எத்தனையோ பரபரப்பு செய்திகளுக்கு இடையே கடந்த 28ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்த வழக்கு ஒன்று சமூக ஆர்வர்களிடையே அதிர்வை ஏற்படுத்தியது. முன்னணி செய்தி ஊடகங்கள் அனைத்தும் அந்த செய்தியை கட்டம் கட்டி வெளியிட்டன. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி முதலமைச்சர் தலைமையில் ஆண்டுக்கு இரு முறை கூட்டப்பட வேண்டிய கூட்டம் 2013 முதல் தமிழ்நாட்டில் இதுவரை கூட்டப்படவில்லை என்று அரசே பகிரங்கமாக உயர்நீதி மன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது என்பதே அந்த வழக்கில் வெளிப்பட்ட செய்தி.
இந்த கூட்டம் நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவையைச் சேர்ந்த திரு.பன்னீர்செல்வம் என்பவர் தன் வழக்கறிஞர் திரு.எஸ்.குமாரதேவன் மூலம் தொடுத்த வழக்கில் தான் தமிழக அரசே இதை தெரிவித்துள்ளது’’ இனி முறையாக இந்த கூட்டம் ’’ என்ற அரசின் உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட நீதி மன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது. வழக்கு முடிந்துவிட்டாலும் அது தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான அரசின் அலட்சிய போக்கை வெளிக் கொண்டுவந்துள்ளது.
# 2013ல் தர்மபுரி இளவரசன் மரணம் மற்றும் அதன் பின்னான சாதிய வன்முறை,
# 2015ல் கோகுல்ராஜ் படுகொலை, கோல்குல்ராஜ் படுகொலை வழக்கை விசாரித்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா செப்டம்பர் 2015ல் தற்கொலை
# 2016ல் உடுமலை சங்கர் படுகொலை.
இவையனைத்தும் பொது வெளியில் அதிகம் பேசப்பட்ட தாழ்த்தப்பட்ட (தலித்) மக்கள் மீதான சாதிய படுகொலைகள். இவை தவிர இன்னும் நூற்றுக்கணக்கான இதுபோன்ற சாதிய வன்முறை படுகொலை வழக்குகள், தமிழ்நாட்டில் பல்வேறு காவல் நிலையங்களிலும், நீதிமன்றங்களிலும், எப்.ஐ.ஆர். வடிவிலும் குற்றப்பத்திரிக்கை என்ற பெயரிலும் முடங்கிக் கிடக்கின்றன. ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் மீதான வன்முறை என்பது அவர்கள் மீதான உடல் ரீதியாக வன்முறை உட்பட, அவர்களுக்கான உரிமைகளை மறுப்பது, அவர்களின் அடையாள சின்னங்களை அழிப்பது, அம்பேத்தகர் சிலையை சேதப்படுத்துவது, அவர்கள் குடியிருப்புகளை எரிப்பது, அழிப்பது, பொது இடங்களில், பள்ளி கல்லூரி மற்றும் பணியிடங்களில் அவர்களை புறக்கணிப்பது போன்ற பல்வேறு குற்றங்களை உள்ளடக்கியது.
Also read
இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திலும் இரண்டு தலித்துகள் தாக்கப்படுகின்றனர், ஒவ்வொரு நாளும் மூன்று தலித் பெண்கள் வன்புணர்ச்சி கொடுமைக்கு ஆளாகின்றனர், இரண்டு தலித்துகள் கொல்லப்படுகின்றனர், இரண்டு தலித் வீடுகள் எரிக்கப்படுகின்றன என்ற புள்ளி விவரம், இந்த மக்கள் மீதான வன்முறையின் உச்சத்தை சுட்டிக்காட்டுகிறது. இந்திய மக்கள் தொகையில் 17% இருக்கும் இவர்கள் வாக்கு வங்கிகளாக மட்டுமே பார்க்கப்படுகின்றனரே தவிர, சக மனிதர்களாக பார்க்கப்படுவதில்லை.
