ஜெயலலிதா இறப்பு இன்னும் மர்மமாகவே தொடர்கிறது! மக்களுக்கு முதலில் அப்பல்லோ மீதும், சசிகலா மீதும் தான் அதிக கோபம் இருந்தது. ஆனால், தற்போது ஒ.பி.எஸ்சின் மீதும் அந்த கோபம் ஏற்பட்டுவிட்டது. எத்தனையெத்தனை மழுப்பல்கள், முரண்கள்! 50 கோடி செலவில் ஐந்தாண்டு விசாரணை எல்லாம் வீணா?
ஜெயலலிதா மரணத்தில் பல ஆழமான சந்தேகங்கள் இன்னும் மக்கள் மனதை அழுத்திக் கொண்டே உள்ளன…! விசாரணை கமிஷன் அமைத்து மூன்றே மாதத்தில் அல்லது அதிகபட்சம் ஒரே ஆண்டில் உண்மையை வெளிக் கொண்டு வருவோம் என்றார்கள் ஓ.பி.எஸ்சும்,இ.பி.எஸ்சும்! உச்ச நீதிமன்றத்தில் அப்பல்லோ ஏற்படுத்தியுள்ள தடையைக் கூட அகற்றாமல், ஆட்சி காலம் முடியும் வரை அலட்சியம் செய்தார்கள். விசாரணையே நடக்காமல் பலகோடிகள் ஆணையத்திற்கும், வழக்கிற்குமாக விரயமாகிக் கொண்டிருந்ததை நாம் மறக்க முடியாது.
இவ்வளவு விசாரணைகளுக்கு பிறகும் உண்மையிலேயே ஜெயலலிதா மரணம் என்பது இன்று வரை ஒரு மர்மமாகவே உள்ளது. சர்வ அதிகாரத்துடன் வலம் வருவது போல தோற்றமளித்த ஜெயலலிதா நோயில் விழ்ந்தவுடன் அவருக்கு என்ன நடந்தது..? எப்படி இருக்கிறார்? என்ன சிகிச்சை வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது..? என்பதை யாருமே அறிய முடியாதவாறு அவரைச் சுற்றிலும் சசிகலா குடும்பம் ஒரு சதிவலைப் பின்னல் அமைத்து, அப்பல்லோ நிர்வாகத்தையே தன் பொறுப்பில் கொண்டு வந்தது.
முக்கியஸ்தர்கள் யாருமே ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. பிரதமரும் இதில் தலையிட ஆர்வம் காட்டவில்லை. ஜெயலலிதாவின் ரத்த உறவான தீபாவும் மருத்துவமனை வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டார். ஆக, ஜெயலலிதாவின் இறுதிகாலம் யாரும் அறிய முடியாத, ஆறுதல் கூற முடியாத, அனாதையாக்கபட்ட நபராக அவரை மரணிக்க வைத்தது.
அதிலும் மிக முக்கியமாக ஜெயலலிதா சிகிச்சை பெறும் வளாகத்தை சுற்றிலும் இருந்த அனைத்து சி.சி.டி.வி கேமராக்களையும் அகற்ற வேண்டியதன் அவசியம் என்ன? அதற்கு உத்திரவிட்டது யார்? என்ற கேள்விக்கு அன்றைக்கு ஜெயலலிதாவிற்கு அடுத்த நிலையில் இருந்த பன்னீர் செல்வமே தெரியவில்லை என்கிறார். நியாயப்படி அந்த கேள்வியை அன்றே பன்னீர் எழுப்பி அப்பல்லோவிடம் விளக்கம் கேட்டு இருக்க வேண்டுமே!
எட்டுமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் வாய்தா விளையாட்டு நடத்தி வந்த பன்னீர் செல்வம் இவ்வளவு இழுத்தடிப்புகளுக்கு பிறகு, ஆஜராகி ஏதாவது உருப்படியாகவாவது பதில் சொன்னாரா? என்றால், எழுப்பப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு ”தெரியாது” என்றே மழுப்பலாக பதில் சொல்லி இருக்கிறார்! இந்த ”தெரியாது” பதில்களைச் சொல்வதற்கு பன்னீர்செல்வம் தன் வழக்கறிஞர்கள் எமிலியாஸ், திருமாறன், காசிராஜன், ராஜலட்சுமி உள்ளிட்டோர் புடை சூழ ஆஜராகியது தான் கொடுமை!
