எஸ்.கண்ணப்பன், சேத்தியாதோப்பு, கடலூர்.
கூட்டணி தர்மத்தை காப்பாற்றுவதில் முதல்வர் முன்னிலையில் உள்ளார் என கூட்டணிக் கட்சிகள் புகழ்ந்து தள்ளுகிறார்களே?
கூட்டணிக்கு மட்டும் தான் தர்மம் உள்ளதா?
உள்ளாட்சியில் வெற்றி பெற்று வந்தவர்களுக்கு தங்கள் ஊருக்கான தலைவரை தாங்களே தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை பறிப்பது தர்மமா? மேலிடத்து அதிகாரத்தின் மூலம் உள்ளாட்சிகளில் செல்வாக்கில்லாத இடங்களில் தங்கள் கட்சிக்கான தலைமையை வலிந்து திணிக்கும் கூட்டணித் தலைவர்களுக்கு தர்மத்தின் பொருள் தெரியுமா? எளிய கட்சிக்காரனின் உரிமையை பறிப்பது தர்மமா?
அ.அறிவழகன், மயிலாடுதுறை
நீட் தேர்வால் தான் வெளிநாடுகளுக்கு மாணவர்கள் படிக்க சென்றார்களாமே?
நானும் நீட் எதிர்ப்பாளன் தான்! அது வேறு விஷயம்! நீட் வருவதற்கு முன்பிருந்தே மாணவர்கள் மருத்துவக் கல்விக்கு வெளிநாடு செல்கிறார்கள்! இங்கு மருத்துவ கல்விக்கு தனியார் கல்லூரிகள் செய்யும் தீவட்டிக் கொள்ளையை மறைத்து நீட்டி முழக்கி நீட்டை பயன்படுத்த வேண்டாமே!
வேல்முருகன், சுங்குவார் சத்திரம்,காஞ்சிபுரம்
வலிமை மூவி எப்படி?
சதுரங்க வேட்டை தொடங்கி நேர் கொண்ட பார்வை வரை வெளிப்பட்ட புத்திசாலி இயக்குனர் வினோத், இதில் காணாமல் போய்விட்டார்! இது போன்ற குற்ற சம்பவங்களை குறித்து படமெடுக்கும் போது, அதிலிருந்து விழிப்புணர்வு பெற்று விலகி நிற்கும் மன வலிமையை அந்தப் படம் பார்வையாளர்களுக்கு வழங்க வேண்டும்! ஆனால்,படத்தில் அஜித்தின் பைக் சாகாஸ வலிமை தான் பிரதானப்படுத்தப்பட்டுள்ளது.
க.அப்துல் நாசர், ஹைதராபாத்
உங்களில் ஒருவன் நூல் மூலம் வெற்றிகரமான எழுத்தாளராகிவிட்டாரா ஸ்டாலின்..?
ஒரு எழுத்தாளரின் எழுதிய சுயசரிதை நூலின் வெற்றி என்பது சம்பந்தப்பட்டவர் எப்படி தன்னை மனம் திறந்து உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தி உள்ளார் என்பதில் உள்ளது! அந்த வகையில் இந்த நூல் வெற்றி பெற்றதாக சொல்வதற்கில்லை.
மு.கருப்பசாமி, அருப்புக் கோட்டை
தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குகளில் பல லட்சம் நெல் மூட்டைகள் வீணானதாக அடிக்கடி செய்திகள் வந்தவண்ணம் உள்ளதே?
இந்த 21 ஆம் நவீன நூற்றாண்டிலும் உற்பத்தி செய்யப்பட்ட அரிசியை பாதுகாக்க முடியாத அரசாங்கங்களை எப்படி புரிந்து கொள்வது என குழம்பி தவிக்கிறேன். தமிழகத்தின் 66 திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்காட்டும், கட்டிடங்கள் உள்ள நெல் சேமிப்பு கிடங்காகட்டும் ஆண்டுதோறும் பல லட்சம் டன்கள் நெல் பாதுகாப்பின்றி வீணானவண்ணம் உள்ளது. நம் வாழ்க்கைக்கு ஆதாரமான அன்னத்தை பொறுப்பின்றி அழியவிடுவது நல்லாட்சிக்கு அழகல்ல! இது சகிக்கமுடியாத கிரிமினல் குற்றமாகும்!
