அடங்க மறுக்கும் கட்சிக்காரர்கள்! அடிப்படைக் கோளாறு என்ன?

-சாவித்திரி கண்ணன்

எவ்வளவு பெரிய அவமானம்! கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத அவலம், கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமை இவற்றின் விளைவாக, ”குற்றவுணர்ச்சியால் நான் குறுகி நிற்கிறேன்…” என ஸ்டாலின் சொன்னது ஒரு நெகிழ்ச்சியைத் தந்தாலும், உள்ளாட்சி தேர்தலை திமுக தலைமை அணுகிய விதத்தில் தொடங்குகிறது எல்லாமே!

உள்ளாட்சி அமைப்புகள் அவற்றுக்குரிய பூரண சுதந்திரத்துடன் இயங்க அனுமதிப்பதே ஒரு முதிர்ச்சி பெற்ற சமூகத்தின் அடையாளமாக இருக்க முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை என்றாலும், அதை நடைமுறைப்படுத்த இன்றைய கட்சித் தலைமைகளின் சர்வாதிகார கண்ணோட்டங்கள் ஒத்துழைப்பதில்லை.

‘அடிமட்டம் வரை என் ஆதிக்க கொடி பறக்க வேண்டும்’ என விரும்புவது.

‘அடுத்த கட்சிக்காரனை கட்சிக்குள் இழுத்து பொருளாதார தகுதியை பார்த்து வாய்ப்பு கொடுப்பது’

அதிகாரம் தான் முதல் இலக்கு, கொள்கை உதட்டளவே என செயல்படுவது,

அதிகாரத்தைக் கொண்டு பொருளாதார வளம் சேர்ப்பது..

ஆகியவைற்றையே ஒரு தலைமையின் இலக்கணமாக பார்க்கும் திமுகவின் அடிமட்ட நிர்வாகி, தான் மட்டும் எப்படி வித்தியாசமாக செயல்படுவார்?

உள்ளாட்சி என்பவை மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வைத்து அவர்களை நெருங்கும் ஒரு வாய்ப்புள்ள பொறுப்பு என்பதைக் கடந்து, அதை பணமீட்டுவதற்கான பதவிகளாக பார்க்கும் கண்ணோட்டமே கட்சிகளின் தலைமை தொடங்கி அடிமட்டம் வரை இருக்கிறது. எனில், இதில் என்ன கடமை, கண்ணியம் , கட்டுப்பாடு என்ற சொல்லாடல்களை பயன்படுத்தி இன்று கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளை அசைக்க பார்க்கிறார்கள்?

உள்ளாட்சிகளுக்கு நேரடி தேர்தல் முறையை அதிமுக ஒழித்துக் கட்டிய போது, ”மறைமுக தேர்தல் என்பது சர்வாதிகார போக்கு, ஜனநாயகத்திற்கு இழுக்கு” என கண்டனம் தெரிவித்த மு.க.ஸ்டாலின், அந்த சர்வாதிகாரத்தை தானே கையிலெடுத்தன் விளைவை தான், தற்போது அனுபவிக்கிறார்!

நெல்லிக்குப்பம், காடையாம்பட்டி, கோ.மல்லாபுரம் ஆகிய பேரூராட்சி தலைவர் பதவிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியும் தரமுடியவில்லை. அதே போல ஸ்ரீபெரும்புதூர், அவிநாசி, கொல்லங்கோடு ஆகிய பேரூராட்சிகளை காங்கிரஸ்க்கு ஒதுக்கியும் அங்குள்ள கட்சிக்காரர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கும் இது தான் நிலை. கைக்கு எட்டியது வாய்க்கு கிடைக்கவில்லை. இது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்பதாக அர்த்தப்படுத்தப்படுகிறது. ஒரே ஒரு இடத்தில் துணைத் தலைவர் பதவிக்கு ஏகமனதாக தேர்வான திமுககாரர் தலைமைக்கு கட்டுப்பட்டு ராஜினாமா செய்துள்ளார்.

