என்ன சொல்கிறது இந்த பட்ஜெட்? சாதக, பாதகங்கள் என்னென்ன?

-சாவித்திரி கண்ணன்

அறிவார்ந்த செயல்பாடுகளை ஊக்குவிக்க கல்விக்கும், நூலக வாசிப்புக்கும் அதிக நிதி ஒதுக்கீடு, சுற்றுச் சூழலில் கவனம், செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கை என்பதோடு – கொள்கை சார்ந்த பார்வைகளை அச்சமின்றி வெளிப்படுத்தியதது சிறப்பு! அதே சமயம், வாங்கி குவிக்கும் கடன்கள் தொடர்பாகவும் விவாதிக்க வேண்டும்!

பள்ளிக்கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு ரூ.32,599 கோடியிலிருந்து, ரூ.36,895 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பது மிகவும் சிறப்பான அம்சமாகும்! இது ஒரு வகையில் யானைப்பசிக்கு சோளப் பொறி போன்றதாகும். ஏனெனில், பள்ளிக் கல்வித்துறையில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப இந்த தொகை போதுமானதா எனத் தெரியவில்லை!

அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுப் பள்ளிகளை (ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் உட்பட) நவீனமயமாக்குவதற்கான ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற மாபெரும் திட்டத்தை அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில், அரசுப் பள்ளிகளில், தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 18,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என்பதும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும் (smart classrooms), இதரப் பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகங்களும் உருவாக்கப்படும் என்பதும் அடிப்படை கட்டமைப்பில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் தரம் உயர வழிவகுக்கும்!

அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும் என்பது ஏழைப் பெண்களின் உயர்கல்விக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக இருக்கும்.

உயர்கல்வித் துறை சார்பில் அறிவுசார் நகரம் அமைக்கப்படும்; அதில் உலகப்புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களின் கிளைகள் அமைக்கப்படும்; அரசு கல்லூரிகள் ஐந்து ஆண்டுகளில் ரூ.1000 கோடியில் மேம்படுத்தப்படும் என்பன போன்ற அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை.

மாதிரி பள்ளிகள் என்ற வகையில் பொறியியல், கலை மற்றும் மருத்துவம் போன்ற பிரிவுகளில் சேர்ந்து, கல்வி பெற உதவும் நோக்கோடு, கல்வியில் பின்தங்கியுள்ள 15 மாவட்டங்களில் ரூ125 கோடி செலவில் முன்மாதிரிப்பள்ளிகள் (Model Schools) தொடங்கப்படும் என்பது உயர்கல்விக்கான நுழைவு தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பெரிதும் உதவும் என்றாலும், இதில் அதற்கு தகுந்த ஆசிரியர் நியமனங்கள் முறையாக நடைபெற்றால் மட்டுமே நோக்கம் நிறைவேறும்!

அறிவு வளர்ச்சிகான அக்கறை!

நூலகங்களின் தரம் மேம்படுத்தப்படும். புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள ஆறு மாவடங்களிலும் புதிய நவீன நூலகங்கள் 36 கோடி செலவில் உருவாக்கப்படும் என்பதை வரவேற்கும் போது அதற்கு தகுதி வாய்ந்த நூலகர்களை நல்ல சம்பளத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும். மீண்டும் நூலக அறிவே இல்லாத தற்காலிக ஊழியர்களைக் கொண்டு சமாளிக்கக் கூடாது.

புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக காட்சிகள் நடத்தப்படும். ஆண்டுதோறும் 4 இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும். இதற்காக ரூ.5.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது உள்ளபடியே பேருவகை அளிக்கிறது! இந்த அறிவு வளர்ச்சிகான முதலீடும் சமூகத்திற்கு ஏதோ ஒரு வகையில் பங்களிக்கும்!

பெரியார் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 மொழிகளில் ரூ.5 கோடி செலவில் தொகுக்கப்படும் என்பது மதவாத சிந்தனைகள் அதிகரித்து வரும் தற்காலச் சூழலில் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெரும் விழிப்புணர்வை கொண்டு செல்லும் ஒரு சீரிய முயற்சியாகவே கருத வேண்டும்.

தமிழ்மொழிக்கும் இந்தோ ஐரோப்பிய மொழி குடும்பத்திற்கும் இடையிலான உறவை வெளிக்கொணரும் வகையில், தமிழ் வேர்ச்சொல் வல்லுநர்களைக் கொண்ட குழு அமைத்து அகரமுதலி உருவாக்கும் சிறப்பு திட்டம் அரசு செயல்படுத்தும்.” அகரமுதலி திட்டத்திற்கு 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது மாபெரும் அறிஞர் கார்டுவெல்லும், தேவ நேயப் பாவாணரும் எடுத்த முயற்சியின் தொடர்ச்சியாகவே கருத வேண்டியுள்ளது.

சுற்றுச் சூழலில் கூடுதல் கவனம்!

வனப் பாதுகாப்பு, பசுமைப் பரப்பை அதிகரித்தல், வன மேலாண்மையில் பழங்குடியினரை ஈடுபடுத்துதல், மனிதர்களுக்கும், வனவிலங்குகளுக்கும் இடையேயான மோதல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், வனத்துறையில் திறன் மேம்பாடு குறித்த கொள்கை மாற்றங்கள் ஆகியவற்றை அரசிற்குப் பரிந்துரைக்க வன ஆணையம் ஒன்றை அரசு அமைக்கும் என்பது சூழலியலுக்கு நல்ல பங்களிப்பை தரக்கூடும்.

