மனிதன் பிறப்பு தொடங்கி உடல் அடக்கம் வரை முக்கியத்துவப்படுவதால், பால் புனிதமாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, உயிர் காக்கும் அத்தியாவசிய உணவான பால் உற்பத்தி இன்றைய தமிழகத்தில் சுமார் பத்து லட்சம் எளிய விவசாய பெருமக்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. அதுவும் குறிப்பாகத் தமிழக அரசின் கூட்டுறவுத் துறை நிறுவனமான ஆவின் நிர்வாகத்தை நம்பி சுமார் 4,60,000 ஆயிரம் எளிய பால் விவசாயிகள் வாழ்கிறார்கள் என்பது மட்டுமல்ல,சுமார் 1,50,000 பால் முகவர்களும் உள்ளனர்.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆவினில் தற்போது ஊழல்களும், முறைகேடுகளும், மோசடிகளும் காட்டாற்று வெள்ளமாக ஓடுகிறது!
ஒரு லிட்டர் பாலுக்குக் கிராமத்தில் பால் விவசாயிக்கு ஆவின் 26 ரூபாய் தருகிறது.இந்த வகையில் நாளொன்றுக்கு சுமார் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு ,பதப்படுத்தப்பட்டு,குளிரூட்டப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு ரூபாய்43 தொடங்கி 50 வரை விற்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு நிலையிலும் ஊழல் கரைபுரண்டோடுவதால், மிகவும் லாபகரமாக இயங்க வேண்டிய ஆவின் நஷ்டக் கணக்குக் காட்டுகிறது.
அரசியலாக்கப்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள்
காரணம், பால் கூட்டுறவுச் சங்கங்கள் அரசியலாக்கப்பட்டது தான். நேர்மையற்ற வகையில் பால் கூட்டுறவுச் சங்க தேர்தல்களை நடத்தி அரசியல்வாதிகள், ஆவீனை ஆக்கிரமித்து, சுரண்டிக் கொழுக்கிறார்கள். மொத்தமுள்ள 19 ஒன்றியங்களில் தலைமை பொறுப்பு வருபவர்கள் கோடிக்கணக்கில் செலவழித்து பதவியைப் பெறுகிறார்கள் என்பதிலேயே இங்கு எந்தளவு ஊழல் நடக்கிறது என நாம் புரிந்து கொள்ளலாம்!
இதைப் புரிந்து கொண்ட அதிகாரிகளும் தங்கள் பங்கிற்கு மிக மோசமாக ஊழலில் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், ஆவின் நிர்வாகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பதவியை ஒருவரே வகித்து வருவதால் பல்வேறு முறைகேடுகள் நடைபெறக் காரணமாக அமைந்து விடுகிறது. உதாரணமாக சென்னை, நந்தனத்தில் ஆவின் நிர்வாக இயக்குநராக இருப்பவரே சென்னை, மாதவரம் பால்பண்ணையில் பால்வளத்துறை ஆணையராகவும் இருக்கிறார். மதுரையில் பொறியியல் பிரிவு உதவி பொது மேலாளர் பொறுப்பை வகிப்பவரே பால் கொள்முதல் உதவி பொது மேலாளர், பால் பதம் துணைப் பொது மேலாளர், பி அண்ட் எம் துணைப் பொது மேலாளர் ஆகிய நான்கு பதவிகளை வகித்து வருகிறார்.
Also read
அப்படி ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளில் ஒருவரே இருப்பதால் இங்கிருந்து அங்கே அனுப்பப்படும் பால் கொள்முதல், பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோப்புகள் எந்த ஒரு கேள்விக்கும் உட்படுத்தப்படாமல், மூடு மந்திரமாக நடக்கிறது. இதனை முறையாக ஆய்வு செய்யாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஒருவரே பல பொறுப்புகளை வகிப்பதால் பால்வளத்துறைக்கும், ஆவினுக்கும் பணியாளர்களை தேர்வு செய்ய பல லட்சங்களை கையூட்டாக பெற்றுக் கொண்டு முறைகேடாகப் பணி நியமனம் செய்கின்றனர். ஆக,அதிகாரக் குவிப்பிற்கு முதலில் முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.
பணி நியமனத்தில் ஊழல்
முன்னாள் ஆவின் நிர்வாக இயக்குநராகவும், பால்வளத்துறை ஆணையராகவும் இருந்த காமராஜ் ஐஏஎஸ் அவர்கள் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, நாகர்கோவில் மாவட்டத்தில் துணைப் பதிவாளராக பணியாற்றி வந்த கிறிஸ்துதாஸ் அவர்களை பால்வளத்துறையின் துணை ஆணையராக நியமனம் செய்ததோடு, மேலும் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஓராண்டுக்குள் அவரை கூடுதல் துணை ஆணையராகவும் பதவி உயர்வு செய்திருக்கிறார். இந்த மாதிரியான நியமனங்களில் அவர் கோடிக்கணக்கில் பணம் ஈட்டினார் என்ற குற்றச்சாட்டு இன்று வரை முறையாக விசாரிக்கப்படவில்லை.
