பார்ப்பனப் பற்றால் படுகுழிக்குள் வீழ்ந்தாரா தலித் தாய்?

- சாவித்திரி கண்ணன்

உத்திரபிரதேசத்தில் தலித்துகளுக்கான பகுஜன் சமாஜ் கட்சி சமீபகாலமாக பார்ப்பனர் நலன் சார்ந்து தீவிரமாக செயல்பட்டது! ‘இது பகுஜன் சமாஜா? பார்ப்பன சமாஜா?’ என்ற அளவுக்கு விமர்சிக்கப்பட்டது. சமீபத்திய தேர்தலில் அந்தக் கட்சியின் படுமோசமான வீழ்ச்சிக்கு இது காரணமா?

பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே தலைவியான மாயாவதி விஸ்வரூபமெடுத்த போது, அவர் உ.பிக்கு மட்டுமல்ல, இந்திய தலித்துகளுக்கே தலைமை தாங்கி பெருந்தலைவராவார் என்ற எதிர்பார்ப்புகள்  நிலவியது. ஆனால், ”இப்படியாக இந்திய தலித்துகளின் தாயாக வந்திருக்க வேண்டிய அவரோ, காலப் போக்கில் கால்மாறிப் பயணித்து பார்ப்பனப் பாசத்தில் கட்டுண்டு தலித்துகளை நிராகரிக்கும் அரசியல் செய்த வகையில் இன்று பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்” போன்ற விமர்சனங்கள் உணமையா?

மாயாவதியின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் விவரிக்கவே இந்தக் கட்டுரை!

சமீப காலமாக பகுஜன் சமாஜ் கட்சியில் பிராமணர்களின் ஆதிக்கமும், பிராமணர் நலன் தொடர்பான செயல்பாடுகளும் ஓங்கி இருந்தன! மாயாவதிக்கு அடுத்தபடியாக அந்தக் கட்சியில் அகில இந்திய அளவில் அறியப்பட்டவர் பிராமணரான சதிஸ் சந்திர மிஸ்ரா தான்! அத்துடன் அந்தக் கட்சியின் நாடாளுமன்றத்தின் மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் தலைவர் மற்றும் முக்கிய பொறுப்புகளில் இருந்த தலித்துகள் அகற்றப்பட்டு, பிராமணர்கள் நியமிக்கப்பட்டனர். பிராமணர்கள் மட்டுமே சிறந்த அறிவாளிகள் என மாயாவதி நம்பியதோடு, அதை மாநாடுகள் நடத்தி  வெளிப்படுத்தவும் செய்தார்.

உண்மையில் பார்ப்பனர்களைப் போலவே பறையர்களும் அறிவில் சிறந்தோங்கியவர்களே! பறையர் குலத்தில் மிகப் பெரிய சித்தர்களும்,யோகிகளும் தோன்றி எண்ணற்ற சித்த மருத்துவ ஞானத்தையும், யோக மரபையும் தந்து சென்றுள்ளனர். வரலாறு நெடுகிலும் இவர்களின் வளர்ச்சிக்கும், அங்கீகாரத்திற்கும் பார்ப்பனர்கள் இடையூறாக இருந்தது மட்டுமின்றி, இவர்களை பொதுச் சமூகத்தில் இருந்தே அன்னியப்படுத்தி தீண்டத்தாகதவர்களாகக் காரணமாயினர். அதன் விளைவுகளை தற்போதும் தலித்துகள் அனுபவித்து வருகின்றனர்!

உத்திரபிரதேசத்திலே யோகியின் ஆட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டு நாளும் அல்லலுறும் மக்களாக தலித்துகளே அதிகம் உள்ளனர். உ.பியில் உயர் சாதியினராகிய தாக்கூர்களும், பிராமணர்களும் தங்களுக்கான ஆட்சியாக யோகியின் ஆட்சியை கருதி, தறிகெட்டு ஆட்டம் போட்டனர். இதற்கு எதிராக சமாஜ்வாடி கட்சி ஒரு புறமும், காங்கிரஸ் கட்சி மறுபுறமும் மக்களை திரட்டிப் போராடின! ஹாத்ராஸில் ஏழை தலித் பெண் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட போது பிரியங்காவும், ராகுலும் களம் கண்டனர். போலீஸ் அடக்குமுறைகளை எதிர் கொண்டனர். ஆனால் மாயாவதியோ தன் வீட்டைவிட்டு கூட வெளியே வரவில்லை. அறிக்கைவிட்டதோடு சரி!

