இன்றைய பாஜகவில் கிட்டத்தட்டபாதிப்பேர் காங்கிரசில் இருந்து போனவர்கள்! இன்னும் சிலர் தேதி பார்த்துள்ளனர்! உ.பி.தேர்தலில் பிரச்சாரத்திற்கு காங்கிரசின் முக்கிய தலைவர்கள் போகாதது ஏன்? சித்தாந்த ரீதியாக காங்கிரஸின் நீண்டகால கொள்கையாளர்களுக்கு ஏன் முக்கிய பதவிகள் கொடுக்கப்படுவதில்லை.
சமீபத்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களை கணக்கில் எடுத்து பார்த்தால் விரல்விட்டு எண்ணத்தக்க ஓரிவரைத் தவிர அனைவரும் முதியோர்களாகவே இருந்தனர்! காங்கிரஸ் ஓய்வு தேடும் முதியோர் இல்லமாக காட்சியளிப்பது தெரிந்தது.
பிரியங்கா காந்தி பேசும் போது, உத்திரபிரதேச தேர்தலை எதிர் கொள்வதில் பாஜக தலைவர்கள் ஒன்றிணைந்து கூட்டாக செயல்பட்டதையும் காங்கிரசின் முக்கிய தலைவர்களோ தான் அழைத்தும் வரவில்லை என்று வருத்தப்பட்டதையும் இத்துடன் நாம் இணைத்து பார்க்க வேண்டும்!
“பாஜக அதன் சித்தாந்தத்தில் செயல்படும்போது காங்கிரஸ் அதன் சித்தாந்தத்தில் செயல்பட வேண்டும். பாஜகவுக்காகவே நாம் செயல்பட முடியாது. ஆகையால் மென்மையான இந்துத்வா போக்கை காங்கிரஸ் கைவிட வேண்டும். உண்மையான நீண்டகாலமாக கட்சியில் கொள்கையாளர்களுக்கே மாநில முதல்வர் மற்றும் தலைவர் போன்ற முக்கிய பதவிகள் தரப்பட வேண்டும் என்றார் ஆனந்த் சர்மா!
உண்மைதான்! சந்தர்ப்பவாதிகளும்,செயல்படாத தலைவர்களும் நிறைந்த கூடாரமாக காங்கிரஸ் இருக்கும் வரை பாஜக பலம் பெற்றுக் கொண்டு தான் இருக்கும்! 1952 ல் மூன்று தொகுதிகளையும், மூன்றரை சதவிகித வாக்குகளையும் மட்டுமே பெற்று இருந்த ஜனசங்கம் 1984 ல் பாஜகவாக பரிணாம வளர்ச்சி பெற்று தேர்தலை சந்தித்த போது வெறும் இரண்டு இடங்களே பெற்றது! அப்படிப்பட்ட பாஜகவானது இன்று விஸ்வரூப வளர்ச்சி எடுத்துள்ளதற்கு காரணம், காங்கிரஸின் பலவீனங்களே!
பாஜகவின் தாய் கட்சியே காங்கிரஸ் தான்! காங்கிரசுக்குள் நீண்ட காலமாக இந்துத்துவ கொள்கையுடன் வலம் வந்தவர் சியாம் பிரசாத் முகர்ஜி! இவர் நேரு அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக செல்வாக்குடன் திகழ்ந்தவர்.கோட்சேயின் தீவிர ஆதரவாளர். காந்தி படுகொலைக்கு பிறகு உடனடியாக இந்த மாதிரியான ஆட்களை கட்சியில் இருந்து களை எடுத்திருக்க வேண்டும் காங்கிரஸ்! இவர் தான் காஷ்மீர் பிரச்சினையில் வில்லங்கமாக நேருவை அவதூறு செய்துவிட்டு வெளியேறி ஜனசங்கம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். அந்த ஜனசங்கம் தான் பிற்காலத்தில் பாஜகவானது!
