இது அப்பட்டமான வழிப்பறிக் கொள்ளை! யாருக்காக?

-சாவித்திரி கண்ணன்

டாஸ்மாக் என்பது அரசே நடத்தும் வழிப்பறிக் கொள்ளை மட்டுமல்ல, நூதனக் கொலை! மது என்ற பெயரில் மெல்லக் கொல்லும் விஷச் சரக்கு! பத்து ரூபாய் சரக்கை நூறு ரூபாய்க்கு விற்பது போதாது என்று இன்னும் விலையேற்றுவதா? மதுவின் உற்பத்திக்கும், விற்பனை விலைக்கும் நியாயம் வேண்டாமா?

உலகத்திலேயே இரக்கமற்ற முறையில் செய்யப்படும் வியாபாரங்களில் நம்பர் ஒன் என்ற அந்தஸ்த்தை தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் விற்னைக்கு தரலாம்! ஒரு பொருளை உற்பத்தி விலைக்கு மேல் எவ்வளவு விற்கலாம் என்பதற்கு ஒரு குறைந்தபட்ச நியாயம் கூட இல்லாமல் விலை வைத்து விற்கப்படுவது தான் டாஸ்மாக் மதுபான வகைகள்! இன்றைய தினம் சுமார் 450 வகையான தரமற்ற சரக்குகள் டாஸ்மாக்கில் விற்பனையாகின்றன!

இவை அனைத்தும் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் பினாமிகளுக்கு சொந்தமானவை! மதுபான உற்பத்தியை நல்லெணெய், கடலை எண்ணெய் உற்பத்தியைப் போல விரும்புபவர்கள் – அதற்கான தகுதிகள் வசதிகள் இருந்தாலும் – இங்கே செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. சகல மட்டங்களிலும் யாருக்கு எவ்வளவு பணம் கையூட்டுத் தர வேண்டும் என்ற கணக்கு வழக்குகளை சரியாக புரிந்து பின்பற்றக் கூடியவர்களுக்கே ஆட்சியாளர்கள் மதுபானம் தயாரிக்கும் அனுமதியை வழங்குவார்கள்! இன்றைய 11 மதுபான நிறுவனங்களில் ஏழு நிறுவனங்கள் திமுகவினர்களுக்கானதாகும்!

மதுபான கொள்கையிலும், கொள்ளையிலும் திமுக, அதிமுகவினருக்கு இடையே பெரிய வித்தியாசமில்லை. எவ்வளவு எதிர்ப்பு போராட்டங்களை பெண்கள் செய்தாலும், அரசு இயந்திரத்தைக் கொண்டு முடக்கி வியாபாரத்தை விஸ்தரிப்பார்கள்!

# மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரிஸ் – வி. கே. சசிகலா

# மோகன் ப்ருவரீஸ் – ராமசாமி உடையார் குடும்பத்திற்கானது.

# கல்ஸ் டிஸ்டிலரீஸ் – வாசுதேவன்

# கோல்டன் வாட்ஸ் – டி. ஆர். பாலு

# எலைட் டிஸ்டில்லரிஸ்  &  AM பிரவுரிஸ் – ஜெகத்ரட்சகன்

# எஸ்.என்.ஜே. டிஸ்டில்லரீஸ் – ஜெயமுருகன்

# எம்பீ டிஸ்டில்லரிகள்,அப்போல்லோ டிஸ்டிலரீஸ் – புருஷோத்தமன்

# அக்கோர்ட் பிரெவெரிஸ் அண்ட் டிஸ்டிலரீஸ் – சந்தீப் ஆனந்த் ஜெகத்ரக்ஷகன், ஸ்ரீநிஷா ஜெகத்ரக்ஷகன்

# எம்பீஸ் டிஸ்லரீஸ் காங்கிரஸ் கட்சிக்காரர் ஒருவருக்கானது

# யுனைடெட் ஸ்பிரிட்ஸ் பெங்களூர் தொழில் அதிபர் ஒருவருக்குரியது.

தரக்குறைவான சரக்கு!

இந்தியாவிலேயே மிகத் தரம் குறைந்த மதுபானங்களை தயாரிப்பவர்கள் தமிழக மதுபான ஆலைகளே! இது குறித்து ஆய்வு செய்யப்பட்ட போது பிராந்தி பாட்டிலில் ஆல்கஹாலின் அளவு  ரிப்போர்ட்டில் 46 சதவிகிதம் வி.வி என்று வந்தது. மேலும், ரிப்போர்ட்டில் படிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், குடித்தவுடன் கூடுதல் கிக் கிடைக்கும். ஆல்கஹாலின் அளவு கூடுதலாக இருப்பதால் தான் தமிழகத்தில் குடிப்பவர்கள் எல்லாம் சீக்கிரமாக உடல் நலிவுற்று மரணமடைகிறார்கள்!

ஏனெனில்,ஆல்கஹால் என்பது மனிதனைக் கொல்லும் ஸ்லோ பாய்சனாகும்! படிமங்கள் என்பவை கண்டிப்பாக இருக்கக் கூடாது. அது உடல் நலத்திற்கு மிகத் தீங்கானது. ஆனால், அவை தராளமாக இருக்கின்றன! இந்த சரக்குகளை உற்பத்தி செய்ய என்ன செலவு? இதை விற்கும் விலைக்கும், உற்பத்தி செலவுக்கும் மலைக்கும், மடுவுக்கான வித்தியாசம் நியாயமானதா? இந்த வழிப்பறிக் கொள்ளையடிக்க அரசே தலைமை ஏற்பதா?

