விளை நிலங்களை விழுங்கும் திமுக அரசு! தகிக்கும் திருவண்ணாமலை!

-பீட்டர் துரைராஜ்

1,200 ஏக்கர் விவசாய நிலங்களை அழித்து,  பத்துக்கு மேற்பட்ட கிராமங்களின் 500 வீடுகளை தகர்த்து, ஏரிகளையும், ஓடைகளையும் நிர்மூலமாக்கி, திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்கிறது திமுக அரசு.  வாழ்வாதாரம் தரும் விளை நிலத்திற்காக வீதியில் இறங்கி போராடுகின்றனர் மக்கள்!

விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சியை எதிர்த்து பாலியப்பட்டு ஊராட்சி கிராமசபை, சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தரிசு நிலங்களில் சிப்காட் அமைக்காமல், பலன்தரும் விளைநிலங்களில் அமைக்க முயற்சிப்பதை எதிர்த்து, விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் 100 வது நாளை எட்டவுள்ளது.

திருவண்ணாமலை என்றதும் நமக்கு ஞாபகம் வருவது  அண்ணாமலையார்தான்.  அவரை தரிசிக்க தமிழகமெங்கிலும் இருந்து பௌர்ணமி நாளில்  லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள். அந்த  திருவண்ணாமலையின் கிரிவலப்பாதையில், சிப்காட் திட்டத்தினால் பாதிக்கப்படும் பொதுமக்கள், தமது விளை நிலங்களை காப்பாற்ற கிராமங்கள் தோறும் போராட்டங்கள் பலவற்றை நடத்தி வருகின்றனர்! சமீபத்தில் கிரிவலப் பாதையில் மலைசுற்றும் போராட்டம் நடத்தினர்.

ஆட்சிமாற்றம் ஏற்பட்டவுடன் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது திருநெல்வேலி, திருவண்ணாமலை, தருமபுரி, நெல்லை, விருதுநகர், விழுப்புரம் மாவட்டங்களில் சிப்காட் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அறிவித்தார்.

செங்கம் வட்டம், பாலியப்பட்டு ஊராட்சியின் எல்லையில் உள்ள இந்த நிலத்தை, கடந்த டிசம்பர் மாதம் வருவாய் அதிகாரிகள் காரணம் எதுவும் சொல்லாமல் அளவீடு செய்துள்ளனர். இந்த நிலம் மிகவும் செழிப்பானது;  இதில்  விளையும் கனகாம்பரம், மல்லி போன்ற பூக்கள் சென்னை, பெங்களூரில் விற்பனை செய்யப்படுகிறது. நெல், கரும்பு போன்றவைகளும் உற்பத்தி ஆகின்றன. இந்த நிலத்தில்  சிப்காட் அமைப்பதற்காக 1,200 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் திட்டம் உள்ளது. உண்மை நிலை என்னவென்று அந்தப் பகுதி மக்களுக்குத் தெரியவில்லை. எனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரம் கேட்டுள்ளனர். அதற்கு மாவட்ட நிர்வாகம் பதில் அளிக்கவில்லை. எனவே, இயல்பாகவே மக்களிடம் அச்சமும்,கொந்தளிப்பும் எழுந்துள்ளது.

கடந்த ஜனவரி 11ஆம் தேதி காலை 9 மணியவில் இரண்டு ஜே.சி.பி. இயந்திரங்கள் அந்தப்பகுதியின் வனப்பகுதிக்கு சென்று மரங்கள், செடி கொடிகளை பிடுங்கி எரிந்துள்ளன. அதனை யாரும் தடுக்காத வண்ணம் நூற்றுக்கும் அதிகமான போலீஸாரை அந்தப்பகுதியில் நிறுத்தினர். இதனால் அதிர்ச்சியான தேவனந்தல், புனல்காடு,  கலர்கொட்டாய், வேடியப்பனூரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள், ஆண்கள் அங்கே குவிந்தனர். காவல்துறை தடுப்பையும் மீறி பெண்கள் ஜே.பி.சி. வேலை செய்யும் இடத்துக்கு சென்று போராடினர்.