அதே போல, கொரானா ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்த போதும், புலம் பெயர் தொழிலாளர்கள் யோகியின் ஆட்சியில் அலைகழிக்கப்பட்ட போதும் மாயாவதி அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. அவர் பொதுவாக தன்னை யாரும் எளிதில் சந்திக்க முடியாத அதிகார மையமாக கட்டமைத்துக் கொண்டார். ”இதெல்லாமே அவரது பிராமண சகவாசம் அவரிடம் ஏற்படுத்திய உளவியல் மாற்றங்களே” என அவரது கட்சியினரே குற்றம் சாட்டுகின்றனர்.

ஒருபுறம் இதற்கெல்லாம் வெளியே வரமறுத்த மாயாவதி பிராமணர்களுக்காக சமஸ்கிருத மந்திரங்கள் முழங்க, சடங்குகள்,சம்பிரதாயங்களுடன் வேத விற்பன்னர்கள் நிறைந்து வழிந்த மாநாடுகளைப் பல இடங்களில் தம் கட்சி சார்பாக நடத்தி, அதில் பிராமணர்களின் குரலாக ஒலித்தார். பிராமணர்களில் ஒரு மிகப் பெரிய சமூக விரோதியாக, பல வன்முறை சம்பவங்களில் தொடர்புடைய, பல கொலைகளைச் செய்தவரான விகாஷ்துபே என்கெளண்டரில் சுட்டு கொல்லப்பட்டதற்கு எதிராக ஆவேசமாக குரல் கொடுத்தார்! ”மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பரசுராமருக்கு மிகப் பெரிய சிலை எழுப்புவேன்” என்றார். ”உ.பியில் 23 சதவிகிதமான தலித்துகளும், 11 சதவிகிதமான பிராமணர்களும் ஒன்று சேர்ந்தால் போதும், ஆட்சி நமதே! ஆகையால், பிராமணர்களிடம், ” உங்களின் உண்மையான விசுவாசமிக்க கட்சியான பகுஜன் சமாஜுக்கு வாக்களியுங்கள்” என பிராமணர்களிடம் மன்றாடினார்!

சதீஸ் சந்திர மிஸ்ராவுடன் மாயாவதி

மாயாவதியின் இடக்கரமாக அறியப்பட்ட சதிஸ் சந்திர மிஸ்ராவும், வலக்கரமாக அறியப்பட்ட ஆகாஷ் ஆனந்த்தும் ராமர் கோயில், மதுரா கிருஷ்ணர் கோவில் விவகாரங்களுக்காகவே நாளும்,பொழுதும் குரல் கொடுத்தனர். மாட்டிறைச்சி உண்போருக்கு எதிராகப் பேசினர்! இந்தச் சூழல் காரணமாக மாயாவதியுடன் நெருக்கமாக இருந்த பல தலித் மற்றும் முஸ்லீம் தலைவர்கள் மெல்ல,மெல்ல அவரிடம் இருந்து விலகினர். முக்கிய முஸ்லீம் தலைவர் நசிமுதின் சித்திக் தொடங்கி பலர் கட்சியில் இருந்து விலகினர். அதே போல அஸ்லம் ரெய்னி, பிரதீப் சிங், திரிபுவன்தத், ஆர்.எஸ்.குஷ்வாகா போன்ற தலித் தலைவர்களும் விலகினர். மாயாவதியின் அதீத பார்ப்பனப் பற்றால் பகுஜன் சமாஜின் தலித் வாக்கு வங்கியும், இஸ்லாமிய வாக்கு வங்கியும் வெகுவாக சரிந்தது!

