ஆர்.எஸ்.எஸின் வீரியமான கலைவடிவமே காஷ்மீர் பைல்ஸ்!

-ச.அருணாசலம்

காஷ்மீர் மண்ணில் இந்து பண்டிட்களின் கண்ணீரும், ரத்தமும் மட்டுமா உறைந்திருக்கிறது! அதே அளவுக்கு இஸ்லாமியர்களின் இழப்புகளும் உண்டே! இந்த இருதரப்புக்குமான இணக்கத்தை சீர்குலைத்த கூட்டமே இந்த படத்தையும் எடுத்துள்ளது! அரைகுறை உண்மைகளைச் சொல்லி இஸ்லாமிய துவேஷத்தை பரப்புகிறது!

அரைகுறை உண்மைகளையும் , ஆதாரமற்ற புனைவுகளையும் ஒருதலைபட்சமான காட்சி படிமங்களாக்கி ’முஸ்லீம் வெறுப்பு’ என்ற குரூர நோக்கத்திற்காக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம் காஷ்மீர் பைல்ஸ்! அதில் வெற்றியும் பெற்றுள்ளது. கலைத் திறமையும்,  நவீன சினிமா தொழில் நுட்பங்களும் கைகோர்த்து இந்துத்துவ நோக்கத்தை நிறைவு செய்கின்றன!

காஷ்மீர் பண்டிட்  சமூக மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு தீர்வு வேண்டும். அந்த ஈனச் செயல்களில் ஈடுபட்டோரை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும். புலம் பெயர்ந்த பண்டிட் சமூக மக்களை மீண்டும் அவர்களது வாழ்விடங்களில் குடியமர்த்த வேண்டும். யுகம் யகமாக ஒன்றாக பின்னிப்பிணைந்து வாழ்ந்த காஷ்மீர் முஸ்லீம்களும், காஷ்மீர் பண்டிட்களும் ‘காஷ்மீரியத்’ என்று போற்றப்படும் காஷ்மீரத்துக்கே உரித்தான மத நல்லிணக்கத்தை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பது நாமனைவரின் விருப்பம் ஆகும் ! ஆனால், இந்தப் பிரச்சினையின் மூலத்தை முழுமையாக உள்வாங்காமல் அது சாத்தியமில்லை.

‘கெடு நோக்கத்தை பரப்ப வேண்டும் மத வெறியை கிளற வேன்டும் அரசியல் ஆதாயம் பெற வேண்டும்’ என்பதற்காக பிரதம சேவக் மோடி தொடங்கி கடைக்கோடி இந்துத்துவர் வரை இப்படத்தை பெருமளவு பாராட்டி வியந்து மற்றோரையும் பார்க்க தூண்டுகின்றனர் . அப்படி பார்ப்பது என்பது ஆயிரம் பசுக்களை தானம் செய்வதைவிட சிறந்த செயலாம் !

மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன என்று இந்த (இந்து?) விமர்சகர்கள் புகழாரம் சூட்டுகின்றனர்.சோழியன் குடுமி சும்மா ஆடாது!

வரலாற்று நிகழ்வுகளை பற்றியும் ,வரலாற்று சோகங்களை பற்றியும் , அனைத்து யுத்தங்கள் பற்றியும், சினிமா படங்கள் பல வெளிவந்துள்ளன. இவைகளில் பல வெறும் பிரச்சார ரீல்களாகவும் , ஒருதலைப்பட்சமானதும், ஒருபக்க நியாயத்தை பேசுவதாகவும் வந்து போயின.

ஆனால், ஒருசில படங்கள் உண்மையை – அது யாரை எவ்வளவு சுட்டாலும் – இருபக்க நிகழ்வுகளையும் உள்வாங்கி பார்வையாளனை வெளிச்சத்தை நோக்கி நடைபோடத்தூண்டும் . அந்த வகை படங்களுக்கு பிரச்சார டமாரங்கள் தேவையில்லை.

ஆனால், வக்கிரங்களுக்கும், மிருக வெறிக்கும் மக்களை இழுப்பதற்கு பல வழிகளில் முயற்சி நடக்கின்றன. அவற்றில் ஒன்றே இந்த படமும் என்பதில் இருவேறு கருத்துக்களில்லை.