தனது பதவி உயர்விற்காக 40லட்சம் வரை கைமாற்றிய கிறிஸ்துதாஸ் அவர்கள் போட்ட பணத்தை பன்மடங்கு பெருக்கிட திட்டமிட்டு பால்வளத்துறையில் அலுவல உதவியாளர் பணிக்கு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஒவ்வொருவரிடமும் தலா 15முதல் 20லட்சம் ரூபாய் வரை கையூட்டு பெற்று கொண்டு சுமார் 170பேருக்கு மேல் பணி நியமனம் செய்துள்ளதாக தகவல். இதன் மூலம் சுமார் 25கோடி ரூபாய் வரை வசூலாகியிருக்கும் என்கிற நிலையில் ஆவின் நிர்வாக இயக்குனர், பால்வளத்துறை செயலாளர், பால்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு தொடர்பில்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் பால்வளத்துறை மற்றும் ஆவின் உயரதிகாரிகளுக்கு பால் கொள்முதல் நிலைய ஊழியர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் கப்பம் கட்டுவதால் அவர்களின் முறைகேடுகள், மோசடிகள் கண்டு கொள்ளப்படுவதில்லை.
அனைத்து மட்டங்களிலும் ஊழல்
உயரதிகாரிகளின் ஆசி இருந்த காரணத்தால் தான் மதுரை மாவட்டத்தில் பால் திட்ட பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் சுமார் 8கோடி ரூபாய் வரை கையாடல், திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் சுமார் 80லட்சம் ரூபாய் வரை மோசடி, தர்மபுரி மாவட்டத்தில் அமைச்சரின் பினாமி தனியார் பால் நிறுவனத்திற்கு பால் வழங்கியதில் பல கோடி ரூபாய் முறைகேடுகள், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பால் கொள்முதல் நிலையங்களில் சுமார் 1கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள், சென்னை, திண்டுக்கல் மாவட்டத்தில் ஆவின் பால் விநியோகம் செய்வதற்கான வினியோகஸ்தர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் ஆகியவை அரங்கேறுகின்றன!
தமிழகம் முழுவதும் ஆவின் பால் பண்ணைகளுக்கு பால் கொண்டு வரும் டேங்கர் லாரி ஒப்பந்தங்களில் பல கோடி ரூபாய் ஊழல், அம்பத்தூர், மாதவரம் ஆவின் பால் பண்ணைகளில் பணியாற்றிய சுமார் 450க்கும் மேற்பட்ட தினக்கூலி பணியாளர்களை நிர்வாக இயக்குனர் திரு வள்ளலார் ஐஏஎஸ் அவர்கள் தனது பினாமிக்காக பணி நீக்கம் செய்து ஒப்பந்த முறையில் மாற்றியது என முறைகேடுகளும், மோசடிகளும் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டே இருக்கிறது.
அதுமட்டுமின்றி முன்னாள் ஆவின் நிர்வாக இயக்குனர் திரு. சுனில்பாலிவால் அவர்கள் காலகட்டத்தில் நல்ல லாபத்துடன் இயங்கிய ஆவின் நிறுவனம் காமராஜ் ஐஏஎஸ் அவர்களின் காலகட்டத்தில் சுமார் 300கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பை சந்தித்ததால் அது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனு கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயம் போல் காணாமல் போனது.
ஊழல் செய்வதற்காக உருவாக்கப்பட்ட பதவிகள்
மேலும் ஒவ்வொரு ஒன்றியங்களிலும் முன்னாள் அமைச்சர்கள், ஆளுங்கட்சி பிரமுகர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே சேர்மன் பொறுப்புகள் உருவாக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையற்ற செலவுகள் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்ட சேர்மனாக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களை சேர்மனாக நியமிக்க சுமார் 80 வருட பாரம்பரியமிக்க மிக்க திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினை துணைப் பதிவாளர் ராமச்சந்திரன் சுக்குநூறாக உடைத்து விட்டார்.
கால்நடைகள் தங்களின் உடலில் ஊறும் ரத்தத்தைப் பாலாகத் தருகின்றன.அதை பாடுபட்டு தீனி போட்டு வளர்க்கும் எளிய விவசாய பெருமக்களுக்குப் பாலுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. கிடைக்கும் சொற்ப பணமும் இழுத்தடிக்கப்பட்டு தான் தரப்படுகிறது இந்தச் சூழலில் பால்வளத்துறை மற்றும் ஆவின் உயரதிகாரிகள் பலரும் லஞ்சத்திலும், ஊழலிலும் மூழ்கி முத்துக் குளித்து வருகின்றனர்.
விவசாய பெருமக்களின் உழைப்பால் உருவான கூட்டுறவுத் துறை நிறுவனமான ஆவினை காப்பாற்ற வேண்டிய தமிழக அரசோ,முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்குத் துணை போய் கொண்டிருக்கிறது. ஆவின் நிர்வாகம் நேர்மையாக செயல்பட்டால்,அது இன்னும் பல லட்சம் ஏழைபால் விவசாயிகள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதோடு, மேலும்,பல்லாயிரம் பால் முகவர்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழும்.
கட்டுரையாளர்
சு.ஆ.பொன்னுசாமி
தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர்.இவர் ஆவின் நிர்வாகம் நேர்மையாக இயங்கவும்,வெளிப்படைத் தன்மையுடன் செயல்படவும் போராடி வருகிறார்.
Leave a Reply