மாபியாக்களிடம் சிக்கி சிதையும் மருத்துவக் கல்வி!

-சாவித்திரி கண்ணன்

இந்தியாவில் எந்தப் படிப்புக்கும் இல்லாத வகையில் மருத்துவ கல்விக்கு பெரிய மவுசையும், மாயத் தோற்றத்தையும் கட்டமைத்து எம்.பி.பி.எஸ் படிப்பதை சமூக அந்தஸ்தாக்கிவிட்டார்கள்! ஆனால், அரசு மருத்துவர்களுக்கு நியாயமான சம்பளம் கூட இல்லை! இன்னொருபுறம் புற்றீசல் போல தரமற்ற தனியார் மருத்துவ கல்லூரிகள் பெருகுது..!

”இப்ப தமிழ் நாட்டில இன்ஜினியரிங் கல்லூரிகள் பெருகியதால பல கல்லூரிகளில் படிக்க ஆள்வராமல் காத்து வாங்கிட்டு கெடக்குது! இன்ஜினியரிங் படிசவங்களில் 80 சதமானோருக்கு சரியான வேலை கிடைக்கிறதில்லை. வருங்காலத்தில் மருத்துவக் கல்லூரிகளுக்கும் அந்த நிலைமை வரக் கூடும். டாக்டர்களுக்கு நோயாளிகள் காத்திருந்த நிலைமை மாறி, நோயாளிகளுக்கு டாக்டர்கள் காத்திருக்கும் நிலைமை விரைவில் ஏற்பட்டே தீரும்!’’ – என்கிறார்கள் நமது மருத்துவ நண்பர்கள்!

நல்ல திறமையாளரான மருத்துவர் கிடைப்பதற்கு நீட் தேர்வு மாதிரியான கஷ்டங்கள், கடினம் தேவை தானே என்றால், பாவம் நீங்கள் ஒரு அப்பாவியாகத் தான் இருக்கமுடியும்! நீட் தேர்வு கொண்டு வந்தது நல்ல திறமையாளர்களை கண்டுபிடிக்கவல்ல, மருத்துவக் கல்விக்கு ஒரு மவுசைக் கூட்டி மக்களை மருத்துவ கல்விக்காக பேயாய் அலையவிடறதுக்கு தான்!

அதன் விளைவு தான் இன்னைக்கு தெருவுக்கு நான்கைந்து பேர் நான் நீட் தேர்வுக்கு படிக்கிறேன்னு புறப்பட்டு இருக்காங்க!

மருத்துவ கல்வி குறித்து கட்டமைக்கப்படும் மாயைகளால் பெரிய பலனடைந்து கொண்டிருப்பது மருத்துவக் கல்லூரிகள் நடத்தும் தனியார்களே! தங்கள் இஷ்டத்திற்கு கல்வி கட்டணத்தை உயர்த்தி, இன்று உலகத்திலேயே அதிக கட்டணம் வசூலிப்பவர்களாக இந்திய மருத்துவ கல்வியை சாதாரணமானவர்களுக்கு எட்டாக் கனியாக்கிவிட்டார்கள்!

இந்தியாவுல கருப்பு பணத்தை வெள்ளையாக்க மருத்துவ கல்லூரிகளையும், மருத்துவமனைகளையும் உருவாக்கி தனி ராஜ்ஜியத்தையே உருவாக்கிகிட்டு இருக்காங்க மாபியாக்கள்!

இந்தியாவில் மருத்துவ கல்வி பெற வசூலிக்கப்படும் கட்டணம் சீனா, ரஷ்யா, உக்ரைன், ஜார்ஜியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளைக் காட்டிலும் நான்கைந்து மடங்கு அதிகமாகும். கிட்டதட்ட இதே பாட திட்டம், ஆய்வுக் கூடங்கள், தேர்வுகள் தான்! இந்தியாவில் ஒருவர் தனியார் மருத்துவ கல்லூரியில் ஐந்தாண்டுகள் படித்து வெளியேற ஒன்று முதல் ஒன்றேகால் கோடி ரூபாய் செலவாகிறது! ஆனால் மேற்கூறிய நாடுகளிலோ 15 முதல் 25 லட்சம் தான் செலவாகிறது!