உத்திரபிரதேசத்தில் தலித்துகளுக்கான தனித் தொகுதிகள் மட்டுமே 84. அதில் 2007ல்  63 தொகுதிகளை அள்ளியது பகுஜன் சமாஜ். ஆனால், அதற்கு பிறகான தலித்-பிராமணக் கூட்டு அரசாங்கத்தில் வன்கொடுமை செய்யும் பிராமணர்களுக்கு அவ்வளவாக தண்டனை கிடைக்காத நிலையும், தலித்கள் மீதான வன்கொடுமை அதிகரிப்புகளும் மாயாவதியின் மீதான தலித்துகளின் நம்பகத் தன்மைக்கு பெரும் கேள்விக்குறியானது. எனவே, தலித் வாக்குவங்கி பலத்த சரிவைக் கண்டது. 2017 ஆம் ஆண்டு இரண்டே தனித் தொகுதிகள் மட்டுமே பகுஜன் சாமாஜுக்கு கிடைத்தது மட்டுமின்றி 50 க்கு மேற்பட்ட தனித் தொகுதிகளில் பகுஜன் சமாஜ் இரண்டாவது இடத்திற்கு கூட வர முடியவில்லை. தற்போதோ, தனித் தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றிபெற முடியவில்லை.

உ.பியில் கிட்டத்தட்ட 20 சதவிகிதமான இஸ்லாமியர்கள் பகுஜன் சமாஜை மிக நெருக்கமாக ஒரு காலத்தில் உணர்ந்தனர். ஆனால், தற்போதோ மிகவும் விலகி சென்றுவிட்டனர். 2007 தேர்தலில் பகுஜன் சமாஜுக்கு 29 முஸ்லீம் எம்.எல்.ஏக்கள் இருந்தனர். அடுத்தடுத்த தேர்தல்களில் அது முறையே 15, 5 என இறங்கியதோடு, தற்போது ஒரு இஸ்லாமியர் கூட இல்லாத நிலைமை உருவாகிவிட்டது.

இத்தனைக்கு பிறகும் தலித் வாக்கு வங்கியும், இஸ்லாமிய வாக்கு வங்கியும் சரிந்ததற்கான காரணங்களை உள்வாங்க மறுத்து, பிராமணர்கள் வாக்கு வங்கிக்கு மட்டுமே மிகவும் மெனக்கிட்டார் மாயாவதி!

பிராமண வாக்கு வங்கியாவது மாயாவதிக்கு கை கொடுத்ததா என்றால், அதுவும் இல்லை.  Lokniti – CSDA நிறுவன புள்ளிவிவரப்படி 2007ல் மாயாவதி பிராமண சமுதாயத்துடன் கைகோர்த்து தேர்தலை சந்தித்த போது கூட மொத்த பிராமணர்களில் 16 சதவிகிதம் பேர் மட்டுமே ஓட்டு போட்டனர். 2012 ஆண்டு, அது 19 சதவிகிதமானது! 2014 மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பகுஜன் சமாஜ் கட்சியில் பல பதவிகளை அனுபவித பிராமணர்களில் பலரே பாஜகவிற்கு தாவினர். இதனால், 2017 ஆம் ஆண்டு அந்த வாக்கு வங்கியில் வெறும் இரண்டு சதவிகிதத்தை மட்டுமே பகுஜன் பெற்றது! தற்போதைய தேர்தலிலோ, பிராமணர்களில் ஒரு சதவிதமானவர்கள் கூட பகுஜன் சமாஜுக்கு ஓட்டு போடவில்லை. பிராமண சமூக வாக்குகளை கிட்டதட்ட பாஜக  அப்படியே அறுவடை செய்து விட்டது. வட இந்தியாவைப் பொறுத்த வரை பிஜேபி என்பது பிராமின்ஸ் ஜனதா பார்டி தான் என்பது பாமரருக்கும் தெரிந்த உண்மை! அது மாயாவதிக்கு மட்டும் தெரியாமல் போனதை என்னென்பது?

