பேரம் பேசப்படும் உள்ளாட்சித் தலைமைப் பதவிகள்!

-சாவித்திரி கண்ணன்

அப்பப்பா என்னென்ன பேரங்கள், காய் நகர்த்தல்கள்! மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு கன்னாபின்னா குதிரை பேரங்கள்! வரப்போகிற உள்ளாட்சி நிர்வாகம், தரப்போகிற சேவை எப்படி நேர்மையாக இருக்கும்? ஏன் இந்த மறைமுக தேர்தல் திணிப்பு? யாருக்கு ஆதாயம்?

மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களும், அந்தந்த மாவட்டத்தின் முக்கிய புள்ளிகளும் அவரவர் ஆதரவாளருக்கு பதவிகளை வாங்கித் தருவதில் பகிரங்க பிரயத்தனம் செய்து வருகின்றனர். இதில் தோற்றுப் போகிறவர்களுக்கு இது ஒரு கவுரவ பிரச்சினையாகவும் வாய்ப்புள்ளது. மன வருத்தங்கள் வளரவும் வாய்ப்புள்ளது.அது மட்டுமின்றி பதவியில் உட்காருபவர் கடைசி வரை பதவி கிடைப்பதற்கு காரணமானவர்களின் கைப்பிள்ளையாக செயல்படவே வாய்ப்புள்ளது!

சென்னையில் மும்முனை முயற்சிகள் நடக்கின்றன! மதுரையை எடுத்துக் கொண்டால் அமைச்சர்கள் பி.டி.ஆர்.தியாகராஜன், மூர்த்தி, தங்கம் தென்னரசு முன்னாள் அமைச்சர் பொன்முத்து ராமலிங்கம்..ஆகியோர் அணி பிரிந்து நிற்கின்றனர். திருச்சியை எடுத்துக் கொண்டால் அமைச்சர்கள் கே.என். நேருவும் அன்பில் பொய்யா மொழியும் அணி பிரிந்து நிற்கின்றனர். இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் வேறு காங்கிரசுக்கு கேட்கிறாராம்! இப்படி ஒவ்வொரு இடத்திலும் முட்டல்,மோதல்கள்!

சில இடங்களில் அதிகாரத்தை பிடிக்க மாமல்லபுரம், கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம் போன்ற இடங்கள் மட்டுமின்றி பக்கத்து மாநிலங்களுக்கெல்லாம் தங்கள் ஆதரவு கவுன்சிலர்களை அழைத்துச் சென்று  உல்லாச விருந்தும், கேட்கின்ற தொகைகளும், வழங்கப்படுவதாக செய்திகள் வருகின்றன! வெற்றி பெற்றவர்கள் சிலர் ஆளும் கட்சிக்கு தாவியுள்ளனர் சில இடங்களில்!

இந்த காட்சிகள் எல்லாம் ஏதோ ஓரிரு இடத்தில் மாத்திரம் என்றல்ல, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள்…என எல்லா இடங்களிலும் கிட்டத்தட்ட இது போன்ற நிலமைகளே! ஜனநாயகத்தை சிதைக்க இதைவிட வேறு அணுகுமுறை தேவையில்லை.

இவை எல்லாமே எதிர்பார்த்தவை தான்! ஆகவே தான், ”உள்ளாட்சித் தலைமை பொறுப்புகளுக்கு நேரடி தேர்தலை நடத்த வேண்டும்” என ஜனநாயக ஆர்வலர்கள் ஒருமித்து குரல் கொடுத்தனர்!

உள்ளாட்சி தேர்தலில் மேயர் நகராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடியாக தேர்தல் நடத்துவது தான் ஜனநாயகத்தை வலுப்படுத்தும். அந்த பதவிகளுக்கான முக்கியத்துவத்தை கொடுக்கும். அது தான் வழக்கத்தில் இருந்ததும் கூட! உலகின் பல நாடுகளில் இது தான் பின்பற்றப்படுகிறது!

