நீதித் துறையில் பயணித்த ஒரு போராளியின் வாழ்க்கை!

பீட்டர் துரைராஜ்

22 அத்தியாயங்கள் கொண்ட இந்த நூலை தன் வரலாறு என சுருக்கி வகைப் படுத்த இயலாது. சட்டம், நீதிமன்றம், வழக்குரைஞர்களின் தொழில், பல முக்கிய வழக்குகள், தீர்ப்புகள்.. இவற்றை  உண்மைச் சம்பவங்களுடன் இணைத்துச் சொல்லும் போது, அது சமகால சமூக, அரசியல் வரலாறாக ஆகி விடுகிறது!

ஜெய்பீம் திரைப்பட வெற்றியைத் தொடந்து, வெகுமக்களின் அன்பிற்குரியவராக கே.சந்துரு மாறிவிட்டார்.  மாணவர் சங்கத் தலைவர், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்,வழக்கறிஞர், நீதிபதி என பல நிலைகளில் இவர்  பணியாற்றியுள்ளார்.  வழக்கறிஞராக பணிபுரிந்த காலத்தில் மனித உரிமை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவசமாக வாதாடியுள்ளார்.

தமிழகத்தை உலுக்கிய அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவன் உதயகுமாரின், மரணத்திற்கான நீதி விசாரணையில் பங்கு பெற்றதன் மூலம் , தனது பொது வாழ்வைத் தொடங்கியவர் சந்துரு. அப்போது அவர் சட்டம் பிடிக்கவில்லை. தாவரவியல் படித்த மாணவர். கொல்லப்பட்ட தனது மகனை, தந்தையே தன் மகனில்லை என கூற வைக்கப்பட்ட – 1970 களில் நிலவிய அந்த கொடிய அரசியல் சூழலை விளக்கியுள்ளார். கருணாநிதி ஆட்சிக் காலத்தில், கடலூர் ஆர்டிஓ வாக இருந்த தியானேசுவரன், விசாரணையின் போது “தம்பி மாணவனாக இருக்கும்போது இதைவிட நானும் துடிப்பாக இருந்தேன். போகப்போக இந்தத் துடிப்பெல்லாம் அடங்கிவிடும்” என்று இளவயது சந்துருவிடம் கூறுகிறார். ஆனால், ‘இலட்சியமும், பிடிமானமும் நிச்சயம்’ இருந்த காரணத்தால் இறுதிவரை தடம்மாறாத சந்துருவைப் பார்க்கிறோம்.

பிற்காலத்தில் ஜெயலலிதா ஆட்சியில்  தமிழ்நாடு கனிமவள நிறுவன தலைவராக இருந்து, ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகி கைதான தியானசுவரன் கூறிய  ஆலோசனையைத்தான், ‘இவன் என் மகன் இல்லை என்ற அப்பா’ என்ற முதல் அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார். இப்படி, நூல் நெடுகிலும் பல்வேறு நபர்களைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன.’சந்துரு கதை சொல்ல முற்படும்போது, அது ஒருவருடைய கதையாக மட்டும் அல்லாமல், ஓராயிரம் பேருடைய கதைகளாக உருமாற்றம் அடைகிறது’ என்கிறது நூலின் முதல் பக்கம்.

‘ஆர்டர்…ஆர்டர்…’ என்ற பிரபலமானத் தொடரை ஜூனியர் விகடனில்,  வழக்கறிஞராக இருக்கும்போது எழுதியவர் கே.சந்துரு. ஏறக்குறைய அதே பாணியில் இதனை எழுதியுள்ளார்.கடித விவரம், வழக்கு எண், பத்திரிகையில் வெளியான நாள் என பல்வேறு குறிப்புகளை விரிவாக கொடுத்துள்ளார்.

பாலியல் சீண்டல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியிருக்கும் காவல் அதிகாரி  ராஜேஷ்தாஸ் பற்றி நாம் அறிவோம். இவரது மனைவி பியூலா தாஸ் பல ஆண்டுகளுக்கு முன்னர், செங்கல்பட்டு சப் கலெக்டராக இருந்த போது,  திருச்சி காவல்படை மைதானத்தில் பூப்பந்து  விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை கிண்டலடித்த இரண்டு ஆயுதப் படை காவலர்களை,  காவலர்களைக் கொண்டே கொடூரமாகத் தாக்கி, அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்தவர் ராஜேஷ் தாஸ். இந்தச் சம்பவத்தைச் சொல்லி, ‘மனித உரிமை ஆணையத்திற்கு மறுவாழ்வு’ என்ற அத்தியாயத்தைத்  தொடங்குகிறார். இத்தகைய பின்னணி உள்ள ஒருவரை மாநிலக் காவல்துறைப் பொறுப்புக்கு வர அனுமதித்ததில் நமக்கு பங்கு இல்லையா..? என்று கேட்கிறார். இப்படி ஏதோ ஒரு சம்பவத்தை விவரித்து தொடங்கும் ஒவ்வொரு அத்தியாயமும், வாசகனை உள்ளிழுத்துச் செல்கிறது.

