சொர்க்கலோகம் என்பது இது தானா? என்று மிரளக்கூடிய சகல ஆடம்பர வசதிகளுடன் சமூகத்தின் பெரிய கோடீஸ்வரர்கள்,செல்வாக்கானவர்களைக் கொண்டது ஜிம்கானா கிளப்! ‘எத்தனை பெரிய மனிதர்களுக்கு எத்தனை சிறிய மனம்..!’ என்கிற ரீதியில், இங்கு தொழிலாளர்கள் படும்பாட்டைக் கேட்டால்…!
நீதியரசர் அரிபரந்தாமன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து சென்ற ஒரே காரணத்திற்காக இந்த கிளப் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போதுதான் முதன்முதலாக “ஜிம்கானா கிளப்” பெரிய அளவில் வெளிச்சத்திற்கு வந்தது. தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்தால்.. விரட்டுவீர்களோ..என தமிழகமே கொதித்து எழுந்தது.
நீதியரசர் அவமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து , வேட்டி சட்டை அணிந்து கொண்டு வழக்கறிஞர்கள் ஜிம்கானா கிளப் வாசலில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த சமயத்தில் தான் தமிழக அரசு ஜிம்கானா கிளப் நிர்வாகத்தின் தலையில் ஒரு குட்டு வைத்து, “மேனா மினுக்கி” விதிமுறைகளை அகற்றும்படி அறிவுறுத்தியது.
வேட்டி சட்டை அணிந்து கொண்டு அந்த கிளப்பிற்குள் செல்லலாம் என்ற நிலைமையும் அங்கு உருவாகியது.மிகப் பெரிய கோடீஸ்வரர்கள், விஐ.பிக்கள், தொழில் அதிபர்கள் உயர் அதிகாரிகளை உறுப்பினர்களாக கொண்ட அந்த கிளப் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்காதது மற்றும் தற்காலிக தொழிலாளர்களாக பலரை அடிமாட்டு சம்பளத்திற்கு வேலை வாங்குவது ,,போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் அறவே நிறுத்தப்பட்டது. அது முதல் பிரச்சினை அதிகரித்து தற்போது இருதரப்புக்கும் உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.ஜிம்கானா கிளப் ஊழியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்த நிலையில், சமீபத்தில் கோட்டை நோக்கி பேரணி நடத்தினர்.
இப்பிரச்சினை தொடர்பாக, இடது தொழிற்சங்க மையத்துடன் இணைப்பு பெற்ற, மதராஸ் ஜிம்கானா கிளப் ஸ்டாப் அண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் இணைச்செயலாளர் வினோத்குமார் நம்முடைய “அறம்” இதழுக்கு அளித்த பேட்டி:
” 1884 ஆம் ஆண்டில் ஜிப்கானா கிளப்- ஐ ஆங்கிலேய பிரபுக்கள் சிலர் உருவாக்கினர். உயர் அந்தஸ்தில் இருந்த இந்தியர்கள் சிலரும் இதில் இருந்தனர். அப்போதில் இருந்து இப்போது வரை இந்த இடம் ராணுவத்திற்கு சொந்தமானது ஆகும். மனமகிழ் மன்றமாக பயன்படுத்தும் நோக்கத்துடன் இதை தொடங்கியுள்ளார்கள். நீச்சல் குளம், டென்னிஸ் ,கால்ப் விளையாட்டு மைதானம், உடற்பயிற்சிமையம், உணவுக் கூடம், சீட்டு விளையாடுமிடம் மது அருந்துமிடம் உள்ளிட்ட வசதிகள் இங்கு உள்ளன.
தற்போது நான்காயிரத்து ஐநூறு உறுப்பினர்கள் உள்ளனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அரசு ,தனியார் உயர் அதிகாரிகள் , பெரும் செல்வந்தர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். உயர் அதிகாரியான அரசு தொழிலாளர் நலத்துறை செயலரும் இங்கு உறுப்பினர் தான். இங்கே, செல்வந்தர்களிடம் அவர் பெறும் சலுகைகளுக்காக தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்க துணை போகிறார் அவர்!
நிரந்தர உறுப்பினராக இங்கு சேருவோர் ரூ 15 லட்சம் செலுத்த வேண்டும். ரூ 3 லட்சம் செலுத்தினால் இரண்டு ஆண்டுக்கு மட்டும் உறுப்பினராக இருக்க அனுமதிக்கப்படுவர். தொடர்ந்து நிர்வாக கமிட்டி அனுமதித்தால் உரிய தொகை செலுத்தி மேலும் தொடரலாம்.
