அரவிந்த் கேஜ்ரிவால் இந்துத்துவா ஆளா?

-சாவித்திரி கண்ணன்

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் மென்மையான இந்துத்துவ போக்குள்ளவர். அடிப்படையில் ராமபக்தர்! கோவில், பக்தி ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். ”அவர் பாஜகவின் பீ டீம்! காங்கிரஸுக்கு மாற்றாக பாஜக அவரை வளர்த்தெடுக்கிறது. ஆகவே, ஒரு வகையில் ஆபத்தானவர்” என்ற குற்றச்சாட்டுகள் உண்மையா..?

சமீப காலமாக அரவிந்த் கேஜ்ரிவால் குறித்தும், ஆம் ஆத்மி ஆட்சியின் செயல்பாடுகள் குறித்தும் கடுமையான விமர்சனங்கள், வைக்கப்படுகின்றன! அவர் பாஜகவின் மறைமுக கூட்டாளி என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்படுகிறது! இது குறித்து இந்த கட்டுரையில் நாம் விரிவாக அலசவுள்ளோம்.

அரவிந்த் கேஜ்ரிவால் ஆம் ஆத்மிக்கு முன்னால் எந்த கட்சியிலும் உறுப்பினராக இருந்தவரில்லை. அவர் ஒரு சமூக ஆர்வலராக இயங்கியவர். ஐ.ஆர்.எஸ் எனப்படும் வருமான வரித்துறையில்  நேர்மையான அதிகாரியாக 12 ஆண்டுகள் பணியாற்றியவர்! அரசு பதவியைத் துறந்து தகவல் அறியும் உரிமை சட்டம் வேண்டும் என்ற நோக்கத்திற்காக இவர் பல ஆண்டுகள் அருணாராய் போன்றவர்களுடன் இணைந்து செயல்பட்டவர். ‘தகவல் அறியும் உரிமை சட்டத்தை எப்படி பயன்படுத்தலாம். ஊழலின்றி அரசு துறையில் எப்படி சேவை பெறலாம்’ என இந்தியா முழுக்க பிரச்சாரம் செய்துள்ளார். அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பு சுமார் 12 ஆண்டுகள் முழு மூச்சுடன் பொதுநல செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அந்த வகையில் அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிராக ஜனலோக்பால் மசோதா வேண்டும் என போராடிய போது அதை அகில இந்திய அளவில் வளர்த்தெடுத்தார்.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய பல வழிமுறைகளை நாம் அப்படியே பின்பற்றுகிறோம். ஆகவே, நாம் நம் சுயத் தன்மையை இழந்துள்ளோம். அவரவர் தாய்மொழியில் தான் கல்வி கற்பிக்கப்பட வேண்டும், நாட்டு நிர்வாகமும், நீதிமன்ற நடவடிக்கைகளும் தாய் மொழியிலேயே நடக்க வேண்டும் என்ற கொள்கையுள்ளவர் அரவிந்த் கேஜ்ரிவால்!

2012 ஆம் ஆண்டில் தான் இவர் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கினார். 2013 ஆம் ஆண்டு முதன்முதலாக டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 28 இடங்களை பெற்று காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த போது ஜனலோக்பால மசோதாவை நிறைவேற்ற காங்கிரசும், பாஜகவும் ஒத்துழைக்காமல் தோற்கடித்துவிட்டதால் பதவி விலகி 2015 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67-ல் வெற்றி பெற்றார். 2020ல் மீண்டும் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் மிக கடுமையான அவதூறு பிரச்சாரங்களை முறியடித்து மீண்டும் 62 இடங்களில் வெற்றி வாகை சூடினார்! தற்போது பத்தே ஆண்டுகளில் இரு இடங்களில் ஆட்சியை பிடித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி! கோவாவில் இரு எம்.எல்.ஏக்களை பெற்றுள்ளது!

அரசாங்க நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மைகளை ஏற்படுத்தி, சேவை பெறும் உரிமை சட்டத்தையும் செயல்படுத்தி, ஊழலைக் களைந்து, மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை தந்தார்! தனியார் பள்ளிகளை மிஞ்சிய தரமான கல்வியை அரசு பள்ளிகளில் சாத்தியப்படுத்தி மாணவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார். அரசு மருத்துவமனைகளில் தரமான மருத்துவம் கிடைக்கச் செய்தார்!  டெல்லியில் இவர் உருவாக்கிய தெருமுனை மொஹல்லா கிளினிக்குகளை ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்தவர்கள் வந்து பார்த்து வியந்தனர்.

