பொய்களால் வெறுப்பை கட்டமைக்கும் காஷ்மீர் பைல்ஸ்!

-இரா.முருகவேள்

உண்மைகளை ஊனப்படுத்தி, பொய்களைக் கொண்டு ஊர்வலம் நடத்துகிறது காஷ்மீர் பைல்ஸ்! இந்தப் படத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற புரிதல் நமக்கு வேண்டும்.காஷ்மீர் தொடர்பான உண்மைகளை நாம் வெளிப்படுத்த வேண்டும். காஷ்மீர் பண்டிட்களை தொடர்ந்து அகதிகளாக வைத்து பாஜக அரசியல் செய்வதை அம்பலப்படுத்த வேண்டும்.

‘பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிந்தனைக் களம்’, என்ற கோவையைச் சார்ந்த அமைப்பு,  ‘காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படம்  குறித்த கருத்தரங்கை நடத்தியது. இதில் இலக்கியவாதியும், அரபு   நாடுகளின் அரசியலை கூர்ந்து பார்ப்பவருமான இரா. முருகவேள்,  உரையாடினார். இசுலாமியர்களுக்கும், பெருந்தன்மையான பொதுச் சிந்தனை கொண்டவர்களுக்கும் எதிரான வெறுப்பை இது திட்டமிட்டு பரப்புகிறது. பொய்யை கூச்சமின்றி பரப்புகிறது;  கலைரீதியாகவும் இந்தப் படம் சிறப்பானதாக இல்லை என்றார்.

29.3.22 அன்று இணையம் வழியாக நடந்த இக்கருத்தரங்கில் இரா.முருகவேள் கூறியதாவது ” இப்படத்தில் கதாநாயகனான கிருஷ்ணா பண்டிட்  புது தில்லி,  ஏஎன்யு  பல்கலைக்கழகத்தில், படிக்கிறான். அதாவது ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் – ஜேஎன்யு  என நாம் புரிந்து கொள்ள வேண்டும். அங்கு  பேராசிரியராக ராதிகா மேனன் இருக்கிறார். (அதாவது வலதுசாரிகள் சித்தரிக்கும் நகர்புற நக்சல் பாத்திரம்). இவரிடம் வரலாற்றாசியரான ரொமீலா தாப்பரின் சாயலும்,  நாவலாசிரியரான அருந்ததிராயின் சாயலும் தென்படுகிறது. இந்தப் பாத்திரத்தில் பல்லவி ஜோஷி நடித்துள்ளார். அந்தப் பேராசிரியர் இந்தியாவிற்கு எதிராகப் பேசுகிறார். இதன் மூலம் தில்லியின் புகழ்பெற்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை இப்படம் தவறாகச் சித்தரிக்கிறது.  அருந்ததிராய், ரொமீலா தாப்பர் போன்ற ஜனநாயகவாதிகளையும்  இப்படம் எதிரிகளாக காட்டுகிறது.

எழுத்தாளர் முருகவேள்

தில்லியில் படிக்கும் மாணவன், ஜம்முவிலிருந்து இடம் பெயர்ந்த காஷ்மீரி பண்டிட்டான அனுபம் கேரின் பேரன். அவனது  பெற்றோர்கள் காஷ்மீரிகளால் கொல்லப்பட்டனர். அவர்களைப் போல 5000 காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டனர், 5 இலட்சம் பேர் விரட்டப்பட்டனர் என்று அனுபம் கேர் படத்தில் தன் பேரனுக்கு  கூறுகிறான். ஆனால் உண்மையில்,  இந்திய அரசாங்கத்தின் புள்ளி விபரம்  299 காஷ்மீரி பண்டிட்டுகள்  கொல்லப்பட்டனர் என்று கூறுகிறது. காஷ்மீர் பண்டிட்டுகளின் சங்கமானது 400 பேர் கொல்லப்பட்டனர் என்கிறது. எப்படி இருந்தாலும் அதிகபட்சமாக,  600 காஷ்மீர் பண்டிட்டுகள் தீவிரவாதம் மிக உச்சமாக இருந்த 1990 காலத்தில் இறந்திருக்கலாம். இதில் காணாமல் போனவர்களும் உண்டு; அரசப் படைகளால் இறந்தவர்கள் உண்டு; அரசுக்கும், போராளிகளுக்கும் இடையில் நடந்த சண்டையில் மாட்டிக் கொண்டு இறந்தவர்களும் உண்டு. ஆனால், உண்மையான கணக்கை விட பத்து மடங்கு அதிகமான கணக்கை இந்தப் படம் சொல்லுகிறது.

