பல வரலாற்று பாடங்கள் சொல்லும் அசாதாரண வழக்கு!

-சாவித்திரி கண்ணன்

ஜெய்பீமையே தூக்கி சாப்பிடும்படியான அசாதாரணமான சம்பவங்களைக் கொண்டது கோகுல்ராஜ் கொலை வழக்கு! சம்பந்தப்பட்ட கொடூர கொலைக் குற்றவாளி யுவராஜுக்கு பின்னணியில் தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசும், அதிகார வர்க்கமும், செல்வாக்கான சமூக கட்டமைப்பும் செய்த ஆதிக்கம் கொஞ்ச நஞ்சமல்ல!

நம்ப முடியாத சம்பவங்களும், சாகஸ காட்சிகளும், திகில் நிறைந்த வரலாறும் கொண்டது இந்த வழக்கு!

அனேகமாக யுவராஜீக்கு கோகுல்ராஜ் முதல் கொலையாக இருக்க முடியாது. இது போன்ற ஆணவக் கொலைகளுக்காகவே அந்த சமூகத்தால் மாவீரன் என்றும், எழுச்சி நாயகன் என்றும், அந்த சமூகத்தின் இதய துடிப்பாகவும் கருதப்பட்டவர் யுவராஜ் என்பதை மறுக்க இயலாது.

பொது இடங்களில் ஒரு ஆணும், பெண்ணுமாக எந்த இளம் ஜோடிகளைப் பார்த்தாலும் அவர்களை விசாரித்து கொடூர நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கொண்டவராக அவர் சார்ந்த சமூகத்து பெரிய மனிதர்களால் அங்கீகரிக்கப்பட்டவராக அவர் இருந்துள்ளார்! அதன் தொடர்ச்சியாகவே அவர் அர்த்தாரீஸ்வரம் கோவில் மலை தாழ்வாரத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கோகுல்ராஜையும், சுவாதியையும் பார்த்தவுடன் விசாரித்து கோகுல்ராஜை கடத்திச் சென்றார்! கடத்திச் சென்ற கோகுல்ராஜை உதை பின்னியெடுத்து, அவனையே காதல் தோல்வியால் தற்கொலை செய்வதாக பேசி வீடியோ எடுத்து சாவுக்கு யாரும் காரணமல்ல.. என எழுதி வாங்கி நாக்கை அறுத்து, தலையை துண்டித்து வீசி முண்டத்தை தாழ்வாரத்தில் போட்டுவிட்டு வெற்றிக் களிப்புடன் சென்றுள்ளார்!

இந்த சம்பவம் நடந்தது 2015 ஆம் ஆண்டு. இந்த ஏழாண்டுகளில் யுவராஜ் எந்த அளவுக்கு வெற்றி நாயகனாகப் பார்க்கப்பட்டு, காப்பாற்றப்பட்டார் என்பது அதிர்ச்சியளிக்கதக்கதாகும்! அதை சற்றே வரிசைப்படுத்தி நினைவு கூரலாம்;

முதலாவதாக இந்த கொலையை காவல்துறை தற்கொலையாகத் தான் பதிந்தது. ஆனால், வழக்கறிஞர் பார்த்தீபன் பிரேத பரிசோதனையை தகுந்த மருத்துவர்களைக் கொண்டு நடத்த உய்ர் நீதிமன்றத்தை நாடி தீர்ப்பு பெற்றதால், ”ரயில் தண்டவாளத்தில் நசுங்கி செத்த உடல் கிடையாது! தெளிவாக கத்தியால் தலை துண்டிக்கப்பட்டு உள்ளது, நாக்கு அறுக்கப்பட்டு உள்ளது என மருத்துவர்கள் இது கொலை தான்” என உறுதிபடுத்தினர்.

கோகுல்ராஜ் தாய் சித்ராவுடன் வலது புறமாக பார்த்தீபன்

இரண்டாவதாக இந்த வழக்கை கையாண்ட காவல்துறை அதிகாரியான டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவின் அர்ப்பணிப்பு தான் இறுதி தீர்ப்புக்கு வலு சேர்த்தது!  அவர் தான் கோவில் சி.சி.டி.வி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி வழக்கிற்கு சாட்சியமாக்கினார். கூட இருந்த சுவாதியிடம் தெளிவான வாக்குமூலம் வாங்கினார். குற்றவாளிகளை அடையாளம் காட்டி கைது செய்தார். ஆனால், யுவராஜ் தலைமறைவாகி விஷ்ணுபிரியாவை மிரட்டினார். குற்றவாளிக்கு ஆதரவாக அந்த சமூகத்து காவல்துறை அதிகாரிகள் விஷ்ணுபிரியாவை நிர்பந்தப்படுத்தினர். பல நெருக்கடிகளை உருவாக்கி கடைசியில் விஷ்ணுபிரியாவை தற்கொலை செய்ய வைத்தனர் என சொல்லப்[பட்டாலும் அதுவும் ஒரு கொலை தான்! அந்த கொலைக்கு இன்று வரை நியாயமில்லை என்றாலும் எதற்காக அவர் உயிர் பறிக்கப்பட்டதோ, அதை தகர்த்து அவர் தந்த ஆதாரத்தால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு உள்ளனர் என்பதை நாம் நன்றியுடன் நினைவு கூற வேண்டும்!