நேர்மையான நிர்வாகத்தின் மூலம் தண்ணீர் மற்றும் மின்சாரம் மிகக் குறைந்த கட்டணத்தில் கிடைக்க வழி வகுத்தார்! காரணம், அரசுக்கும், தனியாருக்கு சொந்தமான கழகங்களுக்கும் இடையே உள்ள ஊழல் தொடர்பை தவிர்த்தார். வாடகை வீட்டில் வசிப்பவர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் அதிக மின்கட்டணம் வசூலிப்பதற்கு முடிவுகட்ட வாடகையாளர்களுக்கு தனியாக மின்சார மீட்டர் (Prepaid Meter) வைத்துக்கொள்ள வழி சமைத்தார்!

டெல்லியில் மரங்களை நடுவதற்கு பொதுமக்கள் எஸ்எம்எஸ் செய்தால், அரசே அவர்களுக்கு வீட்டிற்கு செடிகளை அனுப்பி வைக்கும் திட்டத்தை செயல்படுத்தினார்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், ஒரு நேர்மையான அரசாங்கத்தை நிஜத்தில் சாத்தியப்படுத்தி இருக்கிறார். அதனால் தான் பாஜகவானது காங்கிரசைவிட அரவிந்த் கேஜ்ரிவாலைத் தான் பெரிய ஆபத்தாக பார்க்கிறது. ஏற்கனவே, தில்லி அரசாங்கத்திற்கு காவல்துறை அதிகாரமில்லை. நீதிமன்ற அதிகாரமில்லை. நில உரிமை அதிகாரமில்லை. அனைத்தும் மத்திய அரசு வசம் தான்.

இத்தனை இல்லாமைகள் இருந்தும் கிடைக்கும் அதிகாரத்தைக் கொண்டு சிறப்பான ஆட்சியை சாத்தியப்படுத்தி மக்களிடம் நன்மதிப்பு பெற்றுவிடுகிறார். டெல்லி ஏழை, எளிய, நடுத்தர பிரிவு மக்களின் இதயத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கையை பெற்றுவிட்டது ஆம் ஆத்மி! இந்தியாவையே ஆட்சி செய்யும் வாய்ப்பு பெற்ற பாஜகவிற்கு டெல்லியை ஆட்சி வாய்ப்பு மட்டும் அமையவில்லையே என்பது பெருங் குறையாகும்!  அதனால், கேஜ்ரிவாலுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு தொல்லை தரமுடியுமோ, அவ்வளவும் தந்து வருகிறது பாஜக அரசு! தில்லி துணை நிலை ஆளுனரின் அடாவடித்தனங்களை எதிர்த்து வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டார் அரவிந்த் கேஜ்ரிவால்!

அரவிந்த் கேஜ்ரிவால் தில்லிக்கு மாநில அந்தஸ்த்து வேண்டும் எனக் கேட்டு வருகிறார்! ஆனால், பாஜக அரசோ இருக்கும் குறைந்த அதிகாரத்தையே மேலும் குறைத்தும்,எதையும் துணை நிலை ஆளுனர் ஒப்புதல் பெற்றே செயல்படுத்த வேண்டும் என்றும் டெல்லி அரசு தேசிய தலைநகர் பிரதேச திருத்த மசோதா ஒன்றை கொண்டு வந்தது சென்ற ஆண்டு! அப்போது டெல்லி மக்களின் நம்பிக்கையை இழந்த பாஜக அரசு கொல்லைப்புறம் வழியாக டெல்லி அரசின் அதிகாரங்களைப் பறிக்கிறது, இது டெல்லி மக்களை ஏமாற்றும் செயல் என்று கெஜ்ரிவால் காட்டமாக விமர்சித்தார்.

ஒருமுறை காஷ்மீருக்கான சுயஆட்சி பற்றி கேஜ்ரிவால் பேசியதைத் தொடர்ந்து அவரை தேசத் துரோகியாக சித்தரித்தது பாஜக! மோடி ஒரு நேர்மையாளரே இல்லை. பாஜக ஒருமதவாத ஆட்சி என கேஜ்ரிவால் வெளிப்படையாக பேசியுள்ளார்.

காங்கிரஸ் மத்தியில் இருக்கும் போது தான் ஆட்சிக்கு வந்தார் கேஜ்ரிவால். ஆனால், 2016 ல் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தான் அவருக்கு பல சோதனைகள், தடைகள், சவால்கள்! அத்தனையையும் உணர்ச்சிவசப்படாமல் அறிவோடும், சட்ட வழிமுறைகளை நன்கு தெரிந்து, அதன் வழியாகவும் தான் தகர்த்து வருகிறார் கேஜ்ரிவால். ரேஷன் பொருட்களை அரசே மக்கள் வீடுகளில் சேர்க்கும் என்ற ஒரு திட்டத்தை கேஜ்ரிவால் அறிவித்த போது, அதற்கு துணை நிலை ஆளுனர் மூலம் முட்டுக்கட்டை போட்டது பாஜக. அதையும் எதிர்த்து கடுமையாக போராடித் தான் நடைமுறைபடுத்தினார் கேஜ்ரிவால்! அது மட்டுமின்றி, கேஜ்ரிவால் இந்தியாவின் மிகப் பெரிய தொழில் அதிபரான முகேஷ் அம்பானியின் எரிவாயு ஊழலை அம்பலப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது!