ஆகவே, நடுத்தர குடும்பத்து பிள்ளைகள் வேறு வழியின்றி வெளி நாடுகளுக்கு செல்கின்றனர். அந்த வகையில், இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு சுமார் 10,000 த்திற்கும் அதிகமான மாணவர்கள் வெளி நாடுகளுக்கு சென்று மருத்து கல்வி பயில்கின்றனர். அதுவும் நீட் தேர்வு வந்த பிறகு இந்த எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.

காரணம், வெளிநாடுகளில் மருத்துவ கல்வி பயில பள்ளி இறுதி தேர்வில் ஐம்பது மதிப்பெண் பெற்று இருந்தாலே போதுமானது! இந்தியாவில் பணம் இருந்தால் அது கூட தேவையில்லை பள்ளி இறுதி வகுப்பில் ஜஸ்ட் பாஸ் இருந்தாலே போதும். அதுவும் நீட் தேர்வில் 15% மார்க் எடுத்தாலே தனியார் மருத்துவக் கல்லூரிகள் உங்களுக்கு சல்யூட் அடித்து எம்.பி.பி.எஸ் சீட்டு தந்துவிடுவார்கள்! என்ன ஒன்னு, நீங்க வருஷத்திற்கு 25 முதல் 27 லட்சம் கல்வி கட்டணம் கட்ட முடிந்தவராக இருக்கணும்.இது தான் நீட் தேர்வு செய்த மகிமை! நீட் வருவதற்கு முன்பு 13 முதல் 15 லட்சமாக இருந்த ஆண்டு கட்டணத்தை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்த்திக் கொள்ள அனுமதித்துவிட்டது அரசு.

நீட் வந்த பிறகு மருத்துவ கல்விக்கு இன்னும் மவுசு கூடிவிட்டது! நீட் தேர்வை எழுதுவதே இங்கு ஒரு சமூக அந்தஸ்தாகிவிட்டது. எழுதறவங்கல்ல 80 சதவிகிதம் பேரு மருத்துவ கல்விக்கு வருவதில்லை. ஒன்னு பணம் இருக்காது அல்லது கவர்மெண்ட் கோட்டாவிலே சேரும் அளவுக்கான மதிப்பெண் இருக்காது.

சரி எதுக்குடா இப்படி முட்டி மோதி இங்க எம்.பி.பி.எஸ் படிக்கிறாங்க, தெரியல! உலகத்தில் வேற எந்த ஒரு நாட்டிலும் மருத்துவ கல்விக்கு இப்படி ஒரு மவுசு இல்லை. அதனால் வெளிநாடு போய் நியாயமான கட்டணத்தில் படித்துவிட்டு வருவதற்கு ரொம்ப பேரு புறப்பட்ட உடனே, இங்க தனியார் கல்லூரி நடத்தறவங்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.

அதனால அரசாங்கத்தையும், இந்திய மருத்துவ கவுன்சிலையும் பிடித்து லாபி செய்தாங்க. அப்ப வெளி நாட்டுல படிச்சுட்டு வருகிறவர்களுக்கு நாங்க இங்க ஒரு டெஸ்ட் வைப்போம். அதில் வெற்றி பெற்றால் தான் உன்னை மருத்துவராக அங்கீகரிக்க முடியும்னாங்க! FMGC என்ற அந்த தேர்வை மிகக் கடினமாக்கி எழுதுடா மவனே பார்க்கலாம், வெளி நாட்டுக்கு போய் காசை கொடுத்தியோ, படவா கஸ்டப்படு என்றார்கள்! அந்த தேர்வு எழுதுறவங்களில் பத்து,பனிரெண்டு சதவிகிதமானவர்கள் தான் தேறினாங்க. அடுத்தடுத்த முறை முயன்றாலும் கூட 23 சதமானவங்க தான் தேர்ச்சி பெற முடிந்தது. ஆகா, 23 சதவிகிதமானவர்கள் தேர்ச்சி பெறுகிறானா விடக் கூடாது!