கவுந்தி மலையில் பிறந்து தங்கள் ஊரின் வழியாக தவழ்ந்து ஓடும் ஆலமரத்து ஓடை அஸ்வநாகசுரணை, அய்யம்பாளையம், அத்தியந்தல் ஏரிகளைக் கடந்து திருவண்ணாமலை அருகே உள்ள மிகப் பெரிய சமுத்திரம் ஏரிக்கு செல்கிறது! இந்த திட்டம் இங்கே வந்தால் இந்த ஓடைக்கு பாடைகட்டிவிடுவார்கள்! நீர் நிலைகள் மாசுப்பட்டு கழிவுநீர் கால்வாயாகி ஊரே பாழ்படும்.விவசாயம் தழைத்தோங்கும் இப்பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். என்கிறார்கள் ஊர்மக்கள்!

திருவண்ணாமலை மாவட்டத்தின் செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலியப்பட்டு, வாணியம்பாடி, பழையகாலனி, புதியகாலனி, கொளத்தூர், அருந்ததியர்காலனி, கொல்லக் கொட்டாய், கூலன் கொட்டாய், செங்குட்டுவன் கொட்டாய், செல்வபுரம், அண்ணா நகர், மாரியக்கன் நகர் இன்னும் பல கிராமங்களை மையமாகக் கொண்டு 1200 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைக்க தமிழக அரசு எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் ரகசியமாக செயல்பட்டு வருவது ஏழை.எளிய கிராம மக்க்ளிடையே பெரும் அச்சத்தையும்,கொந்தளிப்பையும் உருவாக்கி உள்ளது. ஆகவே ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் கைகோர்த்து போராடி வருகின்றனர்!

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த சுந்தர்ராஜன் “சிப்காட், சிட்கோ, டிட்கோ போன்ற தொழிற்பேட்டைகளை அரசு அமைத்துள்ளது. இதன்மூலம்  எத்தனை பேர் வேலைபெற்றார்கள்; இந்த தொழிற்பேட்டைகளில் எவ்வளவு மனைகள் காலியாக உள்ளன என்ற விபரங்களை, தமிழக அரசு  வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். பத்துக்கும் குறைவாக வேலையாட்களைக் கொண்ட நிறுவனங்கள்தான் பெருமளவு வேலைவாய்ப்பைத் தருகின்றன. அரசுத்துறைகளிலோ, அசோக் லேலண்ட் போன்ற பெரிய  நிறுவனங்களிலோ பணிபுரிபவர்களின் சதவீதம் மிகவும் குறைவானது. பாலியப்பட்டு ஊராட்சியில் விவசாயம் செய்து வரும் விளைநிலங்களை அழித்து, அந்த இடத்தில் சிப்காட் அமைக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்றார்.

போராடி வருகிற விவசாயிகள் திமுகவைச் சேர்ந்த செங்கம் சட்டமன்ற உறுப்பினரான மு.பெ.கிரியிடம் முறையிட்ட போது ” நிலமற்ற ஏழைகளுக்கு கலைஞர் தந்த பட்டா இது. உங்கள் பட்டாவை நாங்கள் இரத்து செய்து விடுவோம். 5,000 பேர் வாழ்வதற்காக 500 குடும்பங்களை அப்புறப்படுத்தினால் என்ன ! ”  என்று  கூறியதாகச் சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாலியப்பட்டு கிராமம் உள்ளது. கிழக்குத் தொடர்ச்சிமலையின் ஒரு பகுதியான கவுத்திமலை, வேடியப்பன் மலை போன்றவைகளில் இரும்புத்தாது உள்ளது. இந்த மலையில் இரும்புத்தாது இருப்பதால் இதனை எடுக்க 2008 முதல்  ஜிண்டால் நிறுவனம் முயற்சித்து வந்தது.

சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் மக்கள் இயக்கத்தைச் சார்ந்த சம்பத்திடம் பேசிய போது,”எனக்கு 47 வயதாகிறது. எனக்குத் தெரிந்து இங்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதில்லை. இங்கிருந்து தான் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலம் அருகில் உள்ள ஏரிக்கும், திருவண்ணாமலை நகருக்கும் தண்ணீர் செல்கிறது. சாதாரணமாக மழை பெய்தாலே மூன்று போகம் போட முடியும். இந்தக் கிராமத்தில் எனக்கு 4 ஏக்கர் நிலம் உள்ளது. இவற்றில் சிந்தாமணி, முல்லை, காக்கட்டான் போன்ற பூச்செடிகளையும், மல்லாக்கொட்டையையும், கத்திரியையும் விளைவித்திருக்கிறேன். இதை அரசாங்கம் எடுத்துக் கொண்டால் நான் எங்கே செல்வேன்?

