பஞ்சமும், பதட்டமும், கலவரச் சூழலுமாக இலங்கை தகிக்கிறது! உணவுக்கும், எண்ணெய்க்கும் நீண்ட க்யூ வரிசைகளில் காத்து கிடந்து சிலர் உயிரிழந்துள்ளனர்! கொந்தளிப்பின் உச்சத்தில் இலங்கை மக்கள், ராஜபக்சே மாளிகையை முற்றுகையிட்டு போராடுகின்றனர். என்ன நடக்கின்றது?
தேயிலைக்கும், மீனுக்கும் இயற்கை சூழல்களுக்கும் பெயர்போன இலங்கையின் இன்றைய சூழலுக்கு பல காரணிகள். ஆனால், அவற்றில் முதன்மையானது ஆட்சிக்குளறுபடி -Mismanagement என்றால், அது மிகையல்ல.
அதிபர் ராஜபக்சே , ” நாடு ஒரு இக்கட்டான சூழலில் உள்ளது, நான் பன்னாட்டு பண நிதியத்திடம் (IMF) உதவி கேட்டுள்ளேன் ; அவர்களும் சில நிபந்தனைகளுடன் உதவ முன் வந்துள்ளனர். எனவே அனைத்து மக்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து சிக்கனமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் – பெட்ரோல் மின்சாரம் ஆகியவற்றை சிக்கனமாக உபயோகிக்க வேண்டும், நாட்டை இச்சிக்கலில் இருந்து மீட்பது உங்கள் கையில்தான் உள்ளது” என்று பேசியுள்ளார்.
ஆனால், மக்கள் இதை கேட்க தயாராய் இல்லை! நாட்டை , நாட்டின் பொருளாதாரத்தை இப்படி சீரழித்த ஆட்சியாளர்கள் – பொறுப்பில்லாத ஆட்சியாளர்கள்- இன்று இச்சிக்கலில் இருந்து மீள மக்களை பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு வேண்டும் விந்தையை கண்டு கொதித்தெழுந்து உள்ளனர், இதை எதிர்கொள்ள இலங்கை அரசு அவசரநிலை பிரகடனத்தை அறிவித்துள்ளனர் .
வீட்டில் உணவில்லை, வெளியில் செல்ல பணமில்லை, பணமிருந்தாலும், உணவுப்பொருளும், பெட்ரோலும் கிடைக்கவில்லை! பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய்க்காக நீண்ட க்யூவில் காத்துக்கிடந்தவர்களில் நேற்று இருவர் மயங்கி விழுந்து இறந்த கொடுமையும் நிகழ்ந்தது.
பள்ளிகள் மூடப்பட்டன, பள்ளி மாணவர்களின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. காரணம் பள்ளிகளில் வினாத்தாள்கள் அச்சடிக்க பேப்பர் இல்லை.
400 மிலி பாலின் விலை நேற்று ரு.450ஐ தொட்டது, பிள்ளைகளுக்கு பாலும் இல்லை!
இல்லை, இல்லை என்ற குரல் இலங்கையில் யாங்கெனும் ஒலிக்கிறது. ஏன் இந்த அவலம்?ஏனிந்த பற்றாக்குறை? வரலாறு கண்டிராத இந்தப் பொருளாதார நெருக்கடி இன்று இலங்கையை பயமுறுத்துகிறது.
கோவிட் பெருந்தொற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட முடக்கமும் இலங்கையை வெகுவாக பாதித்தது! நாட்டின் மொத்த உற்பத்தி கணக்கில் 10% அளவிற்கு மேல் பொருளீட்டும் சுற்றுலாத்துறையின் முடக்கம் மிக முக்கிய காரணம், உண்மைதான்.
பருப்புக்கும், பெட்ரோலுக்கும், பேப்பருக்கும், மருந்து வகைகளுக்கும் இறக்குமதியை நம்பியுள்ள இலங்கை அதை வாங்க பணம் கையிருப்பில்லாமல் போனதற்கு யார் காரணம்?