‘நானும் நீதிபதியானேன் !’  என்ற இறுதி அத்தியாயம்,  ஐம்பது பக்கங்கள் உள்ள நெடிய கட்டுரை. நீதிபதி நியமனம் எவ்வளவு தான்தோன்றித்தனமாக இருக்கிறது என்பதைச் சொல்லுகிறார். மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் இவருக்காக பேசியதைக் நாம் காணலாம். ‘மாநில அரசு, நுண்ணறிவுப்பிரிவு அறிக்கைகள், ஒன்றிய அரசின் முடிவு,  உச்சநீதிமன்ற கொலிஜியப் பரிந்துரைகள்’ இவற்றையெல்லாம் கடந்த பின்னரே நீதிபதி ஆக முடியும். ‘கொலிஜிய நீதிபதிகள் நடைமுறைதான் உலகத்திலேயே ரகசியமானது’  என்று கூறுகிறார். ‘சாதி, மதம் நீதிபதி நியமனத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது’ என்று கூறுகிறார். உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த மார்கண்டேய கட்ஜூ,  ”இவர் பெயரை பரிந்துரைக்க வேண்டாம்” என சென்னைக்கு வந்து, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவிடம் சொல்லி விட்டுப் போனதைச் சொல்கிறார்.

நீதிபதிகளின்  நேர்மை, அறவுணர்வு, சார்புநிலை போன்றவற்றை சந்துரு வெளிப்படையாக கூறவில்லை. ஆனால் இவர் விவரிக்கும் சம்பவங்கள் மூலம் அந்த நபர்களைப்பற்றி நாம் அனுமானிக்க முடியும். நீதித்துறையில் உள்ளவர்கள், பல உள்விவகாரங்களை தொடர்பு படுத்திப் பார்க்கக் கூடும்.

ஏழுவருடம் நீதிபதியாக இருந்த காலத்தில், 96,000 வழக்குகளுக்கு முடிவு எட்டப்பட்டதை; தனது சொத்துக் கணக்கை காட்டியதை;  ‘தனக்கு முன்னால் யாரும் செங்கோல் பிடித்து செல்லக் கூடாது’ என்று கூறியதை, 60 நீதிபதிகளுக்கு 300 காவலர்கள் தேவையா? என கேள்வி கேட்டதை, ‘புத்தாண்டு நாளன்று தன்னை யாரும்  சந்திக்கக் கூடாது’ என்று கூறியதை, என்னை ‘சார்’ என்று அழைத்தால் போதும்’ என்று சொல்லியதை இறுதி அத்தியாயம் கூறுகிறது.

சந்துருவை விமர்சிக்கும் வழக்கறிஞர்களும் இருக்கிறார்கள்; விரும்பாத நீதிபதிகளும் இருக்கிறார்கள். ஒரு நேரத்தில்,  இவரைப் பாராட்டிய திராவிடர் கழக கி.வீரமணி , ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளான  உச்சநீதிமன்ற நீதிபதி ராமசாமியை பதவியில் இருந்து நீக்கம் செய்ய சந்துரு எடுத்த முயற்சிகளைப் பார்த்து ‘விபீடணனர்’ பட்டம் கொடுக்கிறார்!

மிசா, தடா, பொடா போன்ற சட்டங்கள் ஜனநாயக விரோதமானவை. இதன் தற்போதைய வடிவம்தான் ஊபா சட்டம். இவை ஆங்கிலேயர் காலத்து ரௌலட் சட்டங்கள்தான். கொடைக்கானலில் ஆதிவாசிகளுக்காக குரல் கொடுத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி குர்கானிகால் சிங், எம்.ஜி.ஆர். அரசால் பழிவாங்கப் பட்டபோது அவருக்காக வாதாடிள்ளார். அவருடைய தம்பி, இராணுவத் தளபதி வைத்யா கொலை வழக்கில் பூனாவில் கைது செய்யப்பட்ட போது,  தடா வழக்கிலிருந்து விடுபட உதவி செய்திருக்கிறார்.

