நாட்டில் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்டு அதை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பு பத்திரிகை துறைக்கு உள்ளது! ஆனால், சமீபகாலமாக அந்த தவறுகளில் தானும் சம்பந்தப்பட்டு ஆதாயம் அடைகிறது ஊடகத் துறை! அது தான் தற்போதைய நூலகத்திற்கான பத்திரிகைத் தேர்வில் வெளியாகியுள்ளது.
ஒரு நாடு சிறந்ததாக உள்ளதா என்பதன் அடையாளங்களில் ஒன்று, அந்த நாட்டில் நூலகங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதாகும். அந்த வகையில் தமிழகத்தில் நூலகங்கள் பெரும் வீழ்ச்சியை கண்டு வருவது தொடர்பாக கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறேன். ஆயினும், அது நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே தான் உள்ளது.
சமீபத்தில் நூலகத் துறையில் தேவையின்றி வாங்கி குவிக்கப்படும் பத்திரிகைகள் தொடர்பாக நமது அறம் இதழில் கவனப்படுத்தி இருந்தோம். மக்கள் சீண்டவும் மறுக்கும் பல பத்திரிகைகளை கமிஷன் கிடைக்கிறது அல்லது ஆளும் தரப்பிற்கு வேண்டப்பட்டவர்கள் என்பதற்காக வாங்கி அனுப்புகின்றனர். அவற்றின் போஸ்டல் உறை கூட கிழிக்கப்படாமல் உள்ளன! இந்த வகையில் மக்கள் வரிப் பணம் வீணாகிறது என விரிவாக எழுதி இருந்தோம்.
சீரழிவின் உச்சம் தொட்டுள்ள தமிழ் நாடு நூலகத்துறை சீர் பெறுமா?
அதன் எதிரொலியாக இதழ்களை தேர்ந்தெடுக்கும் ஒரு கமிட்டி போட்டனர். அந்த கமிட்டியால் தேர்ந்தெடுக்கப் பட்டவைகளை பரிசீலித்தால், மீண்டும் அதே தவறுகள் வெவ்வேறு வகைகளில் தொடர்வது தான் வேதனையானது. ஒரு சின்ன ஆறுதல் என்னவென்றால், முன்பு வந்து கொண்டிருந்த சாதி சார்ந்த பத்திரிகைகள் தொடங்கி பல மோசமான நூற்றுக்கு மேற்பட்ட இதழ்கள் தடுக்கப்பட்டுள்ளமையாகும்!
பல நல்ல பத்திரிகைகளுக்கு, நல்ல சிற்றிதழ்களுக்கு குறிப்பாக நல்ல தரமான இலக்கிய இதழ்கள், சமூக நோக்குள்ள இதழ்களுக்கு ஆர்டர்கள் கொடுத்துள்ளார்கள் என்ற வகையில் பாராட்டலாம்! பெண்கள், குழந்தைகள், அறிவியல்,தொழில் நுட்பம்,சமயம் தொடர்பானவற்றை பெரிய அளவு குறை சொல்ல முடியாது. அதே சமயம் பொருளாதாரம் எனும் தலைப்பின் கீழ் விவசாய இதழ்களையும், நம்மகுலசாமி என்ற இதழையும் கொண்டு வந்துள்ளது பொருத்தமற்றது. விவசாயம், கிராமத் தொழில்கள் என தனியாக வகைப்படுத்தி இருக்க வேண்டும். அதே போல தொழில் வணிக இதழ்கள் என தனித் தலைப்பின் கீழ் பத்திரிகைகளை வகைப்படுத்தி இருக்க வேண்டும்.
பொது தலைப்பின் கீழ் தேர்வான இதழ்களில் தான் படு குழப்பங்கள்! அதற்குள் ஜீனியர் விகடனும் வருகிறது, மோட்டார் விகடனும் வருகிறது. உயிர் சூழல் என்ற பறவைகள், விலங்குகள் சுற்றுச் சூழல் சார்பானவையும் வருகிறது, மார்க்சிஸ்ட், பெரியார் முழக்கம், சிந்தனையாளன் போன்றவை எல்லாம் கூட வருகிறது. இது தான் இருப்பதிலேயே படு அபத்தம். ஒரு பத்திரிகையின் பேசு பொருள் என்ன என்ற அடிப்படை புரிதல் கூட இல்லை. தலைப்பு வாரியாக எப்படி வகைப்படுத்தலாம் என்று கூட தெரியாமலா இருப்பார்கள்?
