அதிகரித்த செல்போன் விற்பனைகளும், அநாதையாக்கப்பட்ட செல்போன் வியாபாரிகளும்..!

புதுமடம் ஜாபர்அலி

இன்றைக்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் முதல், குடு குடு கிழவன் வரை, செல்போன் பயன்படுத்தாத நபரே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை  இருக்கிறது. இப்படி செல்போன் பயன்பாடு அதிகரித்தாலும்,செல்போன் கடைகள் வியாபாரமின்றி விரக்தியில் மூடப்பட்டு வருகின்றன என்பதே உண்மை!

’’ ஆன்ராய்டு செல்போனா, அதுல கண்ட கண்ட கருமாந்திரமெல்லாம் வருதுப்பா. அதையெல்லாம் என் பிள்ளைங்களுக்கு ஒரு நாளும் கொடுக்க மாட்டேன்…’’ என்று சொன்ன பெற்றோர்களெல்லாம், பள்ளிக்கூடம் மற்றும் ஆசிரியர்கள் வற்புறுத்தலைத் தொடர்ந்து, ஆன்ராய்டு போனுலயே எதுப்பா நல்ல போனுஜூம் மீட்டிங்குல என் பையனுக்கு வாத்தியாருங்க வகுப்பெடுக்கப் போறாங்களாம். அதுக்கு கட்டாயம் போன் தேவைப்படுதுப்பான்னு சொல்லி, ஆன்ராய்டு போன் வாங்க, பரபரக்கிறார்கள்!. இவர்கள் பட்ஜெட் ரூபாய் 5,000 த்திலிருந்து 10,000 என்பதாக உள்ளது.

ஆன்லைன் ஆதிக்கம்

 இதனால், செல்போன் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. கையில் காசு இல்லாவிட்டாலும், கடன் பட்டாவது பிள்ளைகள் படிக்க செல்போன் வாங்கிக் கொடுத்தாக வேண்டிய இக்கட்டில் பெற்றோர்கள் இருக்கின்றனர்.ஆனால், செல்போன் கடைகளுக்கு வந்து வாங்குபவர்கள் எண்ணிக்கையை விட ஆன்னைனில் ஆர்டர் செய்து வாங்குபவர்கள் அதிகம் உள்ளனர். ஆன்லைன் வகுப்புக்காக ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து செல்போன் வாங்கும் போக்கு அதிகமாகிவிட்டது! ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ஆர்டர்கள் அதிகரிக்கத் தொடங்கியது.அது ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையிலும் தொடர்கிறது. கொரானா பயம் காரணமாக கடைக்கு வருவதை தவிர்க்கும் போக்காகவும் இருக்கலாம்! ஆக, எப்படியானாலும் சிறுவியாபாரிகளுக்கு கடை வடகை கொடுப்பதே சவாலாகிவிட்டது.

செல்போன் கடை வைத்து பிழைக்கும் எளிய வியாபாரிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த காலகட்டம் ஒன்று இருந்தது.ஆனால், ஐந்தாண்டுகளுக்கு முன்பிருந்த கடைகளில் பாதி கடைகள் தான் தற்போது தாக்குபிடித்து உள்ளன! அந்த அளவுக்கு ஆன்லைன் வியாபாரத்தின் ஆதிக்கம் சிறுவியாபாரிகளை சின்னாபின்னமாக்கிவிட்டது.

 மற்றொருபுறம் நடுத்தர வர்க்க குடும்பத்தில் ஆன்லைன் வகுப்பால் ஆகின்ற செலவுகள் மலைக்க வைக்கின்றன! ஒரு செல்போன் மட்டும் வாங்கினால் போதுமா? கூடவே, சார்ஜர், ஹெட்போன், புளூ டூத் போன்ற செல்போன் சம்பந்தப்பட்ட கருவிகளும் வாங்க வேண்டியிருக்கிறது. இதேபோல, கம்ப்யூட்டர், டேப்லெட் பி.சி., லேப்டாப் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்களும், வெப் கேமரா போன்ற கம்ப்யூட்டர் உதிரி பாகங்களும் இன்றைக்கு தவிர்க்க முடியாத தேவையாகி இருக்கின்றன.