குடும்பம் குடும்பமாக வந்து விளையாடி, மகிழ்ச்சியுடன் பொழுதை கழிப்பதற்கு இந்த அருமையான இடம் பயன்படுகிறது. இதில் உறுப்பினராக இருப்பதை பெரும் கௌரவமாக கருதுகின்றனர்
1500 பேர் உறுப்பினராக இருந்தபோது 400 பணியாளர்கள் இங்கு பணி செய்து இருக்கிறார்கள். 4500 உறுப்பினர்கள் இருக்கும் இப்போது வெறும் 200 பேர் மட்டுமே இருக்கிறோம். இதிலும் 38 பேர் தற்காலிக பணியாளர்கள்.
தற்காலிக பணியாளர்கள் அனைவரும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இங்கு பணிபுரிபவர்கள். அரசு விதிப்படி இவர்களை நிரந்தரமாக ஆக்கி இருக்க வேண்டும். ஆனால் ஆக்கவில்லை.
தற்காலிக ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரூ 6 ஆயிரம் ஆகும். இவர்கள் சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை காலங்களிலும் வேலைக்கு வந்தாக வேண்டும். வரா விட்டால் அன்றைய தினம் சம்பளம் கட்! நிரந்தர ஊழியராக நீண்ட காலம் வேலை பார்க்கும் ஒருவருக்கு அதிகபட்சம் 30 ஆயிரம் ஊதியம்.
2020 மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அந்த மாதமும் ஏப்ரல் மாதமும் எங்களுக்கு சம்பளம் வழங்கினார்கள். தொடர்ந்து மே முதல் செப்டம்பர் மாதம் வரை 50% மட்டுமே சம்பளமாக கிடைத்தது.
திடீரென சம்பளம் பாதி ஆனதாலேயே நாங்கள் பெரும் அவதிப் பட்டோம். இந்த நிலையில் 2020 அக்டோபர் முதல் 2021 பிப்ரவரி வரை சம்பளமே இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
ஜிம்கானா கிளப் நிர்வாகத்திடம் பணம் இல்லை என்றால் பரவாயில்லை. பல கோடி ரூபாய் வைப்புத்தொகை உள்ளது. பணம் வைத்துக் கொண்டு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் தொழிலாளர்களான எங்கள் வயிற்றில் அடித்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சம்பளம் கேட்டு குரல் கொடுத்ததற்காக 2020 ஆண்டு நவம்பர் மாதம் 56 ஊழியர்களை “டிஸ்மிஸ்” செய்து விட்டனர்.
இப்பிரச்சனை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. நீதிமன்ற தீர்ப்புவரும்வரை ,10(1),10(b) விதிப்படி டிஸ்மிஸ் செய்யப்பட்ட 56 பேரை வேலைக்கு சேர்த்துக் கொண்டு முன்பிருந்த சுமூக சூழலுக்கு இருதரப்பினரும் திரும்பி இணக்கத்துடன் செயல்படுமாறு கூடுதல் ஆணையர் அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து 56 பேரும் பணிக்கு திரும்பினர். ஆயினும், நிர்வாகம் ,” வருமானம் இல்லை என்றுகூறி 2021 ஜூன் வரை முழு சம்பளம் எங்களுக்கு வழங்காமல் குறைத்தே தந்தனர்.
இந்த நிலையில் 5.03. 2022 அன்று தொழிலாளர் நலத் துறை கூடுதல் ஆணையர் உமாதேவி முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையை தொடர்ந்து எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்” என்றார் வினோத் குமார்.

இந்த பிரச்சனை தொடர்பாக ,தொடர்ந்து பதின்மூன்று நாட்கள் தனிநபர் உண்ணாவிரதம் இருந்தவரும் 200 தொழிலாளர்களுக்கும் நீதி கேட்டு அவர்களுக்குத் தலைமை தாங்கி கோட்டை நோக்கிஅழைத்துச்சென்றவருமான சங்கத் தலைவரும் வழக்கறிஞருமான கு. பாரதியிடம் பேசினோம்.
அவர் நம்மிடம் தெரிவித்த கருத்து:
” தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இதுவரை எத்தனையோ சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைகள் நடந்து உள்ளன. முதல்தடவையாக விதி 10(b) இன் கீழ் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.
Also read
இதிலிருந்து நியாயம் யார் பக்கம் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.
ஒரு பக்கம் பெரும் சக்தி படைத்தவர்களும் இன்னொரு பக்கம் பின்தங்கிய ஒடுக்கப்பட்ட தலித் தொழிலாளர்களும் களத்தில் உள்ளார்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு விரைவில் மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்யவுள்ளோம்” என்றார் கு.பாரதி.
தாங்கள் மகிழ்ச்சியில் திளைப்பதற்காக உருவாக்கப்பட்ட இடத்தில், அதற்கு அடித்தளமாகத் திகழும் அங்குள்ள உழைப்பாளிகளை தொடர்ந்து துன்பத்தில் ஆழ்த்தும் இந்த பெரிய மனிதர்கள் மனங்களில் ஒரு மாற்றம் வாராதோ?
-மாயோன்.
20 Comments