பொதுவாக மக்கள் நூலகத்திற்கு எந்த அரசியல் கட்சி பேப்பர்களையும், இதழ்களையும் வாங்கக் கூடாது என முடிவு எடுக்க வேண்டும். திராவிட மற்றும் இடதுசாரி இதழ்கள் கணிசமான அளவில் தூக்கலாக இடம் பெற்றுள்ளதை தவிர்த்திருக்கலாம்! ஏனெனில், இதை சாக்கிட்டு, நாளை பாஜக, ஆர்.எஸ்.எஸ் பத்திரிகைகளும் நூலகத்திற்குள் நுழையும் ஆபத்துள்ளதே! அதே சமயம், காந்தி என்ற குழந்தைகள் இதழைத் தவிர காந்தியப் பத்திரிகைகள் எதுவும் இடம் பெறவில்லை.
இந்த இதழ்கள் தேர்வில் படுகுப்பையான பெயர் தெரியாத பல பத்திரிகைகள் ஆர்டர்களை பெற்றுள்ளதும், அதில் நின்று இரண்டாண்டுகள் கடந்த பல பத்திரிகைகளுக்கு ஆர்டர்கள் கொடுத்துள்ளதும், இதில் ஊழல்களும், வேண்டப்பட்டவர்களுக்கு அத்துமீறி சலுகை செய்யப்பட்டிருப்பதும் தெளிவாகிறது.
முதலாவதாக இந்தக் குழுவில் உள்ள ஒரு சிலர் எந்த ஒரு மெனக்கிடலையும் செய்யாமல் ஏற்கனவே அதிகாரிகள், அரசியல்வாதிகள் தீர்மானித்திருந்த சிபாரிசுகளை ஏற்றுக் கொண்டதோடு, தங்கள் பங்கிற்கு சில தகுதியற்ற பத்திரிகைகளுக்கு ஆர்டர் கிடைக்க துணை போயுள்ளனர். பல நல்ல பத்திரிகைகளை புரட்டிக் கூட பார்க்காமல் நிராகரித்துள்ளனர் என்றால், நம்மை யார் கேட்டுவிட முடியும் என்ற இறுமாப்பின்றி வேறில்லை!
அது மட்டுமில்லை, சும்மா சாணிப் பேப்பரில் இரண்டு, மூன்று பாரத்திற்கு கடனே என எதையாவது நிரப்பி ஒருகலர் அட்டை போட்டுவிட்டு 20 அல்லது 25 ரூபாய் விலை வைக்க வேண்டிய இதழுக்கு 40 முதல் 50 வரை போட்டு நூலகத் துறைக்கு மாத்திரமே அச்சிடக் கூடிய சில பத்திரிகைகளுக்கு எந்த கேள்வியுமில்லாமல் எப்படி ஆர்டர் தரப்பட்டது? பழைய அதே கேடி ஆசாமிகளே மீண்டும் நூலக ஆர்டர்களை வேறு பத்திரிகை மற்றும் வேறு நபர்கள் பெயரில் பெற்றுக் கொள்ள முடிந்தது எப்படி? ஊடக உரிமையாளர்கள் பெயரிலான இரண்டு டுபாக்கூர் சங்க நிர்வாகிகளும், அவர்கள் சம்பந்தப்பட்ட இதழ்களும் மீண்டும் ஆர்டர்கள் வாங்கிவிட்டனர். அவை சரியான பத்திரிகைகள் என்றால் கூட ஏற்கலாம்! இவர்கள் தான் நூலகத்துறையில் தலைமை தொடங்கி மாவட்ட வாரியாக உள்ள டி.எல்.ஒக்கள் வரை ‘பல்க் பேமெண்ட்’ என்று சொல்லி கையில் திணித்து, கையூட்டு கொடுத்து கறைபடுத்தியவர்கள்! இது சங்கங்களின் பெயரிலான ஒரு கார்ப்படேட் அணுகுமுறை!