இவற்றையெல்லாம் வாங்குவதற்கு கூடுதல் செலவாகிறது!

ஆக, ஆன்லைன் வகுப்புகள் மூலமாக, எலெக்ட்ரானிக் பொருட்கள் வீட்டுக்குள் புகுந்து விட்டதோடு, அது தவிர்க்க முடியாததாகி விட்டது.வீட்டில் இரு பிள்ளைகள் இருந்தால், இந்த எலெக்ட்ரானிக் பொருட்கள் அனைத்தும் இரு செட்களாக வாங்கப்பட்டிருக்க வேண்டும். ஆக, இந்த எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு அதிக  டிமாண்ட்/கிராக்கி ஏற்பட்டுள்ளது. பெற்றோர்களின் பட்ஜெட்டும் எகிறிவிட்டது.

செல்போன் பைத்தியங்கள்

 பிள்ளைகளுக்கு செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் என வாங்கிக் கொடுத்து விட்டு, அவர்கள் பாடங்களை படிப்பதில் மும்முரமாக இருக்கும்போது, பெற்றோரால்  சும்மா இருக்க முடிகிறதா? அவர்களுக்கும் பொழுது போக, செல்போன் தான் தேவைப்படுகிறது.

 ஆன்ராய்டு செல்போனுக்குள் எல்லாமே இருக்கும்போது, பெரிதாக திரையில் டி.வி., பார்க்க யாருக்குத் தோணும்? பல வீடுகளில், டி.வி., இப்போது பெரும்பாலான நேரங்களில் அலங்காரப் பொருளாகத்தான் இருக்கிறது. நியூஸ் சேனல்கள், பொழுது போக்குச் சானல்களோடு, யு டியூப் போன்றவையும் செல்போன் மூலம் பார்க்க முடியும்போது, யார் டி.வி., பக்கம் போவது குறைந்துவிட்டது.

ஆக ஒட்டுமொத்த குடும்பங்களையும் செல்போன் என்ற ஒற்றைக் கருவி தன் பக்கம் ஈர்த்திருக்கிறது என்பது தான் நிதர்சனம். தற்போது, கொரோனா தொற்று ஒரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் திறக்கவில்லை. ஆகவே,ஆன்லைன் எஜுகேஷனுக்கு செல்போன் தேவை தொடர்கிறது.

தற்போது, செல்போனுக்கு அதிகம் அடிமையாகி விட்டது சமூகம். ஒரு மணி நேரம் கையில் செல்போன் இல்லை என்றால், ஏங்கித் தவிக்கிறது சமூகம்.

 ஆக, யாராலும் இனிமேல் செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற அசாத்தியமான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

’’ இதெல்லாம் எங்கே போய் முடியப் போகிறதோ…’’ என வேதனையில் விம்மி வெடித்து கேட்கும் சமூக ஆர்வலர்கள் கையில் கூட, இரண்டு சிம்முடன் கூடிய ஆன்ராய்டு செல்போன் தகதகவென மின்னத்தான் செய்கிறது.

 ரோட்டில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துபவர்கள் கூட, அனாயசமாக செல்போன் பார்த்துக் கொண்டு காலம் கடத்தும் சூழலில், இனி செல்போன் இல்லா உலகத்தை யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

திணறும் சில்லறை வியாபாரிகள்

 பயன்படுத்தப்பட்ட செகண்ட்ஸ் செல்போன்களெல்லாம் விற்றுத் தீர்ந்துவிட்ட சூழலில், சைனாவில் இருந்து புதிய செல்போன்களுக்கும் தடைவிதிக்கப்பட்டிருப்பதால், செல்போன்களுக்கு மார்க்கெட்டில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல, செல்போன் உதிரி பாகங்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

கடந்த ஏப்ரலில் GST 12யிலிருந்து 18ஆக அரசு உயர்ந்த நிலையில் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்தவில்லை

விலை அதிகமுள்ள ஐ போன்கள் அதிகமாக விற்பனையாவதில்லை! மலிவான ஆன்ராய்டு போன்கள், ரூபாய் 6000யிலிருந்து 12000வரை உள்ள போன்களே  மக்களால் வாங்கப்படுகிறது. இதற்காக சில மாடல்கள்,பழைய ஸ்டாக் கிராக்கியைப் பொருத்து செல்போன் கடைகளில் (retailer) 500,1000 போன்ற விலைக்கும், பழைய,டெமோ, போன்களும்  எல்லா செல்போன் கடைகளிலும் ஸ்டாக் இல்லை என்று சொல்லும் அளவிற்கு விற்பனை ஆனது!

