ஜல்சா – உலுக்கும் மனசாட்சியின் குரல்!

- பீட்டர் துரைராஜ்

‘ஜல்சா’ என்பதற்கு ஒன்று சேர்தல் எனப் பொருள்!  படு விறுவிறுப்பான இந்த இந்திப் படம் ஓடிடி தளத்தில் ஒடுகிறது! மனித நேயமின்றி மனசாட்சியை அலட்சியப்படுத்தும் போது, குற்றவுணர்வு எப்படி கொன்று போடுகிறது என்பதும், இப்படிப்பட்டவர்களை மன்னிப்பதா? வேண்டாமா? என்பதும் உயிர்ப்போடு சொல்லப்படுகிறது!

மும்பையின் உயர் வகுப்பை சார்ந்த ஒரு ஊடகவியலாளராக வித்தியாமேனன் நடித்துள்ளார். இவர்  இரவில் ஒரு இளம் பெண் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்தி  விடுகிறார். அவரிடம் பணி புரியும் சமையலரின் பெண் தான் விபத்திற்குள்ளானவள்! தன்னிடம் உண்மையை மறைக்கும் முதலாளியம்மா  குறித்து பணிப்பெண்ணுக்கு தெரியாத சூழல்! இரு பெண்மணிகளின் மனப் போராட்டத்தை  வெளிப்படுத்துவது தான் இக்கதை. படத்தில் வில்லன் இல்லை; மிரட்டல் இல்லை; வன்முறை இல்லை. ஏறக்குறைய ஒவ்வொருவரும் அவரவர் அளவில் உண்மையாக இருக்கிறார்கள். சாதாரண கதை, சொல்லப்பட்டுள்ள விதத்தில் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது.

ஒரு தொலைகாட்சி செய்தி நிறுவனத்தில் மாயா மேனன் பத்திரிக்கையாளராக  இருக்கிறார். ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை, நேரலையில் ஓடும் நேர்காணலில்,  உலுக்கும் வகையில் தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்பதில்  கதை தொடங்குகிறது. நீதிபதியோ, பதில் சொல்ல முடியாமல் எழுந்து ஓடுகிறார்!

நெடுநேரம் பணி புரிந்துவிட்டு, பின்னிரவில் தனியாக இந்த நேர்காணல் தனக்கு ஏற்படுத்தியுள்ள சோஷியல் மீடியாவின் பாராட்டு மிதப்பில் காரோட்டி வரும்போது திடீரென்று அவரது காரின் முன்பு ஒரு பெண் குறுக்கே வரவே விபத்து ஏற்பட்டு விடுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்படியே விட்டுவிட்டு செல்கிறார். நேர்மையாக இருக்கும் ஒருவர் இதைச் செய்யலாமா?  குற்றவுணர்ச்சி இவளை அறுக்கிறது. இந்தப் பாத்திரத்தில் வித்யா பாலன் அற்புதமாக நடித்துள்ளார். குற்றவுணர்ச்சி, கையறு நிலை, அறவுணர்ச்சியால் எழும் தருமசங்கடம் போன்றவைகளை அற்புதமாக வெளிப்படுத்துகிறார்.

இவர் நிர்வாக அழுத்தத்தை எதிர்த்து,  நேர்மையான இருக்கும் ஒரு சீனியர் பத்திரிக்கையாளர். கணவனைப் பிரிந்து, தன் தாயோடும், சற்றே செயலிழந்த கால்களைக் கொண்ட பள்ளியில் படிக்கும் மகனோடும் வாழ்கிறாள்.விபத்திற்குள்ளான பெண்ணின் தாயார், மாயா மேனன் வீட்டில்தான் சமையல் வேலை செய்கிறார். செய்தியைக் கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு ஓடுகிறார். இவர் கணவன் சினிமாத் தொழிலில் ஒரு உதவியாளராக இருக்கிறார். ஒரு சாதாரண எளிய குடும்பத்தால் இந்த அதிர்ச்சியை எப்படி எதிர்கொள்ள முடியும் ? நல்ல மருத்துவமனையில் இவளைச் சேர்த்து, செலவுகளை மாயா ஏற்றுக் கொள்கிறார்.

பெற்றோருக்குத் தெரியாமல், தனது காதலனோடு வெளியே பைக்கில்  சுற்றிக் கொண்டிருக்கும் போது தான் இந்த விபத்து நடந்துள்ளது. காதலன் சில்மிஷம் செய்ய முயன்ற போது அவனிடமிருந்து விலகி ஓடிய நிலையில் தான் காதலி விபத்துக்கு ஆளாகிறாள். இந்தச் சூழலில் விபத்துக்கு ஆளான காதலியை காப்பாற்ற முயலாமல், மனிதத் தன்மையில்லாமல் ஓடிவிடுகிறான் காதலன்!

