சித்த மருத்துவத்தை முடக்கும் ஒன்றிய அரசு!

-விஜய் விக்கிரமன்

சித்த மூலிகைகளை அறிவியல் பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்தி நிருபணம் செய்யும் ஆய்வு நோக்கத்திற்கு தொடர்ந்து தடைகள்! ஆயிரக்கணக்கான கோடிகளை  ஆயுர்வேத ஆராய்ச்சிக்கு ஒதுக்குகின்ற மத்திய ஆட்சியாளர்கள் சித்த மருத்துவ ஆராய்ச்சி என்றால், நிதி ஒதுக்க மறுத்து சிடுசிடுக்கிறார்கள்!

ஆயுர்வேத மருத்துவ துறை வளர்த்தெடுக்கப்பட ஆயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்கிறது ஒன்றிய அரசு! இதனுடன்  முகலாய பாரம்பரியம் கொண்ட யுனானி மருத்துவம் கூட வட இந்தியா முழுவதும்   குறிப்பிடத்தக்க அளவில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது!

ஆனால், சித்த மருத்துவம் மட்டும் தொடர்ந்து  நூறு சதம் புறக்கணிக்கப்பட்ட வண்ணமுள்ளது. மற்றவை வளர்த்தெடுக்கப்பட்ட காலகட்டங்களில் சித்த மருத்துவத்திற்கு என்று தனியாக எந்த ஆய்வு நிறுவனமும்   துவங்கப்படாமல்  ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்பட்டது!

இந்திய மருத்துவத்திற்கு ஒன்றிய அரசால் ஒதுக்கப்படும் அனைத்து   நிதிகளும்   வடக்கே ஆயுர்வேத வளர்ச்சிக்கு பெரும்பகுதியும்,   குறிப்பிட்ட அளவு யுனானி  மற்றும் ஹோமியோபதி மருத்துவ வளர்ச்சிக்கு மட்டுமே  பயன்படுத்தப்பட்டது.

2005 இல் தான் அதாவது, இந்தியா சுதந்திரம் பெற்று 58 ஆண்டுகளுக்கு பிறகு தான், முதன்முதலில் ஒன்றிய அரசால் சென்னை தாம்பரத்தில் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சித்தா துவங்கப்பட்டது.

அப்போது ஒன்றிய துணை சுகாதார   அமைச்சராக இருந்த   தலித் எழில்மலை எடுத்த முன்முயற்சிகள் முக்கியமானவை!  அதன் பிறகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டின் இந்திய மருத்துவத் துறை இயக்குனராக இருந்த   பருக்கி ஐஏஎஸ்        இவர்களின் பெருமுயற்சியால் அது சாத்தியமானது.  இன்று சென்னை நகர மக்களுக்கு மிகப்பெரிய அளவில் அது சேவையாற்றி வருகிறது.

2010 ஆம் ஆண்டில் தான் சித்த மருத்துவத்தை ஆய்வு செய்வதற்கான CCRS எனப்படும் தனித் துறையை [ Central Council for Research in Siddha] ஒன்றிய அரசு   துவங்குவதற்கு அனுமதித்தது.

மேற்கண்ட இரு  நிகழ்வுகளுக்கு பின்னரே மத்திய அரசின் நிதி சித்த மருத்துவத்திற்காக தமிழகத்திற்கு கிடைக்கப் பெற்றது.

புதுப்புது ஆயுர்வேத நிறுவனங்கள்!

தில்லியின் மத்திய ஆயூர்வேத ஆய்வு நிறுவனம்

இந்தியா முழுக்க  ஆயுர்வேதத்தில் என்று  31 மத்திய ஆய்வு நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலும் 1979  முதல் 2019  வரை நிறுவப்பட்டன. தலைநகர் தில்லியில் 1979 ல் ஆரம்பிக்கப்பட்ட Central Ayurveda Research Institute  தொடங்கி கடைசியாக 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திரிபுரா மாநிலம் அகர்தாலாவில் நிறுவப்பட்ட Regional Ayurveda Research Centre வரை தொடர்ந்து அனைத்து இடங்களிலும் ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனங்களை தோற்றுவித்த வண்ணம் உள்ளனர். இதில் நாம் சொல்ல வேண்டியது என்னவென்றால், திரிபுரா போன்ற பழங்குடிகள் வாழும் இடத்தில் அந்த மண்ணுக்கான ஒரு பாரம்பரிய மருத்துவம் இருக்குமல்லவா? அதை காலி செய்துவிட்டு அங்கும் ஆயுர்வேதத்தை திணிக்கிறார்கள்! அனைத்து உயர் ஒன்றிய  ஆயுர்வேத மருத்துவமனைகளில், யோகா துறைகளும் நிறுவப்பட்டுள்ளன!