அப்படி மக்க்ளால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு முறை சென்னை மேயராக இருந்தவர் தான் ஸ்டாலின்! இந்த நிலையில் நேரடி தேர்தலை மறைமுக தேர்தலாக 2006-ல் திமுக ஆட்சி சட்ட திருத்தம் கொண்டு வந்து மாற்றியது. அப்போது அதை அதிமுக கடுமையாக எதிர்த்தது. எனவே, ஜெயலலிதா மீண்டும் அதை நேரடி தேர்தலாக 2011-ல் சட்ட திருத்தம் கொண்டு வந்து மாற்றினார். ஆனால், அதே ஜெயலலிதா பிற்பாடு நேரடி தேர்தலை மறைமுக தேர்தலாக்க 2016ல் முயன்றார். எடப்பாடி பழனிச்சாமி 2019-ல் அவசர சட்ட திருத்தம் மூலம் மறைமுக தேர்தலை உறுதிபடுத்தினார்!

அப்போது என்ன மாதிரி எதிர்வினைகள் ஏற்பட்டன? திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் என்னென்னவெல்லாம் கூறின என்பதை பார்ப்போம்;

”மறைமுக தேர்தல் என்பது சர்வாதிகார போக்கு, ஜனநாயகத்திற்கு இழுக்கு” என கண்டனம் தெரிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

”உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி நேரடித் தேர்தல் நடத்தாமல் மறைமுக தேர்தல் நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டினார்.

”மறைமுக தேர்தல் குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும்” என மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் அன்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அப்படியானால், திமுக ஆட்சிக்கு வந்த இந்த பத்து மாதத்தில் அந்த சட்ட திருத்தத்தை தூக்கி எறிந்து மறுபடியும் நேரடி தேர்தல் முறையை கொண்டு வந்திருக்கலாமே!

ஏன் கொண்டு வரவில்லை என்றால், எதை சர்வாதிகாரம் என்றாரோ ஸ்டாலின், அது இன்று அவருக்கு தேவைப்படுகிறது. கட்சியில் பதவிக்காக பெரும் போட்டிகளையும், பேரங்களையும், பதற்றங்களையும் உருவாக்கி, இறுதியில் நான் அடையாளம் காட்டுபவரே மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் எனும் போது, என் அதிகாரத்தின் வலிமை கொடி கட்டி பறக்கும் அல்லவா?

அப்படியில்லாமல் மக்களின் தீர்ப்புகளை பெற்று ஒருவர் பதவிக்கு வரும் போது அவர் தன்னம்பிக்கை உள்ளவராகவும், சுதந்திரமானவராகவும் மாறிவிட்டால், அவரை அடிமைப்படுத்துவதே சிரமம் ஆகிவிடலாம் என யோசிக்கிறார் ஸ்டாலின். இதைத் தான் ஜெயலலிதாவும், எடப்பாடியும் நினைத்தார்கள். அவர்கள் நினைத்த போது அதை எதிர்த்துவிட்டு, இன்று அதையே, அப்படியே தன் சுயநலத்திற்கு தோதாகப் பயன்படுத்திக் கொள்கிறார்.

ஸ்டாலின் தான் இப்படி என்றால், அன்றைக்கு எடப்பாடி கொண்டு வந்த போது எதிர்த்த திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகள் மீண்டும் நேரடி தேர்தலுக்கு குரல் கொடுத்திருக்க வேண்டாமா? மெளனமாக ஏற்றுக் கொண்டார்கள். அப்படி ஸ்டாலின் விருப்பத்திற்கு மாறாக நேரடி தேர்தலுக்கு வலியுறுத்திவிட்டால், தங்களை ஓரம் கட்டிவிடுவாரோ என்ற பயம் தான்! ஆகவே தான் தங்கள் அனுசரனைக்கு பரிசாக அல்லது கையூட்டாக தங்கள் கட்சிக்கு சில மேயர், துணைமேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளை பிச்சையாகக் கேட்கின்றனர்.

அதிகாரத்தை அராஜக வழிமுறைகளிலோ, அராஜகமாகவோ அல்லது அடிமைத்தனம் வாயிலாகவோ அல்லது பிச்சை கேட்பதன் மூலமாகவோ எட்டிப்பிடிப்பது! அதற்குப் பிறகு பொது நலனை பலிகடாவாக்கி பொதுச் சொத்தை சூறையாடுவது என்ற புரிதலைத் தான் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஜனநாயகத்தின் பெயரால் ஆளும் தரப்பினர் கற்றுத் தருகின்றனர்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time