ஒரு கலைப் படைப்பு, இது போல தவறான தகவலை எந்தச் சூழலிலும் சொல்லாது. காஷ்மீரி பண்டிட்டுகளை விட  அதிக எண்ணிக்கையில், இஸ்லாமியர்களும்  இதே காரணங்களால் அங்கு  இறந்துள்ளனர். அதை இப்படம் சொல்லவில்லை.

ஆப்கானிஸ்தானில் இருக்கும்  அல் கொய்தா படையில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உண்டு; இந்தோனேசியாவைச் சேர்த்தவர்கள் உண்டு; ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் உண்டு. இது ஒரு சர்வதேச அமைப்பு. ஆனால் காஷ்மீரில் உள்ளவர்கள் தங்கள் உரிமைக்காக, அங்கு போராடுகிறார்கள். இவர்களை இந்தியா முழுவதும் உள்ளவர்களுக்கு எதிரானவர்களாக படம்  சித்தரிக்கிறது. வாய்ப்பு கிடைத்தால், உங்கள் பக்கத்து வீட்டு முஸ்லிம் உங்களைக் கொன்று விடுவார் என்ற வெறுப்பு அரசியலைப் பரப்புகிறது.

காஷ்மீரிலிருந்து இடம் பெயர்ந்த பண்டிட்டுகளுக்கு உண்மையிலேயே பிரச்சினை உண்டு. இதில் பலர் ஜம்மு பகுதியில் தகர கொட்டகையில், சிறிய இடங்களில் இன்னமும் வாழ்கின்றனர். சில சமயங்களில் 40 டிகிரி வரை கூட, அங்கு வெப்ப நிலை நிலவுகிறது. இது குறித்து இந்தப் படம் பேசவில்லை.

காஷ்மீர் பண்டிட்களின் அகதி முகாம்

1990 களில் அரச படைகளுக்கும், போராளி குழுக்களுக்கும் நடந்த சண்டையில், காஷ்மீர் பண்டிட்டுகளை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று,  ஜக்மோகன் என்ற ஆர்எஸ்எஸ்.காரர் ஆளுநராக இருந்த காலத்தில் ஒரு சதி (Conspiracy theory )  நடைபெற்றதாக கூறுவார்கள். (காஷ்மீர் பண்டிட்களின் வெளியேற்றத்திற்கு அன்றைய ஆளுநரான ஜக்மோகனின் தவறான நிர்வாக நடவடிக்கைகளே காரணம் என பல்வேறு பத்திரிகைகள் விலாவாரியாக எழுதியுள்ளன) இதுபோன்ற  காஷ்மீர் குறித்த பலவகையான செய்திகள் எதனையும் இந்தப் படம் கூறவில்லை. ஒரு நல்ல படைப்பானது, ஒரு பிரச்சினையோடு  தொடர்புடைய அனைத்தையும்  காட்டவேண்டும். ஆனால், இது போன்ற முயற்சிகள் எதையும் அதன் இயக்குநரான விவேக் அக்னிஹோத்ரி செய்யவில்லை.

இயக்குனர் விஜய் அக்னி ஹோத்திரி

காஷ்மீர் பண்டிட்டுகள் காஷ்மீரில் இருந்து  வெளியேறிய  பிறகு பாஜக வைச் சார்ந்த வாஜ்பாய் பிரதமராக இருந்தார்; இப்போது 2014 முதல் நரேந்திர மோடி பிரதமராக இருக்கிறார். அதாவது கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் பாஜகவின் ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்தக் காலத்தில் காஷ்மீர பண்டிதர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை உண்டாக்கி இருக்கலாம்.  இதனை இந்தப் படம் சொல்லவில்லை. ஆனால் ‘நேரு பலவீன பிரதமராக இருந்தார்’; ‘காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு உரிமை வழங்கும், அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 370  தேவையற்றது’  என்று இது கூறுகிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு அறிவுரை அல்லது  பிரசங்கம் இப்படத்தில் நடைபெறுகிறது.

பிழைகள் நிறைந்த இந்தப் படத்தைத்தான் சிறந்த படம் என்று பிரதமர் மோடி பாராட்டுகிறார். பாஜக ஆளும் மாநில அரசுகள் வரிவிலக்கு கொடுத்து மக்களைப் பார்க்க வைக்கின்றன. ஏனெனில், இசுலாமிய வெறுப்பு அரசியலை ஊக்குவிக்கும் இந்தப் படம் ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு உகந்ததாக இருக்கிறது.