பெங்களுரின் ஆயுர்வேத ஆய்வு நிறுவனம்

2010- தான் சித்த மருத்துவத்திற்கு என்று தனி ஆய்வு   நிறுவனம் துவங்கப்பட்டது. தற்போது தான் 6 மாநிலங்களில் கிளை பரப்பி உள்ளது. [ தமிழ்நாடு, பாண்டிச்சேரி,  திருவனந்தபுரம், பெங்களூரு, திருப்பதி, டெல்லி] இந்திய அரசு ஆயுர்வேதம், யோகா, ஹோமியோபதி,  யுனானி வடகிழக்கு மாநிலங்களுக்கு விரிவுபடுத்தும் போது அவற்றில்   சித்த மருத்துவத்தை சேர்ப்பதில்லை.

தமிழர்கள் அதிகம் வாழும் மும்பை போன்ற மாநிலங்களில் மத்திய சித்த மருத்துவ நிறுவனங்களை துவங்குவதற்கு  ஒன்றிய அரசு அனுமதிப்பதில்லை.

ஒன்றிய அரசு அனைத்து இந்திய முறை மருத்துவத்தையும் அதன் பயன்களையும் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் நோக்கத்தில் செயல்படும்போது, அதில் ஏன் சித்த மருத்துவத்தையும் உள்ளடக்கி செயல்படுத்த மறுக்கிறார்கள் எனத் தெரியவில்லை. திட்டமிட்டு சித்த மருத்துவம் கழட்டி விடப்படுகிறது என்பதை நன்கு உணரமுடிகிறது.

பதஞ்சலி சாமியாரின் ஆயுர்வேத ஆய்வு நிறுவனத்தில் பிரதமர் மோடி

ஆயுஸும், ஆயுர்வேதாவிற்கான நிதியும்;                                                                                                                     2020 -2021   ஆயுஸ்   ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ஆய்வு செய்வதற்காக ஒதுக்கப்பட்ட          மொத்த நிதி ரூபாய் 1,024  கோடி!இதில் ஆயுர்வேதா யோகாவிற்கு -600 கோடி

யுனானி மருத்துவத்திற்கு -180 கோடி

ஹோமியோபதி மருத்துவத்திற்கு -180 கோடி

சித்த மருத்துவத்திற்கு -45    கோடி.

இந்த நிதி ஒதுக்கீடுகளின் அளவே மத்திய அரசின் பாரபட்ச மனநிலைக்கு சான்றாகும். ஆயுர்வேதத்திற்கு மலையளவு நிதி என்றால், சித்தாவிற்கு மடுவளவு நிதி தான் ஒதுக்கப்படுகிறது. யுனானி, ஹோமியோபதி அளவுக்கு கூட ஒதுக்க மறுக்கிறார்கள். காரணம் சித்தாவின், மருத்துவ வீரியம், ஆயுர்வேதத்தை மிஞ்சிவிடுமோ என அஞ்சுகிறார்களோ என்னவோ! உண்மையில் இந்த 45 கோடி நிதி என்பது ஆய்வு நிறுவனத்தின் நிர்வாக மற்றும் பராமரிப்புகே செலவாகிவிடும். இதில், உருப்படியாக ஆய்வு செய்வதே இயலாததாகிவிடும்.

இது குறித்த ஒரு பொது நல வழக்கு உயர் நீதிமன்றத்தில் வந்த போது நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘தமிழர்களின் பாரம்பர்ய மருத்துவ முறையான சித்த மருத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுவது ஏன்?’, ‘ஆயுர்வேத மருத்துவத்துக்கு மத்திய, மாநில அரசுகள் அளிக்கக்கூடிய முக்கியத்துவம் சித்த மருத்துவத்துக்கு ஏன் கொடுக்கப்படுவதில்லை?’, ‘சித்த மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சி இல்லாவிட்டால் அந்த மருத்துவமுறை பற்றிய அறிவோ, வளர்ச்சியோ சாத்தியமில்லை எனும்போது அரசு ஏன் அதற்குப் போதிய நிதி ஒதுக்குவதில்லை?’ என கேட்டது குறிப்பிடத்தக்கது.

