நலம் தரும் பாரம்பரிய இயற்கை மருத்துவம் – 1
இன்றைய சூழலில் நாம் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறோம்? நம் முன்னோர் `உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற அடிப்படையில் உணவை தேர்வு செய்தனர். ஆனால், இன்றைக்கு நாம் உணவில் நிறைய தவறு செய்கிறோம், நோயை வலிந்து பெறுகிறோம். பாரம்பரிய உணவு பழக்கங்களையெல்லாம் விட்டுவிட்டு வெகுதூரம் வந்துவிட்டதால், புதுப்புது நோய்களில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து எப்படி விடுபடலாம்?
காலையில் கண் விழித்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை நாம் உண்ணக்கூடிய உணவுகளை ஒரு பட்டியல் போட்டுப்பார்த்தால் சில உண்மைகள் புலப்படும். ஒவ்வொருவேளை உணவுகளையும் நாம் எத்தகைய முறையில் தயாரிக்கிறோம்? எப்படி சாப்பிடுகிறோம்? எப்போது உண்கிறோம்? பசித்தபிறகு உண்கிறோமா? எந்தெந்த வேளைகளில் எந்த அளவு உணவு எடுத்துக்கொள்கிறோம்? என்பது போன்ற கேள்விகளை ஒவ்வொருவரிடமும் கேட்டாலே எல்லாம் புரியும்.
பழைய சோறும் பச்சை மிளகாயும், வெங்காயமும் சாப்பிட்டு வந்த அந்த எளியவர்களுக்கு எந்தவொரு உடல் நலக்குறைவும் ஏற்பட்டதில்லை. மேலும் அப்போதெல்லாம் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்தார்கள்; அதன்பிறகு வயிறார உண்டார்கள். உடல் உழைப்பு அதிகம் இருந்தது. நெடுந்தூரம் நடந்து சென்றார்கள்; மாட்டுவண்டி, ரிக்ஷா, சைக்கிள் போன்றவற்றை பயன்படுத்தினார்கள். நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாஞ்சோறு பொங்கிச் சாப்பிட்டார்கள். கம்பங்கஞ்சியும், கேழ்வரகு கூழையும் சாப்பிடும் போது மாவடு, கத்தரிக்காய், சீனி அவரை வற்றல் போன்றவற்றை இணை உணவாக சேர்த்துக்கொண்டார்கள்.
அவரவர் வயலில் விளைந்த நெற்மணிகளை அறுவடைசெய்து தாங்களே உரலில் குத்தி எடுத்துச் சாப்பிட்டார்கள். புழுங்கல் அரிசி வேண்டுமென்றால், அண்டாவில் போட்டு அவித்து காயவைத்து உரலில் குத்தி எடுத்து அரிசியாக்கி, விறகடுப்பில் மண்பானையை வைத்து சமைத்துச் சாப்பிட்டார்கள். முற்றிய கத்தரிக்காய், மிளகாய் வற்றலை தீயில் சுட்டு அதனுடன் கொஞ்சம் புளி, சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து சாப்பிட்டு அம்மை நோய் வராமல் முன்கூட்டியே தடுத்துக்கொள்ளும் மருத்துவ அறிவு நம் முன்னோருக்கு தெரிந்திருந்தது. இதேபோல் புளியை நன்றாக ஊறவைத்து நீரில் கரைத்து பனைவெல்லம் சேர்த்து பானகமாக்கி குடித்து, சூட்டினால் வரக்கூடிய வயிற்றுவலி வராமல் பார்த்துக் கொண்டார்கள். இவை உணவாக மட்டுமன்றி மருந்தாகவும் செயல்பட்டன.
