தயாளன், தாம்பரம், செங்கல்பட்டு
பாஜகவை ஆர்.எஸ்.எஸ் வழி நடத்துவதை போல் திராவிட கழகம் திமுகவை ஸ்டாலின் காலத்திற்கு பின் வழி நடத்தினால் ?
பாஜகவிற்கும், ஆர்.எஸ்.எஸ்சுக்கும் உள்ள உறவு குரு – சிஷ்ய உறவு! இதில் கமிட்மெண்ட் உண்டு! குருவுக்கு பரிபூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குருவை மிஞ்சியவர்களாக சிஷ்யர்கள் தங்களை ஒரு போதும் கருதுவது இல்லை. கொள்கை இவர்களை வழி நடத்துகிறது. நமக்கு இவர்கள் கொள்கையில் உடன்பாடில்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்டமைக்கப் பட்டுள்ளனர் என்பதை மறுக்கமுடியாது.
திராவிட இயக்கம் தான் திமுகவின் தாய் வீடு என்பதைத் தவிர்த்து, இங்கு திக-திமுக இயக்கங்களுக்கான உறவு என்பது குரு-சிஷ்ய உறவல்ல. பரஸ்பர பலாபலன்கள் சார்ந்ததே! ஆகவே, எந்தக் காலத்திலும் இது சாத்தியப்படும் எனத் தெரியவில்லை.
எஸ்.ராஜலட்சுமி, மதுரவாயில்
மதிமுகவில் ஏற்பட்டுள்ள வாரிசு அரசியல் சர்ச்சை குறித்து?
மதிமுக மரணித்துக் கொண்டிருக்கிறது!
வாரிசு அரசியலை எதிர்த்து வளர்ந்த கட்சி –இன்று
வாரிசு அரசியலை வாரியணைத்து தற்கொலைக்கு தயாராகிறது!
பிழைப்புவாத, பித்தலாட்ட அரசியலின் பிதாமகன் வைகோ!
சந்தர்ப்பவாத, சாகஸ அரசியலால் சரிந்து போனவர் வைகோ!
தன் கைகளாலேயே கட்சியின் கடைசி அத்தியாயத்தை எழுதுகிறார்!
தயாளன், தாம்பரம்,செங்கல்பட்டு
ஸ்டாலினுக்கு பின் திமுக உதயநிதியிடம் சென்றால் மக்கள் ஏற்பார்களா ? அல்லது பின்னடைவாக இருக்குமா ?
குடும்ப அரசியலை ஏற்கத் தக்க வகையில் கட்சியை நன்கு கட்டமைத்து சென்றுவிட்டார் கருணாநிதி! ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதியைத் தவிர வேறு யாரிடமும் திமுக தலைமை செல்ல வாய்ப்பில்லை என்பது எல்லோருக்குமே தெரிந்திருக்கிறது. அதற்கான காலம் கனிவதற்கு முன்பாக தலைமை சென்றால், மட்டுமே பின்னடைவாக மாறும்!
அ. ஆலம், திருச்சி
20 ,30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வைக்கப்பட்டிருக்கும் கைதிகள்! இதை எப்படி பார்க்கிறீர்கள்?
இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் அவர்களை சிறையில் இருந்து வெளியனுப்பத்தக்க நிலையில் இல்லாத சமூகம் தான் இங்கு என் பார்வையில் குற்றவாளியாகத் தெரிகிறது.
செந்தில்குமார், சென்னை
நாம் தமிழர் கட்சி பற்றிய உங்கள் கருத்து என்ன?
இதுவும் ஒரு தனி நபர் வழிபாடு கொண்ட கட்சியே! கூட்டுத் தலைமைத்துவம் இல்லாத எந்த இயக்கமும் நம்பகத் தன்மையற்றதே!
கி.தினேஷ்குமார்,மேல்மருவத்தூர்,செங்கல்பட்டு.
கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்ற முடியாமல் அதிமுக தவிப்பதற்கு என்ன காரணம்?
பாஜகவை கூட்டணியில் இருந்து வெளியேற்ற முடியாமல் அதிமுக தவிக்கிறது என்பது உங்கள் கருத்து. அதிமுக தலைவர்களான ஒ.பி.எஸ்சோ, இ.பி.எஸ்சோ இப்படி எங்குமே சொல்லவில்லை. ஊழல் கறை படிந்த – தலைமை பண்புகளற்ற – தங்களை பாதுகாக்க பாஜவை, அதிமுக தலைவர்கள் பெரிதும் நம்புகின்றனர். கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்ற நினைத்தால், அரசியலில் இருந்தே தாங்கள் வெளியேற்றப்படலாம் என்பதே அவர்களின் புரிதல்!
சிபி,பேரளையூர், கடலூர்
எழுத்தாளர் கெளதம சித்தார்த்தனின் தமிழி இதழை வாசித்தீர்களா?
ஒருமுறை யதேச்சையாக பார்க்க கிடைத்தது! எளிய மக்களின் குரலாக ஒலிக்கிறார்!
சுரேஷ்குமார், கும்பகோணம், தஞ்சாவூர்
மிக பிரம்மாண்டமான பங்கு சந்தை ஊழல் வெகுஜன கவனம் பெறவில்லை காரணம்? ஊடகமா? எதிர்கட்சிகளா?
