கடல் ஞானத்தை கற்றுத் தரும் அரிய நூல்!

-மீரான் மைதீன்

கடல் பற்றிய அடிப்படை அறிவை நமக்கு கற்றுத் தருகிறது. கடல் சார்ந்த சூழலியல் முக்கியத்துவத்தை உணர்த்தி, நமது அபிப்பிராயங்களை மறுகட்டமைப்பு செய்கிறது! கடல், கடல் வாழ் உயிரினங்கள், மீனவர்கள், அவர்களின் ஈடில்லா உழைப்பு ஆகியவை பற்றிய புரிதலைத் தருகிறது! மீனவர்கள் மீதான அரசுகளின் சுரண்டல்களை பேசுகிறது!

கிட்டத்தட்ட நாற்பதுக்கும் அதிகமான நூல்களை படைத்திருக்கிற முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின்  எழுத்தின் எல்லா முனைகளிலும் தன்னைக் கூர்தீட்டி, அவ்வாறு கூர்தீட்டிய தனது எழுத்துக்களை நல்ல ஆயுதமாக சமூகத்துக்கு ஒப்படைத்திருக்கிறார்!

ஒரு நூல் என்ன செய்துவிடும் என்பவர்களுக்கு ஒரு நல்ல நூல் எல்லாம் செய்துவிடும் வல்லமை கொண்டது என்பதை தவிர வேறு பதிலெதுவும் சொல்லத் தேவையில்லை.இதன் உறுதியை கடல் பழகுதல் என்கிற இந்த முக்கியமான நூல்  வாசகர்களுக்கு மெய்பிக்கிறது.

கடல் அழகானது,எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதது, குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை கடலைக் காணும் போது உற்சாகம் கொள்கின்றனர். உற்சாக மிகுதியில் அலைகளோடும் கடலின் கரைகளோடும் விளையாடுகின்றனர்.ஆர்பாரிக்கும் கடலின் அழகில் ஆனந்தமடைதல் என்பது மனிதர்களுக்கு ஆனந்த தாண்டவம்தான்.

அவதானம், ஆய்வு,வாசிப்பு, என மூன்று பகுதியாக எழுதப்பட்டிருக்கும் நூல் இந்த இயற்கையின் பேரம்சமான கடல் பற்றியும்,கடல்வாழ் உயிர்கள் பற்றியும், ஆதிப்பழங்குடி மீனவர்கள் பற்றியும் பொதுசமூகத்தின் முன்பு அது பரப்பி வைக்கும் உலகமும் உண்மையும் ஆச்சரியம் நிறைந்தது மட்டுமல்ல, அத்தியாவசியமான கல்வியும் கூட! இந்த கடல் பற்றிய கல்வியை கற்றுத்தேறாமல், இந்த உலகை நாம் பார்க்கமுடியாது.கடல் தவிர்த்த நம் கல்வியின் பார்வை நிறைவு பெற்றதுமல்ல.

வறீதையா கான்ஸ்தந்தின்

கடல் என்பது அடிப்படையில் நீர் என்னும் திரவம். தன்னளவில் நிறமற்ற இந்த திரவம்தான் உயிரின் ஆதாரம் என்கிறார்.ஒரு உயிர் தனது ஆதாரத்தை கற்காமல் அதன் கல்வி ஒருபோதும் நிறைவு பெறாது.நாம் ஆசைதீர கடலைப் பார்க்கிறோமே தவிர, கடலோடு பழகவில்லை. கடலோடு நாம் பழகுவதற்கு கடலிடம் என்னவெல்லாம் இருக்கிறது, கடல் நமக்கு  என்னவாக இருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டுமல்லவா ?

எனக்கு கடலின் மீதான காதல் அதீதமானது. கடல் பழகுதல் நூல் எண்ணிலடங்காத வாசல்களை எனக்கு திறந்து தருகிறது. வறிதையா கான்ஸ்தந்தின் அவர் சார்ந்திருக்கிற  சமூகத்தின்  கொண்டிருக்கிற பேரன்பின் வடிவமும் ஒரு கடல் போல படர்ந்து கிடப்பதாக தோன்றுகிறது.இது ஒரு நேசனின் எழுத்து.

அசைவற்ற சமபரப்பில் வாழ்கின்ற மனிதர்களுக்கு சதா அசைந்து கொண்டேயிருக்கும் ஒன்றில் உலவும் மனிதர்களின் கண்கள் வழியாக கடலைப் பார்பதென்பது ஞானம் நிறைந்தது.அந்த ஞானத்தின் சில திறப்புகளை வறிதையா கான்ஸ்தந்தின் தனது எழுத்தின் வாயிலாக திறந்து தருகிறார். அவதானம் ,கடலை சொல்லித்தருகிறது. பெருங்கடல் நீரோட்டங்கள், கடற்பாதாளங்கள்,கடல் மாசுபாடு,கடல் பழங்குடிகள், கடல் உயிர்கள் என நமது அறிவை விசாலமாக்குகிறது.சுரண்டப்படுகிற ஒரு சமூகத்தையே ஏளனமாக பார்க்கப்படும் பார்வையின் ஆபத்தை உணர்த்துகிற நூலானது , சமநிலையற்ற வளர்ச்சி அபாயமானது. வளர்ச்சியிலிருந்து விலக்கப்படும் சமூகம் ஒடுக்குதலுக்கும், சுரண்டலுக்கும் ஆளாக்கப்படும் போது அது ஒரு பேராபத்தை ஏற்படுத்தும் என்கிற எச்சரிக்கைகளையும் நாம் இதன்வழியே அவதானிக்க முடிகிறது.