இந்திய அளவில் ஒடுக்கப்பட்டோர் (தலித்) மீதான வன்முறைகளில் உத்திரப் பிரதேசம் முன்னிலையிலும், இராஜஸ்தான், குசராத், மத்திய பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்து வரிசைப்படுத்தப்பட்டாலும், தமிழ்நாட்டிலும் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைகளுக்கு குறைவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்முறை அதிகரித்தே காணப்படுகிறது. கொரோனாவால் ஊரெல்லாம் அடங்கியிருந்த காலத்தில் கூட தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல் ஓயவில்லை. மார்ச்சு 25 முதல் ஜீலை வரையான காலத்தில் மட்டும் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் மீது மொத்தம் 81 தாக்குதல்கள் நடத்துள்ளதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
சென்னை உயர்நீதி மன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதியரசர் திரு. அரிபரந்தாமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இந்த காலகட்டத்தில் 41 தாக்குதல்கள், 14 கொலைகள், 5 பாலியல் வன்புணர்வுகள் மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்தோர் மீதான தாக்குதல்கள், அண்ணல் அம்பேத்தகர் சிலை மீதான அவமதிப்புகள் போன்றவை அரங்கேறியதாக குறிப்பிடுகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகள், அரசமைப்புச் சட்டம் முதல் பல்வேறு சட்டங்களாலும் பாதுகாக்கப்பட்டபோதும் அவர்கள் மீதான வன்முறை சற்றும் குறைந்தபாடில்லை. 1989ல் பிறப்பிக்கப்பட்ட வன்கொடுமை (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிகள் மீதான) தடுப்புச் சட்டம் கடுமையான சட்ட பிரிவுகளை உள்ளடக்கியதாக இருந்தாலும், அது பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இந்த சட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதற்கு பதிலாக இதை எப்படியெல்லாம் சீர் குலைப்பது என்பதிலேயே அரசும், காவல்துறையும் முனைப்பு காட்டுகின்றன. தர்மபுரி இளவரசன் மரணம் தற்கொலை அல்ல என்று உடற்கூராய்வு செய்த மருத்துவர் சம்பத் குமார் தெரிவித்தப் பிறகும் இந்த மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி சிங்காரவேலு ஆணையம், இளவரசனின் மரணம் தற்கொலை தான் என்று அறிக்கை தாக்கல் செய்தது.
கோகுல் ராஜ் படுகொலை வழக்கை விசாரித்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா இந்த வழக்கில் தன்னுடைய உயர் அதிகாரிகளால் ஏற்படுத்தப்பட்ட மன உலைச்சலில்தான் தற்கொலை செய்துக் கொண்டார் என்று அவருடன் பணியாற்றும் மற்றொரு டிஎஸ்பியான மகேசுவரி பகிரங்கமாக குற்றம்சாட்டிய நிலையிலும், இது வெறும் தற்கொலை தான் என்று சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் கழித்து நீதி மன்றத்தில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ய அந்த வழக்கு கைவிடப்பட்டது.
தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்படவில்லை.
பெரும் புயலை கிளப்பிய இந்த வழக்குகளின் முடிவே இப்படியென்றால், வெளியே தெரியாத சாமானியத் தலித் மக்கள் மீதான பல்வேறு வழக்குகளின் கதி என்ன என்ற கேள்வி எழுகிறது. இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டாலும், வழக்கு நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது மிக மிகக் குறைவே. இந்திய உள்துறை அமைச்சக அறிக்கையின் படி 2017-18 ஆண்டுகளில் இந்த சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகளில் வெறும் 16.3% வழக்குகளே நிரூபிக்கப்பட்டுள்ளன. அதாவது 100 வழக்குகளில் வெறும் 16 வழக்குகளே நிரூபிக்கப்படுகின்றன, ஏனைய 84 வழக்குகள் நிரூபிக்கப்படாமல் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான். இந்த சட்டத்தை துச்சமென மதிக்கும் அரசுகளே இதற்கு காரணம்.