காஷ்மீர் பண்டிதர்களின் துயரமும், சோகமும் மதவெறியைத் தூண்டவிழைவோர்க்கு பிரச்சார அம்சங்களாக மாறலாகாது. இந்து மத வெறியர்களின் பகடைக்காயாக காஷ்மீர் பண்டித சமூகம் ஆக்கப்பட்ட உண்மையை மறைத்துவிட முடியாது!

இல்லையென்றால் ‘அண்ணன் தம்பி, மாமன் மச்சான் என்பதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை’ என்பதை இப்படம் விவரிப்பதாக இதன் அபிமானிகள் பெருமை கொள்வதின் அர்த்தம் இதில்தான் உள்ளது . நல்லிணக்கத்தை உருவாக்க அல்ல!  மத வெறியை, மத வெறுப்பை கட்டியெழுப்பவே காட்சிகள் ஜோடிக்கப்பட்டுள்ளன. இந்தப் புனைவுக்கு உண்மை தான் பலியானது என்பதில் வியப்பில்லை.

முதலில் சில உண்மைகளை மனதில் கொள்வோம் . காஷ்மீரத்தில் இருந்து பண்டித சமூகத்தினர் 1990ல் பெருமளவு வெளியேறினர் , அப்பொழுது காங்கிரஸ் ஆட்சியில் இல்லை . பாரதிய ஜனதா கட்சி முட்டுக்கொடுத்து நிறுத்தப்பட்ட வி.பி.சிங் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. 1989 டிசம்பர் முதல் நவம்பர 1990 வரை அவர்தான் பிரதமர். வெளியேற்றம் 1990 ஜனவரியில் தொடங்கியது, அப்பொழுது அதை ஊக்குவித்தவர் எமர்ஜென்சி அத்து மீறல் புகழ் ஜக்மோகன் தான் . அவர்தான் அன்று காஷ்மீர் கவர்னர். அத்வானியால் பரிந்துரைக்கப்பட்டு- அவர் தீவிர முஸ்லீம் வெறுப்பாளராகவும், ஆர்.எஸ்.எஸ் பக்தராகவும் இருந்த காரணத்தால்- கவர்னர் பதவியில் அமர்த்தப்பட்டார். அவரது பாரபட்சமான நிர்வாகத்தால் தான் முஸ்லீம்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி  தீவிரவாதம் உருவானது. அதை காரணம் காட்டி, அரசு அடக்குமுறையும் தலைவிரித்து ஆடியது. ஆக,  நல்லிணக்கத்துடன் வாழ்ந்த காஷ்மீர் பண்டிட்டுகளை நரகத்திற்கு தள்ளும் சூழலை உருவாக்கியதே ஆர்.எஸ்.எஸ், பாஜக கூட்டணி தான்!

அதே சமயம் இந்தச்சூழலுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், அக்கட்சியின் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லாமல் இல்லை. 1987ல் நடந்த ராஜீவ் பரூக் தேர்தல் மோசடியும் அதையொட்டிய படுகொலையும் காஷ்மீரை புரட்டி போட்டது ; ஆசாதி கோஷமும் காஷ்மீர் இளைஞர்களை அரவணைத்து கொண்டது.

இந்திய அரசி அளவுக்கு அதிகான படைகுவிப்புகள், அந்த படை வீரர்களின்  அத்துமீறல்கள் இந்தியாவிற்கெதிரான மனவோட்டத்தை ஊக்குவித்தன. 1988-1990 ஆண்டுகளில் நிகழ்ந்த சோவியத் வீழ்ச்சியும், சிறு சிறு நாடுகளும் தேசிய இனங்களும் சுதந்திரக் காற்றை அனுபவிக்க தொடங்கிய நிகழ்வு காஷ்மீர இளைஞர்களையும் பாதித்தது.