ஸ்டாக் கொஞ்சமாக இருப்பதோடு, டிமாண்ட் அதிகமாக இருக்கும் சூழலை உணர்ந்து கொண்ட செல்போன் மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகளுக்கு செல்போன்களை விற்பனை செய்வதற்குள் ஆயிரம் நிபந்தனைப் போடுகிறார். முன்பெல்லாம், முன் பணம் எதுவும் இல்லாமல் கடனுக்குப் பொருட்களைக் கொடுத்து விட்டு, பின், இரு மாதமோமூன்று மாதமோ கழித்து வந்து பணத்தை வாங்கிச் செல்லும் போக்கெல்லாம் தற்போது மலையேறிவிட்டது.

 கை மேல பணத்தை வைத்தாக வேண்டும். அதுவும் பணம் தான். செக், கிரெடிட் கார்டு என எதுவும் பேசக் கூடாது. சொல்கிற விலையைக் கேட்டு, பணத்தை உடனடியாகக் கொடுத்தால் மட்டுமே, பொருள் கைமாறுகிறது. இல்லையென்றால், நிர்தாட்சண்யமாக’’ பொருள் இல்லை’’என, சில்லரை வியாபாரிகளை, மொத்த செல்போன் வியாபாரிகள் திருப்பி அனுப்பும் அடாவடித்தனம் நடந்து கொண்டிருக்கிறது. சில்லறை வியாபாரிகளின் சிரமம் மொத்த வியாபாரிகளுக்கு தெரிவதில்லை.

மொத்த வியாபாரிகளே, இஷ்டத்துக்கும் பொருட்களின் விலையை ஏற்றி விட்டதால், கூடுதல் லாபம் வைத்து சில்லரை வியாபாரிகளால் செல்போன்களை விற்க முடியவில்லை. இதனால், சில்லரை வியாபாரமாக செல்போன் மற்றும் உதிரி பாகங்களை விற்றுக் கொண்டிருந்த பலரும், இன்று லாபமின்றி, தொழிலை தொடர்ந்து நடத்த முடியாமல், தொழிலை விட்டே சென்று விட்டனர். வேறு தொழில் நோக்கிச் சென்று விட்டனர்.

 செல்போன் வாங்குபவர்களில் பலரும் கடைகளுக்குச் சென்று வாங்குவதை குறைத்து, ஆன்லைன் மூலமாகவே ஆர்டர் செய்து, போன் வாங்குகின்றனர். கடைகளுக்கு வந்து பலவேறு போன்களை எடுத்துக் காட்டச் சொல்லி, நன்றாக கவனைத்து வாங்கிய கலாசாரம் குறைந்து கொண்டே வருகிறது. இதனாலும், சிறிய செல்போன் கடைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகின்றன.மக்களின் சோம்பேறித்தனம் சிறுவியாபாரிகளை தொழிலில் இருந்தே விரட்டி அடிக்கிறது.

 மற்றொருபுறம், எலெக்ட்ரானிக் பொருட்கள் அனைத்தும் தாறுமாறாக விலை ஏற்றி விற்கப்படுகின்றன. பதினோராம் வகுப்பு பயிலும் மாணவமாணவிகளுக்கென்று வழங்கப்பட்ட லேப்டாப்(மடிகணினி) தேவையின்றி தான் பல வீடுகளிலும் மூலையை அலங்கரித்துக் கொண்டிருந்தது.

