நேரு குடும்பத் தலைமையை மறுபரிசீலனை செய்யலாமா?

-ராமச்சந்திர குஹா

காங்கிரஸ்  பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அறிந்தோ அறியாமலோ, இந்துத்துவா சர்வாதிகாரம் வளர்வதற்கு நேரு குடும்பத்தினர் எல்லா வாய்ப்புகளும் கொடுக்கின்றனரோ..?  2024 ல் மீண்டும்  படு மோசமான பாஜக ஆட்சி தொடரும் என்றால், நேரு குடும்பத்தை நம்பிக் கொண்டு, இந்த ஆபத்தை அனுமதிக்க போகிறோமா?

எட்டு ஆண்டுகால  மோடி அரசை பாராபட்சமின்றி மதிப்பிட்டு பார்த்தோமேயானால், இந்த அரசின் சாதனை மிகவும் குறைவாகவே உள்ளது.  இந்த அரசு வளர்ச்சி விகிதங்களில் கணிசமான சரிவைக் கண்டுள்ளது கொரோனா தொற்றுநோய் வருவதற்கு முன்பே இது வெளிப்படையாகத் தெரிந்தது. மேலும், வேலையின்மை அதிகரித்துள்ளது; அனைத்தையும் விட, முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்களை காட்டுமிராண்டிகளாக உருவாக்கியுள்ளது; அக்கம் பக்கத்திலும், உலக அளவிலும் நமது அந்தஸ்து குறைய அனுமதித்துள்ளது; நமது மிக முக்கியமான சமூக நிறுவனங்களை சிதைத்து, இயற்கை சூழலை நாசமாக்கிவிட்டது.

மொத்தத்தில், மோடி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இந்தியாவை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், நிறுவன ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும், சுற்று சூழலியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் மிகக் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது.

2019 இல், காங்கிரஸுக்கு தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது; ஆனால் வாய்ப்பினை அந்தக் கட்சி  தூக்கி எறிந்தது. சமீபத்திய தேர்தல் முடிவுகள், மீண்டும், நம்மில் சிலருக்கு நீண்ட காலமாகத் தெரிந்த ஒரு விஷயத்தை உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது, தற்போதைய தலைமையின் கீழ், தேசிய அரசியலில் மீண்டும் ஒரு பெரிய கட்சியாக காங்கிரஸால் வர முடியாது.

2019 பொதுத் தேர்தலில் கட்சியை அவமானகரமான தோல்விக்கு அழைத்துச் சென்ற ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது தாயார் சோனியா காந்தி, பின்னர் கட்சியின் தற்காலிக தலைவராக பொறுப்பேற்றார்; இரண்டரை ஆண்டுகளாகியும், அடுத்த தலைமையை தேர்வு செய்வதற்கான எந்த நடவடிக்கையையும் கட்சி இன்னும் எடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சி நடைமுறையில் முற்றிலுமாக நேரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில்  தான் உள்ளது என்பது நாம் பார்க்கும் தேர்தல் முடிவுகள் மூலம் அறிய முடிகிறது.

காலனித்துவ காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான சுதந்திர போராட்டத்திற்கு உத்திரபிரதேசம் தான் மையமாக இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியாவிற்கு முதல் மூன்று பிரதமர்களை வழங்கியதும் இந்த மாநிலம் தான். இருப்பினும்,  குறைந்தது 30 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி  இந்த மாநிலத்தில் ஒரு சிறிய கட்சியாகவே இருந்து வருகின்றது.

பிரியங்கா காந்தி, உத்தரபிரதேசத்தில் கட்சியின் அதிர்ஷ்டத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் தனது வீட்டை டெல்லியிலிருந்து லக்னோவுக்கு மாற்றாத போதிலும், சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட மறுத்த போதிலும், மாநிலத்திற்கு தொடர்ந்து சலிக்காமல் பயணங்களை மேற்கொண்டார். இதனை  நேரு குடும்பத்தினரையே இந்தியாவின் ராஜ வாரிசுகளாக பார்க்கும் சில ஊடகங்களும், சமூக வலைதளங்களும் மூச்சுவிடாத உற்சாகத்துடன் எதிர் நோக்கின.

பிரியங்காவின் ஒவ்வொரு வருகையும், ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பும், ஒவ்வொரு அறிவிப்பும் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மறுமலர்ச்சியை முன்கூட்டியே அறிவிப்பதாக நேரு குடும்பத்தை ஆராதிக்கும்  வழிபாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான், பிரியங்கா காந்தி தலைமையிலான காங்கிரஸ் வெறும் 2% வாக்குகளைப் பெற்று, பெரும் தோல்வியைப் பெற்றது.