நகர மையப் பார்வை, நில மையப் பார்வை, தான் வாழும் நிலத்தை மையமாகவும், கடலை நிலத்தின் விளிம்பாகவும் நிறுத்தும் கருதுகோள் ஏற்படுத்திய அபாயங்களை குறிப்பிடுகிற போது, ‘கடல் நதியை நம்பியிருக்கவில்லை,கடல்தான் நதியை ஈன்று தருகிறது’ என்கிறார். நில மைய, நகர் மையப் பார்வையோடு இதைப் புரிந்து கொள்ள இயலாது.

கடல் பழகுதல் நூலின் ஆய்வுப் பகுதியில் முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேலாக  தொடர்ந்து செய்துவரும் ஆய்வுக்கட்டுரைகள் நம் பார்வைக்கு கிடைக்கின்றன.கடல் வாழ்க்கையின் சிக்கல்களை, உண்மைகளை போதிய அளவில் அக்கரையோடு பதிவு செய்கிறார். உண்மையில் மீனவர்களுக்கான பிரச்சனைகள்,அவர்களின் போராட்டங்களிலுள்ள நியாயங்கள், அவர்கள் வாழ்வின் போக்கும் சிக்கல்களும் என பொதுசமூகம் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்களை நமக்கு நேராக வைக்கிறார்.நாட்டில் எல்லோரும் சமமாக நடத்தப்படவில்லை என்கிற நேரடி எதார்த்தம் புரிகிறது.

சுனாமி மற்றும் புயல் கால பேரிடர்களில் பண்பாட்டுக் கூறுகளோடு அணுகாததின் வலிகள் ஒரு பாடமாக முன்வைக்கப்படுகிறது. பெரும்பாலும் தோல்விகள் எப்போதும் அணுகுமுறை கோளாறுகளால் தான் ஏற்படுகிறது.அதுபோல பேரிடரை நாம்  இன்னும் பெண்களின் கண்கள் வழியாகப் பார்க்கத் தொடங்கவில்லை என்பதிலுள்ள உண்மை மானிட வர்கத்தின் துயரமான பக்கங்களாகவே இன்னும் இருக்கிறது. பேரிடர் மற்றும் பெருந்துயரக் காலங்கள் பெண்களுக்கு நிகழ்த்தும் கடினங்களை நாம் புரிந்து கொள்ள இன்னும் நிறைய பயணிக்க வேண்டியுள்ளது.எல்லா துயரங்களும் பெண்களை சுலபத்தில் சென்றடைவதையும் குறிப்பிடும் வறீதையா எல்லையற்ற பிரதிநிதித்துவமாகி இருக்கிறார்.

இந்தியாவில் ஆண்டுக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் 15 கிலோ மீன்புரதம் தேவைப்படுகிறது. சீனாவுக்குப்பிறகு மிகப்பெரிய மீன் அறுவடை நடைபெறும் இந்திய கடலில் உழலும் மீனவர்களின் கடல் வாழ்வை சமவெளியிலிருக்கும் அரசும் அதிகாரிகளும் திட்டங்கள் வகுக்கும் போது, அது என்னென்ன துயரங்களை நிகழ்த்தும் என்பதையெல்லாம் இந்த ஆய்வுக் கட்டுரைகள் பல கேள்விகளை நமக்கு முன்னால்  இட்டுச் செல்கிறது.

அவர்கள் வாழ்வு அவர்களுக்கான கடினம் என்று தள்ளிவிட முடியாது கடலுக்குப் போகும் ஒரு மீனவரால் கரையில் சராசரியாக 16 பேர் தொழில் பெறுகிறார்கள்.நமக்கு மீன் உணவு வேண்டும்.அது கடலிலிருந்தே வந்தாக வேண்டிய நிலையில் பருவமாற்றத்தால் கடல் வீழ்ந்து கொண்டே வருவதைப் பற்றிய கவலை கொள்ள வேண்டிய நேரம் இது.பெரும் தொழிற்சாலைகள் மாசுகளை கடலில் வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன. வனத்தை பாதுகாக்கிற வனப் பழங்குடிகள் அங்கிருந்து துரத்தப்படுகின்றனர்.கடலை பாதுகாக்கிற கடல் பழங்குடி மீனவர்கள் கரையிலிருந்து துரத்தப்படுகிறார்கள் என்பதெல்லாம் துயரமான காலமாக இருக்கிறது.

