சென்னைவாசிகள் சிலிர்த்து மகிழ்ந்த “நம்ம ஊரு திருவிழா”!

-ம.வி.ராஜதுரை

ஒரு பத்திரிகையாளன் பார்வையில் சொன்னால், இது போன்ற ஒரு பிரம்மாண்ட நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியை சென்னை கண்டதில்லை! தீவுத்திடலில் 500 நாட்டுப்புற கலைஞர்களின் அசத்தலான பல தரப்பட்ட கலை நிகழ்வுகளைக் கண்டு பரவசப்பட்டவர்கள் இதை ஆயுளுக்கும் மறக்க மாட்டார்கள்!

தமிழக அரசின் கலை, பண்பாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து ஏற்பாடு செய்திருந்த “நம்ம ஊரு திருவிழா”,சென்னை தீவுத் திடலில் நேற்று (21.03.22) மாலை நடைபெற்றது. இந்த விழாவை பார்க்க  மனைவி மற்றும் மகளுடன் சென்றிருந்தேன். நாங்கள் சென்ற போது மணி இரவு 8.00.சின்னப் பொண்ணு, அந்தோணி தாசன், கானா பாலா ஆகியோர் பாடிக்கொண்டிருந்தனர்.

தீவுத்திடலில் 500 நாட்டுப்புற கலைஞர்களுக்கு மேடைகள் எப்படி எல்லாம் அமைத்துக் கொடுக்கப் போகிறார்களோ, என்ற எண்ணம் என்னுள் மேலோங்கி நின்றிருந்தது. அனைத்து  வசதிகளும் கொண்ட பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்க்க ஏதுவாக ஆங்காங்கு பெரிய திரையை நிறுவி அதிலும் ஒளிபரப்பு செய்தார்கள். ஏற்பாடுகள் அனைத்தும் கச்சிதமாக நேர்த்தியாக இருந்தது.

கானா பாடலை தொடர்ந்து, டிரம்ஸ் கலைஞர் சிவமணி , பல்வேறு நாட்டுப்புறக் கலைக் குழுவினரை அறிமுகப்படுத்தி அவர்களுடன் இணைந்து தாமும் இசைத்தார்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பறை ,பம்பை இசைக் கலைஞர்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்து நையாண்டி மேளக் குழுவினர், ராமநாதபுரத்தில் இருந்து வந்திருந்த துடுப்பாட்டத்தினர், கோவை காரமடையை சேர்ந்த நடன கலைஞர்கள். இவர்கள் தனியாகவும் டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்தும் கலை நிகழ்ச்சி நடத்தி பார்த்தோரை பரவசப்படுத்தினர்.

டிரம்ஸ் சிவமணியின் இரண்டு கைகளும் பத்து கைகள் செய்யும் சாகசத்தை செய்து காண்போரை அசத்தின. அரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது இளம் ரசிகர்கள்  ஆங்காங்கு நடனம் ஆடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தம் நிகழ்ச்சியை பலத்த கைதட்டல்களுடன் நிறைவு செய்த சிவமணி, பார்வையாளர் அரங்கில் அமர்ந்திருந்த தன் தாயாரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி, நன்றிப் பெருக்குடன் அவரை வணங்கினார்.

அப்போது பெரும் பூரிப்பு அடைந்த அந்த அன்னையின் முகம்,

“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்

தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்”

என்றத் திருக்குறளை நினைவுபடுத்தியது.

தொடர்ந்து நடைபெற்ற கலைமாமணி முத்து சந்திரன் குழுவினரின் தோல்பாவை கூத்து என்பது மிகவும் வித்தியாசமாக இருந்தது. அற்புதமான பாரம்பரிய தமிழ் கலை வடிவம் இது.

அனுமன் கதையை அழகாக காட்சிப்படுத்தினர் தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள். சீதையை பார்க்கச் செல்லும் அனுமனை வழியில் நின்று தடுப்பான் அரக்கன். அவனைத் தவிர்த்து விட்டு பயணத்தை தொடர முயற்சி செய்வான் அனுமன். அரக்கன் வழிவிட மறுப்பான். வேறு வழியில்லாததால், அனுமன் சிறிய உருவம் எடுத்து அரக்கன் வயிற்றுக்குள் சென்று வயிற்றை கிழித்துக் கொண்டு வெளியில் வருவான். பின்னர் பயணத்தை தொடர்வான்.