நீதிபதி கேட்ட சில கேள்விகளையும், அதற்கு பன்னீர் செல்வம் சொன்ன பதில்களையும் பார்ப்போம்;
அவருக்கு என்னென்ன நோய்கள் இருந்தன?
அவருக்கு இருந்த நோய்கள் குறித்து எனக்கு தெரியாது.
ஜெயலலிதாவிற்கு என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டன?
எனக்குத் தெரியாது.
ஜெயலலிதாவை கடைசியாக எப்போது பார்த்தீர்கள்?
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் நடந்த, மெட்ரோ ரயில் துவக்க விழாவில் பார்த்தேன். அதன்பின், அவரை பார்க்கவில்லை.
சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்தியது முதல் துணை முதல்வரானது வரை, ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீங்கள் பேசியது எல்லாம் சரியா?
ஆம்,சரியாகவே பேசினேன்.
வெளிநாடு அழைத்து செல்வது பற்றி, அப்போதைய தலைமை செயலர், உங்களிடம் அனுமதி கேட்டாரா?
ராம்மோகன் ராவ் என்னிடம் எதுவும் பேசவில்லை. அப்படி கேட்டிருந்தால், உடனடியாக கையெழுத்து போட்டிருப்பேன்.
அப்பல்லோ மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக்களை அணைத்து வைக்குமாறு கூறினீர்களா?
அப்படி நான் எதுவும் கூறவில்லை.
‘அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை, அனைத்து நியமனங்களும் சசிகலாவுக்கு தெரியாமல் நடக்காது‘ என, சசிகலா உறவினர் கிருஷ்ணபிரியா கூறியிருக்கிறாரே?
அனைத்து நியமனங்களையும் ஜெயலலிதாவே மேற்கொள்வார்.
சசிகலா உறவினர் திவாகரனின் மகள் டாக்டர் ராஜமாதங்கி, ஜெயலலிதா சிகிச்சை விபரங்களை குறிப்பெடுத்து சென்றாரா?
எனக்கு தெரியாது.
இதய பாதிப்புகள் ஏற்பட்ட போது அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது?
எனக்கு தெரியாது
எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்?
எனக்குத் தெரியாது!
இது போல கேள்விகள் எழுப்பட்ட போது, சசிகலா வழக்கறிஞர்களும், அப்பலோ வழக்கறிஞர்களும் எதிர்ப்பு தெரிவித்து பன்னீர் செல்வத்திடம் இது போன்ற கேள்விகளை எழுப்பக் கூடாது என தடங்கல்கள் செய்தது குறிப்பிடத்தக்கது.
சசிகலா வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் ஒ.பி.எஸ்சிடம், ”உங்களுக்கு தனிப்பட்ட முறையில் சசிகலா மீது சந்தேகம் உள்ளதா?” எனக் கேட்டதற்கு,
”மக்கள் சந்தேகத்தை போக்கவே ஆணையம் அமைக்கப்பட்டது என்றும் சசிகலா மீது எந்த காலத்திலும் எனக்கு சந்தேகம் இல்லை” என்று கூறினார் ஒ.பி.எஸ்.
இந்த பதிலை ஒ.பி.எஸ் எடப்பாடி முதல்வராக இருக்கும் போது கூறி இருப்பாரேயானால், அவரது துணை முதல்வர் பதவி பறிபோயிருக்கும்! அதனால் தான் சம்மன் அனுப்பியும் அவர் எட்டு முறை ஆஜராகாமல் தவிர்த்தார்.
தற்போது ஆணையத்தில் பதில் சொல்லிவிட்டு வெளியே வந்து ”சின்னம்மா மீது எனக்கு எப்போதுமே மரியாதை உண்டு! எக்காலத்திலும் சந்தேகம் ஏற்பட்டதில்லை’’ என்கிறார்!
