உணவில் நிறமூட்டிகள்! உடலுக்கே கேடாகும்!

- எம்.மரிய பெல்சின்

கண்ணுக்கு கவர்ச்சியாக இருக்கும் உணவுகளை விரும்பி, வீழ்கிறோம் நோயில்! பல்வேறு விதமாக  உணவில் நாம் சேர்க்கும் நிறமூட்டிகள் எவ்வளவு ஆபத்தானவை எனத் தெரிந்து கொள்வோம்.

உணவு… உயிர்வாழ உதவுகிறது. `உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற அடிப்படையில் உணவு மருந்தாகவும் பயன்படுகிறது. ஆனால்,  தவறான உணவு சில நேரங்களில் நோய்களையும் உருவாக்குகிறது. உணவு உணவாக இருந்தவரைக்கும் பிரச்சினையில்லை, என்றைக்கு அது பெரும் வியாபாரப்பொருளாக மாறியதோ அன்றைக்கே அது தடம் மாறிவிட்டது. போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் உணவில் சுவையூட்டிகளையும், நிறமூட்டிகளையும் அளவுக்கு மீறி சேர்க்கின்றனர்.

கலர் கலரான உணவுகளை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகின்றனர்.  ஏ,பி,சி என்ற எழுத்து வடிவங்களிலும் அப்பளப்பூ அல்லது குடல் அப்பளம் என்று சொல்லப்படும் அப்பளத்தையும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இவற்றில் டெட்ராசைன், கார்மோசின், சன்செட் யெல்லோ உள்ளிட்ட செயற்கை நிறமிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக சேர்க்கப்படுகிறது. சில இடங்களில் தரம் குறைந்த நிறமிகளைச் சேர்த்தும் விற்கிறார்கள். இவற்றைச் சாப்பிடுவதால் குடல் பகுதியில் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

குடல் அப்பளம் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் ஏற்பட்டு நாளடைவில் புற்றுநோய் பாதிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் இந்த குடல் அப்பளம், வத்தல், வடகம் போன்றவற்றை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சமீபத்தில்  மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்து அழித்தனர். ஆனாலும், தொடர்ந்து அத்தகைய உணவுப்பொருள்கள் விற்கப்பட்டே வருகின்றன. இவையல்லாமல் உணவுப்பொருள்கள் நீண்டநாட்கள் கெட்டுப்போகாமலிருக்க அவற்றை பதப்படுத்தவும் செய்கின்றனர். உள்ளது உள்ளபடி, பழங்கால முறைப்படி உணவு உண்டவரைக்கும் பிரச்சினையில்லை. மீண்டும் அழுத்தமாக சொல்ல வேண்டியுள்ளது… உணவு என்றைக்கு வணிகமயமானதோ அன்றைக்கே உடல்நலனும் கெட்டுப்போய்விட்டது.

பெட்ரோலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ரசாயன நிறமூட்டிகள்தான் பஞ்சு மிட்டாயையும், தந்தூரி சிக்கனையும் சிவந்த நிறமாக்குகின்றன!  உண்மையில் இந்த நிறமூட்டிகளின் பிறப்பிடத்தை ஆராய்ந்தால் அவை நோய்களின் ஊற்றுக்கண் என்பது புலப்படும். அவை, வாகனங்களை இயக்குவதற்கு பயன்படுத்தப்படும் பெட்ரோலியப் பொருள்கள்… அதாவது, எரிபொருள்கள்; இன்றைக்கு நாம் உண்ணக்கூடிய பல்வேறுவிதமான உணவுகளில் பல்வேறு வழிகளில் எரிபொருள்கள் சேர்க்கப்பட்டிருப்பது வருத்தமான உண்மை.

பஞ்சு மிட்டாய், கேசரி, புருட் மிக்சர், தந்தூரி சிக்கன் போன்றவற்றை  கவர்ந்திழுக்கும் நிறத்தில் காட்ட நிறமூட்டிகள் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட இந்த உணவுகள் ரத்தத்தை வற்றச் செய்வதுடன் புற்றுநோயையும் உருவாக்கக் காரணமாகிறது என்கின்றன ஆய்வுகள். செயற்கை நிறமூட்டிகளில்  பாதரசம், ஈயம், குரோமியம் போன்ற உலோகங்களும் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இவை, கார்சினோஜென் எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் ஊக்கியாகச் செயல்படுகிறது.

மேலும், உணவுப்பொருள்கள் கெட்டுப் போகாமலிருக்க நைட்ரேட் என்னும் பொருளை பயன்படுத்துவதால், அவையும் கூட கார்சினோஜென் புற்றுநோய் ஏற்பட காரணமாகிறது. புகையிலை, பான் மசாலாக்கள் மற்றும் புகைப்பழக்கம் என எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவர்களுக்கும் கூட புற்றுநோய் எப்படி வருகிறது என்று ஆராய்ந்தபோது இந்த உண்மைகள் தெரியவந்தன.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றையே நாம் சமையலுக்கு பயன்படுத்தி வந்தோம். அப்போதெல்லாம் சமையலில் எண்ணெய்களின் பயன்பாடு என்பது குறைவே. ஆவியில் வேக வைத்த அல்லது நீரில் வெந்த உணவுகளையே பெரும்பாலும் சாப்பிட்டு வந்தோம். அதுவரை யாருக்கும் பெரிய உடல்நலக்குறைவுகள் எதுவும் ஏற்பட்டதில்லை. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் மருத்துவர்களை கையில் போட்டுக்கொண்டு அவர்கள் மூலம் மக்களை மூளைச்சலவை செய்து பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தச் சொன்னார்கள்.