கேஜ்ரிவால் இயல்பிலேயே ஒரு கடவுள் நம்பிக்கையாளர். ஆனால், ஆடம்பர வழிபாட்டு முறைகளையும், சடங்குகளையும் விரும்பாதவர். அவரது ராமபக்தியை பலர் விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறார்கள். தமிழகத்தில் பிறந்த பலர் முருக பக்தராகவோ, அம்மன் பக்தராகவோ இருப்பது போலத் தான் வட இந்தியாவில் பிறந்த ஒருவர் ராமபக்தராக இருப்பதாகும்! பெரும்பாலான வட இந்திய மக்களின் விருப்பத்திற்கு உகந்த கடவுளான ராமரை கும்பிடுவதையோ, காவி துண்டு போர்த்திக் கொள்வதையோ இந்துத்துவ வெறி சார்ந்த ஒன்றாக பார்ப்பது தேவையற்றது! காந்தியும் ராம பக்தராகவே இருந்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்!

கேஜ்ரிவாலை பொறுத்த வரை அவர் இஸ்லாமியர்களின் மீதோ, கிறிஸ்த்துவர்கள் உள்ளிட்ட மற்ற மதத்தினர் மீதோ ஒரு சிறிதும் துவேஷமான கருத்துக்களை சொன்னவரில்லை. முஸ்லீம்களுக்கு ஆதரவாக பேசும் அரசியலைக் கூட அவர் இதுவரை செய்ததில்லை எனினும், தில்லி முஸ்லீகளின் கணிசமான ஓட்டுகளை ஆம் ஆத்மி தான் பெற்று வருகிறது. காரணம், கேஜ்ரிவால் முஸ்லீம்களுக்கு ஆதரவானவர் என்பதால் அல்ல! ‘அவர் பாரபட்சமற்றவர்’ என தில்லி முஸ்லீம்கள் நம்புகிறார்கள்! கேஜ்ரிவாலின் கடவுள் நம்பிக்கையையும், அதைச் சார்ந்த செயல்பாடுகளையும், அவர் இந்து சாதுக்களோடு பழகுவதையும்  சிறுபான்மையினர் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதில்லை. ஏனெனில், கேஜ்ரிவால் சிறுபான்மையினருக்கு எதிரான எந்த மறைமுக செயல்திட்டமும் கொண்டவரல்ல என்பதை அவர்கள் நன்கு புரிந்துள்ளனர்! இன்றைய இந்துத்துவ அரசியல் மேலோங்கி இருக்கும் ஒரு சூழலில் ஒரு ஆட்சியாளர் இந்தவிதமான நம்பிக்கையை பெறுவது எவ்வளவு அரிதினும் அரிது எனச் சொல்ல வேண்டியதில்லை.

விவசாயிகள் டெல்லியில் நடத்திய போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி மிகவும் அனுசரனையாக இருந்தது. ஆனால், அதன் மூலம் அந்த போராட்டத்திற்குள் மூக்கை நுழைத்து தனக்கான ஆதரவைத் திரட்டவில்லை! அதே போல ஷாகின்பாக்கில் இஸ்லாமியர்கள் சி.ஏ.ஏவுக்கு எதிராக போராட்டம் நடத்திய போதும் எந்த ஒரு அடக்குமுறை நடவடிக்கைகளையும் அவர்களுக்கு எதிராக ஏவவில்லை. தில்லி கலவரங்களின் போது கூட எந்த ஒருசார்பு நிலையையும் ஆம் ஆத்மி எடுக்கவில்லை.

கேஜ்ரிவால் விபஸ்ஸனா என்ற தியான வழிமுறைகளில் ஒன்றை நீண்ட காலமாக செய்து வருகிறார்!. விபஸ்ஸனா என்ற சொல்லுக்கு ‘உள்ளதை உள்ளபடி பார்த்தல்’ என்று பொருள். இது 2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் அறிமுகப்படுத்திய தியானமுறையாகும்! இது மதங்களுக்கு அப்பாற்பட்டது. இது தன்னை கவனிப்பதன் மூலம் மனத் தூய்மை அடைவதற்கான ஒரு வழி முறையாகும். இதனால் தான் எந்த அதிகார திமிரும் இல்லாமல் சராசரி மனிதனாக கேஜ்ரிவால் வலம் வருகிறார். அவர் தன் பிறந்த நாளைக் கூட கொண்டாடுவதில்லை. அவர் கலந்து கொள்ளும் எந்த விழாவும் எளிமையாகவே இருக்கும்.கட்சி பிரச்சாரங்களில் அவருக்கு கட்வுட் வைக்கப்படுவதில்லை. துணை முதல்வர் மணீஸ் சிசோடியா தொடங்கி அவரது அமைச்சரவை சகாக்கள் அனைவரும் சுயேட்சையாக செயல்படுவர்கள்.