அடிப்படையில் ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் நடப்பதற்கு முன்பு அப்படி ஒரு ஒப்பந்தம் போடப்படவில்லை. தேர்தல் வெற்றிக்காக ஒரு டீம் அமைத்து உள்ளூர் கட்சிக்காரர்கள் ஒரு புரிதலுடன் கடுமையாக உழைத்து, பெரும் பணத்தையும் செலவழித்து வென்றார்கள். அவர்களின் பல்லாண்டு கனவுகளை அழிக்கும் வண்ணம் தன்னிச்சையாக கட்சித் தலைமை ஒரு முடிவெடுத்து வெற்றி பெற்றவர்கள் தங்கள் மகுடங்களை நான் சொல்வொருக்கு விட்டுத்தர வேண்டும் என்பது மிகப் பெரிய சர்வாதிகாரமல்லவா?

அப்படி அதிகாரத்தை விட்டுத்தருமளவுக்கு அங்கு கூட்டணிக் கட்சிகளுக்கு பலம் இருக்க வேண்டுமல்லவா? ”வெறும் ஒன்றோ, இரண்டோ தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள கூட்டணி உறுப்பினருக்கு தலைவர் பதவியை தா” என்பதை எப்படி ஏற்க முடியும்?

2006 ல் வெறும் 98 இடங்களை பெற்ற திமுக, காங்கிரஸ் தயவோடு தான் ஆட்சி அமைத்தது! ஆனால், இங்குள்ள காங்கிரஸார் கூட்டணி மந்திரி சபைக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்த போதும் அதை ஏன் திமுக தலைமையால் ஏற்க முடியவில்லை. நியாயமாக பார்த்தால், காங்கிரஸ் தயவில் ஆட்சி செய்த காரணத்தால் ஆட்சியில் பங்கு தந்திருக்க வேண்டுமே! அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளும் மன நிலை உங்களுக்கே இல்லையே! தன்னிடம் இல்லாத மனப்பக்குவத்தை ஒரு தலைமை அடிமட்ட நிர்வாகிகளிடம் எதிர்பார்க்கலாமா? என்பதை திமுக தலைமை சீர்தூக்கி பார்க்க வேண்டும். ஒற்றை உறுப்பினராக வெற்றி பெற்று வந்த ஒரு கட்சியால் ஐந்தாண்டுகள் எப்படி முழு ஒத்துழைப்புடன் உள்ளாட்சியை கொண்டு போக முடியும்?

இது பொறுப்புக்கு வருபவருக்கும் சிக்கல், மற்றவர்களுக்கும் சிக்கல். எனவே, எளியவர்களிடம் தன் அதிகாரத்தை வலிந்து செலுத்துவதை திமுக தலைமை கைவிட வேண்டும்!

அத்துடன் ஆட்சிக்கு வந்த இந்த பத்து மாதங்களில் அடுத்த கட்சியில் இருந்து ஆட்களை தூக்கியும், புதிதாக வந்தவர்களுக்கு பொருளாதார பலம் பார்த்து வாய்ப்பு தந்ததுமான தப்புகளை திமுக தலைமை தொடர்ந்து செய்து வந்தது! அதன் விளைவு தான் இன்று அடிமட்டம் வரை எதிரொலிக்கிறது.

