சசிகலா வருவது அதிமுகவுக்கு சக்தியா? சரிவா?

-சாவித்திரி கண்ணன்

தோல்விக்கான மனம் திறந்த சுய பரிசீலனைக்கு அதிமுகவில் யாரும் தயாரில்லை! அதிகார அரசியலில் முந்துகிறார் இ.பி.எஸ்! தற்காப்பு அரசியலுக்கான சண்டையில், சசிகலாவை கேடயமாக்குகிறார் ஒ.பி.எஸ். அந்தக் கேடயம் அவரை காப்பாற்றுமா? இல்லை, கதறடிக்குமா?

ஒட்டுமொத்த கட்சியும் பொதுக் குழு கூட்டி சசிகலாவை கட்சியை விட்டு விலக்கியது! சசிகலாவை எதிர்த்து 90 சதவிகித மாவட்ட செயலாளர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். சசிகலா சேர்க்கை என பேச்செடுத்தாலே கட்சிக்குள் எத்தகையை கொந்தளிப்பையும், கோபத்தையும் சந்திக்க நேரும் என்று கூட ஒ.பி.எஸுக்கு நன்றாகத் தெரியும். ஆனபோதிலும், தேனி மாவட்ட நிர்வாகிகளை சசிகலாவிற்கு ஆதரவாக தீர்மானம் போட வைத்து…, பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிய கதையாக களமாடுகிறார் என்றால், இதில் ஏதோ ஒரு சூட்சும அரசியலை இ.பி.எஸுக்கு சொல்ல வருகிறார் பன்னீர்!

இன்றைக்கு அதிமுக பின்னடைவிற்கான உண்மையான காரணங்கள் என்ன? என்று வரிசைபடுத்தி பார்ப்போம்;

முதல் காரணம், அது தன் சுயத்தை இழந்து நிற்கிறது! அந்த சுயத்தை மீட்க தன் சுண்டுவிரலைக் கூட அசைக்க தயாரில்லை ஒபிஎஸும், இபிஎஸும்! எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் அது திராவிட இயக்கத்தின் நீட்சியாக பார்க்கப்பட்டது! அவர்கள் மறைவிற்குப் பிறகு பாஜகவின் பங்காளியாக மாறிவிட்டதோடு, அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் தடுமாறுகிறது. ‘அதிமுகவானது பாஜகவிடம் அடிமைப்பட்டு கிடக்கிறது’ என்ற பிரதான காரணம் தான் பலவீனமாக இருந்த திமுகவை பலமிக்க ஒரு கட்சியாக மாற்றியுள்ளது என்ற பாலபாடத்தைக் கூட இன்னும் அதிமுக தலைமை உணர மறுக்கிறது.

எந்த ஒரு கட்சியும் நின்று நிலை பெறுவதற்கு ஒரு சித்தாந்த பலம் வேண்டும். உன் சித்தாந்தத்திற்கு நெருக்கமானவன் யார், எதிரி யார் என்று நீ அடையாளப்படுத்துவதில் தான் உன் அடையாளம் இருக்கிறது. திராவிட இயக்கத்தின் ஒரு தொடர்ச்சியான அதிமுக பாஸிச இந்துத்துவ அடையாளம் கொண்டவர்களோடு தொடர்ந்து பயணிப்பதில் அதன் அடையாளம் சிதைந்து வருவதை சிந்திக்க மறுப்பது தான் விந்தை!

மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்க்க முடியவில்லை!

மத்திய அரசு பணியிடங்களில் மண்ணின் மைந்தர்களுக்கான வாய்ப்பு அடியோடு பறிபோவதை எதிர்க்க முடியவில்லை! திட்டமிட்ட வட இந்திய குடியேற்றங்கள் நடப்பதை எதிர்க்க முடியவில்லை. சென்னையில் 9 வார்டுகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக இரண்டாம் இடம் வந்துள்ளது. சென்னை மட்டுமல்ல, கோவை, திருப்பூர், மதுரை போன்ற பல மாநகராட்சிகளில் அதிமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளியுள்ளது பாஜக!