தேவைக்கு மீறிய உற்பத்தியை மாற்றி அமைப்பது ஒரு புறமும், உற்பத்தியான நெல்லை கண்ணும், கருத்துமாக காப்பாற்றுவது மறுபுறமுமாக இது அணுகப்பட வேண்டும்.
எஸ்.கிருஷ்ணவேணி, மடிப்பாக்கம்,சென்னை
இதுக்கு பதில் சொல்லுங்க? 2021 ல் தமிழ்நாட்டில் மொத்தம் 55 ஆயிரத்து சொச்சம் சாலை விபத்துகளில் மொத்தம் 14,912 பேர் இறந்துள்ளார்களாம்! என்னென்ன காரணங்கள்?
இதற்கான காரணங்கள் பல இந்த செய்தியிலேயே சொல்லப்பட்டுள்ளது. அதில் விடுபட்டது என்னவென்றால், இந்த விபத்துகளில் எத்தனை பேர் மது அருந்தி வாகனங்களை ஓட்டினார்கள் என்ற தகவல்! அதை நீங்க டாஸ்மாக் நடத்தும் அரசாங்கத்துகிட்ட பதில் கேளுங்க!
ஆர்.ராஜசேகர், தண்டையார் பேட்டை, சென்னை
நடந்து முடிந்த புத்தக கண்காட்சியில் கூட்டம் அலைமோதியதையும், விற்பனை தூள் கிளப்பியதும் பார்த்தீர்களா..?
பார்த்தேன்!~ ஒரு வகையில் வாசிப்பு பழக்கம் வலிமையாகி வருவது ஆரோக்கியமே! அதே சமயம் அதீத புத்தக வாசிப்பால் சுயபுத்தி பின்னுக்கு தள்ளப்படக் கூடாது என்றும் தோன்றியது. சக மனிதர்களையும், சமூகத்தையும் இன்னும் சற்று ஆழமாக புரிந்து கொள்ள உதவும் புத்தக வாசிப்பு அவசியம்! அதே சமயம் வாசிப்பால் நம் சுயத்தை இழக்காத வண்ணம் இருக்க பழக வேண்டும்.
எம்.சத்தீஸ்,கூடுவாஞ்சேரி,செங்கல்பட்டு
எடப்பாடி மீது சசிகலாவிற்கு கடும் கோபம் இருக்கும் தானே?
வாஸ்த்தவம் தான்! ஆனால், அதைவிட பன்னீர் மீது சற்று கூடுதலாகவே கோபம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. எடப்பாடியுடனான அதிகாரச் சண்டைக்கு பன்னீர் அவ்வப்போது தற்காப்பு ஆயுதமாக தன்னைப் பயன்படுத்திக் கொண்டு கீழே போட்டுவிடுகிறார் என்பது சசிகலாவிற்கு எத்தகைய வேதனையை தந்து கொண்டிருக்கும் என்பதை கற்பனை செய்யவும் முடியவில்லை. வாய்ப்பு கிடைத்தால் சசிகலா முதலில் ஆப்பு வைக்கும் ஆளாக சுயநலத்தின் உச்சமாக பவர்கேம் ஆடும் பன்னீராகத் தான் இருக்க முடியும்!
ஆ.தணிகாச்சலம்,திருக்கோவிலூர்,விழுப்புரம்
கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான – சீட்டாட்டம், குடி போன்றவற்றுக்கு பேர் போன – வாடகை பாக்கிக்காக மூடப்பட்ட – பெரிய மனிதர்களின் மைலாப்பூர் கிளப்பை திறக்கும்படி உயர் நீதிமன்றம் கூறியுள்ளதே?
