மக்கள் நீதி மய்யம் மறுபடியும் துளிர்விடுமா..?

-சாவித்திரி கண்ணன்

வேல்முருகன், சுங்குவார் சத்திரம், காஞ்சிபுரம்

உக்ரைன் விவகாரத்தில் பெரும்பாலான அமெரிக்க ஆதரவு பார்வையில் பத்திரிகைகள் ரஷ்யாவை சாடுகின்றன. நீங்கள் அமெரிக்கா பக்கமா? ரஷ்யா பக்கமா?

உக்ரைனுக்கு நீண்ட கால நோக்கில் எது நல்லது, பாதுகாப்பானது என பார்க்க வேண்டும். இந்த கண்ணோட்டத்தில் உக்ரைன் இப் பிரச்சினையை கையாண்டிருந்தால் ரஷ்யா அத்துமீறி இருக்காது. அமெரிக்க,ஐக்கிய நாடுகள் வலையை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு ரஷ்யாவிடம் பேரம் பேசி உக்ரைன் நலன்களை பேணி இருக்க வேண்டும்.

இது அண்ணன் தம்பி சண்டை! விரைவில் இருவரும் கைகோர்க்கவும் வாய்ப்புண்டு!

எஸ்.கிருஷ்ணவேணி, மடிப்பாக்கம்,சென்னை

ஐந்தாம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் மறுபடியும் துளிர்விடுமா ?

60 வயது வரை அரசியல் அடையாளத்தையே வெளிப்படுத்தாமல் இருந்தவர் கமலஹாசன்!

கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தில் செளகரியமாக காலூன்றாலாம் என நினைத்தார்!

பெயரை மட்டும் மக்கள் நீதி மய்யம் என வைத்துக் கொண்டு தன்னை மய்யப்படுத்திய அரசியலையே அவர் செய்தார்!

ஆரம்பத்தில் அரசியலுக்கு ஒரு புதிய மாற்று சக்தியாக வந்துள்ளார் என்ற நினைப்பில் அவரை நோக்கிச் சென்ற பல நல்ல சமூக ஆர்வலர்கள் அவரது சுயநல அரசியலை சகிக்க முடியாமல் பெருமளவு விலகிவிட்டனர். அங்கே தற்போது இருப்பவர்களும் விலகுவதற்கான சந்தர்ப்பதை எதிர் நோக்கியே உள்ளனர்.

ஆக, திட்டவட்டமாக அது தேய்ந்து கொண்டே செல்லும் தேய்பிறை தான்! பட்டுப் போன செடி தான். மறுபடி துளிர்க்காது. அதற்கான அறிகுறியே தெரியவில்லை.

அரசியல் என்பது வயதான பிறகு ஓய்வு காலத்தில் செய்யும் பார்ட் டைம் வேலையல்ல, தன்னோடு அரசியல் செய்ய வந்தவர்கள் சுயபுத்தியற்ற அடிமைகளல்ல, ‘இன்னும் நேர்மையாளன் வேஷம்’ இங்கே எடுபடாது என்பதெல்லாம் அவருக்கு இந்நேரம் புரிந்திருக்கும்! ஆனாலும், தனக்கு பாதிப்பு வராத வண்ணம் பாதுகாப்பாக அரசியல் செய்து கொண்டு சந்தர்ப்பத்திற்கு காத்திருக்கிறார்.

எல்.ஞானசேகரன், ஈரோடு

”இனி என் எஞ்சிய வாழ்க்கை முழுவதையும் மக்களுக்கே அர்ப்பணிப்பேன்” என்கிறாரே கமலஹாசன்?

சினிமாவிற்கே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் கமலஹாசன்! அரசியலில் நடிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிந்தாலும், தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் போராடுவதும், பொய்யை மூலதனமாக்கியதே அரசியல் என்ற அவரின் புரிதலும் உண்மையிலேயே சிலிர்க்க வைக்கின்றன!

பாண்டித்துரை, அரசரடி, மதுரை

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு கிடைத்த தோல்வியை எப்படி பார்க்கிறீர்கள்?

உள்ளாட்சியில் ஆளும் தரப்புக்கு ஓட்டுப் போடுவது தான் தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான வாய்ப்பு என பெரும்பாலான மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்தனர் என்பது ஒருபுறம் உண்மை என்றாலும், அதிமுக வீழ்ச்சியை நோக்கி விரைந்து கொண்டிருப்பதை இந்த தேர்தல் படம்பிடித்து காட்டியுள்ளது. அதிமுகவின் அடிமை அரசியலே தோல்விக்கு காரணம். அதிமுகவின் அதிருப்தி வேட்பாளர்களை வலைவீசி எடுத்த பாஜகவை எதிர்க்க முடியாமல் இன்னும் பம்மிக் கிடந்தால்.., எதிர்காலமே அதிமுகவிற்கு இருக்காது.

ஆர்.ரமேஷ்,பெங்களூர்

ராமர்பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டு நிர்பந்திக்கிறாரே சுப்பிரமணியசாமி?

இந்த நிர்பந்தத்தை ஏன் ஆட்சியாளர்களுக்கே சுவாமி தந்திருக்கலாமே! சுற்றி வளைபானேன்? எனில் ஏதோ சூது இருக்கலாம். சேதுவை ராமர்பாலமாக்கி தேசிய நினைவு சின்னமாக்கினால், வரலாற்றில் அது இந்திய அரசின் மூடத்தனத்திற்கான தேசிய சின்னமாக நிலைபெற்றுவிடும்.

கோமதிநாயகம், கோவை

மேற்கு மாம்பழத்தில் பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றிக்கு என்னென்ன காரணங்கள்?