வனத்திலுள்ள ஒரு உயிரை, நகரத்திலுள்ள ஒரு உயிரை, சமப்பரப்பிலுள்ள இயற்கையின் சிறிய அம்சங்கள் வரையிலும் புவிகோளத்தின் எல்லா உயிர்களையும் கடலே வருடி நிக்கிற நிலையில் கடலின் முக்கியத்துவத்தை ஆய்ந்தறியும் மேன்மையான பாங்கினை இந்த நூல் நமக்குள் ஏற்படுத்துகிறது.கடல் பழகுதல் நூலின் தலையாய சிறப்பும் இதுதான்.

பெருநகரங்கள் உள்ளிட்ட மக்கள் மிகுந்த எல்லா நகரங்களும் கடலின் வெகு அருகிலேயே அமைந்துள்ளன. இந்திய பெருங்கடலில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் மீன் அறுவடை படிப்படியாக வீழ்ந்து வரும் நிலையில் 2048 ல் மீன்களற்ற கடல் உருவாகும் என எச்சரிப்பதையும் கவனப்படுத்துகிறது.நிலப்பரப்பில் நிகழும் எல்லா மாற்றங்களின் அழுத்தமும்,வளர்ச்சி என்கிற பெயரில் நிகழும்  சிதைவுகளின் அழுத்தமும் கடலையே சென்று சேர்கின்றன.

வெப்பநிலை உயர்வே புயலின் வீரியத்தை அதிகப்படுத்துகிறது. புவிப்பரப்பின் வெப்பநிலை மாற்றமே, கடல் மட்டத்தை உயர்த்துகிறது.எல்லா இயற்கை சீற்றங்களும் மனிதனின் எல்லையற்ற இயற்கை ஆக்கிரமிப்புகளாலும்,கட்டற்ற அறிவியல் தொழில்நுட்ப அணுகுமுறை விளைவுகளின் வழியாகவும் நடந்தேறுகிறது.

நெய்தல் நிலத்தின் இலக்கிய பரப்பை,வரலாறை,ஆளுமைகளைப் பற்றியும் இந்த நூல் “வாசிப்பு” என்கிற பகுதியில் பேசுகிறது.ஒவ்வொரு இனக்குழுவும் தனது இடத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். வரலாற்றில் இடமில்லை என்றால் சமூக,அரசியல் வெளிகளிலும் இடமில்லாமலாகிவிடும் என்பதை கோடிட்டு நெய்தல் நிலத்தின் இலக்கிய உலகை அறிமுகம் செய்கிறார்.கடல்சார் மக்களோடு தொடர்புடைய “செண்பகராமன் பள்ளு”என்கிற பதினேழாம் நூற்றாண்டின் சிற்றிலக்கியம் பற்றிய குறிப்பு நமக்கு கிடைக்கிறது.

அம்மூவனார்,உலோச்சனார்,போன்ற நெய்தல் நில கவிகள் நம்க்குத் தெரிய வருகிறார்கள்.1975 ல் வார்த்தைச் சித்தர் ஞானபாரதி வலம்புரிஜான் அவர்களின் “நீர்க்காகங்கள்” புதினமே தமிழ்நாட்டில் அச்சான முதல் நெய்தல் இலக்கியம் என்கிற செய்தி நம் தேடுதலை இன்னும் விசாலமாக்க துணை செய்கிறது.ஜோடி குரூஸ்,வறீதையா கான்ஸ்தந்தின், பானுமதி பாஸ்கோ,தார்சி எஸ் பெர்னாண்டோ,குரும்பனை பெர்லின், செல்வராஜ்,ஆன்றனி அரசு, அருள் சினேகம், இரையுமன் சாகர் என பல நெய்தல் நில படைப்பாளிகள் நமக்கு அறிமுகமாகின்றனர்.

முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களின் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வருபவர்களால் அவரின் இணையற்ற மீக நீண்ட உழைப்பையும் அவதானிப்பையும் இடைவிடாது அம்மக்களுக்காக சிந்தனையை செலவிடும் அவரின் மிகஉயர்ந்த எண்ணம் வேறு எதனோடும் ஒப்பிட இயலாதது.நெய்தல் நிலத்தி்ன் வாழ்வை,பிரச்சனையை நமக்கு காட்டித் தருவதோடு மட்டுமல்லாமல் நம் கரிசனத்தை அப்பக்கமாக திருப்புகிற எழுத்து வல்லமை இவருக்கு அதிகமாக உண்டு.நெய்தல் மக்கள் மீதும்,ஈடு இணையற்ற இந்த இயற்கை மீதும் தான் கொண்டிருக்கிற நேசமே, வறிதையா கான்ஸ்தந்தின் இரத்த நாளங்களிலிருந்து எழுத்தாக மலர்கிறது.எனவே தான், இந்த எழுத்து துடிப்படங்காமல் நம்முள் கலக்கிறது. இது ஒரு நேசனின் ஞானநிலை தவிர வேறொன்றுமில்லை.கடல்பழகுதல் நூல் இன்னும் சில யுகங்களுக்கானது.

புலம் வெளியீடு

பக்கங்கள் 464

விலை ரூ 500

நூல் விமர்சனம் :  மீரான் மைதீன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time