மத்திய வர்க்கத்தைச் சார்ந்த ஒரு பெண், இரவு 3 மணிக்கு எதற்காக  வெளியே சுற்ற வேண்டும்? இந்தக் கேள்வியைக் கேட்டு,  வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டு சமாதானமாகப் போகும்படி காவலர்கள், பெற்றோரை வற்புறுத்துகிறார்கள். இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று நமக்குத் தெரியாது ! அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தோடு படம் இறுதிவரை செல்கிறது. இதனை சுரேஷ் திரிவேணி இயக்கியுள்ளார். பாராட்டுக்குரிய சிறப்பான இயக்கம்.

மாயா பணிபுரியும் செய்தி நிறுவனத்தில், புதிதாக சேர்ந்திருக்கும் ஒரு பயிற்சி பத்திரிகையாளர் இந்த விபத்து குறித்து விசாரிக்கிறார்.இதில் வெற்றி பெற்றால், அவளால் தனது பதவியில் மேலதிகாரியிடம் (மாயா மேனன்தான் ) நல்ல பெயர் வாங்க முடியும்; முன்னேற முடியும் என நினைக்கிறாள்!

மாயாவிற்கு, வாதநோயால் பாதிக்கப்பட்ட, பள்ளியில் படிக்கும் மகன் பாத்திரத்தில், உண்மையாகவே மாற்றுத் திறனாளியாக உள்ள சிறுவனை நடிக்க வைத்துள்ளார் இயக்குநர். இது பாராட்டுக்குரிய ஒன்று. இது போன்ற செயல்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தன்நம்பிக்கை தரும்!

சமையல் வேலை செய்யும் பாத்திரத்தில், விசுவாசத்தின் இலக்கணமாக ஷெவாலி ஷா நடித்துள்ளார். இவரும்,  தன் மனசாட்சி உலுக்கி எடுக்கும் குற்றவுணர்வை மறைக்க படாதபாடுபடும் வித்யா பாலனும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். யாருடைய நடிப்பு விஞ்சியது என்பது என்று சொல்ல முடியாது. சுபமாக கதை முடிகிறது.

ஆனால், இதில் மாந்தர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள்தான் ஆதாரமான கேள்விகளாக அமைகின்றன:

# இரவு 3 மணிக்கு வெளியில் வந்தாள்  என்பதற்காக, ஒருத்தி மீது நிகழும் வன்முறையை  விட்டுவிடலாமா !

# விபத்து நடந்து விட்டது. மருத்துவமனையில் சிகிச்சை நடைபெறுகிறது. சமாதானமாகி, ஒரு தொகையைப் பெற்றால்தான் என்ன ?  ஒருவரை ஆறுமாதம் சிறைக்கு அனுப்புவதால் என்ன ஆகப்போகிறது !

# மற்றவர்கள் செய்யும் தவறுகளை விமர்சிக்கும்  ஒருவர், தனது தனிப்பட்ட வாழ்வில் நேர்மையாக இருக்க வேண்டுமா, இல்லையா?

# தன்னை மீறி ஏற்பட்ட விபத்திற்கு ஒருவனை குற்றவாளியாக்கலாமா?

# சட்டத்தில் இருந்து ஒருவர் தப்பிவிடலாம். ஆனால் மனசாட்சி சும்மா இருக்குமா ?

இது போன்ற பல கேள்விகள் இப்படத்தில் எழுகின்றன. பிரைம் தளத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஜல்சா குறித்து  ‘இது ஒரு நல்ல படம். மத்தியதர வர்க்கத்திற்கு உகந்த படம்’ என்று மருத்துவர் அமலோற்பநாதன் என பதிவிட்டுள்ளார். அவர் கூறியது உண்மைதான்.

ஒரு விபத்து. அதை உணர்வுப்பூர்வமான ஒரு கதையாக மாற்றியுள்ளார் இயக்குநர். இயல்பாக நடக்கும் சம்பவங்களை விறு விறுப்பாக மாற்றியுள்ளார். படத்தின் முடிவை திட்டவட்டமாகச் சொல்லாமல், பார்வையாளர்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறார் இயக்குனர்.

விமர்சனம்; பீட்டர் துரைராஜ்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time