உத்திரபிரதேசத்தில், தாக்கம் எதுவும் ஏற்படுத்த வில்லை என்றாலும், பிரியங்கா காந்தி குறைந்த பட்சம் தன்னுடைய முயற்சிகளுக்கு சில மதிப்பெண்களையாவது பெற்றார், காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பஞ்சாபில், அவரது சகோதரர் ராகுல், தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே அப்போதைய முதலமைச்சரை திடீரென்று எதிர்பாரா வண்ணம் மாற்றியதன் மூலம் தேர்தலில் தனது கட்சியின் வெற்றி வாய்ப்பை தூக்கி எறிந்தார். எம்எல்ஏக்களில் ஒரு பிரிவினரிடம் பிரபலமாக இல்லாவிட்டாலும், அமரீந்தர் சிங் அரசியலில் பரந்த அனுபவத்தைக் கொண்டிருந்தார், மேலும் முக்கியமாக, விவசாயிகள் இயக்கத்திற்கு ஆதரவாக வலுவான நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.

ஓராண்டுக்கு முன்பு, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் பஞ்சாபில் வெற்றி பெற சம வாய்ப்புகள் இருந்தன. ஆனால் பின்னர் அமரிந்தரோடு ஒப்பிடும் போது பெரிதும் அறியப்படாத சரண்ஜித் சிங் சன்னி, அமரிந்தரின் இடத்திற்கு மாற்றப்பட்டதும், அழிவினை ஏற்படுத்தக்கூடிய நவ்ஜோத் சிங் சித்துவை ராகுல் காந்தி காரணமாக சன்னி குறைத்து மதிப்பிட்டதும், ஒட்டுமொத்த மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியையுமே குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் தான், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியிடம் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

அமீந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து, சரண்ஜித் சிங் சன்னி

கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களை பார்ப்போம். இரண்டு மாநிலங்களிலும், பாஜக ஆட்சியில் இருந்தது. ஆனால் அதன் அரசாங்கங்கள் சிறிது கூட செல்வாக்கற்றவைகளாகவும், ஊழல் நிறைந்தவைகளாகவும் மற்றும் உணர்ச்சியற்றவைகளாகவுமே பார்க்கப்பட்டன. உத்தரகாண்டில், அதிருப்தியைத் தடுக்கும் முயற்சியில் இரண்டு முதல்வர்களை பாஜக மாற்றியது. இரண்டு மாநிலங்களிலும், காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது; இருந்த போதிலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கு போதுமான வலுவான சவாலை ஏற்க காங்கிரஸால் முடியவில்லை. இறுதியாக, காங்கிரஸால் மணிப்பூரில் கூட குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை, ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சி மணிப்பூர் மாநிலத்தில் இயல்பாகவே வெற்றி பெறும் கட்சியாக இருந்தது ஆனால் தற்போது  கடந்த முறை இருந்ததை விட 23 இடங்கள் குறைவாகவே வென்றுள்ளது.

இப்போது காங்கிரஸால் என்ன செய்யக்கூடும்? கட்சியின் நன்மைக்காகவும், இந்திய ஜனநாயகத்தின் நலனுக்காகவும், நேரு குடும்பத்தினர் தலைமைப் பதவியிலிருந்து மட்டும் வெளியேறாமல், அரசியலில் இருந்து ஒட்டு மொத்தமாக ஓய்வு பெற வேண்டும். ராகுலும், பிரியங்கா காந்தியும் மாநில மற்றும் தேசியத் தேர்தல்களில் கட்சியை ஒரு பெறும் சக்தியாக மாற்றுவதில் தங்களைத் தாங்களே குறிப்பிடத்தக்க வகையில் திறமையற்றவர்களாகக் காட்டியது மட்டுமல்ல,  காங்கிரஸில் அவர்கள் இருவரும் இருப்பதால், கடந்த காலத்தைப் பற்றிய விவாதங்களை மேற்கொள்வதன் மூலம் நிகழ்காலத்தில் அரசாங்கத்தின் தோல்விகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப நரேந்திர மோடிக்கும் பாஜகவுக்கும் எளிதாகிறது.

இராணுவ ஒப்பந்தங்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த போது ராஜீவ் காந்தி மற்றும் போஃபர்ஸ் பற்றிய குறிப்புடன் பதிலளிக்கப்படுகின்றன; ஊடகங்களை நசுக்குதல் மற்றும் சமூக ஆர்வலர்களை சிறையில் அடைத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் இந்திரா காந்தியின் அவசரநிலை பற்றிய குறிப்புகளுடன் எதிர் நோக்கப்படுகின்றன; சீன ராணுவத்திடம் இந்திய நிலத்தையும், வீரர்களையும் இழந்த குற்றச்சாட்டுகளுக்கு ஜவஹர்லால் நேரு காலத்தில் 1962ல் நடந்த போரினைக் குறிப்பிட்டு பதிலளிக்கப்படுகின்றது.