இந்த சட்டப்படி தாழ்த்தப்பட்டோர் மீது வன்முறை அதிகமாக நடைபெறும் மாவட்டங்கள் அனைத்திலும், மாவட்ட மாஜிஸ்ரேட் , எம்.எல்.ஏ., எம்.பி., மாவட்ட காவல்துறை கண்கணிப்பாளர் (எஸ்பி), எஸ்சி எஸ்டி பிரிவைச் சார்ந்த அரசு உயர் அதிகாரிகள், அரசு சாரா தலித் மற்றும் தலித் அல்லாத அமைப்புகள் சார்ந்தவர்கள் கொண்ட மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு, அது மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூடி ஆராய வேண்டும் என்றும், மாநில அளவில் முதலமைச்சரின் தலைமையில் 25 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு அது ஆண்டுக்கு இரண்டு முறை, சனவரி மற்றும் ஜீலை மாதங்களில் கூட வேண்டும் என்றுள்ளது.
இந்த கூட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட குற்றங்கள், அதுச் சார்ந்த வழக்குகள் போன்ற அனைத்தும் விவாதிக்கப்பட்டு ஆலோசனை மற்றும் நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட வேண்டும். ஆனால், இந்த கூட்டங்கள் கூட்டப்படுவதே இல்லை என்பதே எதார்த்தம். மாவட்ட கண்காணிப்பு குழுக்கள் போதிய அளவில் ஏற்படுத்தப்படவில்லை என்றாலும், ஏற்படுத்தப்பட்ட குழுக்கள் அதிக அளவிளான கூட்டங்களை நடத்துவதில்லை. 2013க்குப் பிறகு முதலமைச்சர் தலைமையிலான மாநில அளவிலான கூட்டம் கூட்டப்படவே இல்லை என தற்போது தமிழக அரசே ஒப்புக் கொண்டுள்ளது.
கோவையை சார்ந்த திரு.பன்னீர்செல்வம் என்பவர் சார்பாக வழக்கறிஞர் திரு. எஸ்.குமாரதேவன் சென்னை உயர் நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில்( 28.09.2020) அரசே இதை தெரிவித்துள்ளது. 1995 முதல் ஏப்ரல் 2016 வரையான காலத்தில் முதலமைச்சர் தலைமையிலான இதுப்போன்று 38 கூட்டங்கள் நடந்திருக்கவேண்டும் ஆனால் வெறும் 4 மட்டும் நடந்துள்ளதாக வேறொரு அறிக்கை தெரிவிக்கிறது. சட்டப்படி செயல்பட வேண்டிய அரசுகளே இப்படி இருந்தால், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் காவல் துறை எப்படி தன் பங்கை முறையாக செய்யும் என்று எதிர்பார்க்க முடியும்.
தாழ்த்தப்பட்ட மக்களை முன்னிறுத்தி செயல்படும் தலித் அமைப்புகள் சில தொடர்ந்து போராடி வந்தாலும் அவர்களால் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. எல்லாமே அரசியல் என்றான நிலையில் தலித் அரசியல் என்பதும் தேர்தல் நேர கூட்டணி என்ற அளவில் சுருங்கி விட்டது. தேர்தல் நேர வெற்று வாக்குறுதிகளில் விட்டில் பூச்சிகளாய் தாழ்த்தப்பட்ட மக்கள் வீழ்த்தப்படுகிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களை புரட்சி செய்ய தூண்டினார் அண்ணல் அம்பேத்கர், ஆனால் புரட்சி என்ற சொல் நடிகர்களை அலங்கரிக்கும் அடைமொழியாக மாறிவிட்ட சமூதாயத்தில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விடியல் இனியும் கானல் நீர் தானா?
கட்டுரையாளர்,
ப.அமர்நாத்: சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர். 27 ஆண்டுகளாக உரிமையியல் வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகளை நடத்துபவர். சமூக ஆர்வலர்.
தமிழர் பரிந்துரை வணிகத்தின் முக்கிய நிர்வாகியாக தொடக்ககாலத்திலிருந்து தீவிரமாக செயலாற்றுபவர்.
Leave a Reply