ஹிஜாப்பிற்கு தடை! பல கேள்விகளை எழுப்புகிறது!

உலகம் முழுக்க இஸ்லாமிய பெண்கள் எல்லா நாடுகளிலும் ஹிஜாப் அணிகிறார்கள்! இது முகத்தை மறைக்கும் உடையல்ல! இந்த முக்காடு வழக்கம் வட இந்திய பெண்களிடமும் உண்டு! ஹிஜாப் தடைக்கு ஆதரவாக கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கப்படுமா?

ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக கர்நாடகத்தின் உடுப்பி இஸ்லாமிய மாணவிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்கில் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்றே! ஏனெனில், இந்த சர்ச்சை வெடித்த போதே கர்நாடக அரசின் ஹிஜாப் அணியக் கூடாது என்ற அதிரடி அரசாணைக்கு தீர்ப்பு தரும் வரை இடைக்கால தடை விதிக்கக் கூட நீதிமன்றம் மறுத்தது நினைவிருக்கலாம்! ”பன்நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ள ஒன்றுக்கு அதிரடி தடை அவசியமில்லை. நாங்கள் விசாரித்து தீர்ப்பு தரும் வரை இது வரையிலான நடைமுறை தொடரட்டும்.மாணவிகளை கல்வி நிலையங்களுக்குள் அனுமதியுங்கள்” என்று சொல்லி இருக்க வேண்டுமல்லவா?

“ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நம்பிக்கையின்படி அத்தியாவசிய பழக்கம் இல்லை. ஆகையால் கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவித் துண்டு என மத அடையாளங்களைத் தாங்கி வரத் தடை விதித்து பிப்ரவரி 5, 2022-ல் விதிக்கப்பட்ட தடை செல்லும். பள்ளிச் சீருடை என்பது சட்டபூர்வமானதே” என்று நீதிபதிகள் அளித்துள்ள தீர்ப்பு பல விவாதங்களை தோற்றுவித்துள்ளது.

பள்ளிச் சீருடையை அணிய இஸ்லாமிய மாணவிகள் மறுக்கவில்லை. ஹிஜாப் என்பது தலையைச் சுற்றி அணியும் ஒரு சிறிய முக்காடு! அது முகத்தையோ, உடல் முழுக்கவோ மறைக்கும் உடையல்ல! தலையில் சிலர் தொப்பி போடுவது போல, தலையை சுற்றி சீக்கியர்கள் தலைப்பாகை அணிவது போன்றதே இது! பல மார்வாடி மற்றும் சீக்கிய பெண்களிடமும் இந்த பழக்கம் உள்ளது. இதற்கு தடை போட வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை! ஏனெனில், சாதாரணமாக அதிக வெயிலை தாக்குபிடிக்கவோ அல்லது கடும் குளிரை தாக்குபிடிக்கவோ கூட பெண்கள் தங்கள் தலையையும், காதையும் மூடிக் கொள்ளும்படியாக துப்பட்டாவை அணிவதுண்டு!

நாம் ஹிஜாப்பை முகம் முழுமையும் மூடக்கூடிய புர்காவுடனோ, அல்லது கண்கள் மட்டும் தெரிய அணியும் நிகாப் உடனோ போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது! ஹிஜாப் அணியும் ஒரு பெண் தன் முகத்தை மறைப்பதில்லை! இன்னும் சொல்வதென்றால் முகம் மட்டும் பளிச்செனத் தெரிவது போல அணிவதே ஹிஜாப்பாகும்! ஆக, எந்த வகையில் பார்த்தாலும் இது ஒரு வெறுக்கத்தக்க உடையல்ல! அதுவும், கொரோனா காலத்தில் அரசாங்கமே வாயையும்,மூக்கையும் மூட மாஸ்க் அணியச் சொல்கிறார்களே, அதைவிட இதில் என்ன அசெளரியம் உள்ளது? ஏன் மாணவிகளை கல்வி நிலையங்களுக்குள் நுழைய தடை போட்டார்கள்? அவ்வளவு மோசமான உடையல்லவே இது! எனில், யாரையும் பாதிக்காத ஒரு தனி மனித சுதந்திரத்திற்கு எப்படித் தடை போட முடியும்? இன்னும் சொல்வதென்றால், இது போன்ற தனி மனித சுதந்திரத்திற்கு ஆபத்து வருமானால் அதை காப்பாற்ற வேண்டியதே நீதிமன்றம் தானே!

ஏற்கனவே உச்ச நீதிமன்றம் ஒருவர் என்ன உடை உடுத்த வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்பதை யாரும் தீர்மானிக்க முடியாது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. ஒருவரின் உடை மற்றவரை பாதிக்கும்படியாகவோ, பொது நலனுக்கு எதிராகவோ இருந்தால் அதில் நீதிமன்றம் தலையிடலாம். இது ஒரு இயல்பான அடிப்படை உரிமை. இந்த சர்ச்சைக்கு மத வன்மம் கொண்ட ஆளும் பாஜகவே காரணம். இந்தியாவில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் நீண்ட காலமாக ஹிஜாப் அணிந்திருக்கிறார்கள். இதில் யாரும் தவறு கண்டதில்லை. இது யாரையும் தொந்தரவு செய்ததாக தகவல்கள் இல்லையே!

இந்தத் தீர்ப்பு குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில்கூறியுள்ள கருத்து கவனிக்கதக்கது; “கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது. ஹிஜாப் என்பது நீங்கள் நினைத்துக் கொண்டிப்பதுபோல் வெறும் ஆடை பற்றியது அல்ல. ஒரு பெண் எப்படி ஆடை அணிய விரும்புகிறாள் என்பதைத் தேர்ந்தெடுக்கும் அப்பெண்ணின் உரிமையைப் பற்றியது. இந்த அடிப்படை உரிமையை நீதிமன்றம் நிலைநாட்டவில்லை என்பது கேலிக்குரியது” என்று பதிவிட்டுள்ளார்.

இதே போல மக்கள் ஜனநாயக கட்சி தலைவரான மெகபூபா முப்தி கூறியுள்ளதும் கவனத்திற்குரியது. ஒரு புறம் பெண்களின் உரிமை மற்றும் மேம்பாடு பற்றி பேசும் நாம், மற்றோரு புறத்தில் அவர்கள் என்ன அணிய வேண்டும் என்பதற்கான சிறு உரிமையை கூட தருவதில்லை. இந்த உரிமையில் நீதிமன்றங்கள் தலையிட கூடாது என்று கூறியுள்ளார்.

ஹிஜாப்பிற்கு விதிக்கப்படும் தடை சீக்கியர்கள் அணியும் தலைப்பாகைக்கும் பொருந்துமா? பள்ளிக் கூடத்திற்கு திருநீரு பூசி வரும் மாணவர்களுக்கு தடை போட முடியுமா? கோர்ட்டுக்கு வரும் நீதிபதிகளே நெற்றியில் திருநீர் மற்றும் குங்குமம் வைத்து வருகிறார்களே என்ற கேள்வி எழுமானால் அதற்கு என்ன பதில்? சட்டம் என்பது பாரபட்சமாக இருக்க முடியாதல்லவா?

ஆகவே, நமது உச்ச நீதிமன்றம் இந்த கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை அங்கீகரிக்காது என்றே தோன்றுகிறது. இந்த சர்ச்சைக்கு பாரபட்சமின்றி விரைவில் நல்ல தீர்ப்பு கிடைத்து சமூகத்தில் சகஜமான சமூகச் சூழல் நிலவ வேண்டும் என்பதே பொதுவான மக்களின் விருப்பம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time