ஊழல், நிர்வாக பலவீனம், பொருளாதாரச் சரிவு உள்ளிட்ட பல சரிவுகள் இருந்தபோதிலும், 2024ல் மீண்டும் தேர்தலில் வெற்றிபெறும் நிலையில், நரேந்திர மோடியும் – பிஜேபியும் இருக்கிறார்கள் என்றால், நேரு குடும்பத்தினரின் கீழ் காங்கிரசை அதன் முக்கிய “தேசிய” எதிர்க்கட்சியாக இன்னும் கொண்டிருப்பதே பிரதான காரணம். திரிணாமுல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், யுவஜன ஷ்ரமிகா ரித்து காங்கிரஸ் கட்சி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி, திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் பகுதிகளில் திறம்பட, பாஜகவுக்கு தேர்தலில் பெரிய சவாலாக விளங்க தங்களை ஆயத்தபடுத்திக் கொள்ள முடியும்.

இதனை காங்கிரஸால் கட்டாயம் செய்ய முடியாது என்பதை சமீபத்திய கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மீண்டும் நமக்கு சுட்டிக் காட்டுகின்றன. குறிப்பாக நேரு குடும்பத்தினர் தலைமையிலான காங்கிரஸின் பலவீனங்கள் பொதுத் தேர்தல்களின் போது  வெளிப்படையாக தெரிகின்றன. உதாரணத்திற்கு, 2019 தேர்தலில் 191 இடங்களில் பாஜகவுடன் நேருக்கு நேர் மோதும்போது, காங்கிரஸ் வெற்றி பெற்றது வெறும் 16 இடங்களில் தான். நரேந்திர மோடிக்கு மாற்றாக ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட போது காங்கிரஸின் வெற்றி சதிவிகிதம் (ஸ்ட்ரைக் ரேட் ) வெறும்  8 சதவிகிதம் மட்டுமே.

பா.ஜ.க.வைப் பொறுத்த வரையில் நேரு குடும்பத்தினர் பெரும் வரப்பிரசாதமாகவே இருந்து வருகின்றனர். ஒருபுறம், கடினமான தேர்தல் சவாலை அவர்கள் பாஜாவிற்கு சிறிதும் வழங்கவில்லை என்றாலும், இன்னொருபுறம், தேசிய அளவிலான அரசியல் விவாதங்களில் பாஜாகவையே நியதிகளை தீர்மானிக்க அனுமதித்து விட்டனர்.

அடிமைதனமும், நிலப்பிரபுத்துவமும் நாளுக்கு நாள் குறைந்து வரும் இந்தியாவில், ஐந்தாம் தலைமுறை வம்சத்தை சார்ந்தவர்கள் இந்தியாவின் பாரம்பரியம் மிக்க கட்சியின் தலைவராக இருப்பது ஒரு பிரச்சனையே. நேரு குடும்பத்தை சார்ந்தவர்கள் என்ற பெறப்படாத பாக்கியத்தோடு, அரசியல் அறிவின் பற்றாக்குறையையும் சேர்த்து பார்த்தால், எது ஒரு தீவிரமான குறைபாடாக மட்டுமே இருக்கிறதோ, அதுவே முடமாக்கி விடுவதாகவும் மாறிவிடுகிறது. தங்களை காக்கா பிடித்து துதிபாடும் கூட்டத்தினரோடு ஒரு குறுகிய வட்டத்தில் வாழும் நேரு குடும்பத்தினருக்கு, 21ஆம் நூற்றாண்டில் இந்தியர்கள் உண்மையில் எப்படிச் சிந்திக்கிறார்கள் என்பது பற்றி எவ்வித புரிதலும் இல்லை.

ராகுல் காந்தி எதையுமே கற்றுக்கொள்ள முடியாத ஒரு சாதாரணமானவர், என்று ஆதீஷ் தசீர் அவர்கள் ராகுல் காந்தியின் குணாதிசயத்தை எடுத்துரைத்திருப்பது கடுமையாக இருந்தாலும், அதுவே மனச்சோர்வை தரும் அளவிற்கு துல்லியமானது. தந்தை, பாட்டி மற்றும் கொள்ளுத்தாத்தாவைப் பற்றி திரும்பத் திரும்பக் குறிப்பிடும் அவர் தற்போதைய அரசியலுக்கு முற்றிலும் பொருத்தமற்றவர்.

நேரு குடும்பத்தினர் காங்கிரஸை விட்டு வெளியேறினால், காங்கிரஸ் சிதைந்தாலும், அரசியல் நம்பகத்தன்மை கொண்ட  யாரோ ஒருவர் அவர்கள் இடத்தை நிரப்பலாம். அப்பொழுது நம்மை போன்று இந்துத்வாவை எதிர்பவர்கள் சரியான வகையில் சிந்திக்கக் கூடிய இடத்தில் இருப்போம். தற்போதுள்ள மோசமான நிலை மாற எதிர்கால இந்தியாவிற்காக போராடும் நிலையில் இருப்போம்.

‘இந்திய வரலாறு காந்திக்கு பிறகு’, ‘இந்தியா எதை நோக்கி’ போன்ற புகழ் பெற்ற நூல்களின் ஆசிரியரான இந்தியாவின் மிகப் பிரபலமான வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா எழுதி ‘தி டெலிகிராப்’ ஆங்கில இதழில் வெளியான கட்டுரையின் தமிழ் மொழியாக்கம் நா.ரதி சித்ரா

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time