# முதல் காரணம், பாஜகவை ஆதரிப்பதில் பிராமணர்களின் ஒற்றுமை!

# தமிழகத்தில் பாஜகவிற்கு அடுத்தபடியாக அதிக பிராமணர் வாக்குகளை பெறும் கட்சியான கமலஹாசனின் மக்கள் நீதிமையம் அங்கே ஒப்புக்கு ஒரு கிறிஸ்துவ வேட்பாளரை நிறுத்தி மாமியின் வெற்றிக்கு துணை போனது!

# காங்கிரஸ் சரியான வேட்பாளரை நிறுத்தாது!

# காங்கிரஸ் வெற்றிக்கு திமுகவின் முழு ஒத்துழைப்பும் கிடைக்காதது.

# இடதுசாரிகள் அங்கே தேட வேண்டிய நிலையில் இருப்பது!

# காந்தியக் கொள்கை பேசுவோர்களின் போலித்தனமும், பொய் முகமும்!

# ஆம், நான் கோட்சேயை ஆதரிக்கிறேன் என்று சொன்ன உமா ஆனந்தனின் நேர்மையும், துணிச்சலும்!

மு.கருப்பசாமி, அருப்புக் கோட்டை

புகழ்பெற்ற ஜவகர்லால்  நேரு பல்கலைக் கழகத்திற்கு சாந்தி ஸ்ரீ பண்டிட்டை துணைவேந்தராக்கியுள்ளதே பாஜக அரசு?

டிவிட்டரில் குழாயடிச் சண்டைக்கு பேர் போனவர்! முஸ்லீம்கள் என்றால், கையை முறுக்கிக் கொண்டு பாய்வார்! காங்கிரஸ்க்கு எதிராக கத்தியை சுழற்றுவார்! விவசாயிகள் போராட்டத்தை அவதூறுகள் செய்தார்! ஆர்.எஸ்.எஸ் சித்தாந்ததை ஆக்ரோஷமாக ஆதரித்து வந்தார்! தற்போது அதற்கான வெகுமதியை வென்றெடுத்துள்ளார்!

க.அப்துல்லா, ஹைதராபாத்

உத்திரபிரதேசத்தில் யோகி ஆட்சிக்கு வந்தவுடன் கிரிமினல்கள் தாங்களே ஓடிச் சென்று சிறையில் தங்களை அடைத்துக் கொண்டனர் என்கிறாரே மோடி?

மற்றொருபுறம் தன் ஆட்சியின் சாதனையாக இந்த ஐந்து ஆண்டுகளில் 8,472 என்கெளண்டர்களையும், அதில் மூவாயிரத்து மூன்னூறுக்கும் அதிகமானவர்கள் சுடப்பட்டதையும், பலர் கொல்லப்பட்டதையும் பெருமை பொங்க பீத்துகிறாரே யோகி!

அப்படியானால் இத்தனை என்கெளண்டர்களும், கொலைகளும் எதற்காக? கிரிமினல்களையெல்லாம் விட்டுவிட்டு யாரை பலிகடாவாக்கினீர்கள் ஐயா?

எஸ்.ராஜலட்சுமி, மதுரவாயில்.

உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி ஒன்பதுமாத ஆட்சிக்கு மக்கள் தந்த அங்கீகாரம் என்கிறாரே ஸ்டாலின்?

அந்த அங்கீகாரத்தை ஸ்டாலினுக்கு பெற்றுத்தர அவரது கட்சிகாரர்கள் செய்த செலவுகளும், பட்டபாடுகளும் அவர்களுக்கல்லவா தெரியும்!

க.செபாஷ்டின்,வேலூர்

அதிமுக ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து?

ஜெயக்குமார் அங்கு வருவதற்கு முன்பு , சம்பந்தப்பட்ட திமுககாரரான நரேஷ்,  அடாவடியாக நடந்து கொண்டவை தற்போது தான் காட்சிபூர்வமாக வைரலாகியுள்ளது! அதில் போலீசார் எச்சரித்தும் கேளாமல் திமிறுகிறார், கல்வீசுகிறார். இந்த சம்பவங்களுக்கு பிறகு அங்கு வந்த ஜெயக்குமார் நரேஷ் சட்டையை கழற்ற வைத்து, பின்புறமாக கட்டி ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கிறார்.

திமுகாரர் நரேஷ் நடந்து கொண்டது ஏற்புடையதல்ல! அதே சமயம் ஜெயக்குமார் நடந்து கொண்ட விதம் மிகவும் அநாகரீகமானது! இந்த ஆட்சியில் திமுக தொண்டர்களுக்கே பாதுகாப்பில்லை என்ற எண்ணம் கட்சியினர் மத்தியில் உருவானால், தன் இமேஜே டேமேஜ் ஆகிவிடும், என்பதால் இத்தனை ரெய்டுகளிலும் காட்டாத வீரத்தை இதில் காட்டிவிட்டார் ஸ்டாலின்.

அத்து மீறிய திமுக தொண்டரை காவல்துறை கட்டுப்படுத்த முடிந்திருந்தால், அங்கே ஜெயகுமார் அடாவடியில் இறங்கி இருக்க வாய்ப்பில்லை. காவல் துறைக்கு கட்டுப்பட மறுக்கும் திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிவாளம் போட வேண்டிய தருணம் வந்துவிட்டது.

குறிப்பு;

https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8

கேள்வி கேட்க விரும்புபவர்கள், இந்த லின்கில் சொடுக்கி, உங்கள் கேள்வியை சுலபமாக பதிவு செய்யலாம்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time