத்துவ போக்குள்ளவராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்! மகாத்மா காந்தியை கோட்ஸே கொன்றதை நியாயப்படுத்தி வெளிப்படையாக பேசினார். தேசத் தந்தை கொலையை நியாயப்படுத்தியவரை தோற்கடிக்க திமுகவும் காங்கிரசும், இரண்டு கம்யூனிஸ்டுகளும் கங்கணம் கட்டிக் கொண்டு களம் கண்டு இருக்க வேண்டாமா? ஆனால், மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் தனியாக பாஜக இங்கே வெற்றி பெறுகிறது என்பதை எப்படி புரிந்து கொள்வது?

மேற்கு மாம்பழம் பகுதி பிராமணர்கள் அடர்த்தியாக வாழும் பகுதி! அவர்கள் ஒற்றுமையாக பாஜக வேட்பாளரை வெற்றி பெற வைத்துவிட்டனர் எனக் கூறப்படுகிறது. கமலஹாசன் இந்த தொகுதியில் டெய்சி புஷ்பராஜ் என்ற கிறிஸ்துவ வேட்பாளரை ஏன் நிறுத்தினார். பிராமண ஓட்டுகள் சிதறக்கூடாது என நினைத்தாரா? என்ற கோணத்திலும் பார்க்க வேண்டியுள்ளது.

இதே போல சென்னையில் வட இந்தியர்கள் வசிக்கும் துறைமுகம் தொகுதியில் பகுதிகளில் அதிமுகவை முற்றிலும் பின்னுக்கு தள்ளி பாஜக இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அதே போல கோவையிலும், திருப்பூரிலும் கணிசமான வார்டுகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக இரண்டாம் இடம் வந்துள்ளது. அதாவது, எங்கெல்லாம் பிராமணர்களும், வட இந்தியர்களும் அடர்த்தியாக உள்ளனரோ, அங்கே பாஜக வலுவாக காலூன்றி வருகிறது. தமிழகத்தில் வட இந்தியக் குடியேற்றத்தை அதனால் தான் பாஜக திட்டமிட்டு செய்து வருகிறது. மத்திய அரசு வேலை வாய்ப்புகள் அனைத்திலும் 90%க்கும் அதிகமாக வட இந்தியர்களுக்கு வாய்ப்பு தந்து தமிழகத்தில் குடியேற்றுகிறது. இது வரும் தேர்தல்களில் மேலும் பலம் பெறலாம்!

கன்னியாகுமரியில் அதிமுக தயவு இல்லாமலேயே திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு பாஜக கடுமையான போட்டியை கொடுத்துள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியில் ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக களம் கண்டு இருந்தால் பாஜக வெற்றி பெற்று இருந்திருக்கலாமோ என்னவோ?

அதாவது, தமிழகத்தில் பாமக, கம்யூனிஸ்டுகள், அமமுக, நாம் தமிழர், தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளை இந்த தேர்தலில் பாஜக பின்னுக்கு தள்ளியுள்ளது என்பது நிருபிக்கப்பட்டு உள்ளது. அதிமுகவில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருந்த பலருக்கு பாஜக வாய்ப்பளித்தது. அதன் மூலமாக அதிமுகவை பலவீனப்படுத்தியுள்ளது இதை ஏனோ அதிமுக கவனியாது போல நடிக்கிறது. பாஜக கூட்டணியில் இருந்த எல்லா கட்சிகளுமே பலவீனப்பட்டு வருகின்றனர். பாஜக மட்டும் வலுவாக மிக மெதுவாக தன்னை விரித்தவண்ணம் உள்ளது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time