சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வீபரீதங்கள்! வலுக்கும் எதிர்ப்புகள்!

-சாவித்திரி கண்ணன்

இயற்கையாகவே நோய் எதிர்ப்புத் திறன் உள்ள சிறார்களுக்கு கொரோனா அச்சுறுத்தல் அறவே இல்லை. வலிந்து தடுப்பூசியை திணிப்பது நீண்டகால நோக்கில் பல பாதகமான விளைவுகளை தரும் என சர்வதேச அளவில் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர்கள் எதிர்க்கிறார்கள்! அதையும் மீறி ஏன் இந்த திணிப்பு?

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இந்தியாவில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அவசியமா என்பது குறித்தும், குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்தும் தேசிய நோய் பரவல் தடுப்பு வல்லுநர் குழு ஆலோசனை மேற்கொண்டது. இரண்டு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில் கூடுதல் டோஸ் தடுப்பூசி மற்றும் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஒரு சில நிபுணர்களைத் தவிர பெரும்பாலோனோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் எந்த இறுதி பரிந்துரையும் செய்யப்படவில்லை என்று தகவல் வெளியானது.

உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் பலர் குழந்தைகளுக்கு இயற்கையிலேயே நோய் எதிர்ப்புணர்வு அதிகம். கொரோனா அவர்களை அதிகம் தாக்கவில்லை. உயிரிழப்புகளும் குழந்தைகளை பொறுத்த வரை ஆல்மோஸ்ட் இல்லை. ஆகவே, அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி தேவையற்றது என எச்சரித்ததையும் மீறி இந்தியாவில் 12-14 வயதுடைய சிறுவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கிவிட்டது. ஒன்றிய அரசு நிர்பந்தத்தினால் 12-14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இதை பள்ளிகள் மூலமாக வலிந்து செலுத்துவது மிகவும் தவறு. பெரியவர்களுக்கு செலுத்தப்பட்டது போலவே, விருப்பமுள்ளவர்கள் தங்கள் குழந்தைகளை மருத்துவமனை அழைத்து வந்து போட்டுச் செல்லலாம் எனக் கூறி இருக்க வேண்டும். பள்ளிகள் பெற்றோர்களின் இசைவை பெறாமல் இதை திணிக்க கூடாது. பெற்றோர்கள் மறுத்தால் விட்டுவிட வேண்டும்.

ஐதராபாத்தை சேர்ந்த பியோலாஜிக்கல்-இ நிறுவனம் அமெரிக்க நிறுவனத்துடன்  இணைந்து கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. தமிழகத்திற்கு 21 லட்சத்து 60 ஆயிரம் டோஸ் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் தவணை தடுப்பூசி செலுத்திய பிறகு 28 நாட்களுக்கு பிறகு 2-வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தடுப்பூசிக்கான தேசியத் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (National Technical Advisory Group on Immunisation in India) குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு எந்த அவசரமும் ஏற்பட்டுவிடவில்லை. இந்த விஷயத்தில் நிதானமாகக் கண்காணித்துவிட்டு முடிவெடுக்கலாம் என்று சென்ற ஆண்டு டிசம்பர் 21 அன்று மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்திருந்தது. இந்தக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரும் நாட்டின் முன்னணி தொற்றுநோயியல் நிபுணர்களில் ஒருவருமான மருத்துவர் ஜெயப்பிரகாஷ் முளியில் கூறியதாவது;

டாக்டர்.ஜெயப்பிரகாஷ் முளியில்

”உலக அளவில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்குக் கீழுள்ளவர்களில் கிட்டத்தட்ட ஒருவர்கூட இறக்கவில்லை. ஒருசிலர் இறந்திருந்தாலும் அவர்கள் ரத்தப் புற்றுநோய், புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான பிற நோய்களால்தான் இறந்திருக்கிறார்கள். இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாம் அலையில் சிறாருக்கு அதிக பாதிப்பு இருக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இந்தியாவில் குழந்தைகளையும் உள்ளடக்கி ஏற்கெனவே 70% பேருக்கு இயற்கையாகவே கரோனா தொற்றி, அகன்றும்விட்டது. எனவே, தனியாகக் குழந்தைகளை மையம் கொண்டு கரோனா அலை தோன்றும் என்பதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை.இந்தச் சூழலில் சிறார்கலுக்கு கொரோனா தடுப்பூசியை முன்னெடுப்பதற்கு வணிக நோக்கத்த தவிர வேறு காரணங்கள் இருப்பதாக தெரியவில்லை’’ எனக் கூறி இருந்தார்!