அதுமட்டுமல்ல, நல்லெண்ணெய் பயன்படுத்தினால் இதயத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும், தேங்காய் எண்ணெயில் கொழுப்பு அதிகம் இருக்கிறது என்பதுபோன்ற பொய்களைச் சொல்ல வைத்தனர். நம் மக்கள்தான் டாக்டர்களை தெய்வமாக மதிக்கக்கூடியவர்களாயிற்றே. அவர்கள் சொல்படி மக்களும் மடை மாற்றம் அடைந்ததன் விளைவு இன்றைக்கு நோய்கள் பெருகிவிட்டன. இந்த உத்தியால் எண்ணெய் வியாபாரிகள் மட்டுமல்ல, மருத்துவர்களும் பலனடைந்தனர்.  மக்களும் தடம் மாறியதன் விளைவு இன்றைக்கு நோய்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறோம்.

சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் போன்ற எண்ணெய்களை குரூட் ஆயிலாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து அவற்றை சுத்திகரித்து சிலவற்றைக் கலந்து விற்கிறார்கள். அதேபோல், சிலர் தேங்காய் எண்ணெயில் மெழுகுவர்த்தி, ரப்பர் ஆயில் மற்றும் பாரஃபின் கலந்து விற்பதாகக் கூறப்படுகிறது. கடலை எண்ணெயில் பாமாயில், பருத்தி விதை எண்ணெய், தவிட்டு எண்ணெய் போன்ற விலை குறைவான எண்ணெய்களை கலந்து விற்கிறார்கள்.

ஆர்ஜிமோன் என்பது கடுகுச்செடியுடன் களையாக வளரும் ஒரு செடி. இதை கடுகுடன் சேர்த்து அரைத்து விற்கிறார்கள் அல்லது ஆர்ஜிமோன் என்ற அந்த தாவர எண்ணெயை கலந்து விற்கிறார்கள். ஆர்ஜிமோன் எண்ணெயைப் பயன்படுத்தினால் பார்வைக் கோளாறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. எனவேதான், ஆர்ஜிமோன் எண்ணெயை மற்ற எண்ணெய்களில் சேர்க்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் கள்ளத்தனமாக ஆர்ஜிமோன் சேர்க்கப்படுகிறது.

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்? என்று ஒரு கேள்வி கேட்டுப்பாருங்கள். அதில், நல்ல எண்ணெய் என்று வரும். நல்ல எண்ணெய் என்பது நல்லெண்ணெய். கேள்வியிலேயே பதில் இருக்கிறது. எள்ளை அரைத்து எடுக்கும் நல்லெண்ணெயில் உயிர்ச்சத்துகள் நிறைந்துள்ளன. உண்மையிலேயே இதயத்துக்கு நலம் தரக்கூடியது நல்லெண்ணெய் என்பது நம்மில் பலருக்குத் தெரியவில்லை.

கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் போன்றவற்றில் `லிக்யூட் பாரபின்’ என்ற பெட்ரோலிய கழிவுப்பொருள் கலப்பதாகக் கூறப்படுகிறது. சமையல் எண்ணெய்களை தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலப்பொருள்களைவிட பல மடங்கு விலைகுறைவான லிக்யூட் பாரபினை வாங்கி அதை நிறமற்றதாகவோ அல்லது பிடித்த நிறத்துக்கோ மாற்றுகிறார்கள். அதன்பிறகு எந்த எண்ணெய் தேவையோ அதற்கு தகுந்தாற்போல ஃப்ளேவர்களை சேர்த்து விற்கிறார்கள். அடக்க விலை குறைவு என்பதால் போட்டி போட்டுக் கொண்டு மிகக் குறைந்த விலையில் சமையல் எண்ணெய்கள் விற்கப்படுகின்றன. இன்னும் சொல்லப் போனால் செக்கு எண்ணெய் என்று கூறிக்கொண்டும் சிலர் இதே முறையில் எண்ணெயைக் கலந்து விற்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே, எள்ளு எடுத்துச் சென்று தந்து எண்ணெய் பிழிந்து வாங்கலாம்! அல்லது நம்பகமான இடத்தில் செக்கு எண்ணெய் வாங்க வேண்டும்.