விகடன் குழுமத்தில் இருந்து வரும் ஆனந்த விகடன், ஜீனியர் விகடன்,சக்தி விகடன், நாணய விகடன், அவள் விகடன், பசுமை விகடன், விகடன் இயர்புக் போன்ற இதழ்களுக்கு ஆர்டர்கள் போட்டது போதாது என்று அந்த குழுமத்தில் இரண்டாண்டுகள் முன்பாக நிறுத்தப்பட்டுவிட்ட சுட்டி விகடன், டாக்டர் விகடன் போன்ற இதழ்களுக்கு ஆர்டர் தரப்பட்டு உள்ளது. ஒரு இதழுக்கு ஆர்டர் தருவதற்கான அடிப்படை விதிகளில் ஒன்று அது தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதன் அடையாளமாக கடைசி மூன்று மாதங்கள் வெளி வந்த இதழ்களை விண்ணப்பிக்கும் போதே சமர்பிக்க வேண்டும். அப்படி இருக்க, எப்படி இந்த இதழ்கள் தேர்வுக்கு உள்ளாயின?
இவை தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பதை போல அந்த நிர்வாகம் டம்மி காப்பி தயார் செய்து தந்திருக்க வேண்டும். இப்படியாக எல்லோருக்கும் தெரிய நின்று போன பத்திரிகையை இப்படி டம்மி கொடுத்து பித்தலாட்டம் செய்து வாங்குவது ஒரு பாரம்பரிய பத்திரிகை நிறுவனத்திற்கு அழகா? அப்படி அவர்கள் செய்து தந்தாலும், ”இது தவறு, அடுத்த ஆண்டு விண்ணப்பம் செய்யுங்கள்” என சொல்லி இருக்க வேண்டாமா? அதுவும், தவிர ஒரே நிறுவனத்தில் இருந்து வெளி வரும் பத்து பத்திரிகைகளுக்கு ஆர்டர் தருவது நியாயம் அல்லவே! பலருக்கும் பகிர்ந்து தருவது தானே முறை! ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே இதன் மூலம் பல கோடி ரூபாய் பெறுமான ஆர்டர்களை அள்ளிச் செல்வது எப்படி சரியாகும்?
இது போல காப்பரேட்மயமான சில பெரு நிறுவனங்களின் நூலக ஆதிக்கம் பட்டவர்த்தனமாகவே தெரிகிறது! மேலும் ஆர்.என்.ஐ ( இந்திய பத்திரிகை பதிவாளர் சான்றிதழ்) நம்பர் கூட வாங்கியிராத சில நபர்கள் ஆர்டர்கள் எப்படிப் பெற முடிந்தது? அரசாங்க அனுமதி இல்லாத பத்திரிகைகளுக்கு இப்படி எல்லாம் ஆர்டர் தருவதற்கும், அதை நிர்பந்தித்து பெறுவதற்கும் இவர்களுக்கெல்லாம் கூச்ச நாச்சமே இல்லையா? இது சட்ட விரோதம்!
குழந்தைகளுக்கான 11 இதழ்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், நின்று போன சுட்டி விகடனுக்கும், கல்கி குழுமத்தின் கோகுலத்திற்கும் ஆர்டர் தந்தேயாக வேண்டிய கட்டாயம் தான் என்ன? மருத்துவம் உடல் நலன் தொடர்பாக ஏழு இதழ்கள் தேர்வாகியுள்ள நிலையில் நின்று போன டாக்டர் விகடனுக்கு ஆர்டர் போடுவானேன்? அறிவியல் தொழில் நுட்பம் தொழில் சார்ந்த ஏராளமான பத்திரிகைகள் தேர்வாகியுள்ள நிலையில் 75 ரூபாய்க்கான மோட்டார் விகடன் எதற்கு ? இந்த வாய்ப்புகளை தொடர்ந்து சிறப்பாக வெளிவரக் கூடிய வேறு சிறு இதழ்களுக்கு தந்திருக்கலாமே?
Also read
ஒரே ஒரு பத்திரிகையை முழு சிரத்தையோடு கொண்டு வந்து கொண்டிருக்க கூடிய பல சிறு நிறுவனங்கள் – அதுவும் பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டு வருபவை – முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளன! நின்று போன பத்திரிகைகளுக்கு ஆர்டர் வாங்கித் தான் பிழைப்பு நடத்த வேண்டிய நிலையில் விகடனோ மற்ற பிரபல நிறுவனங்களோ இல்லை! ஆனால், பல சிறு நிறுவனங்களுக்கு நூலக ஆர்டர் ஒரு மிகப் பெரிய சப்போர்ட்டாகும்! ஆனால், பெரிய ஆங்கில பத்திரிகை நிறுவனங்கள் அதிக வாய்ப்பை பெற்றுள்ளன! 90க்கு மேற்பட்ட ஆங்கில இதழ்கள் ஆர்டர் வாங்கியுள்ளன! கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு இதுவும் ஒரு சான்றாகும்!