இரண்டரை கோடி மக்கள் தொகையுள்ள இலங்கையில் விவசாயத்திற்கு ரசாயனக்கலவை உரங்களை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று தடை போடப்பட்டது; இயற்கை உரங்களே இனி அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற தடாலடி அறிவிப்பும் வெளிவந்தது. நோக்கம் ஏதோ உயர்ந்ததாக தோன்றினாலும், எந்தவித முன்னேற்பாடுமின்றி தடாலடியாக அமுலுக்கு வந்ததால் உழவர்கள் வயிற்றில் அடி விழுந்தது, உணவு உற்பத்தி பெருமளவு வீழ்ச்சி அடைந்தது. அத்தியாவசிய உணவுப்பொருள்கள் இறக்குமதி பெருமளவு உயர்ந்தது.
அடிப்படை தேவைகளுக்கும், உபகரணங்களுக்கும் இறக்குமதியை நம்பியிருக்க வேண்டிய நிலையில், அந்த இறக்குமதிகளுக்கு தேவையான வெளிநாட்டு பணம்(Foreign currency )இலங்கை அரசிடம் இல்லை என்ற உண்மை சுடுகிறது.
பன்னாட்டு வாணிபத்தில் இலங்கை சிகப்பு கட்டத்திலேயே இருந்து வருகிறது! அதிலிருந்து மீள இலங்கை அரசு எந்தவித முயற்சியும் சரிவர செய்யாததால் எரிசக்தி உற்பத்தி, உணவு உற்பத்தி ஆகிய அடிப்படை துறைகளில் இலங்கை தடுமாறத் தொடங்கியது.
அந்நிய நாட்டு கடன்களையும், உதவிகளையும் எதிர்பார்த்து இலங்கை அரசு நடைபோட தொடங்கியது.
வெளிநாட்டு வாணிபத்தை கட்டுப்படுத்த முனைந்த இலங்கை அரசு , வணிகர்கள் 200 டாலர்களுக்கு மேல் வாணிபத்தை தொடரமுடியாமல் தவித்தனர். இறக்குமதிகள் குறிப்பாக அத்தியாவசிய இறக்குமதிகளான உணவுப் பொருட்கள்,எண்ணெய் , போக்குவரத்து சாதனங்கள் ஆகியவை இலங்கையை எட்டாமலே நின்றன. பற்றாக்குறை மேலும், பெருகியது. பணவீக்கமும், விலையேற்றமும் அன்றாட நிகழ்வுகளாக மாறிப்போயின.ரொட்டிக்காக மக்கள் வீதிகளில் முட்டி மோதி சண்டை போடுகின்றனர்!
செய்வதறியாத மக்களை ஒடுக்க ராணுவம் வீதிகளுக்கு வரவழைக்கப்பட்டது.மின்உற்பத்தி மற்றும் உணவு உற்பத்தி பாதிப்படைந்த நிலையில் , உள்நாட்டு மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்ற இலங்கை அரசு வெளிநாட்டு உதவிகளை மேலும் எதிர்நோக்கி கையேந்தி நிற்கிறது.
இந்தியாவிடம் கடந்த வாரத்தில் 1பில்லியன்(1,000 கோடி) டாலர் மதிப்பு வங்கி கடனோலையை இலங்கை பெற்றுள்ளது. இதைப்போன்று சீனாவிடம் 4பில்லியன் டாலர் கடனும், உதவியும் பெற்றுள்ளது.
இவையெல்லாம் இந்த உதவிகளெல்லாம் எதற்காக பயன்படுத்துகிறது இலங்கை அரசு என்பது இன்று கேள்விக்குள்ளாகி உள்ளது. ஏனெனில், கடந்த ஜனவரி 18ல் அந்நிய நாட்டு கடனான 5,00மில்லியன் டாலர் திருப்பி கொடுக்கப்பட வேண்டிய தேதியில் நாங்கள் திருப்பிக்கொடுத்து விட்டோம் , நாங்கள் வாங்கிய கடனை குறித்த தேதியில் கொடுத்துவிடுவோம் என்று இலங்கை மத்திய வங்கி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசு எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது? அத்தியாவசிய உணவுப்பொருள்களை தடையின்றி மக்களுக்கு அளிப்பதற்கா அல்லது குறித்த நேரத்தில் கடனுக்கான வட்டியை செலுத்துவதற்கா என்று எதிர்கட்சிகள் இன்று கேள்விக்குரல் எழுப்புகின்றனர்.