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிருப்தி வேட்பாளர்களை அள்ளிக் கொண்டு போய் தாமரை சின்னத்தில் போட்டியிட வைத்த பாஜகவை எதிர்த்து முணுமுணுக்க கூட முடியவில்லை.

நீட் தேர்வை எதிர்க்க முடியவில்லை. எத்தனை தடுமாற்றங்கள்!

எல்லாவற்றுக்கும் மேலாக தங்கள் சுயநலத்தை சிறிதளவும் விட்டுத் தரமுடியவில்லை.பொதுச் சொத்தை சூறையாடிச் சேர்த்த செல்வங்களை பாதுகாக்கும் தற்காப்பு அரசியலைத் தவிர, இன்று வேறு எதையும் அதிமுக தலைவர்கள் செய்யவில்லை.

சேர்த்து வைத்திருக்கும் அளப்பரிய செல்வத்தை கூட தேர்தலின் போது கட்சிக்கார வேட்பாளர்கள் செலவுக்கு தர மனம் ஒப்பவில்லை! இதில், அதிகபட்ச கஞ்சத்தனத்தை காட்டுபவர் ஒபிஎஸ் என்கிறார்கள்!

இல்லாத எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயரை சொல்லி எத்தனை நாள் கட்சி நடத்துவீர்கள்? உங்களுக்கான ஒரு தனி மரியாதையை ஏன் மக்களிடம் ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை?

ஒபிஎஸ் திமுக தலைமையை சரிகட்டி சமரச அரசியலை சாமார்த்தியமாக ஆரம்பத்தில் இருந்தே கைகொள்கிறார்! அதனால், நிலஅபகரிப்பு மற்றும் புளியந்தோப்பு அடுக்குமாடி தரமற்ற கட்டுமானம்…உள்ளிட்ட பலவற்றை குறித்த பயமில்லை அவருக்கு!

எடப்பாடி திமுகவிற்கு எதிரான அரசியலை ஆரம்பத்தில் இருந்தே வேகமாகச் செய்தார்! ஆனால்,கொட நாடு கொலை,கொள்ளை விவகாரங்களில் தான் தப்ப முடியாது என்பதால் தானும் தற்போது ‘காம்பரமைஸ்’ அரசியலை கைகொண்டு திமுகவை சமாளிப்பதாக செய்திகள் வருகின்றன!

எடப்பாடியின் அடிப்படை பலவீனம் அவருக்கு மனிதர்களை  நேசிக்க தெரியவில்லை. அடிமை அரசியல், அதிகார அரசியல் என்ற இரண்டு உச்சங்களில் மட்டுமே சஞ்சரிக்கிறார்! அறிவுள்ளோரை அடையாளம் கண்டு அருகில் வைத்துக் கொள்ளுவதோ, அன்பான விசுவாசிகளை அரவணைத்து கைவிடாமல் வைத்துக் கொள்வதோ அவர் அறியாதது! ஆனால், ஒற்றைத் தலைமைக்கான ஓயாத உந்துதலில் பக்கத்தில் பாசமாக வைத்துக் கொள்ள வேண்டிய பன்னீர் செல்வத்தை பகையாளியாக்கிக் கொண்டார்! புண்பட்ட பன்னீர் செல்வம் சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கிறார். சசிகலாவைக் காட்டி எடப்பாடிக்கு எரிச்சல் ஏற்படுத்துகிறார்.

சசிகலா வந்தால் என்னவாகும்?

ஒன்று சேர்ந்தாலும் ஒட்டாது உறவு! கழுத்தறுத்தவர்களை காவு கொள்ளாமல் விடமாட்டார் சசிகலா! இதை அவரை நன்கறிந்த பன்னீர் செல்வத்திற்கு இது நன்றாகவே தெரியும்.