தலைவர் கன்ஷிராமுடன் மாயாவதி

”நாம் மிகவும் பாதிக்கப்பட்ட தலித் மக்களின் மீட்புக்கு கட்சி நடத்துகிறோம். பிராமணர்களோடான நட்பை கட்சிக்கு வெளியில் வைத்துக் கொள்ளலாம். ஆனால், கட்சிக்குள் அவர்களை சேர்த்து பதவிகள் தந்தால், அது கட்சியை திசை மாற்றிவிடும்…’’  என்று பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் அடிக்கடி சொல்லி இருக்கிறார். ஆனால், அதை பொருட்படுத்தவில்லை மாயாவதி!

உ.பியின் மொத்த தலித்துகள் 3.73 கோடி. மாயாவதி பெற்றுள்ள வாக்குகள் ஒரு கோடியே 18 லட்சத்து 73 ஆயிரம்! இதில் தலித்துகள் ஓட்டுகளே கணிசமானவை! அதாவது, மாயாவதியை தலித்துகள் இன்னும் முழுமையாக புறக்கணித்துவிடவில்லை.

இவ்வளவுக்கு பிறகு மாயாவதி தற்போது விழித்துக் கொண்டு, தேர்தலில் ஏற்பட்ட தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கான நடவடிக்கையாக – மக்களவையின் முக்கிய பதவிகள் பிராமணர்களுக்கு அளிக்கப்பட்டதை சரி செய்யும் விதமாக – அதை மாற்றி தலித்துகளை அமர்த்தியுள்ளார். அதே சமயம், மாநிலங்களவையில் அவர் நினைத்தாலும் மாற்றுவதற்கு அங்கே தலித்களே இல்லை. இருப்பது, பிராமணத் தலைமை மட்டுமே! எதுவும் செய்ய முடியாது!

இந்தியாவில் வேறெந்த வகுப்பாரையும் விட சாதி ஆதிக்கத்தால் அதிகம் நசுக்கப்பட்டு பெரும் துயரங்களை அனுபவித்தவர்கள் தலித்துகளே! ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருண்ட வாழ்க்கையை வாழ்ந்தவர்கள்! அதற்கு காரணமாயிருந்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து போராடி தங்களுக்கான விடுதலையையும், அதிகாரத்தையும் சற்றே சுவைக்க ஆரம்பித்தது மிகச் சமீபத்தில் தான்!

இந்தியா முழுக்க விரவி பரந்து இருக்கும் இரண்டே சாதியென்றால் அவை பார்ப்பனரும், பறையருமே! பார்ப்பனர் வெறும் மூன்று சதவிகிதத்தினர் மட்டுமே என்பதால், அவர்கள் தங்களுக்கு என்று தனிக்கட்சி எதையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால், எந்தக் கட்சி அதிகாரத்திற்கு வந்தாலும், அவர்களோடு இணக்கம் பாராட்டி முக்கிய வாய்ப்புகளை பெற்று விடுகின்றனர். இது அவர்களின் இயல்பு, குற்றம் சொல்வதற்கில்லை.

இங்கே தமிழகத்தில் ஒரு பார்ப்பனத் தாய் திராவிட இயக்கத்திற்குள் ஊடுறுவி, திராவிடத் தாயாக தன்னை அடையாளப்படுத்தி சாதுர்யமாக வெற்றிகளை சாத்தியப்படுத்திக் கொண்டார். ஆனால், உ.பியிலோ ஒரு தலித் தாய் தன்னைத் தானே பார்ப்பனத் தாயாக பாவித்துக் கொண்டு படுகுழிக்குள் வீழ்ந்துவிட்டார்!

இந்திய மக்கள் தொகையில் தலித்துகள் சுமார் 24.6 கோடியாக இருந்தும், அவர்களை ஒன்றிணக்கும் ஒரு நம்பகமான தலைமை அவர்களுக்கு இல்லை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time