சில சின்ன உதாரணங்களை சொல்ல வேண்டும் என்றால், பண்ரூட்டி நகராட்சியில் அதிமுக உதவியோடு திமுக, தலைவர் பதவியை கைப்பற்றுகிறது. குமாரபாளையம் பேரூராட்சியில் ஒரு சுயேட்சை திமுக, அதிமுக..என பலரின் ஆதரவோடு வெற்றி பெறுகிறார். திமுக தலைமையால் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டவர் தோல்வி காணுகிறார்! உதயேந்திரம் பேரூராட்சியில் திமுக அடையாளத்தோடு வெற்றி பெற்றவர் அதிமுகவில் இணைந்து பேரூராட்சித் தலைவருக்கு போட்டியிட்டார்! நாகர்கோவில் மாநகராட்சியில் வெறும் 11 இடங்கள் கொண்ட பாஜக மேயர் தேர்தலில் 24 ஓட்டுகளை பெற்றது. காங்கிரஸ், திமுக ஓட்டுகள் சில பாஜகவிற்கு விழுந்துள்ளன. குழித்துறையில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் என மூன்று கட்சிகளும் தனித்தே களம் கண்டுள்ளன. வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் பாஜகவுடன் கைகோர்க்கிறார்!

அரியலூர், பட்டுக் கோட்டை, திருமங்கலம், பண்ரூட்டி, வால்பாறை போன்ற இடங்களில் தேர்தலை தள்ளி வைத்துள்ளனர். புதுக் கோட்டை அன்னவாசல் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 இடங்களில் அதிமுக 8 வென்றுள்ளது. சுயேட்சை ஆதரவுடன் 9  இடங்கள் பெற்று பதவி ஏற்க உயர் நீதிமன்றம் தலையிட்டு பாதுகாப்பு கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. அந்த அளவுக்கு திமுகவினர் ரகளை செய்துள்ளனர்.

மதுரையில் மேயர் பதவிற்பு நிகழ்வை அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் புறக்கணித்துள்ளனர். பி.டி.ஆர்.தியாகராஜன் மட்டுமே பங்கு பெற்றுள்ளார். அதிரடியாக ஒரு தலைமையை மேலிருந்து திணிப்பது அதிருப்திக்கு தான் வழி சமைக்கும். ஆரோக்கியமான போட்டிக்கு வாய்ப்பளிக்காததன் விளைவே இது! சென்னைக்கு யாருக்கும் அறிமுகமில்லாத- அனுபவமும் இல்லாத – பொதுச் சேவையில் தொடர்பில்லாத – 28 வயது இளம் பெண்ணுக்கு மேயர் பதவி தரப்பட்டுள்ளது.

உள்ளாட்சிகளில் அந்தந்த பகுதியில் தங்களுக்காக சேவையாற்றக் கூடிய நபர்களை அடையாளம் கண்டு தேர்ந்தெடுக்க வேண்டியது மக்களே தவிர, அரசியல் தலைமைகள் அல்ல. உள்ளாட்சியில் அவர்கள் மூக்கை நுழைக்கவே கூடாது! தன் கட்சியிலேயே கூட இன்னார் தான் போட்டியிட வேண்டும், இன்னார் போட்டியிடக் கூடாது எனக் கூறாமல் யார் வேண்டுமானாலும் போட்டியிட்டுக் கொள்ளுங்கள்! மக்கள் யாரை அங்கீகரிக்கிறார்களோ அவர்களை கட்சி அங்கீகரித்துக் கொள்ளும் என்று சொல்லலாமே!

மத்தியில் உள்ள ஒன்றிய அரசு மாநில உரிமைகளை பறிக்கக் கூடாது எனக் கூறும் மாநில கட்சிகள் உள்ளாட்சிகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதில்லை. இது தான் நமது ஜனநாயகத்தின் லட்சணமாக உள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் கூட ஆளும் கட்சியுடன் ஒட்டிக் கொண்டு அதிகார அரசியலில் பங்கு என்ற பெயரில் பிச்சை கேட்கும் கூட்டணிக் கட்சிகள் பொதுத் தளத்தில் தங்கள் சொந்த அடையாளத்தை தொலைத்து விடுகின்றனர். பொது வாழ்க்கைக்கான அடித்தளத்தையே இழந்தாலும், இவர்களுக்கு அதிகார போதை மட்டும் அடங்குவதில்லை. தங்களுக்கு அடிப்படை பலமில்லாத இடங்களில் தலைமைக்கு ஆசைப்படுவது அறமாகாது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time