மூன்றாவதாக நாமக்கல் நீதிபதி இளவழகன்! குற்றம் செய்துவிட்டு தைரியமாக வலம் வந்து கொண்டிருந்தார் யுவராஜ்! அவர் கோர்ட்டுக்கு வரும் போதே ஒரு ஹீரோவைப் போல சட்டைக் காலரை தூக்கிவிட்டுக் கொண்டு தான் வருவார். பல நூறு பேர் அவருடன் வந்து நீதிமன்ற வளாகமே திணறும். நீதிபதி விசாரிக்கும் போது மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு ஸ்டைலாக பேசுவார். சாட்சிகளை கண்ணால் மிரட்டுவார். இதையெல்லாம் கவனித்த நீதிபதி இளவழகன், ”இந்த தெனாவட்டெல்லாம் இங்கு வேண்டாம். உங்க நடவடிக்கைகள் கேமராவில் பதிவாகியுள்ளது. அதற்கான விளைவுகளை நீங்க அனுபவிப்பீங்க” என எச்சரித்து நேர்மையாக வழக்கை கையாண்டார். இதே போல இறுதி தீர்ப்பு வழங்கிய  நீதிபதி சம்பத் குமாரும் வணங்கத்தக்கவர்.

அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர் முதலில் சரியாக இந்த வழக்கை கையாளவில்லை. எடப்பாடி ஆட்சியும், அதன் செல்வாக்கும் காவல்துறையிலும், நீதிதுறையில் கொடிகட்டி பறந்து யுவராஜுக்கு ஆதரவாக இருந்தது. இந்த நிலையில் தான் உயர் நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்று இந்த வழக்கிற்கு வருகிறார் மூத்த வழக்கறிஞர் பா.ப.மோகன்! முக்கிய சாட்சியான கோகுல்ராஜின் தோழி சுவாதியே பிறழ் சாட்சியானது மட்டுமின்றி முக்கால்வாசி சாட்சிகள் பல்டி அடித்து சோதனை ஏற்படுத்தினர். போதாக்குறைக்கு எதிர்தரப்பின் படுகில்லாடி வழக்கறிஞரான கோபால கிருஷ்ண லட்சுமணராஜ் ஏற்படுத்திய பல தடைகளை தகர்த்து முன்னேற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் பா.ப,மோகன். ஏழைத் தாய்க்கு நீதிபெற்றுத் தர அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன்,கொள்கை பிடிப்புடன் இயங்கி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ளார். ஆக, சந்துருவுக்கு இணையாக கொண்டாடப்பட வேண்டியவர் பா.ப.மோகன் என்பதில் சந்தேகமில்லை.

சாதனை வழக்கறிஞர் பா.ப.மோகன் தன் ஜூனியர்களுடன்

ஏழை என்பதால், தாழ்த்தப்பட்ட சாதி தானே, கொன்று போட்டால் கேட்க நாதியில்லை என இனி சாதி ஆதிக்க சக்திகள் நினைக்க முடியாத வண்ணம் இந்த ஆயுள் தண்டனை தீர்ப்பு ஒரு நம்பிக்கையை சமூகத்திற்கு தந்துள்ளது. தண்டிக்கப்படவே முடியாதவராக கருதப்பட்ட யுவராஜை, மிக செல்வாக்கான சாதியப் பின்புலம், அதிகாரப் பின்புலம் இருந்தாலும் கூட, நீதித் துறையிலும், காவல்துறையிலும் நல்ல இதயமுள்ளவர்கள் இருந்த காரணத்தால் தண்டிக்க முடிந்தது என்பது சமூகத்திற்கு கிடைத்துள்ள மிகவும் போற்றத்தக்க நம்பிக்கையாகும்!

அதே சமயம் இப்போதும் ஆயுள் தண்டனை பெற்றுள்ள கொலைக் குற்றவாளி யுவராஜை ஹீரோவாக கொண்டாடும் ஒரு மிகப் பெரிய கூட்டம் உள்ளது! வருங்காலத்தில் அவர் மிகப் பெரிய தியாகியாக அவர் சார்ந்த சமூகத்தால் வணங்கப்படுவார் என்ற புரிதலையும் உள்ளடக்கியே இந்த விவகாரத்தை நாம் அணுக வேண்டும். நீதிமன்ற தீர்ப்பு சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பாது. ஆகவே, சாதி ஆதிக்க மன நிலையில் உள்ளவர்களை அதிலிருந்து எப்படி பக்குவமாக மீட்பது என்ற தொலைதூர பயணம் நமக்கு காத்திருக்கிறது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time