கோர்ட்டுக்கு செலவழித்து வீறாப்பு காட்டுபவர்கள் கோயிலுக்கு உரியதை கொடுக்க வேண்டியது தானே! சிவன் சொத்து குல நாசம் என்பார்கள்! பெரும் கோடீஸ்வரர்களை வாடகையை முறையாக கட்டும்படி சொல்லி இருக்கலாம் நீதிமன்றம்! அவர்களிடம் பணத்திற்கா பஞ்சம்?
எல்.ஞானசேகரன், ஈரோடு
கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகள் உறுதிபடுத்தப்பட்டு உள்ளனரே?
சற்றே காலதாமதமான நீதி. எனினும் ஜாதி அமைப்புகள் இந்த கொலைகாரர்களுக்கு தியாகிபட்டம் கொடுக்குமே என்ற பதட்டம் வருகிறது.
மு.ரத்தினவேல்,விருதாச்சலம்
உக்ரைன் தொடர்பாக அறம் இணைய இதழில் வெளிவரும் கட்டுரைகள் தீவிர ரஷ்ய ஆதரவு நிலைப்பாடாக உள்ளதே?
ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் விரித்த வலையில் விழுந்து அதற்கான விளைவுகளை உக்ரைன் அனுபவிக்கிறது! ரஷ்யா தொடுத்துள்ள போர் ஒரு தற்காப்புக்கான தேவை என்ற நியாயத்தை ஏற்கலாம் என்றாலும், ரஷ்ய தன் பெரியண்ணன் தோரணையை கைவிட்டு, தன் இளைய சகோதரன் உக்ரேனை அன்பால் அரவணைத்திருந்தால் அது அந்த மாற்று வழியை தேடி இருக்காது என்றும் எண்ணத் தோன்றுகிறது.
ஆர்.ரமேஷ், பெங்களூர்
உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்பதில் தமிழக அரசு அரசியல் ஆதாயம் தேடுகிறது என்கிறாரே அண்ணாமலை?
உக்ரைனில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்களை மோடிக்கு ஆதரவாக கோஷம் போடச் சொன்னது யார் தமிழக அரசா? மத்திய அரசு அதிகாரிகளா?
பாண்டித்துரை, அரசரடி, மதுரை
மைக்கேல்பட்டி மாணவி விவகாரத்தில் தேசிய குழந்தைகள் ஆணைய அப்சர்வேஷனையும், பரிந்துரைகளையும் கவனித்தீர்களா?
ஆம். அதில் உடல் நிலை சரியில்லாத மாணவிக்கு விடுதி நிர்வாகம் உரிய சிகிச்சை வழங்காததும், அதற்கு காரணமான வார்டனை உரிய முறையில் விசாரித்து தெளிவான ரிப்போர்ட் தராத காவல்துறையையும் கண்டித்துள்ளது. இதில் நூறுசதவிகிதம் உடன்படுகிறேன். ஒரு சம்பளமில்லாத வேலையாளாக உழைப்பு சுரண்டலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு குழந்தை சுகவீனம் அடையும் போது அந்த குழந்தைக்கு சிகிச்சை தருவதற்கு அக்கறை காட்டாத விடுதி நிர்வாகம் தண்டிக்கப்பட வேண்டியதே! அதே சமயம் இந்த காரணத்திற்காக அந்த விடுதியை மூடச் சொல்லி பரிந்துரைப்பதை ஏற்க இயலாது.
Also read
எஸ்.கோபிநாத், ஆத்தூர், சேலம்
தேசிய பங்குசந்தை விவகாரத்தில் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு முன் ஜாமீன் நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டு உள்ளதே?
அப்படியும் கூட பாஜக அரசு இன்னும் கைது செய்யாமல் அவரை அடைகாக்கிறதே! பல லட்சம் கோடி ஊழலுக்கு துணை போன சித்ரா குறித்த உண்மைகள் வெளிவரவே ஐந்தாண்டுகள் காக்க வேண்டியிருந்தது! இதற்கு இன்னும் எத்தனை நாளோ..?
குறிப்பு;
https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8
கேள்வி கேட்க விரும்புபவர்கள், இந்த லின்கில் சொடுக்கி, உங்கள் கேள்வியை சுலபமாக பதிவு செய்யலாம்.
1 Comment