கவுத்தி மலை, வேடியப்பன் மலை அடிவாரத்தில்தான் இந்தக் கிராமம் உள்ளது. ‘விவசாயிகளை அழித்து,  இரும்புத் தாது தரமாட்டோம்’ என்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2018 ல்  கூறினார். போன ஆட்சியில் எட்டு வழிச் சாலை பிரச்சினை வந்தது. இப்போது சிப்காட் பிரச்சினை வந்துள்ளது.’’

”சிப்காட்டிற்கு நிலம் எடுக்க கூடாது என்று பாலியப்பட்டு கிராம சபை  தீர்மானம் போட்டது.  கல்லும் மலையுமாக இருந்த இடத்தை செப்பனிட்டு பல ஆண்டுகளாக சீர்செய்து, நாங்கள் நிலத்தை விவசாயத்திற்கு கொண்டு வந்தோம். இதன் தொடர்ச்சியாகத்தான் எங்களுக்கு அரசாங்கம் பட்டா கொடுத்தது. இந்தப் பட்டாவை ரத்து செய்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். அரசாங்க நிலத்திலோ, தரிசு நிலத்திலோ சிப்காட் அமைக்கலாமே” என்கிறார்கள் மக்கள்.

ஒரு பக்கம் மலர்கள் பூத்துக் குலுங்கும் விளை நிலங்கள்! மறுபுறமோ பல்லுயிரிகளும், மூலிகைச் செடிகளும், குட்டை புதர்காடுகளும் கவுத்தி வேடியப்பன் மலைகளில் உள்ளன. இயற்கை வளங்களையும், விளைநிலங்களையும், குடியிருப்புகளை அழித்து சிப்காட் கொண்டுவருவதை எதிர்த்து போராடி வருபவர்களை இதுவரை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. அக்கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 82 வது நாளாக (13.3.22) தொடர்கிறது.

“விளைநிலங்களை அழித்து பாலியப்பட்டு ஊராட்சியில் சிப்காட் வேண்டாம். தரிசு நிலங்களில் சிப்காட் அமையுங்கள் என்று சிறப்பு கிராமசபை தீர்மானம் இயற்றி, தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்திவரும் அக்கிராம பொது மக்களின் கோரிக்கைக்கு ஆவண செய்ய வேண்டும்” டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரைப்பட இயக்குநரான லெனின் பாரதி. இவர் கிழக்குத் தொடர்ச்சி மலைக்காக தொடர்ச்சியாக டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்.

“சிப்காட் போன்ற தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்போது அப்பகுதி மக்களையும் கலந்தோலோசிக்க வேண்டும். அத்தகைய நிறுவனங்களில்,  நிலத்தை இழந்த மக்களும், தொடர்ச்சியாக பலன் பெறும் வகையில் திட்டம் இயற்றப்பட  வேண்டும்” என்றார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சார்ந்த சுந்தர்ராஜன்.

“விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல், விளைநிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவதை தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டு விளைநிலங்கள் பாதுகாக்கப்படும்” என்று திமுகவின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. பாலியப்பட்டு பஞ்சாயத்தில் இருக்கும் விளைநிலங்களுக்கும்,  குடியிருப்புகளுக்கும் ஆபத்து ஏற்படவுள்ளது. திருவண்ணாமலையில் இருக்கும் திமுக அமைச்சரான எ.வ.வேலு என்ன செய்யப்போகிறார் ?

இன்னும் பல தலைமுறைகளுக்கு சோறும், நீரும் தந்து வாழ்வாதாரமாக திகழும் இயற்கையை அழித்து தான் சிப்காட் உருவாக்க வேண்டுமா? தரிசு நிலத்தை தேர்ந்தெடுக்கக் கூடாதா? என்பதே மக்கள் கேள்வி.முதலமைச்சர் ஸ்டாலின் மெளனம் கலைந்து, மக்களை காப்பாற்ற வேண்டும்.

கட்டுரையாக்கம்; பீட்டர் துரைராஜ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time