609 பில்லியன் 2022க்குள் இலங்கை அரசு திருப்பி கொடுக்க வேண்டும் என்பது உண்மை தான்! ஆனால், இந்த பெயர் முக்கியமா? அல்லது இரண்டரை கோடி மக்களின் வாழ்வும் உயிரும் முக்கியமா? என்று அரசு யோசிக்க வேண்டும் என்று ஜனதா விமுக்தி பெரமுன (JVP)கட்சித் தலைவர் கேட்கிறார்.
இலங்கை அரசு சீனா கடன் கொடுக்கிறது என்பதற்காக பெருமளவு கடன்களையும், உதவிகளையும் சீனத்திடம் பெற்றுள்ளது . ஆனால் இதற்கெல்லாம் ஒரு விலை உண்டல்லவா?
ஹம்பன் தோட்டா தொடங்கி கொழும்பு வரை பல்வேறு துறைமுகங்கள் சீனாவின் கட்டுப்பாட்டில் அல்லது மேற்பார்வையில் இயங்கி வருகிறது. இயற்கையாகவே இந்தியா இதைக் கண்டு பொறுக்காமல் தாங்கள் கொடுக்கும் கடனுக்கும், உதவிக்கும் ஏற்ற விலைக்காக பேரமும், தாமதமும் செய்து உரிய எதிர்வினையை வேண்டுகின்றனர் . இதன் விளைவாக திரிகோணமலை எண்ணெய் முகாம் இந்தியாவின் மேற்பார்வையின் கீழ் கொணரப்பட்டது.
இரண்டு அரசுகளும் இலங்கை அரசுக்கு உதவுவோம் என்று குறிப்பிடுவதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த ராஜபக்சே அரசு முனைந்தாலும் நடைமுறையில் ஒரு நாட்டை காட்டி மற்றொறு நாட்டிடம் அதிக பலன்பெறலாம் என்ற ராஜபக்சே அரசின் பித்தலாட்டம் பெரும் சோகத்தில் முடிந்து, இன்று இலங்கை பெருங்கடனாளியாக மாறியுள்ளது! இலங்கை மக்களோ உணவும் மருந்தும் இன்றி ஒளியற்ற இருளில் மூழ்கி உள்ளனர் .
2009ல் விடுதலைப்புலிகளை முறியடித்ததுடன் இலங்கை உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பொழுது -இங்குள்ள அரசியல்வாதிகளின் கணிப்புகளுக்கு மாறாக- இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் சுமுகமான உறவில்லை. பரஸ்பர நம்பிக்கையின்மையும் சந்தேக மனப் போக்கும் தலைதூக்கின. வெற்றிக்களிப்பில் மிதந்த ராஜபக்சே சீனாவை நாடி ஓடினார்.
பெல்ட் ரோடு இனிஷியேட்டிவ் என்றழைக்கப்படும் பி ஆர் ஐல் இலங்கையையும் இணைத்துக்கொண்டார் பல்வேறு கட்டுமான பணி கடன்களை சீனாவிடமிருந்து பெற்றுக் கொண்டார் .
ஆனால், சிதைந்து போன இலங்கை மக்களின் சமூக வாழ்வு பல புதிய கீறல்களை நாட்டில் ஏற்படுத்தியது. சிங்கள பேரினவாதம் தலைதூக்கி, பின் அப்போக்கு முஸ்லீம் மக்களுக்கு எதிராகவும் படமெடுத்தது. சிங்களர், தமிழர், பின் இஸ்லாமியர் என மத இன வேறுபாடுகள் பெரிதுபடுத்தப்பட்டு, விரிசல்கள் சமூகத்தில் தோன்றின.
பத்திரிக்கைகளுக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டன. சந்தேகங்கள் விதைக்கப்பட்டன, எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இரவோடிரவாக காணாமற்போயினர் , கடத்துவதற்கு உபயோகப்பட்ட “வெள்ளை வேன்” இலங்கை அரசியலை வேறுதிசைக்கு இட்டுச்சென்றது. ஆம் சகிப்புதன்மையற்ற பேரினவாதம் தலைவிரித்தாடியது இலங்கையில்!
