படை காட்டினார் பன்னீர்! எடை கூட்டினார் எடப்பாடி!

-சாவித்திரி கண்ணன்

இன்றைக்கு அதிமுக தலைமையகத்தில் நடந்த செயற்குழு தொடர்பான காட்சிகளை,காரசார விவாதங்களை,அதன் போக்குகளைக் கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றால்… இரண்டே வரிகளில் சொல்வேன்;

எடப்பாடி பழனிச்சாமி ஏற்றம் கண்டு வருகிறார்

பன்னீர்செல்வம் படியிறங்கி வருகிறார்

இந்த முடிவுக்கு நாம் வருவதற்கான காரணத்தைப் பார்க்க வேண்டும்.

ஆனால்,இன்று கட்சி அலுவலகத்தை வெளியிலிருந்து யாரும் வேடிக்கை பார்த்திருந்தால், அவர்கள் ஓ.பிஎஸ் செல்வாக்கு தான் கட்சியில்  ஓங்கி இருக்கிறதோ.. என்று கூட எண்ணியிருப்பார்கள்!

அந்த அளவுக்கு ஒபிஎஸ் ஆதரவாளர்கள் மிகப் பெருந்திரளாக வந்திருந்தனர்.அதாவது வந்த தொண்டர்களில் சுமார் 75%கத்தினர் ஒபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்தனர் என்பது கண்ணுக்குப் புலப்பட்ட உண்மை! பன்னீர் போட்டோ பதித்த முகமுடி, ’’மூன்றுமுறை முதல்வரே வருக’’ என்ற பேனர்,கும்ப மரியாதை,ஆரத்தி எடுத்து வரவேற்பு… இவை எல்லாம் பன்னீர் செய்த பகீரத பிரயத்தனங்கள்!  இதை எல்லா பத்திரிகையாளர்களும் பார்க்கத் தவறவில்லை.அதே சமயம் உள்ளே கட்சியின் செல்வாக்கான அமைச்சர்கள், நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவாக இருந்ததையும் கவனிக்க முடிந்தபோது பன்னீர் செய்த முயற்சிகள் எல்லாம் விரயமாக்கப்பட்டது போலத் தான் இருந்தது..!

ஆக,தொண்டர்கள் மூலம் பன்னீர் பலம் காட்டினார்! எடப்பாடியோ நிர்வாகிகள்,அமைச்சர்களை வளைத்துப் போட்டு தன் எடையை நன்கு கூட்டிக் கொண்டார்!

செயற்குழுவில் 15 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன! அதில் ஏழு தீர்மானங்கள் எடப்பாடியை வாழ்த்திப் புகழ்ந்து இருந்தது.இதிலேயே தன் ராஜதந்திரத்தை காட்டிவிட்டார் எடப்பாடி! அதாவது, இந்த ஆட்சியின் அனைத்துக்கும் அவரே- அந்த ஒற்றை நபரே காரணம்- எனத் தீர்மானங்கள் எழுதப்பட்டிருந்ததைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் அங்கீகரித்துள்ளார். இதிலேயே, அவர் எடப்பாடியின் ஆளுமைக்குக் கீழ் வந்துவிட்டார் எனப் புரிந்து கொள்ளலாம்.

என்ன சொல்லியிருக்க வேண்டும் பன்னீர்? ’’ஆட்சி என்பது ஒரு கூட்டு முயற்சி! ஒருங்கிணைந்த செயல்பாடு! அதற்கு எல்லாம் நீங்கள் ஒருவரே காரணமாகிவிட முடியாது. மற்ற ஆறு தீர்மானங்களில் உள்ளது போல,தமிழக அரசுக்குப் பாராட்டு என்று தான் இருக்க வேண்டும்’’ என மாற்றி இருக்க வேண்டும்.

அதனால் தான் தீர்மானம் வாசிக்கப்பட்டு முடிந்த கையோடு, சுமார் ஏழெட்டு அமைச்சர்களும் பத்து நிர்வாகிகளுமாக உடனே அதிரடியாக எழுந்து நின்று, ’’ அடுத்த முதல்வர் எடப்பாடி என இப்போதே அறிவித்துவிடலாம்’’ எனக் கோரசாகக் கூறமுடிந்தது.

