ஆயுர்வேதத்திற்கு அரியணை! சித்த மருத்துவத்திற்கு சிறை!

மருத்துவர் விஜய் விக்ரமன்

ஒரே இந்தியா! ஒரே பாரம்பரிய மருத்துவம் என்கிற ரீதியில் ஆயூர்வேதத்தை தான் ஆதரிப்போம். சித்தா தேவையில்லை என்கிறது மத்திய அரசு! நீட் தடை மசோதாவை போலவே, சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தையும் முடக்கி வைத்துள்ளார் கவர்னர்! சித்த மருத்துவத்தை சிதைத்து, சமஸ்கிருத ஆயூர்வேதமே சகலமும் என நிறுவ துடிக்கிறார்கள்!

ஒரே இந்தியா! ஒரே பாரம்பரிய மருத்துவம் என்பது என்ன?

இந்தியா முழுவதையும் ஒற்றை பண்பாட்டில் அடக்க முயலும் ஒன்றிய அரசு இந்திய முழுமைக்குமான ஒற்றை மருத்துவமாக ஆயுர்வேதத்தை முன்மொழிகிறது.

சிக்கல் இங்குதான் எழுகிறது தமிழ்நாட்டைத் தவிர அனைத்து தேசிய இனங்களும் தெரிந்தோ, தெரியாமலோ ஆயுர்வேதத்தை ஏற்றுக்கொள்ளும்போது தமிழ்நாடு அதற்கு நேர் எதிராக மக்கள் மொழியில் உள்ள மருத்துவ   அறிவான சித்த மருத்துவத்தை முன்வைக்கிறது, இதை ஒன்றிய அரசும் அதன் நிறுவனங்களும் உயர் அதிகாரத்தில் உள்ளவர்களும்   விரும்புவதில்லை!

ஆயூர்வேத மருத்துவம் என தனியாக ஒன்று இல்லை. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தேசிய  இனங்களின் பாரம்பரிய மருத்துவ அறிவை திருடி ஆயுர்வேதம் என்ற பெயரின் கீழ் ஒன்றிய அரசு ஆவணப்படுத்துகிறது. அனைத்து இந்திய  அளவிலான பலவேறு இன மக்களின் இயற்கை சார்ந்த வாழ்வியலில் உருப்பெற்ற பாரம்பரிய மருத்துவ அறிவைக்  களவாடி பண்டைய வேதத்திலிருந்து பெறப்பட்டதாக நிறுவ முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு!

சமஸ்கிருத மரபில், வேதங்களின் வழியாக வந்தது ஆயூர்வேதம் என்ற புருடா வேறு! ஆயுர்வேதம்  என்பதை தற்போது நான்காவது வேதமாக முன்னிலைப் படுத்துகின்றனர். ரிக், யஜூர், சாமா, அதர்வணா இவை நான்குமே  பண்டைய வேதங்கள்!  இந்த வரிசையில்ஐந்தாவதாக ஆயுர்வேதம் என்ற மருத்துவ பொதுப் பெயர் எப்படி சேர்க்கப்படுகிறது என்று தெரியவில்லை.

தமிழ் மண்ணில் பல்லாயிரம் ஆண்டுகளாக பல சித்தர்கள்,யோகிகளால் அனுபவபூர்வ வாழ்வியலில் இருந்து வளர்த்தெடுக்கப்பட்டது சித்த மருத்துவம். பண்டைத் தமிழர்கள் ஆரோக்கியமானவர்களாகவும் வீரர்களாகவும் திகழ்ந்ததற்கு சித்தர்களின் மருத்துவமே காரணம்!

1924 நாளில் சென்னை கீழ்பாக்கத்தில் பனகல்  அரசரால் துவங்கப்பட்டது, school of India medicine  என்ற சித்தா கல்லூரி! இதுவே  பின் 1964 ஆம் ஆண்டு  பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டது. ஆக, தமிழ் நாட்டில் சித்த மருத்துவ கல்லூரி  இன்றுடன் 98 ஆண்டுகள் முடிவடைகிறது.

100 ஆண்டுகளை நெருங்கும் நவீன சித்த மருத்துவத்திற்கு  என்று தனி பல்கலைக்கழகம் வேண்டும், கொரானா..போன்ற பேரிடர் காலங்களில் தக்க சமயத்தில் உதவிய சித்த மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்த உயர் ஆய்வுத் துறைகள் அதில் வேண்டும் என்று நீண்ட காலமாக சொல்லி வருகிறோம். சித்த மருத்துவம் போதுமான ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்ற அவ நம்பிக்கை மறைவதற்கும், அதை நவீன அறிவியலாக நிறுவுவதற்கும் பல்கலைக் கழகம் உள்ளிட்ட உயர் நிறுவனம் நிச்சயம் தேவை! இதை வலியுறுத்தியே மதுரை உயர்நீதிமன்றத்தில் 2014 ல் வழக்கு  தொடர்ந்து,  வெற்றியும் பெற்றோம்!

சித்த மருத்துவ பல்கலைக் கழகம் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. முந்தைய   ஆட்சியில் தீர்ப்பு கிடப்பில் போடப்பட்டது. அதே காலகட்டத்தில்ஒன்றிய பாஜக அரசின் நன்மதிப்பை பெற செங்கல்பட்டு அருகே 80 ஏக்கரில் 50 கோடி ரூபாய் செலவில் International yoga Centre அதிமுக ஆட்சியில் நிறுவப்பட்டது!