இன்றைக்கு எந்தவொரு நலக்குறைவு ஏற்பட்டாலும் மாத்திரையை வாங்கி வாயில் போட்டுக் கொண்டு அப்போதைக்கு பிரச்சினை சரி செய்துகொள்கிறார்கள். ஆனால், இந்த மருத்துவத்தில் முழுமையான தீர்வு கிடைப்பதில்லை. மேலும், இதனால் உருவாகும் பக்க விளைவுகளை நாம் யோசிப்பதில்லை. அன்று நம் முன்னோர் எந்தவொரு உடல்நலக்கோளாறு ஏற்பட்டாலும், கைவைத்தியம் செய்து தீர்வு கண்டுகொண்டார்கள். அவர்களுக்கு தங்கள் உடலைப் பற்றியும், உண்ணும் உணவுகள் பற்றியும் ஆழமான சுய புரிதல்கள் இருந்தன! ஆனால், இன்றோ, ”அதெல்லாம் அந்தக்காலம்யா… அதுமாதிரி வருமா?” என்று அங்கலாய்த்துக் கொள்வோரை அதிகம் பார்க்கமுடிகிறது. தாத்தா, பாட்டிகளிடம் ஆலோசனைகேட்டு உடல்நலத்தை பேணிக் கொள்பவர்கள் மிகக் குறைவு!
இன்றைக்கு உணவுமுறையே மாறிவிட்டது. வெந்தும் வேகாத உணவை உண்பது அதிகரித்து வருகிறது. பழங்கள், பச்சைக் காய்கறிகளுடன் வெந்த உணவுகளையும் சேர்த்து உண்பது செரிமானத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும் என்கிற உண்மை பலபேருக்கு தெரியவில்லை. சமைக்காத இயற்கை உணவை உட்கொண்டு ஒரு மணி நேர இடைவெளிவிட்டுத் தான் சமைத்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். உடைகளில் மட்டுமல்லாமல், உணவிலும் மேலைநாட்டு கலாச்சாரம் புகுந்துவிட்டது.
தரையில் சம்மணம் போட்டு வாழை இலையில் உணவு பரிமாறி ஆற அமர சாப்பிடும் பழக்கம் இன்றைக்கு குறைந்துவிட்டது. நின்று கொண்டோ அல்லது மேஜை, நாற்காலிகளில் காலை தொங்கவிட்டபடி சாப்பிடுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். நின்று கொண்டு உண்பது உடல் நலத்திற்கே கேடாகும்! நின்று நிதானித்து உமிழ்நீரைச் சுரந்து உணவை கூழாக்கி உண்ணாமல் வாய்க்குள் சென்றதும் ‘லபக் லபக்’ என்று விழுங்குவது ஆரோக்கியமல்ல!. ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும் என்பார்கள். ஆனால் அப்படி யாரும் பொறுப்பதில்லை, எந்திர கதியில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
முன்பெல்லாம் விழாக்காலங்களில் மட்டுமே உண்ணப்பட்ட இட்லி, தோசை இன்றைக்கு அன்றாட உணவாகிவிட்டது. கூடவே பூரி, சப்பாத்தி, பரோட்டா, பிரைடு ரைஸ், பாஸ்தா என விதவிதமான உணவுகள் அணி வகுத்து நிற்கின்றன. கலர் கலரான உணவுகள் காண்பவர் கண்களை கவர் திழுக்கின்றன. நிறமூட்டிகளுடன், அஜினமோட்டா சேர்க்கப்பட்ட உணவுகளை நேரம் காலம் பார்க்காமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த நிறமூட்டிகள், அஜினமோட்டோவின் ஆபத்துகள் குறித்து பின்பு சொல்வேன்! அன்றைக்கெல்லாம் இரவு 8 மணிக்கு மேல் உணவு உண்ணும் பழக்கமே கிடையாது. ஆனால், இன்றைக்கு இரவு 8 மணிக்கு பிறகு தான் மிட் நைட் மசாலா ஓட்டல்கள் சூடுபிடிக்க ஆரம்பிக்கின்றன.