 அதன் பயன்பாடு அப்போது முழுமையாக இல்லாததால், வறுமையில் வாடும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவமாணவிகள் பலரும், குடும்ப வறுமையைப் போக்க, அரசு வழங்கிய இலவச மடிகணினிகளை ஆறாயிரம் ரூபாய்க்கு விற்று வந்தனர். இன்று அவற்றுக்கும் டிமாண்ட் இருக்க, மூலையில் கிடத்தப்பட்டிருந்த மடிகணினியின் விலை தற்போது பதினைந்தாயிரம் ஆகிவிட்டது.

 ஆன்லைன் வகுப்புகள் அனைத்தும் ஜூம் போன்ற ஆப் மூலமாகவே நடத்தப்படுவதால், ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்தில் இருக்கும் நபரை இணைக்க, இண்டர்நெட் வசதி தேவை. இதனால், சமீப காலமாக, ஒவ்வொரு வீட்டிலும் இண்டர்நெட்/பிராட்பேண்ட் வசதியை பயன்படுத்துவது அதிகமாகி இருக்கிறது.

 ஏற்கனவே ஐந்து மாதங்களுக்கு முன், இண்டர்நெட்/பிராட்பேண்ட் சேவைக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில், தேவையின் முக்கியத்துவம் அதிகமாக இருக்கும் இந்த சூழலைப் பயன்படுத்தி, சேவை நிறுவனங்கள், சேவைக் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்படலாம்.

செல்போனால் தொலையும் நிம்மதி

 சரி, இப்படி செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், டேப்லட் பி.சி., பயன்பாடுகள் அதிகரித்திருப்பது தவறில்லை. ஆனால் அவற்றை அளவாக தேவைக்கேற்ப பயன்படுத்தாத சமூகமாக நம் சமூகம் உள்ளது. இதை அதீதமாகப் பயன்படுத்தும் போது , மனித உடலில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்!

 இருபத்தி நாலு மணி நேரத்தில், எந்த நேரமும் செல்போனும் கையுமாக இருக்கும்போது, தலைவலி, நரம்பு தளர்ச்சி, தசை முடக்கம், கண் பார்வை பிரச்னை, கடுமையான மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உடலில் ஏற்படுகின்றன.

சர்வ சதா நேரமும் செல்போனிலேயே மூழ்கி இருப்பதால், பல குடும்பங்களில் குடும்ப உறவுகளிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. சண்டைசச்சரவுகள் இல்லாத குடும்பமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு சண்டைகள் அதிகரித்திருக்கின்றன. கணவன், மனைவியை அடித்து நொறுக்கும் அளவுக்கு, குடும்ப வன்முறை அதிகரித்திருக்கிறது. அப்பா, மகனை அடிக்கும் சூழலும், மீறிய பிள்ளைகள் அப்பாக்களை அடிக்கும் விளைவுகளும் செல்போனால் ஏற்பட்டிருக்கின்றன.

 குடும்பங்களைத் தாண்டி, அடுத்த வீட்டார், நண்பர்கள், உறவுகள் என பல இடங்களிலும் சண்டைக்கான மூல காரணியாக செல்போன் இருக்கிறது என்பதை யாராலும் மறுப்பதற்கில்லை.

ஆக, செல்போன் வாழ்க்கையில் இன்றியமையாததாக ஆகிவிட்டது. அதனால், எத்தனையோ நன்மைகள் இருக்கலாம். ஆனால், இன்னொரு பக்கத்தில், அது கூர்மையான கத்தியாகவே இருந்து சமூகத்தை எளிதாக குத்திக் கிழிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது. எனவே, மனிதனின் இன்றியமையாத் தேவையாகி இருக்கும் செல்போன் விஷயத்தில், ஒவ்வொருவரும் எச்சரிக்கையாக இருந்து அதை கையாள வேண்டும்.

 மனிதனுக்கு ஆறாவது விரல் போல ஆகி இருக்கும் செல்போனை ஒதுக்கி வைக்கவும் முடியாது; அதில் முழுமையாக மூழ்கி சமூகம் கெட்டுப் போக அனுமதிக்கவும் முடியாது. மனிதன் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இருப்பானா?

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time