புகழ்மிக்க ஒரு நடிகையின் துன்பமும், வலியும் நிறைந்த சொல்லப்படாத மறுபக்க வாழ்வை சித்தரிக்கும் சீரியலே Fame Game. நடிகையின் குடும்ப வாழ்க்கையும், திரையில் அவள் வளர்ந்த விதமும் மாறி, மாறி சொல்லப்படுகிறது. இது நமக்குத் தெரிந்த பல திரை நட்சத்திரங்களின் வாழ்வை நினைவுபடுத்துகிறது.
தொண்ணூறுகளில் வெளியான கல்நாயக் படத்தின் ‘சோளி கே பீச்சே கியா ஹை’ என்ற பிரபல பாடல் புகழ், மாதுரி திக்ஷித்தான், Fame Game என்ற இந்தித் தொடரில் அனாமிகா ஆனந்த் என்ற நடிகை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு நடிகையின் குடும்ப வாழ்க்கை, அவரது பிள்ளைகள், வளர்ப்பு முறை, பிரபலம் என்பதற்காக ஒருவர் சந்திக்கும் இழப்புகள் போன்றவைகள் இந்தத் தொடரில் பேசப்படுகின்றன. வித்தியாசமான கதைக் களன்.
Fame Game இப்போது நெட்பிளிக்சில் ஓடிக்கொண்டிருக்கிறது. எட்டு பாகங்கள். கிட்டத்தட்ட ஆறரை மணிநேரம். இதன் தொடக்கத்தில் அனாமிகா ஆனந்திற்கு விருது வழங்கப்படுகிறது. விருது பெற்ற மறுநாளே அவளை வீட்டிலிருந்து காணவில்லை. அவளது கணவர், அம்மா, மகள், மகன், சமையல் வேலை செய்யும் பெண்மணி, ஒப்பனையாளர் என யாருக்கும் அவள் எங்கு சென்றாள் என்பது தெரியவில்லை. இவளது கைப்பை, செல்பேசி போன்ற தனிப்பட்ட உடமைகள் கூட வீட்டிலேயே உள்ளன. கண்காணிப்பு காமிரா தற்காலிகமாக அணைத்து வைக்கப்பட்டுள்ளது. காணாமல் போன நடிகையைத் தேடுகிறார்கள். திரை உலகம் தவிக்கிறது. பணயத் தொகை கேட்டு தொலைபேசி அழைப்பும் வரவில்லை. கொலையும் நடக்கவில்லை. அவளுக்கு என்ன ஆனது !
அனாமிகாவின் கணவன் நிகில், அவளை வைத்து சினிமா எடுக்கிறான். பெருத்த நட்டம். கடனில் இருக்கிறான். வீட்டைக்கூட விற்கும் நிலை. கேள்வி கேட்கும் மனைவியை அடிக்கிறான். இவனுக்கு அனாமிகா காணாமல் போனதில் தொடர்பு இருக்குமா? கணவனாக சஞ்சய் கபூர் நடித்துள்ளார்.
கல்லூரியில் படிக்கும் அனாமிகா மகனான அவி – க்கு படிப்பில் ஆர்வமில்லை. அவனது நண்பன் எப்போதும் கூட இருக்கிறான். அவனுக்கு இசையில் ஆர்வம் இருக்கிறது. நியூயார்க்கின் இசைப்பள்ளியில் படிக்க விரும்புகிறான். அவனது தந்தை இதை எதிர்க்கிறார். பணம் செலவாகுமே! தன் மகனுடைய உண்மையான பிரச்சினை என்ன ! உண்மை என்னவென்பதைக் கண்டுகொண்டு, தன் மகனுக்கு ஆதரவாக கைக் கொடுக்கிறாள் அனாமிகா. ஓரின விழைவு குறித்த படங்கள் சமீப காலங்களில் திரையில் அதிகம் பேசப்படுகின்றன.
மகளான அமரா சற்று முதிர்ச்சியானவள். நடிக்க விருப்பப்படுகிறாள். நடிகையின் மகளான அவளுக்கு, குடும்பப் பின்னணியே ஒரு தடையாக இருக்கிறது.
நீண்ட காலமாக இருக்கும் ஒப்பனையாளருக்கு அனாமிகாவின் அனைத்து நடவடிக்கைகளும் தெரியும். சிறுவயது முதலே பார்த்து வருவதால், மாமா என்றுதான் அவளது பிள்ளைகள் ஒப்பனையாளரை அழைக்கிறார்கள். இளமைக் காலத்தில், அவளோடு நடித்த நடிகரின் தொடர்பால் இலண்டனில் பிறந்த குழந்தை என்ன ஆனது என்ற ரகசியம் அவனுக்குத் தெரியும். காணாமல் போன அனாமிகாவை பற்றிய விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது அவன் கொல்லப்படுகிறான்.
பிரபலம் என்பதால் ஒருவன் இழக்கும் தனியுரிமை இதில் சொல்லப்படுகிறது. ஒரு நடிகரின் வீட்டில் என்ன நடக்கும் ! கணவன் – மனைவி எப்படி நடந்துகொள்வார்கள் ! ஒருவரது அந்தரங்கமான நடவடிக்கைகள் எப்படி அவரது குடும்ப வாழ்வையும், பொது வாழ்வையும் பாதிக்கும் என்பதை நன்றாக சித்தரித்துள்ளார் இயக்குநரான ஸ்ரீ ராவ். இதில் நடப்பவை அனைத்துமே, ஏதோ ஒரு சமயத்தில், ஏதோ திரைக் கலைஞர்களுக்கு நடந்திருக்கலாம்.