90 சதவிகித மாவட்ட செயலாளர்கள் சசிகலா வருகைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அவர்களின் நிலைமை சசிகலா வந்ததும் என்னவாகும்? எடப்பாடி மட்டுமல்ல, ஜெயக்குமார் தொடங்கி, வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், முனுசாமி..போன்ற பல முன்னணி தளபதிகள் மூலையில் முடக்கப்படுவார்கள்!

டி.டி.வி.தினகரன் எப்படி எல்லாம் அதிகாரம் செய்வார்? அவர் அரசியல் எப்படிப்பட்டது என்பது தெரியாதா? கூழைக் கும்பிடு போட்டு, கூப்பிட்ட குரலுக்கு ஓடி கைகட்டி நின்று ஆண்டான், அடிமை அரசியலை விட்டு வெளியேற விரும்பித் தானே சசிகலாவும், தினகரனும் தள்ளி வைக்கப்பட்டனர்!  இப்படிப்பட்டவர்கள் கட்சிக்குள் நுழைந்தால் இருக்கிற கட்சியும் காணாமல் போகும். வலிமை பெறுவதற்கு மாறாக இப்போதிருப்பதை விடவும் பலவீனமாகிவிடும். கட்சி ஜனநாயகம் என்பதே முற்றிலும் காவு கொடுக்கப்பட்டுவிடும்!

”மீண்டும், அந்த அடிமை விலங்கை எடுத்து தறித்துக் கொள்ளவும் எனக்கு தயக்கமில்லை” என ஒபி.எஸ் உள்ளிட்ட சிலர் சொல்கிறார்கள் என்றால், இங்கே தன்னை கொஞ்சம் சுய பரிசீலனை செய்து கொள்ள வேண்டும் எடப்பாடி. பன்னீரை பக்குவமாக அரவணைத்து போகாவிட்டால், அதற்கு கண்ணீரைத் தான் விலையாக தர வேண்டியிருக்கும் எடப்பாடி!

எடப்பாடியும், பன்னீரும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு! ஒன்றுபடாவிட்டால் இருவருக்குமே தாழ்வு! இந்த ஒற்றுமையின்மை தொடருமானால், அதிமுக அழிவதை யாராலும் தடுக்க முடியாது!

அதிமுகவிற்கு இனி எதிர்காலம் இருக்குமா? இருக்காதா? என்ற சந்தேகம் கட்சியின் அடிமட்டம் வரை பரவி வியாபித்துள்ளது. அதை போக்காவிட்டால், கட்சி விரைவில் கரைந்துவிடும். இதோ சிவகாசியில் வெற்றி பெற்று வந்த 11 கவுன்சிலர்களில் 10 பேர் திமுக பக்கம் சென்றுள்ளனர். இதே போல தமிழகத்தின் பல பகுதிகளில் வெற்றி பெற்று வந்த அதிமுகவினர் திமுகவில் ஐக்கியமாகி வருகிறார்கள்! திமுகவும், பாஜகவும் அதிமுகவை ஆனவரை பிய்த்து தின்று வருகின்றனர். இதை தடுக்கும், வேகமும், விவேகமும் இன்று யாருக்குமே இருப்பதாகத் தெரியவில்லை.

சசிகலா தலைமைக்கு வந்தால் இந்த இரட்டைத் தலைமையை போலவே பாஜகவிற்கு பாதம் தாங்கி அரசியலை மட்டுமே செய்வார். காரணம், அவர் மீதும், டி.டி.வி.தினகரன் மீதும் உள்ள வழக்குகள் அப்படி! கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அதிமுகவை காப்பாற்றி கரை சேர்ப்பதற்கான தகுதி வாய்ந்த தலைமை ஒருவரையும் பார்க்க முடியவில்லை. தகுதி வாய்ந்த யாருக்குமே இடமில்லாமல் கட்சியை அடிமைகளின் கூடாரமாக கட்டமைத்து கண் அயர்ந்து போன ஜெயலலிதா தான் அனைத்திற்கும் காரணம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time