பஞ்சாப் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவினர் ஆம் ஆத்மியை காலிஸ்தான் தீவிரவாதிகள் ஆதரவு பெற்ற கட்சி என்றே பிரச்சாரம் செய்தனர். பஞ்சாப்பில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கேஜ்ரிவால் தன்னிச்சையாக முடிவு செய்யவில்லை. பஞ்சாபின் ஒட்டுமொத்த கட்சித் தோழர்களிடம் கருத்து கணிப்பு நடத்தியே தேர்வு செய்தார்! 19 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கு பெற்ற அந்த தேர்தலில் பகவத்மான்க்கை 90 சதவிகிதத்தினர் தேர்வு செய்தனர். ஆகவே, பகவத்மான்க் முதலமைச்சராக வாக்களியுங்கள் எனக் கேட்டுத் தான் பஞ்சாப் தேர்தலையே ஆம் ஆத்மி எதிர் கொண்டது.

இப்படி கட்சியில் தனக்கு கீழ் இருக்கும் ஒரு ஜினியர் தலைவரை மக்கள் வழியே ஒரு பெரிய மாநிலத்தின் பெரிய தலைவராக அங்கீகரிக்கும் பண்பு இன்றைய அரசியலில் அரிதினும் அரிது! இதன் மூலம் ஒரு சக்தி வாய்ந்த மக்கள் தலைவரை பஞ்சாப் மக்களுக்கு அடையாளப் படுத்திவிட்டார் கேஜ்ரிவால்! மற்ற எந்த கட்சியிலும் இந்த அணுகுமுறையை இன்று நினைத்து கூட பார்க்க முடியாது. இங்கே தமிழகத்தில் உள்ளாட்சிகளான மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளில் கூட கட்சித் தலைமை தான் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்!

அரவிந்த் கேஜ்ரிவாலிடம் எந்தக் குறையும், விமர்சனமும் இல்லையா என்றால் நிச்சயமாக இருக்கிறது. ஆம் ஆத்மிக்கு அடித்தளமிட்ட யோகேந்திர யாதவ், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் போன்ற மிகச் சிறந்த ஆளுமைகளை அவர் கட்சியில் தக்க வைத்துக் கொள்ளாமல் விட்டது மிகப் பெரிய இழப்பாகும். அதே போல தமிழகத்திலும் ஆம் ஆத்மிக்கு ஆரம்ப காலத்தில் மிகச் சிறந்த ஆளுமைகள் கிடைத்தனர். குறிப்பாக சந்திரமோகன், ஜாகீர் மற்றும் அறப்போர் இயக்க ஜெயராமன், சுப.உதயகுமார் உள்ளிட்ட பெரும்படையே இருந்தது! அவர்கள் யாரும் தற்போது கேஜ்ரிவாலோடு பயணிக்கவில்லை. இது போல நிறைய நல்ல ஆளுமைகளை அவர் இழந்துள்ளார்!

ஆன போதிலும் கேஜ்ரிவால் புறக்கணிக்கதக்கவரோ, ஆபத்தானவரோ இல்லை. நேர்மையான, பாரபட்சமற்ற ஆட்சியை தில்லியில் சாத்தியப்படுத்திய அவர் தேசிய தலைவராக வேண்டும் என்றால், தில்லி முதல்வர் பதவியை யாராவது சிறந்த ஆளுமையிடம் தந்துவிட்டு தேசம் முழுமையும் சுற்றிவர வேண்டும். ஒவ்வொரு மாநிலத்தின் தனித்தன்மை மற்றும் அங்குள்ள மக்களின் இயல்புகள், தேவைகளை அறிய வேண்டும். கிராமங்கள், சேரிகள், பழங்குடிகள் நிறைந்த இந்திய ஏழைகளின் இதயத் துடிப்பை கேட்டறிய வேண்டும்.

அரவிந்த் கேஜ்ரிவாலிடமும் சில குறைகள் இருக்கலாம்! ஆனால், இன்றைய தினம் தன் சிந்தனைகள், செயல்பாடுகள் வழியே அவர் மிகப் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்! அவரது இறை பக்தியை இந்துத்துவ செயல்பாடாக புரிந்து கொள்ள சரியல்ல!  அவர் இமேஜை சிதைப்பதால், அவருக்கல்ல, இந்திய ஜனநாயகத்திற்கு தான் இழப்பாகும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time