வள்ளலாரின் 200வது பிறந்த ஆண்டை ஒட்டி வள்ளலார் பல்லுயிர் பாதுகாப்புத் திட்டம் ரூ.20 கோடியில் செயல்படுத்தப்படும் என்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதே சமயம் சொல்லப்பட்டவை முறையாக செயல்படுத்தப்படுவதில் தான் பட்ஜெட்டின் வெற்றியானது நிறைவு பெறும் என்பதையும் சொல்ல வேண்டியுள்ளது!

சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.18,933 கோடியிலிருந்து ரூ.17,901 கோடியாக பொது விநியோகத் திட்டத்திற்கான மானியம் ரூ.8437 கோடியிலிருந்து ரூ.7500 கோடியாகவும் குறைக்கப்பட்டு உள்ளதைக் கொண்டு ஏதோ அதில் இந்த அரசுக்கோ, நிதி அமைச்சருக்கோ ஆர்வம் இல்லை என் எண்ணிவிடக் கூடாது! நிச்சயமாக இந்த இரண்டு துறைகளிலும் நிலவும் மித மிஞ்சிய ஊழல்களை கண்டு பிடித்து அதை களைந்த வகையில் என்ன செலவாகும் எனக் கணக்கிட்டு நிதி அமைச்சர் நிதி ஒதுக்கி இருக்க வாய்ப்புள்ளது என்றே கருத வேண்டியுள்ளது.  மத்திய அரசின் 150 நாள் வேலை திட்டத்திற்கு மாநில அரசு தானும் அதிக நிதி ஒதுக்க முடியாதிருப்பதானது புரிந்து கொள்ளத்தக்கதே!

நாம் இதில் உறுதியாக சொல்ல வேண்டியது என்னவென்றால், ஊழல் இல்லாமல் பட்ஜெட்டில் போட்ட திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதில் ஒரு அரசுக்கு இருக்கும் மன உறுதி மட்டுமே இந்த பட்ஜெட்டை வெற்றிகரமானதாக்கும்! இதை முதல்வர் கவனத்தில் கொள்வது நல்லது.

ஒருபுறம் பட்ஜெட் உரையை படித்தாலும், மறுபுறம் எல்லா விஷயங்களுக்கும் தடைக் கல்லாக நின்று தொல்லை தரும் மத்திய அரசைக் குறித்த பார்வையையும் வெளிப்படுத்த தயங்கவில்லை நிதி அமைச்சர் என்பதற்கு,  ”கூட்டாட்சி உரிமையை சீர்குலைக்க தொடர் முயற்சி நடைபெறுவது வருந்தத்தக்கது. ஆனால், மாநில உரிமைகளுக்காக திமுக அரசு தொடர்ந்து போராடும்” என்ற இந்த வாசகமே சாட்சியாகும்! இந்த துணிச்சல் போற்றத்தக்கது!

அதிகரிக்கும் கடன்! ஒரு அபாய அச்சுறுத்தலே!

அ.தி.மு.க., ஆட்சியை விட்டு சென்ற போது ரூ.4.85 லட்சம் கோடி கடன் இருந்தது. ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்த குறுகிய காலகட்டத்தில் ரூ.1.08 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளனர். நடப்பாண்டு மேலும் கடன் வாங்க திட்டமிட்டுள்ளனர். இந்த வகையில் 2023-ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் தமிழக அரசின் கடன் ரூ.6 லட்சத்து 53,348 கோடியாக அதிகரிக்கும் என்பது மகிழ்ச்சி தரும் செய்தியல்ல!  2022-23-ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை  ரூ.52781 கோடியாக உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் நிதிப்பற்றாக்குறை 4.61%ஆக அதிகரித்துள்ளது. 2022-23ஆம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 3.80%ஆக அதிகரித்திருக்கிறது. இவை எல்லாம் உண்மையில் கவலையளிக்கிறது.

தமிழக அரசு என்பது ஒரு நிர்வாகமே! மக்களிடம் வரி மூலமாக கிடைக்கும் பணத்தில் இருந்து மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தக் கூடிய ஒரு நிர்வாக அமைப்பு. இதற்கு உற்பத்தி சார்ந்த வருமானம் கிடையாது. ஒரு தனியார் நிறுவனம் கடன் வாங்குகிறது என்றால், அதன் உற்பத்தி அதிகரிப்பு அதன் மூலமான வருமான அதிகரிப்பு மூலம் கடனை மெல்ல அடைத்துவிடுகிறது. ஆனால், நம் அரசுகளோ, கடனை மட்டும் வாங்கி போட்டபடி உள்ளன!

 

இப்படி கடன் வாங்கி மக்களை கடனாளியாக்க மக்களிடம் எந்த முன் அனுமதியும் கேட்பதுமில்லை. இதன் விளைவுகள் மக்களுக்கு சொல்லப்படுவதும் இல்லை. ஆண்டுக்காண்டு கடனும் அதிகரித்தபடி உள்ளன! இதனால் வட்டியும் அதிகரிக்கிறது. வரி வருவாயில் கணிசமான பகுதி வாங்கிய கடனுக்கு வட்டி கட்டத் தான் செலவாகிறது. எந்த பட்ஜெட்டால் கடன் வாங்குவதை அடியோடு நிறுத்தி, வாங்கிய கடனை சிறிதாவது அடைக்க முடிகிறதோ அது தான் உண்மையான மக்கள் நலனில் நூறு சதவிகித அக்கறை கொண்ட பட்ஜெட்டாக இருக்க முடியும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time