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் மூத்த பேராசிரியரும், கோவேக்ஸின் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் தொடர்பான ஆய்வுக் குழுவின் தலைவருமான டாக்டர் சஞ்சய் கே ராய், “குழந்தைகளில் கோவிட் பாதிக்கப்பட்ட 10 லட்சம் பேரில் வெறும் 2 பேர் மட்டுமே இறக்கின்றனர். ஆகவே, சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்த வேண்டுமா என்ற கேள்விக்கே இடமில்லை.கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என எச்சரித்து இருந்தார்! இது குறித்து நாம் ஏற்கனவே அறம் இதழில்,

குழந்தைகளுக்கு தடுப்பூசி கூடாது ! பிரபல நிபுணர்கள் எதிர்ப்பு!

என விரிவாக இவர் போன்றவர்களின் கருத்தை எழுதி இருந்தோம்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொற்று நோயியல் துறை தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா, ”குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத்தேவையில்லை. கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு குழந்தைகள் காரணமாக மாட்டார்கள். அதுமட்டுமல்ல, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதால் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்து விடாது. கொரோனா தொற்றைப் பொறுத்தமட்டில் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவது என்பது மிகக்குறைந்த அளவில்தான் என பல்வேறு ஆதாரங்கள் காட்டுகின்றன. கொரோனாவுக்கு எதிராக குழந்தைகளுக்கு போடுவதற்கு அங்கீகாரம் பெறுகிற எந்தவொரு தடுப்பூசியும், சவப்பெட்டிக்கான கடைசி ஆணியாக அமைந்து விடாது. குழந்தைகள், கொரோனா தொற்றை பரப்பவில்லை. எனவே, கொரோனா தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்த வேண்டிய அவசியமில்லை’’ எனக் கூறியுள்ளார்.

டாக்டர்.ககன் தீப்

மத்திய அரசின் கொரோனா பணிக்குழு உறுப்பினரும், வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் வைரலாஜி துறையின் இயக்குநருமான மருத்துவர் ககன்தீப் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான எந்த நெருக்கடியும் தற்போது அறவே இல்லை.ஆரோக்கியமான நிலையில் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பீசி செலுத்துவது ஏற்புடையதல்ல! உண்மையை சொல்வதென்றால், தடுப்பூசிகளில் போதுமான பரிசோதனைகள் செய்யாத காரணத்தால் நம்மிடம் நம்பகமான, பாதுகாப்பான தடுப்பூசி இல்லை. நம் குழந்தைகள் எதிர்காலத்தில் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என விரும்புபவர்கள் கொரோனா தடுப்பூசியை தவிர்ப்பது நல்லது.’’ எனக் எச்சரித்துள்ளார்!

இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய பணிக்குழு உறுப்பினர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன், ”பெரியவர்களைப் போல இல்லாமல், குழந்தைகள் கொரோனா வைரசின் மோசமான பாதிப்புகளை சந்திக்க மாட்டார்கள், இறக்கவும் மாட்டார்கள். குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டு, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது என்பது பயனற்றதாகத்தான் அமையும். கொரோனா சிக்கல்களில் வயதுக்கு முக்கிய பங்கு உண்டு.

பேராசிரியர்.டாக்டர்.ஜெயதேவன்

மேலும், குழந்தைகளைப் பொறுத்தமட்டில் பெரியவர்களைப் போன்று கொரோனாவால் கடுமையான சிக்கல்களை சந்திக்க வாய்ப்பு மிகவும் குறைவு.கேரளாவில் கொரோனாவால் ஏற்படுகிற மரண விகிதம், குழந்தைகளைப் பொறுத்தமட்டில் 0.008 சதவீதம்தான்.கொரோனா தடுப்பூசி போட்டால் குழந்தைகளுக்கு 2 மாதங்கள் கொரோனா வராது. ஆனால் இந்த பாதுகாப்பு அப்படியே விரைவில் மங்கத்தொடங்கி விடும்.” என்கிறார்.