இது அப்பட்டமான பொய்! ”சசிகலா மீது எனக்கு மட்டுமல்ல, கட்சியில் அடிமட்ட தொண்டன் வரை சந்தேகம் உள்ளது. அம்மாவை கொன்றவர்களை அம்பலப்படுத்தி தண்டிக்காமல் விடமட்டோம்” என்றாரே ஒ.பி.எஸ். அவர் கூட இருந்த பி.ஹெச்.பாண்டியனும், மனோஜ் பாண்டியனும் அநியாயத்திற்கு அதிரடியாக, ”ஜெயலலிதாவை சசிகலா தாக்கியதால் தான் கீழே விழுந்தார். அதனால் தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்” என்ற போது அதை ரசித்தாரே! எல்லாவற்றுக்கும் மேலாக ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் இறந்து கிடக்கும் ஜெயலலிதா பேனரைக் காட்டி ஓட்டு கேட்டாரே! இன்னைக்கோ அப்படியே அந்தர்பல்டி அடித்துள்ளார்!
மற்றொரு பக்கம் அப்பல்லோ செய்த அழிச்சாட்டியங்கள் கொஞ்ச, நஞ்சமல்ல!
ஆறுமுகசாமி கமிஷனுக்கு ஆரம்பத்தில் இருந்தே அதிக குடைச்சல் கொடுத்தது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தான்!
”மருத்துவம் பற்றிச் சொன்னால் நீதிபதிக்குப் புரியாது. அதனால், அவர் 21 துறைகளைச் சேர்ந்த ‘எக்ஸ்பர்ட்’ டாக்டர்களை வைத்துக் கொண்டு தான் விசாரிக்க வேண்டும்’’ என உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது, அப்பல்லோ! ஆனால், நீதிபதி தனக்கு ஏற்படும் சந்தேகங்களை அது அதற்கான டாக்டர்களை அழைத்து தெளிவுபடுத்திக் கொண்டார் என்பதே உண்மை என்பதால், உயர் நீதிமன்றம் அப்பல்லோ மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
அது போல் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஓபிஎஸ்ஸிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். அதில், ”சசிகலா மீதான குற்றச்சாட்டை களைய வேண்டும் என்பதற்காகத்தான் ஆணையம் அமைக்க வேண்டும் என தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி சரிதானா” என கேட்கப்பட்டது. ”அதற்கு சரியானதுதான்” என ஓ.பி.எஸ் பதில் அளித்துள்ளார் என்பதை கொண்டு பார்க்கையில் முதலில் தன் முதலமைச்சர் பதவியை பறித்ததால், சசிகலா மீது ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் கிளப்பி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைந்து எல்லாம் அனுபவித்துவிட்டு, இன்று மீண்டும் கட்சியில் தன் செல்வாக்கை உறுதிபடுத்திக் கொள்ள சசிகலாவிற்கு ஆதரவாகப் பேசுகிறார்.
அதாவது, ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது ஏற்பட்ட களங்கங்களை களைந்து சசிகலா மீது ஒரு தூய பிம்பத்தை கட்டமைக்கவே ஓ.பி.எஸ் இந்த விசாரணை கமிஷனை பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்று நாம் முடிவுக்கு வரலாம்!
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் அவரை பார்த்தேன். மருத்துவமனையில் சேர்த்த பின் நான் அவரை சந்திக்கவே இல்லை. என்று முதல் நாள் கூறிய ஓபிஎஸ் இரண்டாவது நாள் ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு மூன்று அமைச்சர்களுடன் அவரை பார்த்தேன் என்பதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இப்படி மழுப்பலாகவும், முரண்பாடாகவும் பதில்கள் சொன்ன வகையில் ஒ.பி.எஸ் எவ்வளவு நம்பகத்தன்மையற்றவர் என்பதை நாம் நன்கு உணரலாம்!
ஜெயலலிதா மரணத்தில் சசிகலா விவகாரத்தை எடுத்துக் கொண்டால், சசிகலா மீதான சந்தேகங்கள் இன்னும் சற்றும் அகலவில்லை என்று தான் கூற வேண்டியுள்ளது.