எண்ணெயில் மட்டுமல்ல, அன்றாடம் காலை முதல் மாலை வரை நாம் அருந்தக்கூடிய காபி, டீ தயாரிக்க பயன்படுத்தப்படும் பாலைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? முன்பெல்லாம் பெருவாரியான வீடுகளில் கறவை மாடுகள் இருந்த நிலையில் பாலின் பயன்பாடு அதிகம் இருந்ததில்லை. ஆனால், இன்றைக்கு  கறவை மாடு வளர்ப்பவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான்  இருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது மக்கள் தொகை அதிகரித்திருக்கும் இன்றைய சூழலில் எங்கிருந்து பால் வருகிறது? என்ற கேள்வி நம்முன் ஏன் எழவில்லை? கேட்க வேண்டிய இடத்தில் நாம் கேள்விகளைக் கேட்பதில்லை.

பால் அடர்த்தியாக இருக்கவேண்டுமென்பதற்காக அம்மோனியம் சல்பேட் சேர்க்கப்படுகிறது. அதே போல் நுரைப்புத் தன்மைக்காக சோப்பு பயன்படுத்தப்படுகிறது. நீண்டநாட்கள் கெட்டுப் போகாமலிருப்பதற்காக யூரியா, பார்மலின் போன்றவை சேர்க்கப்படுகின்றன. அதனால்தான் சில குறிப்பிட்ட நிறுவனங்களின் பால் எளிதாக கெட்டுப்போவதில்லை. வழவழப்பு, பளபளப்புக்காக வெள்ளை நிற வாட்டர் பெயின்ட், டிடர்ஜென்ட் பவுடர் போன்றவை சேர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

பசுமைப்புரட்சிக்குப் பிறகு வேளாண்துறையில் கட்டவிழ்த்து விடப்பட்ட சங்கதிகள் நம்மில் பலருக்கு தெரிந்திருக்கலாம். பயிர் சாகுபடியில் பல்வேறு புதிய தொழில் நுட்பங்கள் பின்பற்றப் பட்டன. அன்று நுழைந்த ரசாயன உரங்களும், பூச்சிக் கொல்லிகளும் இன்றுவரை நம் ஒவ்வொருவரின் உயிரையும் அணுஅணுவாகக் குடித்துக்கொண்டிருக்கிறது.

அன்று விதைத்த விதை இன்றைக்கும் ஆலவிருட்சமாகிக் கொண்டிருக்கிறது. ரசாயன உரங்களும், பூச்சிக் கொல்லிகளும் மட்டுமல்ல, இவற்றை அடுத்துவந்த மரபணு மாற்றுப் பயிர்களும் நம் ஒவ்வொருவரையும் ஆள் விழுங்கி பூதம் போல விழுங்கிக் கொண்டிருக்கிறது. பசுமைப்புரட்சி பற்றி வாய் கிழிய ஆயிரம் பேசலாம். ஆனால், அதன் பின்விளைவுகளைப் பற்றி கேள்வி கேட்டால் வேற வழி..? என்று உதட்டைப் பிதுக்கி, கையை விரிக்கும் கனவான்களையே பார்க்க முடிகிறது.

காலம் கடந்த பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்? என்பார்கள். அதைப்போல இன்றைக்கு இயற்கை விவசாயம் பக்கம் திரும்புங்கள், பாரம்பரிய நெல் ரகங்களையும், சிறுதானியங்களையும் மீட்டெடுக்க ஒன்றிணையுங்கள் என்று அலறிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவகையில் இந்தச் செயலை பாராட்டினாலும், இதுவரை இழந்த இழப்புகளுக்கு யார் பதில் சொல்வது? புரையோடிப்போன புண்களுக்கு மருந்து கொடுப்பது யார்? இன்றுவரை ரசாயன விவசாய முறையில் விளைந்த விளைபொருள்களை உண்டு நோய்களில் சிக்கித் தவித்தவர்களுக்கு யார் பதில் சொல்லப்போகிறார்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை.

கொரோனா காலகட்டச் சூழலில் இயற்கை, பாரம்பரிய, சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளைப் பின்பற்றியவர்களுக்கு பெரிய பாதிப்புகள் இல்லை. பலர் எந்தவித வலிகளும் இல்லாமல் கொரோனாவிலிருந்து மீண்ட வரலாறு இருக்கிறது. ஆனாலும், அதிலும் அரசியல் புகுந்து பாரம்பரிய மருத்துவத்தை தலையெடுக்க விடாமல் மிகுந்த கவனமாக பார்த்துக்கொண்டனர். பாரம்பரிய மருத்துவமுறைகளைப் பின்பற்றுங்கள் என்று குரல் கொடுத்த பல மருத்துவர்களின் வாயைக் கட்டி வைத்த சம்பவங்களும் இந்த மண்ணில்தான் நிகழ்ந்தன. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, விழிப்படைய வேண்டும்.

கட்டுரையாளர்;  எம்.மரிய பெல்சின்

 

மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளர்.

வீடுகளைச் சுற்றி வளரக்கூடிய மிகச் சாதாரண மூலிகைகள் மற்றும் அஞ்சரை பெட்டியில் உள்ள மிளகு, சீரகம் போன்றவற்றைக் கொண்டு தலைவலி முதல் கொரோனா காய்ச்சல் வரை சரி செய்ய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்பவர்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time