முன்னதாக இந்தியாவில் ஜனவரி 3 முதல் 15 முதல் 17 வயதுடைய சிறாருக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. இந்தச் சூழலில் 18 வயதுக்குக் கீழுள்ளவர்களுக்குத்  தடுப்பூசி செலுத்துவதற்கு எதிராகக் குரல் எழுப்பப்பட்டுவந்தது குறிப்பிடதக்கது! தொற்று தடுப்புக்கு உத்தரவாதம் தராத கொரோனா தடுப்பூசிகளை எதிர்ப்பவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்துவதை ஆதரித்துவந்த மருத்துவர்களும் தொற்றுநோயியல் நிபுணர்களுமே கூட ”சிறாருக்கு இப்போது தடுப்பூசி செலுத்தத் தேவையில்லை’’ என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது வரை இந்தியாவில் பெரியவர்களுக்கு 180 கோடியே 40 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. தடுப்பூசியினால் ஏற்படுகின்ற பக்கவிளைவுகள் தொடர்பாக பல்லாயிரக்கணக்கான புகார்கள் எழுந்தன. ஆயினும், அவற்றில் மிகக் குறைவானவையே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் கணிசமானவை மரணம் தொடர்பானவையும் ஆகும். பதிவுக்கு வராமல் மறைக்கப்பட்டவை  கூடுதலாக இருக்கும். கோவிஷீல்டு தடுப்பூசிக்கு எதிராக ஏறத்தாழ 40,000 க்கும் மேற்பட்ட புகார்கள் பதியப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

டாக்டர்.மார்டின் மார்க்கிம்

அமெரிக்காவிலும்,பிரிட்டிஷ் மக்களிடையேயும் மிகுந்த செல்வாக்குள்ள பிரபல மருத்துவரான மார்டின் மார்க்கிம் MD,MPH சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதால் அவர்களின் மல்டிசிஸ்டம் இன்பிளமேட்டரி சின்ட்ரோமில் பிரச்சினைகள் வரும், நீண்டகால நோக்கில் பார்க்கும் போது சிறார்களுக்கு தடுப்பூசியை தவிர்ப்பதே நலம் என்கிறார், மேலும் அவர் தன் வாதத்திற்கு ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் ரிச்சர்டு மாலே, பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தின் ஆதம்பின் ஆகிய மருத்துவ நிபுணர்களின் மேற்கோளையும் வலியுறுத்துகிறார்! கொரோனா தடுப்பூசி பின்விளைவால் பதிவான 4018  புகார்களில் சிறார்களில் 36 பேர் இறந்ததை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது” என்கிறார்.

இந்தியாவில் இது போல தெளிவான தரவுகள் இல்லை. காரணம், கொரோனா தடுப்பூசி காரணமாக ரத்தம் உறைதல், மாரடைப்பு, தலைசுற்றல், தோல் எரிச்சல், பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் தடங்கல், கருச்சிதைவு என தடுப்பூசி செலுத்தியோருக்கு வரும் பிரச்சினைகளை அரசு முறையாக பதிவு செய்து பரிசீலிக்கவில்லை.

அமெரிக்கா, கனடா, இஸ்ரேல் போன்ற மேலை நாடுகளில் தடுப்பூசி செலுத்திய 6,000 சிறார்களில் சிறுவர்களில் ஒருவருக்கு வருவதாக மேயோகார்டிட்ஸ் ( mayocarditis)  எனப்படும் இதய தசை அழற்ச்சி நோய் வருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது வந்தால் அடுத்து மாரடைப்பு ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே! கொரோனா பாதிப்பால் 10 லட்சம் குழந்தைகளில் இரண்டு பேர் மட்டுமே  மரணித்துள்ள நிலையில் இந்த தடுப்பூசியின் விளைவால்  6,000  குழந்தைகளில் ஒருவருக்கு இதயதசை அழற்ச்சி வருகிறது எனும் போது, ‘விபரீதத்தை விலை கொடுத்து வாங்கலாமா?’ என்பதே பொதுவானவர்களின் கேள்வியாகும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time