திமுக ஆட்சிக்கு வந்து கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட சித்த மருத்துவ பல்கலைக்கழகம் ஓராண்டு மேலாகியும் அமைய பெறுவதில் கால தாமதம் ஆகின்றன. ஏன் இந்த கால தாமதம் என்று விசாரித்ததில் ஆளுநர் மாளிகையில் இதற்கான கோப்புகள் பல மாதங்களாக கிடப்பில் உள்ளன, அதற்கான காரணங்களும் இதுவரை விளக்கப்படவில்லை.

சித்த மருத்துவத்தின் மீது எப்பொழுதும் ஒன்றிய அரசு நிறுவனங்களுக்கும், அதிகாரிகளுக்கும்   காழ்ப் புணர்ச்சி உள்ளது! சித்த மருத்துவத்தை அவர்கள் ஒரு திராவிட மாடல் ஆகவே பார்க்கின்றனர்.

ஆயுர்வேதத்திற் கென்று தனி பல்கலைக்கழகம் 1967  ல்  குஜராத் தில்  துவங்கப்பட்டது!  50 ஆண்டு காலங்களில் பல ஆயுர்வேத உயர் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஒன்றிய   அரசால்நிறுவப்பட்டுள்ளன!

பண்டைய சமஸ்கிருத வேதப் புத்தகங்களில் மந்திரங்கள் சடங்குகள் தாம் உள்ளன! எனவே இந்த  நிலையை மாற்ற வேண்டி காரணத்தால், சமணர்களாலும்,பெளத்தர்களாலும் பாலி மொழியில் எழுதி தொகுக்கப்பட்ட மருத்துவ பொக்கிஷங்களை சமஸ்கிருதத்திற்கு மடைமாற்றம் செய்தனர்.

ஆக, தற்போதுள்ள இந்த சமஸ்கிருத மருத்துவ நூல்கள் அனைத்தும் சமணர் பௌத்தர்களால் பாலி மொழியில் தொகுக்கப் பட்டும், ஆங்காங்கே மக்கள்  வழக்காடு மொழிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.. பிற்காலத்தில்  பௌத்தத்தின் வீழ்ச்சிக்குப் பின் இவை வேகமாக சமஸ்கிருதத்திற்கு மொழிப் மாற்றப்பட்டன. இந்த மொழிமாற்றம் செய்யப்பட்ட சமஸ்கிருத சுவடிகளை தான் அவர்கள் வேத காலத்திலிருந்து தாங்கள் தொகுத்து வந்ததாக கூறுகின்றார்கள்! ஆயுர் வேதத்தில் உள்ள சமண பௌத்த தொடர்புகளை 100% மறைத்து  வேதம்- சமஸ்கிருதம்- வேதகால அறிவியல் என்ற  கருத்தியலை முன்வைக்கின்றனர்.

ஆயுர்வேத மருத்துவ வரலாற்றை எழுதும்போது தன்வந்திரி பகவான் பாற்கடலை கடைந்தபோது வெளிவந்து தந்ததாக கூறுகின்றனர்! தன்வந்திரி பகவான் என்பது கற்பனை கதாபாத்திரம்! தொலைக்காட்சிகளில் வரும் கோல்கேட் பற்பசை விளம்பரத்தில் பூணூல் அணிந்த ஒருவர் சமஸ்கிருத புத்தகங்களை புரட்டி அதிலிருந்து மருத்துவ குறிப்புகளை எடுத்து பற்பசை செய்தது அதை அந்த சாமானிய பெண் வாங்குவதுபோல் அமைக்கப்பட்டிருக்கும். அதாவது வேத சக்தியால் உருவாக்கப்பட்ட பற்பசையாம்!

சித்த மருத்துவ பல்கலைக்கழகம் ஒரு திராவிட மாடலா?

இந்தியா முழுமைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து சமஸ்கிருத ஆயுர்வேத யோகா அறிவியலை வளர்த்தெடுக்க ஆயுஷ் அமைச்சகம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இவ் வேளையில் சித்த மருத்துவம் தனி பல்கலைக்கழகமாக உருவாவதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சித்த மருத்துவத்தை ஆயுர்வேதத்தின் ஒரு   கிளையாகவே மாற்ற விரும்புகின்றனர் அல்லது தமிழ் ஆயுர்வேதம்   என்று கூறுகின்றனர்.  branch of Ayurveda \Tamil Ayurveda.   இந்நிலையில் சித்த மருத்துவத்திற்கு என்று தனியான   மருத்துவ பல்கலைக்கழகத்தை அவர்கள் ஒரு திராவிட மாடலாகவே பார்க்கின்றனர்.

அவர்களுக்கு திராவிடத்தின் மீதுள்ள வெறுப்புக்கு தற்போது பலியாகியுள்ளது சித்த மருத்துவமாகும்! உண்மையில் இது முழுக்க,முழுக்க தமிழ் மாடலாகும்!

பல ஆண்டுகளாக போராடி அமைக்க முடியாத சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை இன்னும் சில ஆண்டுகளுக்கு முடக்கி வைக்கும் முயற்சியாகவே நாம் இங்கு   இதை பார்க்கவேண்டியுள்ளது.

கட்டுரையாளர்; மருத்துவர் விஜய் விக்ரமன்

சித்த மருத்துவர் மற்றும் ஆய்வாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time