இதனை எதிர்த்து இப்போது அறிவுஜீவிகள் மட்டுமே விமர்சனம் செய்துவருகின்றனர். மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், வெகு மக்கள் அனைவரும் இது பேசும் வெறுப்பு அரசியலை அம்பலப்படுத்த வேண்டும். முகநூல், டிவிட்டர் போன்ற தளங்களில் வலதுசாரிகள் வெறுப்பு அரசியலையும், பொய்யையும் பரப்பி வருகின்றனர். இங்கெல்லாம், மக்களிடம் இருந்தே எதிர்வினை வர ஆரம்பித்து விட்டது. அதனால் இப்போது வாட்ஸ் அப் மூலமாக  பொய்யை பரப்புகிறார்கள்.

வலதுசாரிகளிடம் நிதி கொட்டிக் கிடக்கிறது; ஊடகங்கள் அவர்கள் வசம் இருக்கிறது. அதிகாரம் அவர்களிடம் இருக்கிறது என்று  பலவீனங்களைச் சொல்லுவதால் பலனில்லை. சமூக வளைத்தளங்கள் மூலம் உண்மையைப் பரப்ப வேண்டும்.

இந்தப் படத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற புரிதல் நமக்கு இருக்க வேண்டும். ‘அவர்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறதே’ என்ற ரீதியில் சொல்லுவதே தவறு.  பொய்யைத் தெரிந்தே பரப்புகிறார்கள் என்ற தெளிவு நமக்கு வேண்டும்.

இப்போது சிறைகளில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்தாலே உண்மையிலே படுகொலைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் ஆளானவர்கள் முஸ்லிம்கள் என்கிற புரிதல் நமக்கு கிடைக்கும். சுதந்திர இந்தியாவில் 2002 ல் நடந்த குஜராத் கலவரத்தில் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். அதே போல  உத்திரபிரதேசத்தின் மீரட், பீகார் மாநிலத்தில்  பகல்பூர் போன்ற இடங்களில் நடந்த கலவரங்களில் கொல்லப்பட்ட, வீடிழந்த முஸ்லிம்கள் எத்தனை பேர் ! அதிக சேதாரத்தை அடைந்தது யார் என்ற விவரங்களைச் சொல்லுவதன் மூலம்தான் இவர்களின்  பொய்களை, பாசங்கை  அம்பலப்படுத்த முடியும் ” என்றார் இரா.முருகவேள்.

காஷ்மீரில் உரிமைகளை இழந்து கதறும் இஸ்லாமிய பெண்கள்

” கோவையில் ஒரு தியேட்டரையே முழுதாக முன்பதிவு செய்து, இலவசமாக இளைஞர்களை இப்படத்திற்கு திரட்டி வருகிறார்கள் ” என்றார் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய பெரோஸ் பாபு. பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிந்தனைக் களத்தின் அமைப்பாளர் ப.வில்வம்  கூட்டத்திற்கான தேவை குறித்துப் பேசினார்.

“இந்துக்கள் பாதிக்கப்பட்டவர்கள் (victims)  என்ற எண்ணத்தை இது விதைக்கிறது. அவர்களுடைய எதிரிகளாக முஸ்லிம்களை இப்படம் காட்சிபடுத்துகிறது. இதில் உள்ள ஒருசில காட்சிகளை என்னால் உங்களிடம் சொல்லக் கூட இயலவில்லை. அவ்வளவு குரூரமாக இப்படம் உள்ளது. ஆனால் அவர்கள் குறி வைத்திருக்கும் பார்வையாளர்களை இப்படம் சென்றடைந்து உள்ளது. இது பேசும் அரசியல் ஆபத்தானது.  இதன் மீதான விமர்சனங்களை கூர்மையாக நாம் எழுப்ப வேண்டும். இது வசூலிலும் வெற்றி அடைந்துள்ளது. ஆனால், இது ஒரு கலாப்பூர்வமான படைப்பும் இல்லை. எந்த பிம்பத்தையும் இப்படம் நேர்மையாக சித்தரிக்கவில்லை” என்றார் இரா.முருகவேள்.

இவர் எழுதிய  ‘முகிலினி’ நாவல், விடுதலைக்குப் பிறகான அறுபது ஆண்டு கால கோவை வரலாற்றை சித்தரிக்கும் ஒரு நல்ல படைப்பு.

இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பை, பாஜக அரசு அளித்துள்ளது. இந்தப் படம் வெளியான பிறகு, 2002 ம் ஆண்டு, குஜராத் படுகொலையில் தொலைந்து போன தன் மகனைத் தேடும் பார்சி பெற்றோர்களைப் பற்றிய படமான, நஸ்ருதீன் ஷா நடித்த   பர்சானியா (Parzania – 2007) என்ற இந்திப் படம் யூ டியூபில் பரவலாகப்  பார்க்கப்பட்டு  வருகிறது.

தொகுத்து எழுதியவர்; பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time