கவர்ச்சி அறிவிப்புகள்! கண்ணாமூச்சி விளையாட்டுகள்!

-சாவித்திரி கண்ணன்

விவசாய பட்ஜெட் பரவலாக மேம்போக்காக வரவேற்கப்பட்டுள்ளது! பொதுவாக நம் அரசுகளின் விவசாய பட்ஜெட் என்பது விவசாயிகளுக்கும்,வேளாண்ச் சூழலுக்கும் எதிராகவே போடப் படுகின்றன! அடிப்படை பிரச்சினைகளை அலட்சியப்படுத்தி விட்டு, அவசியமற்ற அறிவிப்புகள் செய்கின்றன..!

வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கென தனிப்பிரிவு உருவாக்கப்படுமாம். மகிழ்ச்சி! அதே சமயம் இயற்கை வேளாண்மை கொள்கை என்ற ஒன்றையே நீங்கள் இது வரை உருவாக்கவில்லையே! அதன் அவசியத்தை இன்னும் உணரவில்லையே!

இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக பசுந்தாள் உர விதைகள், மண்புழு உரம், அமிர்த கரைசல் போன்ற இயற்கை இடுபொருட்களை உற்பத்தி செய்யும் உழவர், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும், இதற்காக 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாம்! சிறப்பு! அதே சமயம் இயற்கை உரத்திற்கான விரிந்து பரந்துபட்ட முறையில் ஒவ்வொரு மாவட்டத்திலுமே ஒரு இயற்கை உர உற்பத்திக் கூடங்களை நிறுவலாமே!

சிறுதானிய பயிறு வகைகள் வளர்ச்சிக்கு என்று இரண்டு மண்டலங்கள் உருவாக்கப்படுமாம்! சிறுதானியங்களின் ஊட்டச்சத்து பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த சிறுதானிய திருவிழாக்கள் நடத்துவார்களாம்! இது போதாது. சிறுதானிய உற்பத்தியும், பயன்பாடும் பெருக வேண்டும் என்றால், ரேஷனில் சிறுதானிய வினியோகம் செய்யலாம்! சத்துணவு திட்டத்தில் வாரத்தில் ஒரு நாள் சுவையான சிறுதானிய உணவு வழங்கலாம்!

தரிசு நிலங்களில் கூடுதலாக 11.75 ஹெக்டர் பரப்பில் பயிரிட்டு 75% ஆக உயர்த்த நடவடிக்கையாம்!

இதென்ன திட்டம்? இருக்கிற நிலங்களை பாதுகாக்காமல் தரிசு நிலங்களை பயிரிடப்படுவதாகச் சொல்வது என்ன வேடிக்கை! விளை நிலங்கள் எல்லாம் தரிசு நிலங்களாக மாறுவதற்கான காரணத்தை அப்படியே விட்டு வைத்துக் கொண்டு, தரிசு நிலத்தில் பயிரிடப் போகிறேன் என்றால் என்ன அர்த்தம் ? அளவுக்கு அதிகமான ரசாயன உரப் பயன்பாடுகளால், கால்வாய்ப் பாசனம் காணாமல் போனது. நிலத்தடி நீரை அடியாழம் வரை சென்று உறிஞ்சி எடுத்தது, தண்ணீர் போதாமை.. இவை தானே விளை நிலங்கள் தரிசு நிலங்களாக மாறியதற்கான காரணம்! இவற்றை சரி செய்ய கால்வாய் பாசனத்தை மீட்டு எடுங்கள்! அப்புறம் தானாக பயிரிடும் நிலப்பரப்பு கூடுமா? இல்லையா? பார்த்துக் கொள்ளுங்கள்!

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் மையங்கள் எல்லாமே பாதுகாப்பற்றதாக திறந்த வெளியில் நெல் மூடைகளை குவித்து வைக்கும் மையங்களாக உள்ளதால், ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான நெல் மூட்டைகள் மழையிலும்,வெயிலும் அழிகின்றன! இந்தக் கொடுமைக்கு இந்த பட்ஜெட் முடிவு காணாமல் வாய்ப்பந்தல் போட்டுள்ளது. மழையில் நெல் மூட்டைகள் பாதிக்கப்படுவதை தடுக்க ரூ.52.02 கோடியில் விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் தருவது எப்படி சரியாக இருக்க முடியும். உரிய முறையில் கட்டிடங்களை கட்டலாமே!

உற்பத்தியாகிற நெல்லையே கொள்முதல் செய்யவும், பாதுகாக்கவும் வழியற்ற நிலையில், இரு போக சாகுபடி பரப்பை அடுத்த 10 ஆண்டுகளில் 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்க நடவடிக்கையாம்! என்னத்தை சொல்வது?

சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைந்து கூட்டுப்பண்ணை முறை ஊக்குவிக்கப்படும் என்பது மிகவும் வரவேற்கத்தக்கது! ஆனால், கடந்த காலங்களில் இருந்த கூட்டுப் பண்ணைகளுக்கு வேட்டு வைத்தது யார்? என்ன காரணங்கள் எனப் பார்த்து அவை மீண்டும் தலைதூக்காமல் இருக்க திட்டமிட வேண்டும்!

உணவு தானிய உற்பத்தியில் நடப்பாண்டு 125 மெட்ரிக் டன் என்ற இலக்கை எய்திட திட்டம் எனச் சொல்லும் போது கூடுதல் உற்பத்தியால் விளை பொருட்களின் விலையை வீழ்ந்து விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் . இல்லையெனில், கூடுதல் உற்பத்தி கூடுதல் சோகத்தையே ஏற்படுத்தும்!

கரும்பின் பிழிதிறனை அதிகரிக்கும் வகையில் சிறப்பு திட்டத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடாம்! கரும்பு கொள்முதல் விலையும் சிறிதளவு உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து சர்க்கரை ஆலைகள் வாங்கும் கரும்புக்கான நிலுவைத் தொகைகளை குறிப்பிட்ட காலக் கெடுக்குள் தருவதற்கு நிர்பந்தம் வேண்டும். மேலும் கரும்பின் மொலாசஸில் கிடைக்கும் எத்தனால் கொண்டு தான் மது தயாரிக்கப்படுகிறது. அதில் கொள்ளை லாபம் பார்க்கும் ஆலைகள் மொலாசஸீற்காக விவசாயிகளுக்கு பத்து பைசா கூடத் தருவதில்லை! இதைவிட ஒரு துரோகம் இருக்க முடியுமா?

பனை விவசாயத்தின் மீது பெரிய அக்கறை காட்டுவது போல சில அறிவிப்புகள் வந்துள்ளன!

30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளும், ஒரு லட்சம் பனங்கன்றுகளும் முழு மானியத்தில் விநியோகமாம், பனை மரத்தை வெட்ட ஆட்சியரின் அனுமதி இனி கட்டாயமாம்! பனை வெல்லத்தை ரேசன் கடைகள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பார்களாம்! பனையின் மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு, பனை விதைப்பு, பனையேற்ற கருவிகள் கண்டுபிடிப்பு போன்ற பணிகளுக்கு 2 கோடியே 65 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுமாம். பனை மேம்பாட்டு இயக்கம் ரூ.3 கோடியில் செயல்படுத்தப்படுமாம்! இதெல்லாம் பெரும் பித்தலாட்டமின்றி வேறில்லை!

உண்மையில் இவை எதுவுமே அவசியமில்லை. பனை ஏறுவதற்கு தடைவிதித்து எம்.ஜி.ஆர் போட்ட சட்டத்தை நீக்கிவிட்டால், அது ஒன்றே போதுமானது! பனை ஏறி பதனீர் இறக்கியும், கருப்பட்டி காய்ச்சியும் 12 இலட்சம் தொழிலாளர்கள் இருந்தனர்.அவர்கள் அனைவரையும் அந்த ஒரே சட்டத்தில் காலியாக்கினார் எம்.ஜி.ஆர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலுமே இத்தகைய மோசடியான சட்டம் கிடையாது. அந்த சட்டத்தை எடுத்துவிட்டால் பாருங்கள், தமிழ் நாட்டில் எங்குமே யாரும் பனை மரத்தை வெட்ட துணியமாட்டார்கள்! இன்று பயனற்று இருப்பதால் தானே அவை வெட்டப்படுகின்றன! அதில் பயன்பெறத் தடை இல்லை என்றால், மக்களே பொக்கிஷமாக அதை பாதுகாப்பார்கள்! எல்லா இடங்களிலும் அவர்களே பனை விதையை விதைத்து வளர்ப்பார்கள். அரசு உதவியே இதில் தேவையில்லை.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க TANGEDCO விற்கு ரூ.5,157.56 கோடியாம்! இந்த இலவச மின்சாரத்தை சிறுகுறு விவசாயிகளுக்கு மட்டும் தரலாம். மற்றபடி வசதியான விவசாயிகள் வேண்டுவது எல்லாம் தரமான, தங்கு தடையற்ற மின்சார சேவை தான்! தயவு செய்து விவசாயிகளுக்கு இயல்பாக இருக்கும் உரிமைகளை மறுத்துவிட்டு, அவர்களின் விளை பொருள்களுக்கான நியாயமான விலையை தராமல் விட்டு விட்டு, இலவசங்களையும், சலுகைகளையும் தந்து உங்களை தானப் பிரபுக்களாக்கி கொள்ளாதீர்கள்! விவசாயி தான் உண்மையான அன்னதானப் பிரபுவாகும். அரசாங்கம் விவசாயிகள் உழைப்பில் தான் உயிர்த்திருக்கிறது என்பதை நினைவில் கொள்ளட்டும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time