கோவில் விழாக்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற  இந்த கதையை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி கச்சிதமாக சொல்லி பெரும் பாராட்டை பெற்றார்கள். இதையடுத்து மாஸ்டர் மகேந்திரனின் கலைக் குழுவினர் சிலம்பாட்டம், புலி வேஷம் போன்ற வீர விளையாட்டுக்களை செய்து பிரமிக்க வைத்தனர்.

கரகாட்டம் ,தேவராட்டம், புரவியாட்டம் என்று ஆட்டம் பாட்டம் தொடர்ந்தது. துள்ளத் துடிக்க உற்சாகம் பீறிட ஆடிய கலைஞர்களுக்கு கரகோஷங்கள் குவிந்தன.

அலங்காநல்லூர் வேலு குழுவினரின் தப்பாட்டம் அரங்க முழுவதையும் ஆர்ப்பரிக்க வைத்தது. இது தமிழர்களின் பாரம்பரிய பறையிசை என்பதால் இளைஞர்களை பெரிதும் ஆட்கொண்டது. பறை இசைக்கு ஏற்ப இளம்பெண்களும் ஆங்காங்கு நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

பார்வையாளர்களின் பெருத்த ஆரவாரத்துக்கு இடையே நிறைவடைந்த தப்பாட்டத்தை தொடர்ந்து ,நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த மகேஷ் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

” தமிழர்களுக்கே உரித்தானது. பாரம்பரியமும் பெருமையும் மிக்கது பறை இசை. நல்ல காரியத்துக்கும் இந்த இசையை நாம் காலம் காலமாக இசைத்து வந்திருக்கிறோம். அண்மைக்காலமாக இந்த இசையை விடுத்து கேரள கலைஞர்கள் பங்கேற்கும் சென்ட மேளத்தை மட்டும் நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துகிறோம். அந்த இசையோடு நம்முடைய பறை இசையையும் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார். கூட்டத்தினர் பலத்த கரவொலி எழுப்பி இக்கருத்தை வரவேற்றனர்.

தொடர்ந்து நீலகிரி மலையில் வாழும் தோடர் இனப்  பழங்குடி மக்களின் இனிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கடிகாரம் மணிஇரவு 10.30ஐ தாண்டி காண்பித்தது. இரண்டரை மணி நேரம் போனதே தெரியவில்லை. பசி வயிற்றைக் கிள்ளியது. கொசுக்கள் காலை பதம் பார்த்துக்கொண்டிருந்தன.

தமிழக அரசின் சுற்றுலாத் துறைக்கு சொந்தமான ஓட்டல் தமிழ்நாடு. இது ஸ்டால்கள் அமைத்திருந்தது. அங்கு சூடான தோசை ,பஜ்ஜி, பழரசம் ,கரும்புச்சாறு விற்பனை அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. நாங்கள் ஆளுக்கு ஒரு தோசை சாப்பிட்டு, கரும்புச்சாறு பருகினோம்.இரண்டுமே சுவையாக இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட மேடை அலங்காரங்கள், வண்ண விளக்குகள், வாணவேடிக்கை பட்டாசுகள், பல சமயங்களில் மிகவும் தூக்கலாக இருந்தன. உதாரணத்துக்கு புலிவேட கலைஞர்கள் மேடையில் தோன்றி நிகழ்ச்சியில் ஈடுபட்டபோது பின் திரையில் பிரம்மாண்ட  வர்ணஜால புலி காட்டப்பட்டது. இந்த மித மிஞ்சிய ஏற்பாடு பார்வையாளர்களின் கவனத்தை சிதற வைத்தது.