மேலும்,’’அம்மாவால் அடையாளம் காணப்பட்டவன் நான் தான்’’ என பன்னீர் பரிதாபமாக வேண்டும் போது, எடப்பாடி ஆதரவாளர்கள், ’’இப்போதைய ஆட்சியே நன்றாகத்தானே உள்ளது.முதல்வர் மாற்றப்பட வேண்டும் என்றால், ஆட்சி சரியில்லை என நாமே ஒப்புதல் வாக்குமூலம் தந்தது ஆகாதா?’’ எனக் கேட்டதற்கு, பன்னீரால் பதில் சொல்லமுடியவில்லை!

 

இதுவரை ’இது அம்மாவின் ஆட்சி’’ என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லி வந்த பழனிச்சாமி தற்போது ’’தன் ஆட்சி’’ என்று நிரூபிக்கத் தொடங்கிவிட்டார். ’’பன்னீர் முதல்வரானதற்குக் கூட ஜெயலலிதா காரணமில்லை’’ என எடப்பாடி பேசமுடிகிறது.அதை யாரும் எதிர்க்கவில்லை எனும் போது, ஒரு காலத்தில் கேள்விக்கு இடமற்று விளங்கிய ஜெயலலிதாவின் செல்வாக்கை எடப்பாடி தற்போது மீறிச் சென்று கொண்டிருக்கிறார் என்று தான் பொருள்.

பன்னீரை இது வரை ஆதரித்தவர்கள் எல்லாம், இந்த காட்சி மாற்றத்தைப் பார்த்து வாயடைத்துப் போனார்கள். கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், பாண்டிய ராஜன்..ஆகியோர் தற்போது பன்னீருடன் நிற்கமுடியாத நிலையில் உள்ளனர்.ஆனால், இ.பி.எஸ் பக்கமோ தங்கமணி,வேலுமணி,ஜெயக்குமார்,திண்டுகல் சீனிவாசன், வளர்மதி, கோகுல இந்திரா… என அணிவகுத்து நிற்கின்றனர்.

சென்ற கட்டுரையில் சொன்னது தான், ’’தலைமைப் பொறுப்பை தயைகூர்ந்து தாருங்கள்’’ என்று கேட்டு யாரும் கேட்டு ஒரு போதும் பெறமுடியாது. அது தட்டிப் பறிப்பவனுக்கே சொந்தமாவது! பன்னீர் பணிவான அரசியலுக்கு பழக்கப்பட்டவர். சூழ்நிலை காரணமாக ஜெயலலிதாவால் முதல்வர் ஆக்கப்பட்டார்! அவர் பணிவு அன்று ஜெயலலிதாவிடம் நம்பிக்கையை அவருக்குப் பெற்றுத் தந்தது. அந்தப் பணிவு தான் இன்று எடப்பாடி வெற்றியை உறுதி செய்து கொண்டுள்ளது.

’’எடப்பாடிக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை. நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் இப்படியெல்லாம் செய்தேன். அவர் செய்யத் தவறிவிட்டார். கொரானா காலத்தில் எவ்வளவு குளறுபடிகள் செய்து மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தினார்…. கொள்ளை அடிப்பதிலும், சுருட்டுவதிலும் தான் குறியாக உள்ளார்… மக்கள் துன்பப்படுகின்றனர்… எனப் பலவாறாகப் பன்னீர் நாட்டு மக்களிடம் பேசியும், கட்சிக்குள் கலகக் கொடி தூக்கினாலும் மட்டுமே எடப்பாடியை இறக்க முடியும்.

ஆனால், அதற்கான திராணியும்,போர் குணமும் பன்னீர் செல்வத்திடம் நாம் எதிர்பார்க்க முடியாது. அடுத்த முறை அதிமுக அதிர்ஷ்டவசமாக ஜெயத்து வந்தால் பன்னீர் துணை முதல்வராவது கூட சந்தேகமே…!

சரி ஆடும் வரை ஆடுங்கள்! இன்றைய நிலையில் அடுத்த முதலமைச்சரை தீர்மானிக்கும் பொறுப்பு உண்மையில் இருவரிடம் தான் உள்ளது. ஒன்று பாஜக தலைமை, மற்றொன்று சசிகலா.

சசிகலா வருகைக்குப் பிறகு தான் உண்மையான தலைமை யார் எனத் தெரிய வரும்.சசிகலா, தினகரன்,பாஜக தலைமை இந்த மூன்றையும் எதிர்கொண்டு வெற்றி பெறும் திராணி யாருக்கு இருக்கிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time