2013ஆம் ஆண்டுவாக்கில் பொறுமையிழந்த இலங்கை மக்களும் அரசியல் கட்சிகளும் மகிந்தா ராஜபகசேவின் அராஜக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர முடிவெடுத்தனர். 2015 தேர்தலில் வென்று நேஷனல் யூனிட்டி கவர்ன்மென்ட என்ற அரசை ஏற்பட்டது.. மைத்ரபால சிறிசேனா அதிபராகவும் யு என் பி யை சேர்ந்த ரணில் விக்ரமசிங்கே பிரதமராகவும் பொறுப்பேற்றனர். இவ்வரசிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA)ஆதரவு அளித்தது.
இந்த கூட்டாட்சி மலர, இந்திய அரசு மறைமுக உதவி செய்தது என்று பலவாறாக குற்றச்சாட்டுகள் இலங்கை அரசியலில் எழுந்தன. எதிரும் புதிருமான கட்சிகள் ஒன்றிணைந்து சமூக நல்லிணக்கத்தை தூக்கிப் பிடிக்கவும் சிங்கள – தமிழர் அதிகாரப் பரவல்களை அமுல்படுத்தவும் முனைந்தனர். உயர்ந்த எண்ணங்கள் இருந்தாலும், பல்பிடுங்கப்பட்ட ராஜபக்சேவை அவரது அத்துமீறல்களுக்காகவும் ஊழலுக்காகவும் அதீத சொத்து குவிப்பிற்காகவும் சட்டத்தின் முன் நிறுத்த எடுத்த முயற்சிகள் வெற்றி பெறாமல் போனது துர்ரதிர்ஷ்டமே.
தமிழர் பிரச்சினை தீர்க்ப்படாமலேயே இழுத்தடிக்கப்பட்டன. இதனூடே ஈஸ்டர் கால குண்டு வெடிப்பு மீண்டும் பேரினவாதம் தலைதூக்க வழிகோலியது. ஆளுங்கட்சிகளுக்கிடையே பிளவும், ரணில் மற்றும் அதிபர் சிறிசேனா இடையே மோதலும் ஏற்பட்டு ஒற்றுமை அரசு UNITY GOVERNMENT என்பது கேலிக் கூத்தாகியது.
இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மகிந்த ராஜபக்சே தன் இளவலும் முன்னாள் ராணுவ அமைச்சருமான கோத்தபயா ராஜபக்சேவுடன் இணைந்து சிங்கள பேரினவாதம் இந்திய தலையீட்டுக்கு எதிர்ப்பு என்ற பரப்புரை மூலம் மாபெரும் வெற்றியை ஈட்டினார்!
கொத்தபயா ராஜபக்சே அதிபராகவும், மகிந்தா ராஜபக்சே பிரதமராகவும் , பேசில் ராஜபக்சே நிதி அமைச்சராகவும் கொண்ட புதிய ஆட்சியின் தேனிலவு சிறிது காலத்தில் முடிவுக்கு வந்தது.
கோவிட் பெருந்தொற்று சுற்றுலா துறையை முடக்கியது. அன்னிய செலாவணி வருகையை நாசப்படுத்தியது. தேயிலை ஏற்றுமதி முற்றிலும் படுத்துவிட்டது. வெளிநாட்டுவாழ் இலங்கை மக்கள் அனுப்பும் பணமும் 60 சதவிகிதம் குறைந்தது.
இது பத்தாதென்று ராஜபக்சேவின் முட்டாள்தனமான முடிவான ரசாயன உர இறக்குமதி தடை, எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றிய கதையாக பிரச்சினைகள் பற்றிக் கொண்டன.
அந்நிய செலாவணி குறைந்ததால், இறக்குமதிகள் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டன. இந்த முடிவு மேலும் விலை உயர்வை கூட்டின.வேறுவழியின்றி, இந்தியாவுடன் சில ஆயிரங்கோடிகளுக்காக ஒத்திசைவான போக்கை ராஜபக்சே கும்பல் காட்டினாலும் பேரினவாதப் போக்கை தொடரந்து தூக்கிப்பிடித்து வருகின்றனர் .