பேரிடர் காலங்களில் உதவிய சித்த மருந்துகளான நிலவேம்பு கசாயம், கபசுரக் குடிநீர், மற்றும் ஏனைய மருந்துகளை ஆய்வு செய்வதற்கு மிகக் குறைந்த  நிதி ஒதுக்கப்படுகிறது! ஆனால், இதில் செய்யப்படும் ஆராய்ச்சி ஒட்டுமத்த மனித குலத்திற்கே பயனளிக்கும். இதில் முறையான ஆய்வு இல்லாததால் தான் இதற்கு மருத்துவ உலகின் முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால், அப்படி முறையாக ஆய்வு செய்வதற்கே தடை போட்டால், சித்த மருத்துவத்தை நிருபிப்பது தான் எப்படி? இவை ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பயன்படுவது எப்போது?

ஒட்டுமொத்த ஆயுஸ் துறைக்கும் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி 2021-2022   =2,970 கோடி,

2022-2023  =3,050  கோடி.

இதில் மத்திய சித்த மருத்துவ ஆய்வு நிறுவனம் -ccrs = 39.06   கோடி

தேசிய சித்த மருத்துவ கல்வி நிறுவனம்  , தாம்பரம் – nis =44.77    கோடி

ஆக ஒட்டுமொத்தமாக 3,000 கோடியில் சித்த மருத்துவத்திற்கு ஒன்றிய அரசு வெறும் 80 கோடியை மட்டுமே ஒதுக்குகிறது.

முடக்கப்பட்ட சித்தா உயர் நிறுவனம்!

ஆங்கில மருத்துவத்திற்கு மத்திய அரசால் நடத்தப்படுகின்ற கல்லூரியோடு இணைந்த உயர் மருத்துவமனையான எய்ம்ஸ் (AIIMS) போன்று ஆயுஸ் மருத்துவத் துறைகளுக்கும் துவங்கப்பட்டதில் 2017  ஆம் ஆண்டு ஆயுர்வேதத்திற்கு AIIA என்றும், 2019  ஆம் ஆண்டு யுனானி மருத்துவத்திற்கு  AIIUM என்றும் எய்ம்ஸ் போன்ற கல்லூரியோடு இணைந்த உயர் மருத்துவமனைகள் துவங்கப்பட்டன.

அதே சமயம் சித்தாவிற்கு AIISM எனப்படும் All India Institute of Siddha medicine தொடங்காமல் ஒன்றிய அரசு கிடப்பில் போட்டுவிட்டது.

ஏற்கனவே திருச்சியில் அமைய வேண்டிய  எய்ம்ஸ் மருத்துவமனையானது  பின் மதுரைக்கு மாற்றப்பட்டது , அப்போது திருச்சியில் கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசின் வசம் உள்ளது அந்த இடத்தில் உயர் சிகிச்சை சித்த மருத்துவமனையை தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சி வைக்கப்படும்போது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கோரிக்கைகளும்உரிமைகளும்!

இந்திய பாரம்பரிய மருத்துவத்திற்கான 3,000 கோடி நிதியில், சித்த மருத்துவத் துறை  வெறும் 80 கோடி மட்டுமே  பயன் பெறுகின்றனர். கூடுதல் நிதி வேண்டும்.

CCRS-  மத்திய சித்த மருத்துவ ஆய்வு  நிறுவனத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமைக்கப்படவேண்டும்.  அப்போதுதான் ஒன்றிய அரசிடம் நமக்கான உரிமைகளை பெற முடியும்.

தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும்  சித்த மருத்துவத்தை அனைத்து  மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக மற்ற மாநிலங்களிலும்  ஒன்றிய அரசின் சித்தமருத்துவ  ஆய்வு நிறுவனத்தை CCRS- [மருத்துவமனை] நிறுவ வேண்டும். அதற்கான நிதியை   ஒன்றிய அரசிடமிருந்து பெறவேண்டும்.

ஒன்றிய அரசு 3,000 கோடிக்கு மேல் ஆயுஸ் துறைக்கு ஒதுக்கும் போது  அதில் நமது உரிமையாக உரிய சதவீதத்தை சித்த மருத்துவத்திற்கும், தமிழக மக்களுக்கும் பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும்.

கட்டுரையாளர்; விஜய் விக்கிரமன்

சித்த மருத்துவர் மற்றும் ஆய்வாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time