இந்து, இஸ்லாமிய அகதிகளின் இன்னல்கள் குறித்த அவணப்படம்!

-பீட்டர் துரைராஜ்

இந்த ஆவணப் படம்,  தில்லி முகாம்களின் பாகிஸ்தான் இந்து அகதிகள், ரோகிங்கா முஸ்லிம் அகதிகள்  பற்றியது. இந்து அகதிகள் பசியால் துடிக்கின்றனர். சாலை ஓரங்களில் ரோகிங்கா பெண்கள் கும்பல் வன்புணர்வுக்கு ஆளாகின்றனர். இந்தியாவில் அகதிகள் சந்திக்கும் அவலங்கள் இதயத்தை நொறுங்கச் செய்கின்றன!

சென்னையின் பல்வேறு அரங்குகளிலும், கல்லூரிகளிலும்  80  ஆவணப்படங்களும், குறும் படங்களும்,  பிப்பிரவரி 21 முதல் 27 வரை நடைபெற்ற 10 வது சர்வதேச ஆவணப்பட, குறும்பட விழாவில் திரையிடப்பட்டன. அப்படி திரையிடப்பட்ட படம்தான்   ‘Footloose: A story of belonging’ (தளர்ந்த கால்களின் கதை என்று மொழிபெயர்க்கலாம் !).

இப்படம் சென்னை பெரியார் திடலில் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பார்வையாளர்களிடையே  நடைபெற்ற உரையாடலிலும் அதன் இயக்குநரான குல்ஷன் சிங் கலந்து கொண்டார்”அகதிகளைப் பற்றி எந்த ஊடகமும் பேசுவது கிடையாது. கழிவுநீர் செல்லும் பாதைகளின் ஓரங்களில், மிக அசுத்தமான சூழ்நிலையில் குடி வைக்கப்பட்டுள்ளனர் ” என்றார் இந்தப்படத்தின் இயக்குநர் குல்ஷன் சிங்.

பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் சிறுபான்மையினர்;  இந்துக்கள் அங்கு  2.1 சதம் உள்ளனர். உயர்கல்வி பெறுவதில், வேலைவாய்ப்பில், அரசு அதிகாரத்தில் இத்துக்களுக்கு எதிராக பாகிஸ்தானில் பாகுபாடு காட்டப்படுகிறது. இந்தியாவில் பாபர் மசூதி பிரச்சினையில் கலவரம் ஏற்படும் போதெல்லாம் அங்குள்ள இந்துக்களும் தாக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. இந்துப் பெண்கள் அங்கு கட்டாயமாக மத மாற்றம் செய்யப்படுவதும்  நடைபெறுகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாகவும் வருகின்றனர். கும்பமேளா போன்றவைகளில் கலந்துகொள்ள வருவதாக விசா பெற்று வந்தவர்கள் இங்கேயே தங்கிவிடுவதும் நடைபெறுகிறது. இப்படிப்பட்ட அகதிகள் தில்லியில் சில முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தில்லியில் வேறு சில முகாம்களில் ரோகிங்கா முஸ்லிம் அகதிகள் வைக்கப்பட்டுள்ளர். இவர்களின் கதையை, எதிர்பார்ப்பை, ஏமாற்றத்தை இந்த ஆவணப் படம் சொல்கிறது.

உலகெங்கும் ஏழு கோடி அகதிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், குறிப்பிட்ட அரசியல் கொள்கையைக் கடைபிடிப்பதால்  நசுக்கப்படும் மக்கள், மற்ற நாடுகளில் தஞ்சம் புகுவது சரியானதுதான். மற்ற நாடுகளில் தஞ்சம் புகுவதை,  ஐநாவின் மனித உரிமை பிரகடனம் 1948ல்  ஏற்றுக் கொண்டுள்ளது. மொத்த அகதிகளில் கிட்டத்தட்ட 80 சத பேர் அண்டைநாடுகளுக்கு செல்கிறார்கள். மியான்மரில் இருந்து வங்காளதேசத்திற்கு ரோகிங்கா முஸ்லிம்கள் வருகிறார்கள்; அது சிறிய நாடு  இலட்சக்கணக்கான அகதிகளைத் தாங்காது; அங்கிருந்து இந்தியா வருகிறார்கள்.

ஒன்றரை மணி நேரம் ஓடும் இந்தப் படம் பல ஆழமான கேள்விகளை ரசிகர்களிடம் எழுப்புகிறது.   “இந்தப் படத்தை நான் 2017 ல் எடுக்கத் தொடங்கினேன். ஆனால், இது முடியும்போது குடியுரிமை திருத்தச் சட்டம், அதைத் தொடர்ந்து நடந்த போராட்டம், தில்லிக் கலவரம் போன்றவைகளும் இதனோடு தொடர்புடைய சம்பவங்களாயிற்று. எனவே, அவையும் இந்தப் படத்தின் ஓர் அங்கங்களாக மாறின. யாராவது தில்லியில், இந்தியாவின் தலைநகரத்தில் கலவரம் ஏற்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு கூற முடியுமா ?” என்று கேள்வி  கேட்கிறார் குல்ஷன் சிங்.