ஒரே நாடு ஒரே சட்டம் -ONE NATION ONE LAW- என்ற பரப்புரையை மேற்கொண்டு யூனிபார்ம் சிவில் கோடு கொண்டுவர அரசியல் சட்டத்தை திருத்த எத்தனிக்கிறது ராஜபக்சே அரசு. இதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆலோசனைக் குழுவிற்கு ஞானசாரா என்ற புத்த பிக்குவை தலைவராக நியமித்துள்ளது. முஸ்லீம் மக்களின் மேல வெறுப்பை உமிழும் இந்த ஞானசாரா ஒருபோதும் ஒற்றுமைக்கு உதவப்போவதில்லை என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தவறான பொருளாதார கொள்கை முடிவுகளால் ஏற்பட்ட பற்றாக்குறையாலும், பயங்கர விலைஉயர்வாலும் கொதித்துள்ள மக்களின் கோபத்திற்கு ஆளான இந்த கும்பல் தன்னை காப்பாற்றிக்கொள்ள பயன்படுத்தும் ஒரே ஆயுதம் பேரினவாதமும் பெரும்பான்மைவாதமும் தான்!
Also read
பிரச்சினைகள் கைமீறிச்சென்றுவிட்டால், சிறுபான்மை மக்களின்மீது வெறுப்பையும் பயத்தையும் கிளறுவதன் மூலம் மக்களை திசைதிருப்பி தங்களை காப்பாற்றிக்கொள்வது பேரினவாதத்தின் பெரும்பான்மைவாதத்தின் தலையாய பண்பு என்பது இலங்கையில் மீண்டும் நிரூபணமாயுள்ளது.
பன்முகத்தன்மையும், மதநல்லிணக்கத்தையும், சமதர்மத்தையும் தூக்கிப் பிடிக்கும் சக்திகள் தேர்தல் களத்தில் பின் தங்கியதின் விளைவை இலங்கை மக்கள் இன்று அனுபவிக்கின்றனர்.
தமிழ் தீவிரவாதம் என்ற கோஷமும் ஜிகாத் பயங்கரவாதம் என்ற கோஷமும் எழுப்பப்படுவது பிரச்சினையை திசைதிருப்ப பேரினவாதம் பயன்படுத்தும் உத்திகளே!
இந்த பெரும்பான்மைவாதத்தை ஒன்றிணைந்து , எதிர்த்து , முறியடித்து இலங்கைவாழ் மக்கள் இந்திய மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வார்களா?
ச.அருணாசலம்
நல்ல கட்டுரை
மேற்கண்ட கட்டுரை என்னுள் பிறப்பித்த சிந்தனைகள் சில:
இன்று உலகை ஆட்டுவிக்கும் சக்திகள் பற்றி அருமையாககூறப்பட்டுள்ளது.. அச்சக்திகள் எவ்வாறு ஓர் நாட்டையே பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது என்பதற்கு நாளை இலங்கை ஓர் வரலாற்று பாடமாய் அமையும் என்பதில் ஐயமில்லை. இந்நிலைக்கேட்டை மாற்றி அமைக்கும் வழிமுறைகள் யாதென யாவரும் கலங்கி நிற்கும் இவ்வேளையில், கலங்கரை வெளிச்சமாய் நிற்கும் நம் ஜே.சி.குமரப்பாவின் கருத்துக்களையும் எழுத்துக்களையும் பாமர மக்களுக்கு எடுத்து செல்வது நம் கடமையென உணர்கிறேன்.
இன்று பாலுக்கும் அன்றாட தேவைகளுக்கும் திண்டாட வேண்டிய சூழ்நிலை வர காரணம், நாம் நம் தற்சார்பு வாழ்க்கைமுறையை மறந்ததே என்பதை நினைவூட்டும் தருணம் இது. ஒவ்வொரு ஊரும் அதன் அடிப்படை தேவைகளை அதன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்வதன் அவசியத்தை உணரும் தருணம் இது. பக்கத்துக்கு தெருவில் கறந்த பாலும், எதிர் வீட்டில் தைத்த சட்டையும் எப்படி நம் தன்மானத்தை பாதுகாக்க வல்லது என்று சித்தரிக்கும் பாடம் இது.