அதிகாரத்தை எதிர்த்து  ஜனநாயக நலன் காப்பதில் இடதுசாரி, திராவிட, தலித்திய, தமிழ்த்தேசியம் போன்றவை உள்ளிட்ட எல்லா ஜனநாயக இயக்கங்களோடும் இணைந்துச் செயல்பட்டிருக்கிறார். ‘நீதிபதிகளின் அறநெறிக் கோட்பாடுகள்’ உருவாக்கத்திற்கு பங்காற்றி இருக்கிறார்.

தேவர் குலத்தைச் சார்ந்த சிறைத்துறை ஐ.ஜி பொன்.பரமகுருவை இஸ்மாயில் ஆணையத்தில் தோலுரிக்கிறார். இதன் பரிந்துரைகள் பின்னாளில், சிறைத்துறை சீர்திருத்த அரசு ஆணையாக வர நீதிபதி என்ற வகையில் பங்காற்றியிருக்கிறார். எம்.ஆர்.இராதா சிறையில் இருந்தபோது சிறை மருத்துவ மனையிலேயே காலத்தை கழித்ததினால், சிறைக்கொடுமைகளுக்கு ஆதரவாக பேசியதைச் சொல்லுகிறார்.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தமிழ் அமைப்புகள் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு கூட தடைவிதிக்கப்பட்டன. ஒரு வலது காலை இழந்து, செயற்கைக் கால் பொருத்தப்பட்ட மதானிக்கு மருத்துவ சிகிச்சைக்கு உத்தரவிட்ட, உள்துறைச் செயலாளர் முனீர் ஹோடாவை தேர்தல்  பொதுக்கூட்டத்தில் விமர்சிக்கும் அளவுக்கு ஜெயலலிதா அதிகாரபோதையில் இருந்தார் என்கிறார்.

முள்ளி வாய்க்கால் மண்டப நிகழ்வுக்கு அனுமதி, காப்புரிமை  விவகாரத்தில் பெரியார் எழுதிய புத்தகங்களை  வெளியிட அனுமதி, மனித உரிமைமீறல் வழக்குகளில் காவல்துறையினருக்கு எதிரான தீர்ப்புகள் போன்றவை இவரை எப்போதும் அதிகாரமட்டத்திற்கு எதிராகவே நிறுத்தி வைத்துள்ளன. எதிர் விளைவுகளைத் தெரிந்தும் அஞ்சாமலே அனைத்து முடிவுகளையும் எடுத்துள்ளார்.

சம கால அரசியலை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இவர் சுட்டிக்காட்டும் சம்பவங்கள், ஆளுமைகள், வழக்குகள் ஆர்வத்தைத் தரும். பார் கவுன்சில் சங்க நிர்வாகியாக இவர் எடுத்த நிலைபாடுகள்  (வழக்கறிஞர் நீதிமன்ற புறக்கணிப்பு செய்யக்கூடாது, மதுரை உயர்நீதிமன்றத்திற்கு ஆதரவு போன்றவை) சக வழக்கறிஞர்களால் விமர்சிக்கப்படுகின்றன. ஆனாலும், ஜனநாயகம் என்பதுதான் இவரது அளவுகோல்.

‘நீதிபதியானபோது நான் எப்படி பணியாற்றினேன் என்பதை அறிந்துகொள்வதற்கு, சட்ட சஞ்சிகைகளில் வெளிவந்துள்ள நான் அளித்துள்ள தீர்ப்புகளகப் படித்தாலே போதும்’ என நம்பிக்கையோடு சொல்கிறார். உச்சநீதிமன்ற நீதிபதி கபாடியா ஆலோசனை கூறியது போல, ‘துறவி என வாழ்ந்து, குதிரை போல உழைத்துள்ளார்’. நிகழ்கால, வருங்கால வழக்கறிஞர்கள் யாவருக்கும் இந்த நூல் ஒரு வாழ்வியல் கையேடாகத் திகழும்!

நூல்; நானும் நீதிபதி ஆனேன்

ஆசிரியர்; கே.சந்துரு

அருஞ்சொல் வெளியீடு,

120/70, கொத்தவால்சாவடி தெரு,

சைதாப்பேட்டை,

பக்கங்கள்;  480 , விலை;  ரூ 500

போன்; 6380153325

நூல் விமர்சனம்; பீட்டர் துரைராஜ்.

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time