இந்த வழக்கை விசாரிக்கும் பெண் விசாரணை அதிகாரி அனைவரையும் மிரட்டுகிறார். குடும்பத்தி்ல் ஒருவர் துணையின்றி அனாமிகா காணாமல் போயிருக்க வாய்ப்பில்லை என்பதை சரியாக கணிக்கிறார். ஆனாலும் மேலதிகாரி சொல்லுவது போல வழக்கு சுமுகமாக முடிகிறது.
அனாமிகாவின் அம்மா அவளை நடிகையாக்குகிறாள். அவளுக்காக பட ஒப்பந்தம் போடுகிறாள். அவளுக்காக சொத்துகள் வாங்குகிறாள் (விற்கிறாள் !). இவளுக்கு பிறந்த குழந்தைக்கு தந்தை யாரென்று முடிவு செய்கிறாள். திருமணம் செய்து வைக்கிறாள். காவல்துறை விசாரணை தொடங்கியவுடன், குடும்பத்து கண்ணியத்தைக் காக்க, யார் எப்படி பொய் சொல்ல வேண்டும் எனச் சொல்லித் தருகிறாள். அவள் ஒரு தாயா ! வில்லனா ! அவளைப் பற்றிய எந்த பிம்பம் சரியானது !
ஒரு காலத்தில் அனாமிகாவோடு ஜோடியாக இருந்து வெற்றிப் படங்களைத் தந்த, மணிஷ் கண்ணாவோடு இணைந்து ஒரு படம் வெளியானால், மீண்டும் வெற்றி பெற முடியும் என எண்ணி அவனோடு நடிக்கிறாள். அவளது கணவன் நிகில்தான் தயாரிக்கிறான். படம் வெற்றிபெறும் வாய்ப்பு மங்கலாக இருப்பதாக பைனான்சியர் சொல்லுகிறார்.(ஒருவேளை அவருக்கும் இவள் காணாமல் போனதில் பங்கு இருக்குமோ).
இவளோடு நடித்த மணிஷ் கண்ணாவிற்கு ஒரு வளரிளம் பெண் இருக்கிறாள். அனாமிகாவிற்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இருவரும் இணைந்து நடித்து ஆண்டுகள் பல ஆனாலும் பழைய நினைவுகளை இருவராலும் மறக்க முடியவில்லை. சமூக அழுத்தம் கலைஞர்களை எப்படி வதைக்கிறது ! ‘நீ எத்தனை பிலிம்பேர் விருது வாங்கியிருக்கிறாய்’ என்ற மணிஷ் கண்ணாவின் கேள்விக்கு, ‘உன்னைவிட இரண்டு அதிகம் வாங்கியிருக்கிறேன்’ என்று அனாமிகா சொல்லும் பதில் பல அர்த்தங்களைச் சொல்லுகிறது. மணிஷ் கண்ணாவாக, மாதவ் கௌல் நடித்துள்ளார்.
‘இளைஞர்களோடு ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொள்’, ‘சமூக வலைத்தளங்களில் செய்தி வருவது போல பார்த்துக் கொள்’, ‘ரசிகர்களிடம் பரிவோடு இரு’ என்று நடிகையாக ஆசைப்படும் தன் மகளுக்கு அனாமிகா அறிவுரைகள் கூறுகிறாள். அனாமிகா இதுவரை அடைந்த வெற்றிகளுக்கும், இனி அடைய இருக்கிற வெற்றிகளுக்கும் எதேச்சையானவைகள் அல்ல என்பதை நாம் இறுதியில் தெரிந்து கொள்ளலாம். தனக்கான வாழ்வு எத்தகையது என்பதை அனாமிகாதான் சுயேச்சையாக முடிவு செய்கிறாள்.
இதனிடையே மாதவ் என்ற ரசிகன் இவள் கவனத்தை கவருவதற்காக சக்கிர நாற்காலியில் ஊனமுற்றவனாக அறிமுகமாகிறான். இவளைப் பற்றிய ஒவ்வொரு செய்தியையும் சேகரித்து வைத்திருக்கிறான். இவள் பல்வேறு பேட்டியில் கொடுத்த பதில்களில் இருந்து பொருத்தமான வார்த்தைகளை எடுத்து அனாமிகா என்ன செய்வாள் என்பதைக் கூறுகிறான். அவன் அனாமிகாவின் மகளான அமராவிடம் நெருக்கமாகப் பழகுகிறான். இப்படிப்பட்ட ஒருவனையும் இத்தொடர் காட்டுகிறது.
Also read
இறுதியில் யாரும் எதிர்பாராவண்ணம் உச்சக்கட்டம் முடிவுக்கு வருகிறது. அவளது மகள் நடிகையாக அரங்கேறுகிறாள். படம் முழுவதும் மாதுரி திஷித் ஒரு மகளாக, நடிகையாக, தாயாக, மனைவியாக அற்புதமாக நடித்துள்ளார்.
ஆறு மணி நேரத்திற்கு மேல் ஓடும் இந்தத் தொடரின் மையப்பகுதி சற்று தொய்வாக உள்ளது. ஒரே மூச்சில் பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால், இதுவரை யாரும் பேசாத வித்தியாசமான கதையை இது பேசுகிறது. இதற்கு IMDb, 7.2 புள்ளிகளைக் கொடுத்துள்ளது. சுமார் 20 நாடுகளில் இந்தப் படம் விரும்பி பார்க்கப்பட்டு வருவாத செய்திகள் சொல்கின்றன! திரை நட்சத்திரங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை இது பேசுகிறது. இதற்காகவே இதனைப் பார்க்கலாம்.
விமர்சனம்; பீட்டர் துரைராஜ்
நல்ல யதார்த்தமான விமர்சனம்..வாழ்த்துக்கள்