அப்படி தேர்ச்சி பெற்றாலும் இங்கே தாய் மண்ணில் ஓராண்டாக அரசு மருத்துவமனைகளில் சேவை செய்து பயிற்சி எடுக்க மேலும் ஐந்து லட்சம் கட்டணம் என்றார்கள்! அதாவது ஒருவர் தன் சொந்த காசை செலவழித்து வெளிநாட்டில் மருத்துவ கல்வி பெற்றதற்காக தாய் மண்ணில் சம்பளமில்லாமல் ஓராண்டு சேவை செய்வதற்கான வாய்ப்ப்புக்கு ஐந்து  லட்சம் தண்டம் அழ வேண்டும்! அதையும் கட்டத் தயாராகிவிடுகிறானே பாவி இவனை எப்படி தடுப்பது என அதற்கு பெர்மிஷன் தருவதற்கே உங்களுக்கு பத்து,பன்னெண்டு மாதம் தண்ணி காட்டுவாங்க! இப்ப இந்த திமுக அரசு வந்த பிறகு அடடா, இது நியாயமில்லாத கட்டணமாக இருக்குதேன்னு அந்த கட்டணத்தை 29,400 ரூபாயாக நிர்ணயித்து சரிபண்ணிட்டாங்க!

ஆனா, இன்னும் புதுசா ஒரு கண்டிஷன் போட்டு இருக்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில்! இந்த கொரானா காலத்துல சில கல்லூரிகள் வெளி நாட்டில் ஆன்லைன் வகுப்பு எடுத்தாங்களாம். அதனால், நீ நேரடியாக கல்லூரிக்கு சென்றதாக 75 சதவிகித அட்டனன்ஸ் இருக்கணும்னு ஒரு போடு போட்டட்டாங்க. இந்த கண்டிஷன் இங்க இந்தியாவிலே ஆன்லைனில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் படித்தவங்களுக்கு தேவையில்லையாம்!

இந்தியாவிலே கருப்பு பணப் புழக்கம் அதிகமாக உள்ள துறையாக மருத்துவதுறை ஆகிவிட்டது. மருத்துவத் துறையை மாபியா கூட்டம் கையில வச்சுக்கிட்டு அரசுக்கு கட்டளை போட்டு தாங்க விரும்புகிறபடி ஆட்டுவிக்குது ஒருபுறமென்றால், மறுபுறம் தமிழகஅரசு கல்லூரியில் படித்து அரசு மருத்துவமனைகளில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் நிலைமையோ பரிதாபமாக உள்ளது! இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களைவிட மிகக் குறைந்த ஊதியம் வாங்குவது தமிழக மருத்துவர்கள் தான்! எங்களுக்கு நியாயமான சம்பளத்திற்காக பனிரெண்டு ஆண்டுகளாக போராடி வருகிறோம்!

கொரானா காலத்தில் ஆபத்தை பொருட்படுத்தாமல் பணியாற்றி உயிர்துறந்த மருத்துவர்கள் குடும்பத்திற்கு கூட நிவாரணம் இல்லை. மக்கள் கூட்டம் நிறைந்து வழியும் அரசு மருத்துவமனையில் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றுவதே ஒரு சவால். ஆனால், அந்த தொண்டுக்கு உரிய மரியாதையே இல்லை. அரசு மருத்துவர்களாகிய நாங்கள் எங்க குழந்தைகளை மறந்தும் டாக்டர்களுக்கு படிக்க வைக்க மாட்டோம். அந்த அளவுக்கு நோகடிக்கிறாங்க! அதானல நாங்க மார்ச் 2 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் அறிவித்து உள்ளோம் என்கிறார் அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் பெருமாள்!

ஒருபுறம் மருத்துவத்தை உண்மையிலேயே சேவையாக கருதி கடும் உழைப்பை தருகிற அரசு மருத்துவர்கள் நியாயமான சம்பளத்துக்கு கூட ஆண்டுக்கணக்கில் போராடி சோர்வடைகிறார்கள்! ஆனால், மறுபுறம் மருத்துவம் கற்கவே மாபெரும் பிரயத்தனங்கள்! கோடிக்கணக்கில் செலவழிக்கிறார்கள். மருத்துவக் கல்வி மீது கட்டமைக்கப்பட்ட மாயைகள் தகர்ந்து நொறுங்கும் காலம் நெருங்குகிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time