இவ்வேளையில், வாழும் கிராமங்களை உருவாக்க போராடிய நம் கோ. நம்மாழ்வார் ஐயாவையும் நினைவில் கொள்ளுதல் அவசியம். இலங்கை பிரச்சினை என்று நாம் படிக்கும் விஷயங்கள் உண்மையிலேயே முழு தேசத்தின் நிலைமையா அல்லது இலங்கை நகரங்களின் நிலைமையா என்று கள ஆய்வு ஒன்று செய்திடல் அவசியம். இன்று இலங்கையில் தம் தற்சார்பு வாழ்வால் தள்ளாடும் கிராமங்களை கண்டறிந்து அவற்றை பறைசாற்றும் பொறுப்பு நமதாகும். இதை பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் நாளிதழ்கள் கண்டிப்பாக செய்யாது. இலங்கை நண்பர்களுடன் இணைந்து இக்கள ஆய்வை முன்னெடுத்து செல்வது நம் கடமை!
இன்று இலங்கைக்கு இச்சூழ்நிலை எனில், நாளை நமக்கும் இச்சூழ்நிலை வரும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு நாம் எப்படி நம்மை தயார் படுத்தி கொள்வது? நம் தனி மனித முயற்சிகள் தாண்டி எப்படி ஓர் சமுதாய மாற்றத்திற்கு நாம் பங்களிப்பது?
நம்முள் இக்கேள்விகள் தீவிரமடையும் போது, விடைகள் தாமே வருமென்பது திண்ணம்
அருமையான அலசல்.
அருமையான அலசல். விடுதலைப்புலிகள் கொன்று அழிக்கப்பட்ட பிறகு இந்த கோத்தபய ராஜபக்சே கூட்டம், தமிழர்களுக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் இழைத்த கொடுமைகள் மிகவும் அதிகம்.
★இந்தியாவில் உள்ள ஆர்எஸ்எஸ் கூட்டமும் இலங்கையிலுள்ள ராஜபக்சே மற்றும் புத்த பிட்சுகள் கூட்டமும் ஒரே மாதிரியான சித்தாந்தத்தை கொண்டவர்கள்.
★அவர்களும்,அவர்களுடைய அடிமைகளும் தவிர வேறு எவரும் வாழ சகித்துக்கொள்ள மாட்டார்கள்.
★தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இழைத்த கொடுமைக்கான விலை தான் இந்த பஞ்சம் பட்டினி அழிவு!
★ எல்லா இன மக்களும் எல்லா மொழி பேசும் மக்களும் எல்லா மத மக்களும் ஒன்றிணைந்து வாழும் சமூகமே செழிப்படையும். அவரவர்களுக்கு உரிய நியாயமான உரிமைகள் மறுக்கப்படக் கூடாது.
பௌத்தர்கள் புத்தரின் உண்மையான போதனைகளை பின்பற்ற வேண்டும்.
★தன்னுடைய இனத்தை தவிர மற்ற இனத்தவரை அழித்துவிட்டு செழிப்பாக வாழலாம் என்று பகல் கனவு கண்டவர்கள் எல்லாம் அழிந்து நாசமாகி விட்டார்கள் என்பது இந்த உலகம் கண்ட உண்மை.
★ இதெல்லாம் இந்த ராஜபக்சே கூட்டத்திற்கு புரிந்து திருந்தி வாழ்ந்தால் மட்டுமே
மறுபடியும் இலங்கை செழிக்கும் இன் ஷா அல்லாஹ்.இல்லையேல் அழிவும் நாசமும்தான் ஏற்படும் இது இறைவனின் நியதி.
★ ராஜபக்சே சகோதரர்கள் உள்ளிட்ட குடும்பத்தினரும் மற்றும் புத்த பிட்சுகளும் திருந்தப் போகிறார்களா அல்லது வருந்தப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்..
[★ (நபியே!) ஓர் ஊராரில் சிலர் (மற்றவர்களைப் பாவம் செய்யாது) சீர்திருத்திக் கொண்டிருக்கும் வரையில் (மற்ற) சிலரின் அநியாயத்திற்காக அவ்வூரார் அனைவரையும் உங்களது இறைவன் அழித்துவிட மாட்டான்.
(அல்குர்ஆன் : 11:117)]
Sri Lanka forecasts a terror future for us…