விகடன் குழுமத்திற்கு மட்டும் இந்த பேவரிடிஷம் நடக்கவில்லை. சுமார் ஒரு டஜன் பத்திரிகைகள் எப்பவோ நின்று போன நிலையில் ஆர்டர் வாங்கியுள்ளன! ஆக, தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக மக்கள் வரிப்பணத்தை அள்ளிக் கொடுத்து விடுவதா? அறிவுத் துறையில் இருப்பவர்களே இவ்வளவு மோசமாக நடந்து கொண்டால், இந்த நாட்டிற்கு விடிவு ஏது? பத்திரிகையாளர்களாக இருப்பவர்கள் சிறிய சந்தர்ப்பம் வாய்த்தால் கூட, ஊழல் அரசியல்வாதி களையும், ஊழல் அதிகாரிகளையும் மிஞ்சிவிடுவார்கள் என்றால், சொல்வதற்கே வார்த்தையில்லை. வருத்தமே மிஞ்சுகிறது.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
மாற்றுத்திறனாளிகளின் நலன் சார்ந்த உள்ளடக்கம் கொண்ட பத்திரிகைகளோ அல்லது மாற்றுத்திறனாளிகளின் நலன் சார்ந்த உள்ளடக்கமே அவர்களுடைய தேர்வில் இல்லை. தேர்வுக்குழுவில் உள்ள எவரும் மாற்றுத்திறனாளிகள் இல்லை என்ற காரணத்தினாலோ என்னவோ மாற்றுத்திறனாளிகள் பற்றிய அக்கறையும், ஞாபகமும் இல்லாமல் போய் இருக்கலாம். சட்டம் சம்பந்தமான உள்ளடக்கம் கொண்ட பத்திரிகைகளும் இடம்பெறவில்லை.
உண்மையின் குரல்
கமிஷனுக்காக தான் பத்திரிக்கைகள் நூலகங்களுக்கு வாங்கப்படுகிறது என்பது முற்றிலும் உண்மை.
அதைவிட மிகக் கேவலமான ஒரு செயல் மாவட்ட நூலக ஆணை குழுக்களில் நடந்துகொண்டிருக்கிறது.
பதிப்பே இல்லாத பத்திரிக்கைகள் தலைப்பை மட்டும் வைத்துக்கொண்டு கமிஷன் கொடுத்து ஆர்டர் வாங்கி கமிஷன் கொடுத்து பத்திரிக்கைகள் விநியோகம் செய்யப்பட்டதாக பட்டியல் தொகையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
மேலும் என்னென்ன பத்திரிகைகள் வாங்க வேண்டும் என்பது குறித்து அரசாங்கம் குழு அமைத்த நிலையில் அரசாங்கம்தான் பத்திரிகையில் குறித்த தீர்மானம் செய்ய வேண்டுமே தவிர பொது நூலக இயக்குநருக்கு அதிகாரம் இல்லை.
தங்களின் கருத்து முற்றிலும் உண்மை.
தங்களின் கருத்தை தேனி மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கண்காணிப்பாளர் என்ற முறையில் நான் வழிமொழிகிறேன்.
நானும் நாற்பது வருடங்களாக இதழ் நடத்துகிறேன், நானும் ஜாப் கைடுலைன்ஸ், பங்கு மார்க்கெட் என்ற பயனுள்ள இதழ்களை நடத்தினேன், விகடனுக்கும் கல்கிக்கும் கெட்டது மன்னிக்கவும் கேட்டதுபோல் என்னிடமும் மாதிரு இதழ்கள் கேட்டிருந்தால் நானும் கொடுத்திருப்பேன், சரியான முறையான தேர்வு அல்ல இது
மிக அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்! நானும் கடந்த 17வருடங்களாக
தொழில் நேசன் இதழை பல்வேறு இன்னல்களுக்கு இடையே தொடர்ந்து நடத்தி வருகின்றேன். புதிய தொழில் முனைவோர் வளர்ச்சிக்கு முன்னுரிமை தந்து, வங்கிகள் கொடுக்கும் கடன் திட்டங்கள், அரசு வழங்கும் மானியம் மற்றும் தன்னம்பிக்கை சார்ந்த கட்டுரைகள் என சிறப்பாக கொடுத்தாலும்… நூலக ஆணை நிராகரிக்கப்பட்டது.