“மதுபானங்களில் உள்ள ஆல்கஹால் அளவை சோதிப்பதற்கான ஆய்வக வசதியை ஏன் தமிழக அரசு செய்யவில்லை என்பது கவனத்திற்குரியதாகும்! குறிப்பாக, ஆல்கஹாலின் அசுத்தத்தன்மை, மற்றும் மெத்தனால் இருக்கிறதா என்பது அவசியம் சோதனைக்கு ஆளாக்கப்பட வேண்டும்.கலருக்காகச் சேர்க்கப்படும் கேரமல், ஃபிளேவர்ஸ் ஆகியவை நச்சுத் தன்மை அற்றவையா என்பதற்கும் உத்திரவாதமில்லை! மதுபானத் தயாரிப்புக்கான தண்ணீர் நல்ல குடிநீர் தானா என்பதற்கும் உத்திரவாதமில்லை!

பல வகைப்பட்ட பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் மதுபானங்கள் சற்று தரமானவை. ஆனால், தமிழகத்திலோ கரும்பில் இருந்து எடுக்கப்படும் ‘இ.என்.ஏ ஆல்கஹால்’ மூலம் தயாரிக்கப்படும் சரக்குகள்தான்  விற்கப்படுகின்றன. இது உடலுக்கு மிக கெடுதலாக இருப்பதால் தான் சரக்கு அடிக்கும் குடிமகன்கள் வேலைக்கு லாயக்கற்றவர்களாக காலப் போக்கில் மாறி குடும்பங்களுக்கு நிரந்தர சுமையாகி விடுகின்றனர். விரைவில் இறந்தும் விடுகின்றனர்.

மது என்பது ஒரு போரா?

இந்தியாவிலேயே அதிக விதவைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. போர் நடக்காமலே அதிக விதவைகளைக் கண்ட சமூகமாக தமிழகம் உள்ளது எனலாம் அல்லது மது என்ற அரக்கன் எளிய மனிதர்கள் மீது அரசு ஆதரவுடன் நடத்திய போரில் அதிக விதவைகள் கொண்ட தேசமாகிவிட்டது தமிழகம்! ஆக, செய்யும் வியாபாரத்தை நியாயமாகக் கூட செய்ய மனமில்லாதவர்களின் ஆட்சி தான் இங்கு நடக்கிறது. குடிவெறி, குடிக்கு அடிமை ஆகிய நிலைக்கு செல்பவர்கள் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். அவர்களுக்கான சிகிச்சை மையங்களை தொடங்க தொடர்ந்து கோரிக்கை வைத்தும் செவி சாய்க்க மனமில்லாத ஆட்சியாளர்கள், மதுபான உற்பத்தியாளர்கள் கொழுக்க மீண்டும் வேலையேற்றம் செய்துள்ளனர்!

“மதுபானங்களை 10 முதல் 50 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்பது, மதுபானங்களில் ரகசியமாக தண்ணீர் கலப்பது, தரமற்ற போலி மதுபானங்களை விற்பது என ஏகப்பட்ட முறைகேடுகள் டாஸ்மாக்கில் நடக்கின்றன.

குமட்டலெடுக்கும் நாத்தமுள்ள பார்கள்,  தண்ணீர் பாட்டில் தொடங்கி சைடிஸ் வரை அதிக விலைக்கு விற்பனை செய்யும் அடாவடித்தனம், உட்காரக் தகுதியற்ற மர பெஞ்ச், அழுக்கு படிந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் என நுகர்வோரை புழுவினும் கேவலமாக நடத்தும் டாஸ்மாக் பார்கள் தமிழகத்தில் சர்வ சாதாரணம்! ஒருமுறை தேனீ நகர பார் ஒன்றில் மதுபானத்தில் பல்லி கிடந்தது பெரும் பிரச்சினையாகி மக்கள் திரண்டு போராட்டம் நடத்துமளவுக்கு போனது. கோவை காரமடையில் டாஸ்மாக்கில் வாங்கிய பீரில் கரப்பான் பூச்சி கிடந்ததாக மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும் பயனில்லை. சென்னை தண்டையார்பேட்டையில் வாங்கிய சரக்கில் சிலந்தி பூச்சி மிதந்தது பரபரப்பான செய்தியானது. இவையெல்லாம் தமிழகத்தில் மதுபான உற்பத்தி எந்த தரத்தில் பொறுப்பாக தயாரிக்கப்படுகின்றன என்பதற்கான உதாரணங்களாகும்!

2020 ல் தான் விலை உயர்த்தப்பட்டது. தற்போது தேவையின்றி மது விலையை ரூ 10 லிருந்து 80 வரை உயர்த்தி உள்ளது தமிழக அரசு! மது விலையை அதிகப்படுத்தினால் குடிப்பது மட்டுப்படும் என்பது உண்மையல்ல. மாறாக ஏழைக் கூலி தொழிலாளி வீட்டுத் தரும் சொற்ப பணத்தையும் அரசு வழிப்பறி செய்து சாராய ஆலை அதிபர்களுக்கு தருகிறது என்பதே உண்மை! மதுவிற்பனையால் கிடைக்கும் பணத்தை மக்கள் நலத்திட்டங்களுக்கு தான் செலவு செய்கிறோம் என்கிறார்கள்! ஆனால், அந்தக் காரணம் சொல்லி மக்களிடம் பறிக்கப்படும் பணத்தில் சொற்ப தொகையையே மக்கள் நலதிட்டங்களுக்கு செலவழிக்கிறார்கள்! அந்தப் பணம் மக்களிடம் புழங்கினால் அவர்கள் வீட்டு குழந்தைகளின் சத்தான உணவுக்கும், கல்விக்கும் பயன்படுத்தி கவுரவமாக வாழ்வார்களே! ஆகவே, விலையேற்றம் என்பது அப்பட்டமான வழிப்பறிக் கொள்ளை. நியாயமற்ற வணிகம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time