தீவுத்திடல் கூவம் நதியின் முகத்துவாரத்தில் உள்ள பகுதி. சென்னையின் மையப் பகுதியில் இது இல்லாததால் போக்குவரத்து வசதி சற்று குறைவு. இங்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக நிகழ்ச்சியை தொடங்கி இரவு 10 மணிக்கு முடித்திருக்க வேண்டும் என்று என் மனைவி தன் அபிப்பிராயத்தை தெரிவித்தார். அப்படியிருந்தும் இவ்வளவு கூட்டம் என்றால், நாட்டுப்புற இசை மீதும் அந்தக் கலைஞர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற மக்களின் எண்ணத்தை காட்டுவதாகவும் இந்த விழா இருந்தது.

சென்னையை தொடர்ந்து “நம்ம ஊரு திருவிழா”தமிழ் நாட்டின் அனைத்து ஊர்களிலும் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை அரசிடம் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த நாட்டுப்புற கலைஞர்கள் தமிழ் மண்ணின் பாரம்பரியம், பண்பாடு, மொழி, சிறப்பு அடையாளங்கள் மற்றும் கலை வடிவங்களை தங்களுக்கே உரித்தான பாணியில் வெளிப்படுத்தினர். உலகில் நீண்ட நெடிய வரலாற்றையும் பண்பாட்டு சிறப்பையும் கொண்டது தமிழ்குடி என்பதை “நம்ம ஊரு திருவிழா” பறைசாற்றி காட்டியுள்ளது.

கொரோனா ஊரடங்கால்  தொழில் வாய்ப்பை இழந்து நின்ற  கலைஞர்களுக்கு இந்த விழா மிகப் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. வருவாயை விட ஒருபடி மேலாக இந்த விழா அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளதற்கு காரணம், பல்லாயிரம் பார்வையாளர்களுக்கும் முன்பு அரங்கேற்றம் செய்வதற்கு கிடைத்த அரிய வாய்ப்பு தான்.

இதற்கு காரணமான முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியம், சேகர்பாபு ,மதி வேந்தன் மற்றும் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, டாக்டர் சந்திரமோகன் ,சந்தீப் நந்தூரி, சே.ரா. காந்தி. இ .ர.பா.ப.,உள்ளிட்ட அதிகாரிகளையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

தொகுத்து வழங்கிய இருவரும் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களுடன் பலகுரல் கலைஞர்கள் போன்ற மக்களை மகிழ்விக்கும் பேச்சாளர்கள், பாடகர்கள் இருந்திருந்தால் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இடைப்பட்ட நேர காலம் இன்னும் சிறப்பாக பயன் படுத்தப்பட்டிருக்கும்.

இப்படி சிறு ,சிறு குறைகள் இனி வரும் நம்ம ஊரு திருவிழாக்களில் இருக்காது என்று நம்புவோம்.

முழு மனநிறைவுடன், மயிலாப்பூரில் உள்ள எங்கள் வீட்டை அடைந்த போது மணி இரவு 11 ஆகியிருந்தது.

வெளி மாவட்டங்களில் சென்னையைப் போல பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவு. எனவே, நம்ம ஊரு திருவிழா அங்கு நடைபெறும் போது மக்கள் கூட்டம் அலை மோதப்போவது உறுதி. எனவே ,அங்கெல்லாம் சிறப்பு பேருந்து வசதிகளை அரசு செய்ய வேண்டும்.

என்னுடன் நிகழ்ச்சியை கண்டு களித்து விட்டு திரும்பிய என் மனைவி மற்றும் மகளிடம் இந்நிகழ்ச்சி பற்றி கருத்துக் கேட்டால் அது பொது மக்களின் கருத்தாக இருக்கும் என்று கருதி,” நம்ம ஊரு திருவிழாவுக்கு மார்க் போடுவது என்றால் எவ்வளவு போடுவீர்கள்” என்றுகேட்டேன். அவர்கள் சற்றும் ஒதாமதிக்காமல் ஒரே குரலில் “100 மார்க்” என்றனர்.

கட்டுரையாளர்; ம.வி.ராஜதுரை

மூத்த பத்திரிகையாளர், சமூக ஆர்வலர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time