களநிலவரங்களைப்பற்றி கவலைப்படாமல் , சீரழிவு எங்கிருந்து தொடங்கியது என்ற எண்ணமோ இப்பிரச்சினைக்கு  நியாயமான தீர்வு பற்றி கவலையின்றி ஒரு கட்சி தனது அரசியல் ஆதாயத்தை பற்றியே அதிகம் கவலை கொண்டது. அவர்களுக்கு காஷ்மீர் பண்டிதர்களின் அல்லல் அவர்களது மதவெறுப்பு அரசியலுக்கு பலிகடாவாயிற்று.

காஷ்மீர் பைல்ஸ் படம் இவ்வளவு நாள் மறைக்கப்பட்ட உண்மையை வெளிக்கொணர்ந்தாக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்றத்தில் திருவாய் மலர்ந்துள்ளளார். இவர் எந்த உண்மை பற்றி பேசுகிறார்?

இதைப்போன்றே உள்துறை அமைச்சர் அமீத் ஷா கட்ந்த பிப்ரவரி 23ல் நாடாளுமன்றத்தில்  பேசும்பொழுது ‘44,000 காஷ்மீர் பண்டிட் குடும்பங்களுக்கு தலா 13,000 ரூபாய் மாதந்தோறும் பாஜக அரசு வழங்குவதாக நீட்டி முழக்கினார் . ஜம்மு காஷ்மீர் அரசு ஆவணமோ 20,889 குடும்பங்களே உதவி பெற்றனர் என்கிறது. எது உண்மை?

இதைப்பற்றி புலம்பெயர்ந்த காஷ்மீர் மக்கள் வீடு திரும்புதல் புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க அமைப்பின் ( Reconciliation ,Return and Rehabilation oh Kashmir Migrants)  தலைவரான சதீஷ் மகால்தர் இப்படி கூறுகிறார் ” மன் மோகன் சிங் காலத்தில் 2008-2009 கொண்டுவரப்பட்ட திட்டம் மூலம் நிவாரணமும் 6,000 பண்டிட் சமூக இளைஞர்களுக்கு அரசு வேலையும் மொத்தம் 15,000 பணி வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டன. பாஜ க அரசு இதற்காக, பண்டிட்களின் புனர் வாழ்விற்கு ஒரு துரும்பைக்கூட எடுத்துப்போடவில்லை “என்று புலம்புகிறார் (பார்க்க்: 23/2/2021 டெலிகிராப் இந்தியா) .

பாஜ க ஆதரவாளரும், பனூன் காஷ்மீர் அமைப்பின் தலைவரும் ஆன அக்னிஷேகர் – புலம் பெயர்ந்த காஷ்மீர் பண்டித சமூகத்தினர்கான நமது காஷ்மீர் அமைப்புதான் பனூன் காஷ்மீர் ஆகும் – ” அமீத் ஷாவின் அறிக்கையும் பேச்சும் சந்தர்ப்ப வாதம் வெட்ககேடான செயல்! எப்படி இவர்களால் ஒரு துரும்பைக்கூட அசைக்காமல், ‘அதை செய்தோம் இதை செய்தோம்’ என்று பிதற்ற முடிகிறது?” என்று வேதனை படுகிறார்.

இது போன்ற எண்ணற்ற காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரும் பாஜக மற்றும் ஆர்எஸ்.எஸ் அமைப்பினர் தங்களை – தங்களின் துயரத்தை – அரசியல் ஆதாயத்திற்காக உபயோகிப்பதும் பண்டிட்களின நல்வாழ்விற்கு எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பதை கண்டு வெதும்புகின்றனர் . அரசியல் பிரிவு370 நீக்குவதால் எங்களுக்கு மறு வாழ்வு கிடைக்காது மேலும் 35 A  பிரிவு எங்களின் – காஷ்மீரிகளின் – தனித்தன்மையை பாதுகாக்கிறது என்ற வாதம் இப்பொழுது காஷ்மீர் பண்டிட் மக்களும் உணர்ந்துள்ளனர் என்கிறார் சோன் காஷ்மீர் முன்னணி அமைப்பினர் இவர்கள் பண்டிட சமூக அமைப்பினரே!

அவர்கள் பாஐகவின் வெற்று கோஷங்களால் எங்கள் வாழ்வு மலரப்போவதில்லை என்கின்றனர்.