இவர் வெளியேறும் போதே அனைத்து இந்துத்துவ ஆதரவாளர்களையும் அழைத்துக் கொண்டு வெளியே செல்லவில்லை. காங்கிரஸ் கட்சியிலும், ஆட்சியிலும் இந்துத்துவ ஆதரவாளர்களான கோவிந்த் வல்லபந்த், மாளவியா, புருஷோத்தம் தாஸ்டாண்டன் போன்றோர் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி, நேருவுக்கு பல விதங்களிலும் நெருக்குதல் தந்த வண்ணம் இருந்தனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். விடுதலை கிடைத்தது முதல் தொடர்ந்து ஆட்சியில் இருந்த காங்கிரஸில் இவர்கள் பல நிலைகளிலும் செல்வாக்கு செலுத்தி, காங்கிரசில் சோஷலிச சித்தாந்தங்கள் மற்றும் காந்தியக் கொள்கைகள் பின்னடைவைக் காண வழிவகுத்தனர்!
இவர்களை அடியொற்றி வந்தவர்கள் தான் பல்வேறு காலகட்டங்களில் காங்கிரசில் இருந்து விலகி, பாஜகவில் சேர்ந்து அதனை பலப்படுத்தினார்கள்! 2014 ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற போது மணிப்பூர், மேகாலயா, மிசோராம், திரிபுரா, நாகலாந்து, சிக்கிம், புதுச்சேரி, லட்சத் தீவுகள் ஆகிய எவற்றிலுமே பாஜகவிற்கு சுத்தமாக பிரதிநிதித்துவம் இல்லை. ஆனால், இன்றோ, இவை அனைத்திலும் பாஜக ஆட்சி நேரடியாகவும் கூட்டணி மூலமாகவும் ஆட்சி செய்கிறது. அந்த ஆட்சிக்கு அடித்தளமிட்டவர்கள் அனைவருமே காங்கிரசில் இருந்து பாஜகவிற்கு தாவியவர்களே! இன்று பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம் முதல்அமைச்சர்களாக, அமைச்சர்களாக, எம்.பிக்களாக எம்.எல்.ஏக்களாக, உள்ளாட்சிகளில் கவுன்சிலர்களாக இருப்பவர்களில் கணிசமானவர்கள் முன்னாள் காங்கிரஸாரே!
இதற்கெல்லாம் அடிப்படை காங்கிரசில் காந்தியக் கொள்கையிலும்,சோசலிசக் கொள்கையிலும் தெளிவும், உறுதிப்பாடும் இல்லாத சந்தர்ப்பவாத கூட்டத்தின் ஆதிக்கம் தழைத்தோங்கியதே ஆகும்! இன்னும் சொல்வது என்றால், மேற்படி கொள்கையில் பற்றுள்ளவர்கள் அந்த கட்சியில் தனிமைப்படுத்தப்பட்டனர்! ஊழல்வாதிகள் அதிகரித்தனர். கருப்பு பண முதலைகளுக்கே பதவிகள் மீண்டும், மீண்டும் தரப்பட்டன! அவர்கள் தான் கட்சியை இன்று பலவீனப்படுத்திவிட்டு பாஜகவிற்கு தாவியுள்ளனர்.
காங்கிரஸின் நட்சத்திர பேச்சாளரான ஆர்.பி.என்.சிங். மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்திய சிந்தியா, கோவாவில் லூய்சின்ஹோ ஃபலேரோ, அசாமில் சுஷ்மிதா தேவ் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் ஜதீன்பிரசாதா, லலிதேஷ் திரிபாதி, ரீடா பகுகுணா, குஜராத்தில் தினேஷ் ஷர்மா ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் பதவி பெற்றுள்ளவர்களில் சிலர்! இவை எல்லாமே தலைவர்கள் லிஸ்ட்! ஜனநாயக சீரமைப்புக்கான அஷோசேசியன் தகவல்படி 2014 முதல் 2021 க்கு இடைப்பட்ட காலத்தில் மட்டுமே எம்.பி, மற்றும் எம்.எல்.ஏக்கள் 177 பேர் காங்கிரசில் இருந்து பாஜகவிற்கு தாவியுள்ளனர்! பஞ்சாபில் பாஜகவில் இருந்து வந்த சித்துவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அதனால் விரக்தி அடைந்த அமீந்தர் சிங்கை பாஜக மறைமுகமாக இயக்கியது என்பதை காலம் கடந்தே கவனித்து நடவடிக்கை எடுத்தது காங்கிரஸ் தலைமை! வரலாறு காணாத விதத்தில் அதிக துரோகங்களை சந்தித்துக் கொண்டுள்ளனர் சோனியாவும் ராகுலும்!
