மேகேதாட்டு அணையும், கூட்டுக் கொள்ளை ஆதாயங்களும்!

-சாவித்திரி கண்ணன்

9,000 கோடிகள்! அரசியல்வாதிகள், முதலீட்டாளர்கள், ஒப்பந்ததாரர்கள்..ஆகிய முக்கூட்டுக் கொள்ளைக்காகவே மேக்கேதாட்டு அணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தின் காங்கிரஸ், பஜக, மஜத ஆகிய கட்சிகள் தமிழகத்தை எதிர்த்து தங்களை ஹீரோவாக்கிக் கொள்ள மேகேதாட்டுவிற்கான போராட்டங்களை செய்கிறார்கள்!

அதாவது ஆளும் பாஜக மட்டுமின்றி எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மஜத ஆகியவை தங்களின் வாக்கு வங்கி அரசியலுக்காகவும், சுய ஆதாயத்திற்காகவும் தான் இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து வருகின்றன அன்றி இதில் பெங்களூருக்கான குடிநீர் தேவைக்காகவல்ல!

சமீபத்தில் கர்நாடகவில் இழந்து கொண்டிருக்கும் தன் செல்வாக்கை மீட்க  காங்கிரஸ் கட்சி மேகேதாட்டு அணை திட்டத்தை செயல்படுத்தக் கோரி பாதயாத்திரையை மேற்கொண்டது. டி.கே.சிவகுமார் பாதயாத்திரையை முன்னெடுக்க, அதை மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் அமைச்சர் ஆஞ்சநேயா உட்பட பல தலைவர்களும், ஆயிரக் கணக்கான தொண்டர்களும் பங்கேற்றனர். இது ஒரு அப்பட்டமான சுயநல அரசியல்! இந்த திட்டம் தமிழகத்திற்கு எதிரானது என்பதைவிடவும் மனித குலத்திற்கே எதிரானது! பன்மைத்துவ உயிர்மயச் சூழலுக்கே எதிரானது.

பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மேகேதாட்டுவில் ரூ. 9 ஆயிரம் கோடி செலவில் மிக பெரிய அணை கட்ட வேண்டிய அவசியம் இல்லை. சில நூறு கோடி ரூபாய் செலவில் ஏரி குளங்களை தூர்வாரி நீரை சேமித்தாலே போதுமானது. ஆனால், அதில் பெரிய ஆதாயம் அடைய முடியாதல்லவா? இதனால், பெங்களூருவின் நலனில் அக்கறைப்படுவது போல் வேடமிட்டு, ஒப்பந்ததாரர்களின் நலனுக்காக அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன.

”உண்மையில் தற்போது பெங்களுரு 1,400 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெறுகிறது. அதில் தண்ணீர் குழாய்களின் பழுது மற்றும் முறையற்ற நீர்மேலாண்மை காரணமாக 40% தண்ணீஈர் வீணடிக்கப்படுகிறது” என பிரபல சுற்றுச் சூழல் நிபுணர் டி.வி.ராமச்சந்திரா பெங்களூரில் நடைபெற்ற கருத்தரங்கிலேயே கூறினார்!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் 67 டிஎம்சி நீரை தேக்கும் அளவுக்கு புதிய அணை கட்டுவதற்கான திட்ட வரைவு அறிக்கையை கர்நாடக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. மேகேதாட்டு அணைத் திட்டத்தை நிறைவேற்றினால், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட காவிரி வடிநில மாவட்டங்கள் காவேரி ஆற்று நீர்வரத்து இன்றி, தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்பதை கடந்து இந்த விவகாரத்தை நாம் பார்க்க வேண்டியுள்ளது! இதை தமிழகத்துடன் இருக்கும் நீர் பங்கீட்டு பிரச்சினையோடு இணைத்து பார்க்க கூடாது என கர்நாடக மாநிலத்தில் உள்ள சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் போராடி வருகின்றனர்! அதனால் தான் மேதாபட்கர் பெங்களூருக்கே சென்று மேகேதாட்டுவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடினார்.

பெங்களுரில் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், மேதாபட்கர் ,திரை நடிகர் சேட்டன்குமார்

”மேகேதாட்டுவை சுற்றி உள்ள கிராமங்களில் வாழும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பழங்குடிகளும், பட்டியலினத்தவர்களும், ஏழை விவசாயிகளும் தங்களின் வசிப்பிடத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த திட்டம் உயிரி சங்கிலியை அழிப்பதுடன், காவிரி ஆற்றையும் கடுமையான பாதிக்கும். மேகேதாட்டுவை சுற்றியுள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் நலனுக்காக கர்நாடக அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.. அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை வேறு வேறு சாயங்களைப் பூசி சுற்றுச்சூழலை கெடுக்க கூடாது.”என்று மேதா பட்கர் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு மோசமான மேகேதாட்டு ஆரம்கட்ட திட்ட அரிக்கைக்கு மத்திய பாஜக அரசு ஒப்புதல் அளித்ததன் மூலம் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளுக்கான துணிச்சலை கர்நாடக அரசியல் கட்சிகளுக்கு தந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது சுற்றுச் சூழலுக்கான அனுமதி தமிழகம் ஒத்துக் கொண்டால் தான் தருவேன் என நாடகம் போடுகிறது. ஆக, மத்திய அரசு மதில் மேல் பூனையாக பூச்சாண்டி காட்டுகிறது.