காஷ்மீர் பண்டிட்களை பாதுகாக்கிறேன் என்ற போர்வையில் அவர்களை மத துவேஷிகளாக ஆர் எஸ்.எஸ் இயக்கம் எப்படி மாற்றியதோ அதைப்போன்றே வஹாபிசம் என்ற முஸ்லீம் பழமைவாதமும் காஷ்மீர் சுபி முஸ்லீம் மக்களை தீவிரவாதிகளாக மதப் போராளிகளாக மாற்றியது.

இவ்விரண்டு மதப்போக்குகளும் பேரில் வேறாக இருக்கின்றனவே ஒழிய மத வெறியையும் மத துவேஷத்தையும் விதைத்து வளரத்தெடுப்பதில் ஒன்றாகவே உள்ளனர்!

இதனால் பலிகடாவானது ‘காஷ்மீரியத்’ என்ற தனிச் சிறப்பு வாய்ந்த கலாசாரப் பாரம்பரியம்.

ஒவ்வொரு பண்டிட் வீட்டு திருமணத்திலும் தவறாமல் இடம்பெற்ற காஷ்மீர் முஸ்லீம் நாட்டுப்புற இசைக்கச்சேரிகளும், விருந்தும் இன்று சீரழிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காஷ்மீர் முஸ்லீம் மக்களின் ஆலோசகரகளாக பண்டிட்கள் திகழ்ந்த காலம் மலையேறிவிட்டது!

ஒன்றிப்பிணந்த ஒரே மொழி பேசி உறவாடிய சமூகங்கள் இன்று எதிரும் புதிருமாக நிறுத்தப்பட்டு வருகின்றனர் . 95:05 என்றும் 80:20 என்றும் பெரும்பான்மை சிறுபான்மை மாயக்கணக்குகளை போடும் ஆட்சியாளர்களின் சூழ்ச்சிக்கு பலியாவது இரு பான்மையினரும்தான் என்று எப்போது உணர்வார்கள்?

அவர்கள் உணரக்கூடாது , துவேஷமே வளரவேண்டும் என்பதே காஷமீர் பைல்சின் நோக்கமாகும்! இதை வளரத்தெடுக்க திட்டமிட்டு பணியாற்றும் காரியகர்த்தாக்களுக்கு மோடியின் பாராட்டுகள் குவிவதில் ஆச்சரியமில்லை!

ஆனால், நமக்கு புகழ்பெற்ற காஷ்மீரப் பெருங்கவி அகா ஷாகித் அலியின் கவிதை வரிகள் நினைவிற்கு வருகிறது.

“என்னுடைய ஞாபகங்கள் எல்லாம் 

  உன்னுடைய வரலாற்றிற்கு குறுக்காக நிற்கிறதே…”

என்ற அவரது வரிகள் எவ்வளவு பொருள் பொதிந்தவையாக உள்ளன.

ஆம், காஷ்மீர் பண்டிட்களின் ஞாபகங்களில் இருக்கும் கடந்த கால நினைவுகளும், மனதில் ஆழப்புதைந்துள்ள வாஞ்சை நிறைந்த எண்ணங்களும் முஸ்லீம் மக்களுக்கும் உரியவை அல்லவா? இவையெல்லாம் கலந்த பெருங்கலாச்சார மாண்பே காஷ்மீரியத் எனப்படும் உணர்வு! அவ்வுணர்வை அரசியல் பிரிவு 370ஐ சிதைத்தது போன்று சிதைத்துவிடலாம் என்று ‘காஷ்மார் பைல்ஸ் ‘ படம் மனப்பால் குடிக்கிறது.

அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் ஒருவேளை மோடி ஜெயித்துவிட்டால் ‘குஜராத் பைல்ஸ்’ என்ற படம் எடுத்து  2002 குஜராத் கலவரத்தின் போது அன்றைய முதல்வர் மோடி எவ்வளவு ஜீவகாருண்யத்துடன் செயல்பட்டார் என்பதை விளக்குவார்  இந்த படத்தின் இயக்குனர் திருவாளர் விவேக் அக்னி ஹோத்ரி என்று நம்பலாம்.

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time