ஊடகங்கள் அறச் சீற்றத்தில் இருந்து அறுபட்டு ஆண்டுகள் பலவாகின்றன! நான் அவதானித்த வரை இந்த பங்கு சந்தை ஊழலில் எதிர்கட்சிக்காரகள் சிலருக்கும் தொடர்புள்ளது.
து.ராஜேந்திரன், சென்னை
பஞ்சாபில் உள்ள பொற்கோவில் மற்றும் குருத்துவாராவில் மத அடையாளங்களை அவமதித்ததாக இரு இளைஞர்கள் கும்பல் கொலைக்கு ஆளாகியுள்ளார்களே!
மனதில் கருணை உணர்வை உருவாக்காத கடவுள் பக்தி என்ன பக்தியோ? பாகிஸ்தான் மசூதியிலும் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது. மதவெறியாளர்கள் எல்லா இடங்களிலும் மனித நேயம் தொலைத்தவர்களாகவே உள்ளனர்
ஆர்.ரமேஷ், பெங்களுர்
ரஷ்ய ஆட்சியாளர் புஷ்கின் உலக பணக்காரர்களில் ஆறாம் இடத்தில் இருப்பவராகவும், மிகப் பெரிய ஆடம்பர வாழ்க்கை வாழ்பவராகவும் செய்தி வந்துள்ளதே?
அவர் கம்யூனிஸ்ட் தலைவருமல்ல, இன்றைய ரஷ்யா கம்யூனிஸ்ட் நாடுமல்ல! ஆகவே அவர் சொத்து குவித்திருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால்,புஷ்கினைப் பற்றி இத்தனை நாளும் இல்லாமல் இப்போது தான் இப்படி கண்டுபிடித்து சொல்வதாக வரும் செய்திக்கு பின்பு அமெரிக்க ஆதரவாளர்களின் பங்களிப்பும் இருக்க வாய்ப்புண்டு!
எஸ்.கோபி நாத், ஆத்தூர், சேலம்
அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு உள்ளதே?
அவசியமானது. அரசு பள்ளிகளின் கல்விச் சூழலை இது நிச்சயம் மேம்படுத்தும்!
கோமதி நாயகம், கோவை
புத்தகக் கண்காட்சி நடத்தும் பாபாசிக்கு தமிழக அரசு தாரள நிதி உதவி தந்து கொண்டுள்ளதே?
புத்தக விற்பனை என்பது தற்போது மிக லாபகரமான ஒரு தொழில்! புத்தக விற்பனைக்கும், வாசிப்புக்கும் சாதகமான சூழலே தற்போதைய தேவை தானேயன்றி, சலுகைகளோ, பண உதவியோ அல்ல. கூடுதல் பணம் அந்த அமைப்பை ஊழல் மயமாக்கிவிடும்.
க.செபாஷ்டின், வேலூர்
கொரானா கட்டுபாடுகள் மார்ச்-31 உடன் முடிவுக்கு வருகிறதாமே?
பில்கேட்ஸ் களைப்புற்றுவிட்டாரா என்ன?
நாம் இளைப்பாற இடைக்காலத் தளர்வு கிடைத்தாலும், கொரோனா நான்காவது அலை என்ற புரளியை எப்போது கிளப்புவார்களோ தெரியவில்லை.
எம்.ரகுமான்கான்,சேலம்
கதர் கிராமத் தொழில் வாரியத்தில் பாரம்பரிய இயற்கை வேளாண்மை விளைந்த அரிசியும், செக்கு எண்ணெயும் விற்க தொடங்கி உள்ளார்களே?
இத்தனை நாளும் இதை விற்காமல் இருந்துள்ளார்கள் என்பதே புரிந்து கொள்ள வேண்டிய செய்தி! காலங்கடந்த ஞானோதயம்!
இதில் கரப்ஷன் தலை தூக்காமல் இருந்தால் சரி!
அ.அறிவழகன், மயிலாடுதுறை
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளதே?
சொந்த நாட்டு மக்களை வேட்டையாட ராணுவத்திற்கும்,ஆயுத தளவாடங்களுக்கும் அளவுக்கு அதிகமாக பொருளாதாரத்தை விரையமாக்கியது!
ராஜபட்சே, கோத்தபய குடும்பங்களின் அதீத சுயநல சொத்து சேர்க்கும் அரசியல்!
சீனாவுடனான கூடா நட்பால் கொள்ளை போன பொருளாதாரம்!
ஆகியவற்றால் கொடூர பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ளது! அரிசி, சர்க்கரை, பால் ஆகியவற்றின் பகீர் விலை உயர்வு மக்களை வாழமுடியாத நிலைக்கு தள்ளியுள்ளது.
Also read
பாண்டித்துரை, அரசரடி, மதுரை
தமிழக அரசியலில் எந்த உழைப்பும், மெனக்கிடலும் திறமையும் இன்றி ஆதாயத்தை மட்டுமே அறுவடை செய்து கொண்டிருக்கும் ஒருவரை அடையாளம் காட்ட முடியுமா?
ஓ..தாரளமாக! ஓ.பி.எஸ்! இது ஓ(சி)பீஸ்!
குறிப்பு;
https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8
கேள்வி கேட்க விரும்புபவர்கள், இந்த லின்கில் சொடுக்கி, உங்கள் கேள்வியை சுலபமாக பதிவு செய்யலாம்.
Leave a Reply