காரணம், கடைசி சில ஆண்டுகளாகவே அதிமுக கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி ஜெயலலிதாவிற்கும் மேலான ஒரு அதிகார மையமாகத் தான் சசிகலா செயல்பட்டார்! ஜெயலலிதாவின் உடல் நலக் கோளாறுகள் கூட அதற்கு காரணமாக இருந்தன! அமைச்சர்களும், அதிகாரிகளும் சசிகலாவின் கண் அசைவுகளுக்கும், கட்டளைகளுக்குமே கட்டுப்பட்டனர். வேறு வழியில்லாமல் சசிகலாவை சார்ந்து வாழும் நிலையில் ஜெயலலிதாவும் இதை கண்டும் காணாமல் அனுமதித்தார். அதுவும், ஜெயலலிதாவின் கடைசி காலத்தில் முழு அரசாங்கத்தையும் ஒரு நிழல் முதலமைச்சராக இருந்து நடத்தியவர் சசிகலா தான்!
இதன் தொடர்ச்சியாகவே அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அந்த 72 நாட்களுக்கும் முழு அரசாங்கத்தையும் சசிகலாவே கட்டுப்படுத்தி வந்தார். அப்போது இரண்டு முறை ஜெயலலிதாவால் முதல் அமைச்சராக்கப்பட்டு இருந்தவரும், முதலமைச்சர் நிர்வகித்த துறைகளை தற்காலிகமாக நிர்வகித்து வந்தவருமான பன்னீரோ தனக்கு ஜெயலலிதாவிற்கு வழங்கிய சிகிச்சை தொடர்பாக எதுவும் தெரியவில்லை எனக் கூறி இருப்பதில் இருந்து அவர் எந்த மாதிரி பொறுப்பின்மையுடன் இயங்கினார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
இந்தப் பின்னணியிலே சசிகலா ஏன் தடையற்ற வகையில் தன்னை அடுத்த நிஜமான முதலமைச்சராக்கி கொள்ள ஆசைப்பட்டிருக்க மாட்டார்? என்று நமக்கு சந்தேகம் தோன்றுகிறதல்லவா? கொடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மனோ என்பவர் ”ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது தான் தன்னை அழைத்து எடப்பாடி கொட நாடு கொள்ளை அசைமெண்ட் வழங்கினார்” எனக் கூறியதை நினைவுபடுத்தி பார்த்தால், நமக்கு சில உண்மைகள் புரிய வரும். அன்று சசிகலாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி தான். கொட நாட்டின் முழு நிர்வாகமும் சசிகலாவின் கட்டுபாட்டில் தான் இருந்தது! ஆனால், இன்று வரை கொட நாடு கொள்ளை தொடர்பாக சசிகலா ஏன் வாய் திறக்கவில்லை என யோசிக்க வேண்டும்.
Also read
அத்துடன் ஜெயலலிதா இறந்தவுடனேயே பன்னீர் செல்வத்தை அகற்றிவிட்டு தானே முதலமைச்சராக ஆசைப்பட்டார் என்பதும் கவனத்திற்கு உரியது. ஜெயலலிதா போலவே தன்னை அலங்காரப்படுத்திக் கொண்டு சசிகலா அதிமுக தலைமை அலுவலகம் வந்த போது அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் அடைந்த அதிர்ச்சி இன்று வரை அகலவில்லை. சசிகலா அடுத்த முதலமைச்சர் ஆவர். ஆகவே, அவரை சந்தித்து வணக்கம் போட்டுக் கொள்வது நமக்கு நல்லது என இந்து ராம், தினத்தந்தி பால சுப்பிரமணிய ஆதித்தன் உள்ளிட்ட பத்திரிகை அதிபர்களும், தமிழகத்தின் துணை வேந்தர்களும் வரிசை கட்டி சசிகலாவை பார்த்தார்களே!
ஆணையங்கள் மூலமாக உண்மை வெளிவராமல் போகலாம். ஆனால், மக்களின் ஆழ் மன உணர்வில் ஒரு தீர்ப்பை அவர்கள் ஏற்கனவே எழுதி வைத்துள்ளனர். அதை எத்தனை பொய்கள் கொண்டும் மாற்ற முடியாது!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
ஆணையத்திற்கு அரசு செலவிட்ட அத்தனை தொகையையும் OPS இடமிருந்து பிடித்தம் செய்ய வேண்டும்.
இந்த கட்டுரையில் உப்பும் இல்லை, சப்பும் இல்லை. அந்த அம்மாவின் உடல்நிலை பற்றி எல்லோருக்கும் தெரியும் பிறகு ஏன் வீணாக கம்பி கட்டுகிறீர்கள்?