பாஜகவை வழி நடத்த ஆர்.எஸ்.எஸ் இருப்பது போல காங்கிரஸை வழி நடத்திச் செல்லும், காந்தியப் பண்புள்ளவர்களையும்,சோசலிச சித்தாந்தவாதிகளையும் கொண்ட ஒரு அமைப்பு இல்லை. 1950 களிலேயே காங்கிரசில் இருந்து காந்தியவாதிகளும்,சோசலிஸ்டுகளும் மெல்ல,மெல்ல வெளியேறி வந்தனர். ராம் மனோகர் லோகியா, ஜே.சி.குமரப்பா, ஜெயப்பிரகாஷ் நாராயணன்..உள்ளிட்ட எத்தனையோ உன்னத ஆளுமைகளை ஆரம்ப காலத்தில் இருந்தே காங்கிரஸ் இழந்தது துரஅதிர்ஷ்டமே! ஆகவே, இப்போதாவது இப்படிப்பட்ட கொள்கையாளர்களை – அவர்கள் கட்சிக்கு வெளியில் இருந்தாலும் கூட – அடையாளம் கண்டு – அங்கீகரித்து தன்னை சரி செய்து கொள்ள வேண்டும் காங்கிரஸ்!
குறிப்பாக மாநில காங்கிரஸ் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர்கள் செயல்படாதவர்களாக இருப்பதை காங்கிரச் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருவதையே ஒரு அபூர்வ நிகழ்வாக கொண்டவர்கள் காங்கிரசில் மட்டுமே மாநில மற்றும் மாவட்டத் தலைவர்களாக முடியும். மாநிலம் முழுக்க சுற்றிச் சுழன்று வரக் கூடியவர்களாகவும், நாளும்,பொழுதும் கட்சிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். முக்கியமாக சொந்தத் தொழில் செய்பவர்களை மாநிலத் தலைவர்களாக நியமிக்கவே கூடாது!
பஞ்சாபில் காங்கிரஸ் முதல்வரை ஆம் ஆத்மியின் ஒரு சாதாரண செல்போன் ரிப்பேர் செய்யும் இளைஞன் வென்றுள்ளான் என்றால், எப்படிப்பட்ட செல்வாக்கில்லாத ஒருவரை காங்கிரஸ் முதல்வராக அறிவித்தது என்பதை கவனிக்க வேண்டும். கட்சிக்குள் தேர்தல் நடத்தி தலைவர்கள் தேர்ந்தெடுக்கும் நிலையை புதுப்பிக்க வேண்டும்! அடுத்ததாக செயல்படாத, கட்சிக் கொள்கைகளைக் கூட அறிந்திராத வாரிசுகளை கட்சிக்குள் திணித்து பதவி வாங்குபவர்களுக்கு செக் வைக்க வேண்டும். இனிமேலாவது கட்சியை கொள்கை பூர்வமாகவும் ஜனநாயக ரீதியாகவும் நடத்தினால் மட்டுமே காங்கிரசுக்கு எதிர்காலம் இருக்கும்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
பாஜகவை வழி நடத்த ஆர்.எஸ்.எஸ் இருப்பது போல காங்கிரஸை வழி நடத்திச் செல்லும், காந்தியப் பண்புள்ளவர்களையும்,சோசலிச சித்தாந்தவாதிகளையும் கொண்ட ஒரு அமைப்பு இல்லை. ( 100 % TRUE )