இதனால் என்னைப் போன்று ஒரு பத்திரிகை
நடத்தும் பத்திரிகையாளர் வாழ்க்கை அதோகதிதான. பத்திரிகையாளர்களை
வாழ வைக்கும் அரசு என்ற எண்ணத்தில்
விரிசல் விழுந்துவிட்டது. இதை உடனே சரி செய்ய வேண்டும்.
ஆமாம்… அறிவாளிகள் நடத்தும் துக்ளக் மற்றும் சுகந்த மணம் கமழும் தினமலம் ஆகியவற்றை அல்லவா வாங்கி இருக்க வேண்டும்.
திரு.சாவித்ரி கண்ணன் அவர்கள் மீது எனக்கு அளப்பரிய மதிப்பு உண்டு. நான் இவரைப் போலவே மதிக்கும் மேலும் பல பத்திரிகையாளர்கள் அந்தக் குழுவில் அடங்கியிருப்பதால், அதிர்ச்சியோடு இந்தக் கட்டுரையைப் படித்த வேகத்தில் இதுபற்றி மேலும் அறிந்துகொள்ளும் வகையில் அரசின் அறிவிப்புகளையும், பத்திரிகைகளின் பட்டியலையும் பார்த்தேன். அதன் பிறகு, இது பொறுப்பற்ற ஒரு கட்டுரை என்ற முடிவுக்கு வந்தேன். இந்த மாதிரி ஒரு குழு அமைக்கப்பட்டு, அவர்கள் ஒரு தேர்வு முறையை உருவாக்கி, வெளிப்படையாக எல்லா அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு, தேர்வுப் பட்டியல் பொதுவெளியில் வெளியிடப்பட்டது இதுவரை கிடையாது. குழுவில் உள்ளவர்கள் யாவரும் இதுவரை குற்றச்சாட்டுகள் எதற்கும் ஆளாகாதவர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகைகளின் பட்டியலைப் பார்க்கும்போது தகுதியான பத்திரிகைகளே தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கரோனா காலத்தில் நிறைய இதழ்கள் நின்றன. அப்படி நின்ற இதழ்களுக்கும் வாய்ப்பு கொடுக்கலாம் என்று அரசு முடிவெடுத்திருந்தால், அதைப் பாராட்டத்தான் வேண்டும். டாக்டர் விகடனோ, சுட்டி விகடனோ நல்ல இதழ்கள் என்பதோடு, அந்தத் துறையில் முன்னணி இதழ்களாகவும் திகழ்ந்தவை. அரசின் அறிவிப்பில், பரிசீலனைக்கு ஒரு இதழின் மூன்று படிகளைக் கேட்டிருக்கிறார்களே தவிர, கடைசி மூன்று இதழ்கள் என்று இல்லை. அதேபோல, கோகுலம் இதழே தேர்ந்தெடுக்கப்பட்ட இதழ்களின் பட்டியலில் இல்லை. சாவித்ரி கண்ணனின் அறம் எங்கே சறுக்கியது? ஏன் இவ்வளவு அவசரக் கோலத்தில் அரைகுறை புரிதலோடு ஒரு கட்டுரை? அறம் வாசகராக எனக்கு மனவருத்தம் தருகிறது. திரு. சாவித்ரி கண்ணன் அவர்கள் நடுநிலை தவறி இந்தக் கட்டுரையை எழுதியிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. அரசின் எல்லா நடவடிக்கைகளையுமே எதிர்த்து எழுதுவதே அறம் என்று நம்ப வேண்டியது இல்லை. நல்ல முயற்சிகளைப் பாராட்டலாம் அல்லது தூற்றாமலேனும் இருக்கலாம்.
– என்.கிறிஸ்டோபர் டேனியல்
கிழக்கு தாம்பரம்.