சுங்கத்துறையில் அதிகாரியாக பணியாற்றிய நகர் சிங் என்பவர் இந்து அகதிகளை  தத்து எடுத்துக் கொள்கிறார். தனது வீடுகளை காலிசெய்துக் கொடுத்து அதில் 150 இந்து அகதிகளை தங்க வைக்கிறார். அவர்களுக்காக தில்லி காவல்துறை சிறப்பு பிரிவிடம்  பொறுப்பேற்றுக் கொள்வதாக உறுதி தருகிறார். இவர்கள் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சி ஆட்சிக் காலத்தில், வந்தவர்கள். அவர்களுக்கு இந்து மகா சபா, விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் ஆதரவளிக்கின்றன.

பாஜக அரசு ஆட்சி தங்களுக்கு வேண்டிய அனைத்தையும் தரும் என்று நம்பிக்கை வைத்திருக்கின்றனர். ஆனால் “எத்தனை வண்டிகளில் எங்களுக்கு கோதுமை வந்தது. எவ்வளவு உடை கிடைத்தது என்று பார்த்தால் போதுமான அளவு இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்”  என்கிறார் ஒரு அகதி.   “சாலை ஓரங்களில் சிறிய கடை வைத்து வியாபாரம் செய்ய காவல்துறையோ, தில்லி மாநகராட்சியோ அனுமதிப்பதில்லை” என்கிறார் லட்சுமி என்கிற மூதாட்டி. இவர் பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்து எட்டு ஆண்டுகள் ஆகின்றன. அவர்களின் குடியிருப்புகளுக்கு மின்சார வசதி கூட இல்லை.எனவே, மீண்டும் பாகிஸ்தானுக்கு செல்ல விருப்பதாக சிலர்  கூறுகின்றனர்.

“இரவு நேரங்களில் நாய் குலைக்கும் சத்தம் கேட்டால் பயமாக இருக்கும். எப்போது காவலர்கள் எங்களை இழுத்துச் செல்வார்கள் என்று தெரியாது. எனவே உயிரைப் பணயம் வைத்து இந்தியாவிற்கு வந்தோம். நான் என் வாழ்நாளில் மருத்துவமனையையும், பள்ளியையும் கண்ணால் கண்டதில்லை. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. எங்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்று நம்பித்தான் இங்கு வந்தோம். எங்கு போனாலும் அன்று இரவே இரவே முகாமிற்குத் திரும்பி் விட வேண்டும். மற்ற ரோகிங்கா அகதி முகாமிற்கு கூட எங்களால் செல்ல இயலாது ” என்கிறார் அப்துல் ஷுகுர் என்ற அகதி.

உலகிலேயே அகதிகளில், அதிக எண்ணிக்கையில் ரோகிங்கா முஸ்லிம்கள் தான் உள்ளனர். ஒரு குழியைத் தோண்டினால் 10, 20, 30, 40 என ஒரே குழியில் கொலை செய்யப்பட்டவர்களின் பிணங்கள் இருப்பதைப் பார்க்கலாம். இலட்சக்கணக்கான ரோகிங்கா முஸ்லிம்கள், புத்தமத வெறியர்களால் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், மியான்மரின் பெரும் தலைவர் ஆங் சாங் சூயி  நடைபெறுபவை “ரோகிங்கா முஸ்லிம்களுக்கு மட்டும் உரியவை அல்ல. மற்ற அனைத்துப் பொதுமக்களைப் போலத்தான் இவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்” என்று கூறுகிறார். இப்படிப் பேசிய ஆங்சாங் சூயிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது என்பது நகைப்புக்கு உரிய ஒன்றல்லவா !

இந்திய பாராளுமன்றத்தில் ” ரோகிங்கா முஸ்லிம்களை கணக்கெடுக்கச் சொல்லி மாநில அரசுகளிடம் சொல்லி இருக்கிறோம்; அவர்களது கைரேகைகளை பதிவுசெய்ய சொல்லியிருக்கிறோம். எனவே, அவர்கள் வேறு எந்த ஆவணங்களையும் இந்தியாவில் பெற இயலாது. அவர்களைப் பற்றிய விவரங்களைச் சேகரித்த பிறகு, அவர்களை மியான்மருக்கு அனுப்புவது பற்றி அந்த நாட்டு அரசுடன் பேசுவோம்” என்கிறார் ஒன்றிய அமைச்சரான ராஜ்நாத் சிங்.

ஒரு பெண்ணை வன்புணர்வு செய்து ஒரு மசூதிக்கு முன்பு போட்டுச் சென்று விட்டார்கள். இதனால் ரோகிங்கா பகுதி இசுலாமியர்கள் மீது தாக்குதல் நடைபெறும். இப்படி ஒரு கலவரமான சூழல் அங்கு நிலவுகிறது. 1982 ல் மியான்மரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம், 1824 க்கு முன்பாக அங்கு தமது மூதாதையர்கள் இருந்தார்கள் என்பதை நிரூபிப்பவர்களுக்குத் தான் குடியுரிமை என கூறுகிறது.

