போதும் இந்தக் கொடுமைகள்! போரை நிறுத்த தீர்வு என்ன?

- ம.வி.ராஜதுரை

நடைபெற்றுவரும்,போர்க்களக் கொடூர காட்சிகளில் பற்றி எரியும் கட்டிடங்கள், சிதறிக் கிடக்கும் மனித உடல்களை பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது! இவற்றை உலகம் முழுவதும் வாழும் மக்கள் பதற்றத்துடனும், சொல்லொண்ணா வேதனையுடனும் பார்த்துக் கொண்டுள்ளனர்!

தற்போது ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் வசிக்கும் மக்கள் ரத்தமும், சதையுமாக ஒன்றுபட்ட சோவியத் யூனியனில் ஒன்றாக வாழ்ந்து வந்த  சகோதரர்கள். இன்றைக்கு ஒருவரை ஒருவர் தாக்கி மாபெரும் அழிவை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சோவியத் யூனியனில் ஓர் அங்கமாக இருந்து பின்னர், பொதுவான புரிதலுடன் பிரிந்து போன 15 நாடுகளில் ஒன்றுதான் உக்ரைன்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டு அமைப்பு உருவானதற்கான காரணம், சோவியத் யூனியன் தலைமையில் கம்யூனிச நாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தான்.

கோர்பசேவ் கொள்கைகள் விளைவாக சோவியத் யூனியன் சிதறுண்டதைத் தொடர்ந்து நேட்டோ அமைப்பையும் மூட்டை கட்டியிருக்க வேண்டும்.

அப்படி செய்யாமல், நேட்டோவை தேவையின்றி வளர்த்துக் கொண்டிருந்ததன் விளைவை உலகம்  அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

ஆப்கான், ஈராக், வியட்நாம்  போர்களில் இருந்து  உரிய படிப்பினையை அமெரிக்கா கற்றுக் கொண்டதாக தெரியவில்லை.

சமதர்மம் பூத்துக் குலுங்கிய ரஷ்ய நாட்டில் மனித உயிர்களை குண்டுவீசி அழிக்கும் இப்படி ஒரு மனிதரா என்று புதினை நினைக்கும் போது வேதனையாக உள்ளது.

போரினால் எதிராளியை அடக்கி ஒடுக்கி ஒரு நிரந்தரத் தீர்வை பெற முடியுமா? அப்படி ஒரு சம்பவம் வரலாற்றிலேயே இல்லை!

உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி போரைத் தொடுத்தது ரஷ்யா.

ரஷ்யாவின் ஆட்சி தலைமை போரில் இறங்கி உக்ரைன் மக்களை கொன்றொழிப்பதை ரஷ்ய மக்களே விரும்பவில்லை. ஏனென்றால், இந்தக் கொடிய போருக்கு எதிராக ரஷ்ய நாட்டு மக்கள் தீவிரமாக சமாதானக் குரல் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் சொந்த சகோதர்கள் சாகும் போது எப்படி சகித்துக் கொண்டிருப்பார்கள்!

போருக்கான காரணம் ரஷ்யாவா உக்ரைனா அல்லது அமெரிக்காவா என்று ஆராய்ந்து கொண்டிருக்கும் நேரம் இதுவல்ல. காலம் கடந்து கொண்டிருக்கிறது. தாமதிக்கும் ஒவ்வொரு மணித்துளியும் போர்க்களத்திலே விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் பறி போய்க் கொண்டிருக்கின்றன.

ரஷ்ய விமானத்திலிருந்து வீசப்பட்ட  குண்டுகள் உக்ரைன் தலைநகர் கீவ் -ல் உள்ள உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புகளை பொத்தல் ஆக்குகின்றன.

ராணுவ வாகனம் மீது வீசப்பட்ட குண்டுகளால் அது வெடித்து சிதறி, அதிலிருந்த  வீரர்கள் தூக்கி வீசப்பட்டு செத்து சிதறிக் கிடக்கிறார்கள். சிலருக்கு இன்னும் உயிர் இருக்கிறது. சிலருடைய உடலில் பற்றிய தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. இறந்து கிடக்கும் உடல்களில் எஞ்சியிருக்கும் குண்டுகளையும் ஆயுதங்களையும் சில வீரர்கள் உருவி கொண்டிருக்கிறார்கள்.

கொடுமையிலும் கொடுமை.

நவீன விஞ்ஞான வளர்ச்சி உருவாவதற்கு முன்பு பல கோடி வருடங்கள் வாழ்ந்த மனிதர்கள் இப்படி ரத்தக்களரியான கொடூர மோதலில் ஈடுபட்டதாக தெரியவில்லை. நவீன கல்வியும் அதீத விஞ்ஞான வளர்ச்சியும் மனிதகுல அழிவிற்கு உருவானவை போலும்!

ஊரறிய உலகறிய பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டுகளை வீசிவிட்டு,அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று பொய் சொல்கிறார் புதின்.

ரஷ்ய போர் விமானத்தின் சத்தத்தைக் கேட்டதும் நூறுபேர் பதுங்க வேண்டிய குழிகளில் ஆயிரம் பேர் பதுங்குகிறார்கள்.

தலைநகர் கீவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் தெருக்களில் மக்களின் ஓலம் ,ஓட்டம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அண்டைநாடான போலந்தில் மட்டும் ஒரு லட்சம் பேர் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிகிறது.

அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு முயற்சித்து செயல்பட்டு வருகிறது! அதே போல தமிழகத்தில் இருந்து உக்ரைனுக்கு படிக்க சென்றுள்ள ஏராளமான மாணவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டுமே என அவர்களின் பெற்றோர்கள் தவியாய் தவிக்கிறார்கள்! தமிழக முதல்வரும் அதற்கான தீவிர முயற்சியில் இறங்கி உள்ளார்!

போர்க்களத்தில் இருந்து வருகிற அதிகாரப்பூர்வ தகவல்படி ராணுவ வீரர்கள் பொதுமக்கள் சேர்த்து உயிரிழப்பு இரண்டாயிரத்தை தாண்டிவிட்டது. 850 ரஷ்ய ராணுவத்தினரை கொன்று விட்டதாக உக்ரைன் கூறுகிறது.

அப்படியென்றால், உக்ரைன் நாட்டில் எத்தகைய சேதங்கள் நடைபெற்றிருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். உக்ரைன் அதிபர்  ஜெலன்கியின் பேச்சுக்கள் மக்கள் நலன் சார்ந்து இருப்பதாக தெரியவில்லை.

சினிமாவில் காமெடி நடிகராக இருந்து அதிபரான ஜெலன்கிக்கு நாட்டு நலன் பேணும் நடைமுறை சார்ந்த அறிவு இருப்பதாக தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் தூக்கி எறியப்பட வேண்டிய நேட்டோ அமைப்பில் சேர்ந்து செயல்பட துடித்து இருக்கமாட்டார். அருகில் இருக்கும் சகோதர நாடான ரஷ்யாவை பகைத்துக் கொண்டு, அமெரிக்க நட்புக்கு ஆளாய் பறக்கமாட்டார்!

இப்போதும்கூட அவர் தனக்கு ஆதரவாக நட்பு நாடுகள் களம் இறங்காதா என்ற கனவில்தான் தாக்குப்பிடித்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது.

முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரின்போது போரில் ஈடுபட முதலில் அமெரிக்கா விரும்பவில்லை. உணவு ,எரிபொருள் உள்ளிட்ட பொருட்களையே தம் நட்பு நாடுகளுக்கு கொடுத்தது. இதன் விளைவாக தாக்குதலுக்கு உள்ளாகி பிறகு போரில் இறங்கியது.

இப்போதும் கூட அமெரிக்க நட்பு நாடுகளான  ஸ்வீடன், பின்லாந்து ஆகியவை உக்ரைனுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிவருகின்றன. ஆங்கிலக் கால்வாயில் பயணித்த ரஷ்ய வர்த்தக கப்பலை பிரான்ஸ் நாடு கைப்பற்றி வைத்துள்ளது. இதெல்லாம் நல்லதொரு அறிகுறிகளாக தெரியவில்லை.

மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று வந்தால் உலகம் நச்சு சாம்பல் குப்பையாகத் தான் கிடக்கும் என்பதை உலக மக்கள் அனைவரும் நன்கு உணர்ந்துள்ளனர்!

ரஷிய -உக்ரைன் நாடுகள் இடையே உருவாகியுள்ள போர் என்னும் கொடிய தீப்பொறி இந்த நிமிடம் வரைக்கும் கட்டுப்படுத்தக் கூடிய நிலையில் உள்ளது. அதை தொடக்கத்திலேயே அணைக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் உள்ள மனித நேய சக்திகள் ஈடுபடவேண்டும்.

இந்தப் போர் ஏதோ தமது தெருவில், ஊரில், நமது நாட்டில், நமது எல்லையில் நடப்பதாக நினைத்து உலகில் இதயமுள்ள மனிதர்கள் உடனே முடிவுக்கு வர வேண்டும் என ஏங்குகிறார்கள். போரில் மனித நேயம் மரத்துப் போகவில்லை. போரின் கோரக் காட்சிகள் நெஞ்சை உலுக்குகின்றன!.

“போரை நிறுத்து” என்ற குரல் பல்வேறு நாட்டு மக்களிடமிருந்து கேட்கத் தொடங்கி உள்ளது.  குறிப்பாக ரஷ்ய மக்களே இந்த குரலை ஓங்கி ஒலித்திருப்பது மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

ஐ.நா மன்றத்தில் தங்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட இருந்த தீர்மானத்தின் போது தங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காமல் செயல்பட்ட  நட்பு நாடுகளான இந்தியா, சீனா போன்றவற்றின் போர் நிறுத்த வேண்டுகோளை ரஷ்யா ஏற்க வேண்டும்.

போரினால் எதையும் சாதித்து விட முடியும் என்ற வெறியுடன் தொடர்ந்து போரில் ஈடுபட்ட நெப்போலியனுக்கும், ஹிட்லருக்கும், முசோலினிக்கும் எத்தகைய முடிவு ஏற்பட்டது என்பதை வரலாறு சொல்லும்.

இத்தகைய போர்வெறித்தனம் அவர்களை மட்டுமல்லாது அவர்கள் சார்ந்த நாட்டு மக்கள் பல்லாயிரம் பேரையும் சேர்த்து அழித்துள்ளது என்பதை ரஷ்ய ஆட்சியாளர்கள் புரிந்து செயல்பட வேண்டும்.அமெரிக்கா தேவையில்லாமல் உக்ரைனை, ரஷ்யாவிற்கு எதிராக உசுப்புவதை நிறுத்த வேண்டும்.

காலம் கடந்துவிடவில்லை, போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து , ரஷ்யா மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை புதின் துடைத்துக் கொள்ள வேண்டும்.!

கட்டுரையாளர்; ம.வி.ராஜதுரை

மூத்த பத்திரிகையாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time