கட்டுக்கட்டாக கரன்சிகளையும்,கண்ணைப் பறிக்கும் தங்க கட்டிகளையும் வீடெங்கும் நிறைத்து வைத்திருந்த சேகர்ரெட்டி விடுவிக்கப்பட்டுள்ளார் குற்றமற்றவராக!
”குற்றமற்றவரை குற்றவாளியாக்கிவிட்டோமே” என தன் தவறுகளுக்காக பாஜக நாணிச் சிவந்து, இல்லையில்லை, கூனிக்குறுகி வெட்கப்படுகிற அழகைப் பாருங்களேன்…!
சி.பி.ஐ சிறுமைப்பட்டு நிற்கிறது. ரிசர்வ் வங்கி அசமந்தமாய் முழிக்கிறது.காவல்துறை கைகட்டிப் பார்க்கிறது! ஆகா…,என்ன நடந்தது? இந்தக் கதையை நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டாமா?
2016 ல் ஜெயலலிதா மறைவையடுத்து டிசம்பர் 8 ஆம் தேதியே சேகர் ரெட்டி வீட்டிலும்,அலுவலகங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டு,கண்டெடுத்தவையாக அறிவிக்கப்பட்டவை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!
தங்கம் 178 கிலோ
புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ 24 கோடி
பழைய ரூபாய் நோட்டுகள் ரூபாய் 130 கோடி
அத்துடன் சுமார் 850 ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டதில்,மிக முக்கியமகப் பேசப்பட்டது அவரது ஒரு டைரி! அந்த டைரியில் அவர் எந்தந்த அரசியல்வாதிகளுக்கு,அதிகாரிகளுக்கு எவ்வளவு பணம் தந்தார் என்பது தெளிவாக எழுதப்பட்டிருந்தது.அதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளராக இருந்த ராம்மனோகர் ராவ் வீட்டிலும்,கோட்டையில் அவரது அலுவலகத்திலும் ரெய்டு நடந்தது. சேகர் ரெட்டியுடன் எட்டு பேர் கைதானார்கள்! இதில் 170 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வளவுக்குப் பிறகும், அவர் குற்றமற்றவராகிவிட்டார் என்றால், ‘’அவர் ஏன் கைது செய்து தண்டிக்கப்படவில்லை?’’ என்று கேட்பவர்கள் அவர் யார் என்று தெரியாமல் கேட்கிறார்கள் என்று தான் அர்த்தம்.ஆகவே, சேகர்ரெட்டி குறித்த தெளிவான அறிமுகம் தர வேண்டியது நமது கடமையாகிறது.
சேகர் ரெட்டி என்பவர் தமிழ் நாட்டின் இயற்கை வளமான மணலை சுரண்டி எடுத்துக் கொண்டு தங்களுக்கு பிச்சை போட தமிழக ஆட்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்ட தெய்வம்!
அந்தப் புரவலர் இவர்களுக்கு பிச்சை போடுவதற்கு என்றே 300 மணல் அள்ளும் பொக்லைன்களையும் 400 லாரிகளையும் கொண்டு தமிழகத்தின் மணல்வளத்தை சுரண்டி எடுத்து ஆட்சியாளர்கள்,அதிகாரிகளை வாழ வைத்தார்!
அவரிடம் பிச்சை எடுத்தவர்களின் பட்டியல் நம்மை பிரமிக்க வைத்தது!
ஓ.பன்னீர்செல்வம்,விஜயபாஸ்கர்,தங்கமணி,சம்பத்,ஆர்.பி.உதயகுமார்..உள்ளிட்ட எட்டு அமைச்சர்கள்!
தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் தொடங்கி ஏராளமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்!
தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர்.
இவை தவிர குட்டி அரசியல்வாதிகள்,குட்டி அதிகாரிகள்…வேறு உள்ளனர்!
இவர்களையெல்லாம் விட அவர் அந்த திருப்பதி ஏழுமலையானையே தன் மானசீக பார்ட்டனராக வைத்திருந்தார்.அதனால்,அவருக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் அந்தஸ்து கிடைத்தது.
Also read
இவர் இஷ்டத்திற்கு மணல் அள்ளிக் கொள்ளவதன் மூலம் தமிழக அரசு கஜானாவிற்கு வந்திருக்க வேண்டிய சுமார் 5,000 கோடியைத் தான் அவர் தன் பங்காக 500 கோடி எடுத்துக் கொண்டு, மற்றவற்றை பெருந்தன்மையாகப் பகிர்ந்தளித்தார்.
தன்னுடைய ரெய்டில், அவருடைய பெருந்தன்மையைக் கண்டு வியந்து தான் பாஜக அவரை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றும் புண்ணியத்தை செய்துள்ளது. வங்கி அதிகாரிகள் எல்லாம் அவருக்கு பணமதிப்பிழப்பின் போது பழைய ரூபாய் கட்டுகளை பவ்வியத்துடன் எடுத்துக் கொண்டு, புதிய 2,000 ரூபாயை சுமார் 24 கோடியளவுக்கு தந்துள்ளார்கள்! எந்த வங்கியில் அவர் பண்பரிவர்த்தனை செய்தார் என அவரையே கேட்பது அநீதி என்பதால், அந்த வங்கி எதுவென சி.பி.ஐ, ரிசர்வ் வங்கியைக் கேட்டது.