2018 ல் ரோகிங்கா அகதிகளின் வீடுகளை கொளுத்திவிட்டனர். இது இந்தப் படத்தில்  சொல்லப்பட்டு உள்ளது. இவர்கள் தங்கி இருந்த பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டுமென தில்லி வசந்த விகார் பகுதி  மக்கள் அரசிடம் முறையிட்ட சம்பவமும் நடந்துள்ளது.

சங்கிலியால் கால்கள் கட்டப்பட்ட மனநிலை பிறழ்ந்த இந்து அகதி, அவரது குடும்பத்தாருக்கு  சுமையல்லவா !  அதே போல சாலையோரங்களில் ரோகிங்கா முஸ்லீம் பெண்கள் கும்பல், கும்பலாக வன்புணர்வுக்கு ஆளாகின்றனர். இப்படி பாதிக்கப்பட்ட ஒரு பெண் கருவுற்றிருக்கிறார் ! இதனை எப்படி எதிர்கொள்வது ?

தில்லியில் இருந்த ஒரு இந்து அகதி முகாமில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேறிய அன்று பிறந்த ஒரு குழந்தைக்கு நாகரிதா (குடியுரிமை என்று பொருள்) எனப் பெயரிட்டுள்ளனர். அந்த அளவுக்கு புதிய குடியுரிமைச் சட்டத்தின் மேல் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை காட்சிப்படுத்தியிருக்கிறார் குல்ஷன்சிங். அகதிகளைத் தத்து எடுத்துக் கொண்ட நகர் சிங் தனது வீடுகள் முழுவதும் புத்தகங்களாக வைத்து இருக்கிறார். இந்தியாவிலிருந்து 23 சத முஸ்லிம்களுக்கு 25 சத நிலத்தைப் பிரித்துக் கொடுத்து பாகிஸ்தான் தந்து விட்டோம். எனவே இங்குள்ள முஸ்லிம்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் முறையிட்டோம். அதன் அடிப்படையில்தான் புதிய குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்கிறார் நகர் சிங்.” நீங்கள் சொல்லுவதற்கு என்ன ஆதாரம். ஒரு வலதுசாரியைப்போல படத்தை எடுத்து இருக்கிறீர்களே ? ” என்று குல்ஷன் சிங்கிடம் கேட்டதற்கு ” பாராளுமன்றத்தில் தவறான தகவல்களைத் தருகிறார்கள். நீங்கள் தரும் தரவுகளுக்கு என்ன அடிப்படை என யாரும் கேள்வி கேட்பதில்லை !பொதுமக்களிடம் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள் ? நான் இங்கு நிலவிய நிலவரங்களை பதிவு செய்துள்ளேன் ” என்றார் குல்ஷன் சிங்.

“இந்து அகதியோ, முஸ்லிம் அகதியோ அவர்களை சமமாக நடத்த வேண்டும். அவர்கள் எங்கே செல்வார்கள் ? ” என்கிறார் சக்தி பவுண்டேஷனைச் சார்ந்த மும்தாஜ் நாஸ்மி.

படத்தின் தொடக்கத்தில் மொரீஷியசில், பாகிஸ்தானில், அமெரிக்காவில் என உலகின் எந்தப் பகுதியானலும்,  இந்துக்களுக்கு பாதிப்பு  என்றால், அவர்களுக்கு இந்தியா தாய் வீடு என்று பிரச்சாரம் செய்து 2014 ல் மோடி பிரதமரானார். அதன்படி தானே குடியுரிமைச் சட்டம் வந்தது. “ஒன்றைக் கொண்டு வருவதற்கு முன்பாகவே அதுகுறித்த விவாதங்களை முன்னெடுக்கிறார்கள்”  என்பதுதான் நான் சொல்ல விரும்பும் செய்தி. பொதுமக்கள்தான் மனிதாபிமானத்தின் பக்கம் நின்று அகதிகளுக்கு ஆதரவு தர வேண்டும். அதுதான் இந்திய அரசின் குரலாக மாறும். இந்திய அரசு வெளிநாட்டு அரசுகள் மூலமாகவோ, ஐநா போன்ற அமைப்புகள் மூலமாக இவர்கள் பிரச்சினைகளைப் பேசும். அதுவரை அகதிகளுக்கு நம்பிக்கையை, கண்ணியத்தை தர வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு” என்று கூறி விவாதத்தை முடித்தார் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான குல்ஷன் சிங்.

“அவரவர் போராட்டங்கள் அவரவர்களுக்குடையவைகளாகவே இருந்து விடாமல் பிறரையும் அவற்றைப் பற்றி சிந்திக்கச் செய்வது உரிமைகள் இயக்கத்தின் பிரதான கடமைகளில் ஒன்று ” என்று மறைந்து போன மனித உரிமைப் போராளியான பேரா.கே. பாலகோபால் கூறுவார். அந்தப் பணியை இந்த ஆவணப்படம் செய்கிறது.

பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time