உண்மையாகவே இந்த திட்டத்தால் தான் கர்நாடகத்தின் தண்ணீர் தேவை நிறைவேறும் என்ற நிலை இல்லை! கர்நாடகத்தில் காவேரியை விட மிகப் பெரிய கிருஷ்ணா நதி பாய்கிறது! இது தவிர கோதாவரி,வடபெண்ணை,தென் பெண்ணை உள்ளிட்ட 36 ஆறுகள் பாய்கின்றன.அதாவது சரியாக சொல்ல வேண்டுமென்றால், தமிழகத்தைக் காட்டிலும் சுமார் மூன்று மடங்கு நீர்வளம் நிறைந்த மாநிலம் கர்நாடகா! இதனால், ஆண்டுக்கு சுமார் 2,000 டி.எம்.சி நீரை கடலுக்கு தாரை வார்க்கிறது கர்நாடகா! ஆக, எந்த வகையில் பார்த்தாலும், மேகேதாட்டு அணை கர்நாடகாவிற்கு தேவையில்லாத ஒன்றாகும்!

கடந்த 37 ஆண்டுகளாக சர்தார் சரோவர் அணைக்கு எதிராக நர்மதா பச்சோ ஆந்தோலன் இயக்கம் சார்பாக அந்த பகுதியில் இருந்து அகற்றப்படும் மக்களுக்காக மேதா பட்கர் போராடி வருகிறார். 37 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகும், இன்றும் கிராமங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்த அணையில் அதிகரிக்கும் நீரால் பல கிராமங்கள் நீரில் மூழ்கிவிடுகின்றன! தற்போது பல கிராமங்கள் தீவுகளாக காட்சியளிக்கின்றன. இந்த இடத்தில் இருந்து அகற்றப்பட்டவர்கள் மீண்டும் முறையாக குடியமர்த்தப்படாமல் உள்நாட்டு அகதிகளாக்கப்பட்டனர். இந்த நிலை தான் இந்த திட்டத்திலும் நிகழும்!

மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு கையகப்படுத்தும் 5 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் 4,716 ஹெக்டேர் நிலம் வனத்துறைக்கு சொந்தமானது. மீதமுள்ள நிலம் வருவாய்த் துறைக்கு சொந்தமானது. ஆக, 94% அடர்ந்த வனப்பகுதியை கிடைக்கப் போகிற பொருளாதார ஆதாயத்திற்காக அரசியல் கட்சிகள் பலி கொடுக்கின்றன!

இந்த இடத்தில் அணை கட்டுவதால் வனம் முற்றிலுமாக அழிக்கப்படுவதுடன், அங்குள்ள யானைகள், தேன்வளைக்கரடி, விதவிதமான அணில்கள், அரிய வகை மின்கள், பறவைகள் ..உள்ளிட்ட உயிரினங்களும் அழிக்கப்படும். இது கர்நாடகத்திற்கும் நல்லதல்ல, தமிழகத்திற்கும் நல்லதல்ல! வனங்களை பாதுகாப்போம் என வாய்ச் சவடால் அடிக்கும் மத்திய பாஜக அரசு இதற்கு ஆரம்பத்திலேயே முட்டுகட்டை போடாமல் கர்நாடகத்தை ஆடவிட்டு வேடிக்கை பார்க்கிறது.

நாட்டிலுள்ள பெரும்பாலான பெரிய அணை திட்டங்கள் மக்களுக்கு உதவுவதை விட ஒப்பந்ததாரர்களுக்கே உதவியுள்ளன என்பது கடந்த காலம் உணர்த்திய உண்மை. ஆயினும், மக்கள் எதிர்ப்பையும் மீறி அரசியல்வாதிகள் தொடந்து பெரிய அணைகள் கட்டி வருகின்றனர்! இதுபோன்ற பெரிய அணைகளை கட்டுவதால் அரசியல் வாதிகள், முதலீட்டாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களே முழுமையான பயனை அடைகின்றனர். இயற்கை வளங்களை அபகரிக்கும் நோக்கத்தில் செயல்படும் சில சர்வதேச நிறுவனங்கள் இத்தகைய மெகா திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க ஆர்வம் காட்டுகின்றன.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time