தற்போது ரிசர்வ் வங்கியே சேகர்ரெட்டிக்கு சேவையாற்றும் விதமாக அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளின் சீரியல் எண்கள் எந்த வங்கிக்கு தன்னால் அனுப்பட்டது என்பதை சொல்ல முன்வரவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!
தடை செய்யப்பட்ட பான்மசலா குட்கா போன்றவை கிடைக்காவிட்டால் அதற்கு அடிமையான இளைஞர்களின் நிலை என்னாகும்… என்பதால்,அதையும் அவர் விருப்பம் போல சென்னை நகரில் விற்றவர்., அதாவது போலீஸ் கெடுபிடிகளை மீறி விற்கும் ’ரிஸ்க்’ எடுத்தவர் என்ற வகையிலும் பாஜகவிற்கு அவர் மீது தனிப்பட்ட பாசம் ஏற்பட்டுவிட்டதென்றால், பார்த்துக் கொள்ளுங்கள்!
ஆக,தமிழ் நாட்டில் யாரெல்லாம் சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் பணம் சம்பாதித்தார்களோ…அவர்களையெல்லாமே கடந்த நான்காண்டுகளில், ஆத்மார்த்த நண்பனாக்கிக் கொள்வதையே தன் பிறவிப் பெரும்பயனாக பாஜக செய்து வருவதைக் கண்டு தமிழக மக்கள் புல்லரித்து போயுள்ளனர்!
# சசிகலா குடும்ப உறுப்பினர் வீடுகளிலும்,தொழில் நிறுவனங்களிலும் ரெய்டு நடத்தி அவர்களுடனான உறவை வலுப்படுத்திக் கொண்ட அழகை என்னென்பது..!
# குட்கா புகழ் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தி, பல வில்லங்கங்களை கண்டெடுத்து வியந்தோதி,அவரையே நலவாழ்வுத் துறை அமைச்சராக தொடரவிட்ட ஞாயத்தை என்னென்பது..?
# ஆர்.கே நகர் தேர்தல் நேரம், பண வினியோகத்தில் மாட்டிய மந்திரிகளை மன்னித்த பெருந்தன்மையை என்னென்பது…!
# பொள்ளாச்சி சம்பவத்தை பொசுக்கி, துணைசபாநாயகர் மகனை தூசுபடாமல் காப்பாற்றிய வித்தையை என்னென்பது?
# கொட நாடு பங்களாவில் எடப்பாடியால் ஏவப்பட்டவர்கள் ஆவணங்களைத் திருடியதைத் தொடர்ந்து நடந்த கொலைகளை மன்னித்து, மறந்ததை என்னென்பது..!
# பி.எம்.கிசான் நிதியில் விவசாயிகள் பணத்தை பிராண்டித் தின்னவர்களோடு தன்னை பிணைத்துக் கொண்டு, பாஜக தன் நட்பிற்கு தரும் மரியாதையை என்னென்பது?
# இன்னும் மணல் மாப்பியாக்கள்,கிரானைட் கொள்ளையர்கள்….ஆகிய அனைத்து சட்டவிரோத காரியங்களை செய்தவர்களையும் சட்டப்படி தப்புவிக்கும் அரியதோர் திருப்பணியை திமுகவை ஒழித்துக் கட்டும் புனிதத் திருப்பணியாய் நினைத்து செய்யும் பாஜக தமிழ் நாட்டில் எதிர்பார்ப்பது தான் என்ன?
# சி.பி.ஐயை பாஜகவின் ரெய்டு நடத்தும் ஆபிசர் விங்காக்கி அரசு சம்பளத்தை வழங்கும் அற்புதத்தை என்னென்பது…?
கழகங்களின் ஊழல்களுக்கு மாற்றாக கண்மணி ரஜினிகாந்த்தை எதிர்பார்த்து பாவம் ஏமாந்துவிட்டது பாஜக!
.அதனால், தற்போது ஹெச்.ராஜா சொன்னதை ஞாபகப்படுத்திப் பாருங்கள்; ’’அதிமுகவின் பாவமூட்டைகளை சுமப்பது மட்டுமே பாஜகவின் வேலை என்று நினைக்கக் கூடாது.அடுத்த முறை மாநில ஆட்சியில் பங்கு வேண்டும்’’ .இதை பாஜகவின் ஒப்புதல் வாக்குமூலமாக கொண்டு, பாஜக ஏன் தமிழகத்தில் பாவமூடைகளை சுமக்கிறது என புரிந்து கொள்வோமாக!
Leave a Reply