உடல் உள் உறுப்புகள் தூங்கப் போகும் நேரத்தில் வெந்ததையும், வேகாததையும் வண்டி வண்டியாக உள்ளே கொட்டினால் என்னாகும்? அதுவும் பெரும்பாலானோர் ஊர்வன, பறப்பன, நடப்பன என அனைத்து ஜீவராசிகளையும் இரவில்தான் உண்கிறார்கள். இதனால் என்னாகும் என்பதுபற்றி நம்மில் பலரும் சிந்திப்பதில்லை. அதிலும் செரிமானத்தன்மை மிகக் குறைவாக உள்ள பரோட்டாவை இரவில் உண்பதால் என்னாகும்? சாப்பிட்டவற்றில் உள்ள சத்துக்கள் பெருமளவு உடலில் சேராமல் கழிவாகிவிடும்.இப்படியாக பல்வேறு தகவல்களை நாம் பார்த்தாலும் கூட, அவற்றை மிக எளிதாகக் கடந்து சென்றுகொண்டிருக்கிறோம்.
பிராய்லர் சிக்கன் சாப்பிடும் பெண் குழந்தைகளில் பலர் சீக்கிரம் பூப்பெய்துவது, கருப்பைக் கோளாறுகள் மற்றும் குழந்தையின்மை பிரச்சினைகளால் அவதிப்படுவது பற்றி எத்தனையோ எச்சரிக்கை விடுக்கப்பட்டும் அதை பலரும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். அதேபோல் மீன் மற்றும் இறைச்சி உணவுகளுடன் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று சொன்னால் பிரபல பிரியாணி கடைகளில் தயிர் சேர்த்துத்தானே கொடுக்கிறார்கள் அவர்களுக்குத் தெரியாததா என்று கேள்வி கேட்கிறார்கள்.
சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரிக்க காரணம் என்னவென்றால், அடிப்படையில் நாம் உண்ணும் உணவு முறையே சரியில்லை. சமைத்ததையும்,சமைக்காததையும் ஒருசேர உண்பது, தினமும் இறைச்சி உணவுகள் உண்பது, காலம் கடந்து உணவு உண்பது, செரிமானக்கோளாறுகளை சரிசெய்யாமல் இருப்பது, உடலுழைப்பு இல்லாதது.. என அந்தப் பட்டியல் நீள்கிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய செரிமானப் பிரச்சினையை சரிசெய்ய வெற்றிலை போடும் பழக்கத்தை பின்பற்றச் சொன்னால், பற்களில் கறை பிடிக்கிறது என்றும், அது தவறான பழக்கம் என்றும் சொல்கிறார்கள். தாம்பூலம் தரித்தல் என்னும் வெற்றிலை, பாக்குடன் சுண்ணாம்பு சேர்த்துப் போடுவது சரியான பழக்கமே. ஆனால், இவற்றுடன் என்றைக்கு புகையிலை சேர்த்தார்களோ அதுமுதல் தாம்பூலம் தரித்தல் என்பது கெட்ட பழக்கம் என்று முத்திரை குத்தப்பட்டுவிட்டது. வெற்றிலையின் மகத்துவம் நம்மில் பலருக்கு தெரியவில்லை.
Also read
இது போல எண்ணற்ற நல்ல விஷயங்களை உணர்ந்தால், நம் உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு செலவுகளே இல்லாத – எந்த பக்க விளைவுகளுமற்ற – தீர்வுகளை கண்டடையலாம்! எவையெவற்றை உண்பது, தவிர்ப்பது என்பதை வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.
கட்டுரையாளர்; எம்.மரியபெல்சின், மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளர். வீடுகளைச் சுற்றி வளரக்கூடிய மிகச் சாதாரண மூலிகைகள் மற்றும் அஞ்சரை பெட்டியில் உள்ள மிளகு, சீரகம் போன்றவற்றைக் கொண்டு தலைவலி முதல் கொரோனா காய்ச்சல் வரை சரி செய்ய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்பவர்.
LONG AWAITED AND NECESSARY ARTICLE. THANKS SIR…